சுந்தரர், சேக்கிழார், மைலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம்
——
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
நான் பல பத்தாண்டுகளாகச் சென்னையில் நடைபெறும் அங்காளபரமேஸ்வரி கோவில் வைபவமான மயானக்கொள்ளையையும், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெறும் அறுபத்துமூவர் உற்சவத்தையும் களப்பணி செய்து ஆய்வு செய்துவருகிறேன்.
இரண்டு விழாக்கள் பற்றியும் 2016 ஆம் ஆண்டு Times of India நாளிதழில் எழுதிய சிறிய கட்டுரைகளைத் தவிர, நான் இந்தத் தரவுகளைப் புத்தகங்களாக இன்னும் இறுதி செய்யவில்லை.
மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவுக்கு நூறாண்டு கால வரலாறு இருப்பதாகச் சென்னையின் வரலாற்றாசிரியரான எஸ். முத்தையா குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய ஆய்வுகளின்படி இந்தத் திருவிழா 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்க வேண்டும்.
அகோரசிவாச்சாரியாரால் எழுதப்பட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பனுவலான ‘மஹோத்சவ விதி’ ரிச்சர்ட் டேவிஸினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அகோரசிவாச்சாரியாரின் நூல் சிலாலயங்களில் திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிவாலயங்களில் அரசர்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, பக்தர்களை முன்னிலைப்படுத்தித் திருவிழாக்களைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தைப் பரிந்துரைக்கிறது. அகோரசிவாச்சாரியார் சிவபெருமானின் முதன்மை பக்தரான சண்டிகேஸ்வரரை அடையாளப்படுத்தி, அவருக்குச் சிவாலயங்களில் பிராகாரத்தில் சன்னிதி அமைய வேண்டியதன் அவசியத்தையும் சொல்கிறார். ‘மஹோத்சவ விதி’ இப்படியாகத் திருவிழாக்களின் விதிமுறைகளைப் பற்றி மட்டும் பேசாமல், கோவில் கட்டுமானங்களையும் அவற்றின் ஆகம விதிகளைப் பற்றியும் பேசுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் இந்த ஆகம விதிகளைத் திருவிழாக்களிலும் கட்டிட அமைப்புகளிலும் பின்பற்றுபவை. சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டுமே வேதங்களைப் பின்பற்றுவதாகும்.
சமஸ்கிருதத்திலுள்ள 28 சைவ ஆகமங்கள், சைவசித்தாந்தத்தின் இறையியலின் (theology), தத்துவத்தின் பகுதியாகக் கருதப்படுகின்றன. இருமையை (duality) வலியுறுத்தும் சைவசித்தாந்தம், சிவனை அனைத்து ஆன்மாக்களின் பதியாக உருவகிக்கிறது; அனைத்து ஆன்மாக்களும் பசுவாக இருக்க, இரு தெய்வீக இருப்புகளிடையே ஊடாடுவதாகப் பொருளுலகாகிய பாசம் இருக்கிறது. கோவில் விழாக்களைப் பொதுவெளிக்கும், தனிப்பட்ட முறையில் வீட்டில் செய்யப்படும் ஆத்மார்த்த பூசையைக் கிரஹஸ்தர்களுக்கும் (இல்லறத்தார்க்கும்) சைவசித்தாந்தம் பரிந்துரைக்கிறது.
தனிநபர் சிவனாதல் திருவிழா, வீட்டுப் பூஜை ஆகியவற்றின் நோக்கம் என டேவிட் ஷுல்மன் (பார்க்க: Shulman, David Dean, and Guy G Stroumsa. 2002. Self and Self-Transformation in the History of Religions. Oxford; New York: Oxford University Press.) தன்னுடைய விரிவான கட்டுரையொன்றில் கூறுகிறார். பல வீடுகளில் சிவ பூசை செய்யப்படும் வழிமுறைகளைக் களப்பணி செய்து திரட்டிய அடிப்படையில் நான் எழுதிய கட்டுரையும் ஷுல்மனின் கட்டுரையை உறுதி செய்வதாக இருக்கிறது. (பார்க்க: Vedic Chanting as a Householder’s Meditation Practice In the Tamil Śaiva Siddhānta Tradition in Meditation and Culture: The Interplay of Practice and Context, ed. Halvor Eifring. London; New York: Bloomsbury Academic.2015)
பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் நிலப்பகுதியில் ஏராளமான சைவ தத்துவ ஆகம நூல்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டன; அவை அனைத்தும் மெய்கண்ட சாத்திரங்கள் எனப் பொதுவாக அழைக்கப்பட்டன. இவற்றில் கோவில் திருவிழா விதிகளை விவரித்த நூல்கள் சமஸ்கிருத ஆகம நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ மடங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தன. இந்த வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றி விரிவாகத் தன்னுடைய ‘Sanskrit and Tamil in the service of Śaivism’ கட்டுரையில் எழுதுகிற டி. கணேசன், சைவ சித்தாந்தம் இந்தக் காலகட்டத்தில் சைவ பக்திக்கு சேவை செய்யக்கூடியதாக மாறிவிட்டதைக் குறிப்பிடுகிறார். பதினாறாம் நூற்றாண்டில் இந்த சேவை வடிவம் முழுமையானதாக நிலைபெற்றுவிட்டதாகக் கணேசன் “Two Śaiva Teachers of the Sixteenth Century: Nigamajñāna I and his disciple Nigamajñāna II,” நூலுக்கு எழுதிய முன்னுரையில் மேலும் குறிப்பிடுகிறார்.
இதற்கு இணையாகச் சைவத் திருமுறைகளைத் தொகுக்கும் பணியும் ஆரம்பித்துவிட்டது. சுந்தரரின் (780–830 CE) ‘திருத்தொண்டர் தொகை’ நாயன்மார்களின் கதைகளை வரலாறாக எழுதி, அவற்றின் தொகுதியைத் திருமுறையாக்கும் பணிக்கு வித்திட்டது. நம்பி ஆண்டார் நம்பி (c. 10th-11th Century CE?) சம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகங்களை முதல் ஏழு திருமுறைகளாக ஒழுங்குபடுத்தினார். மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் திருவாசகமும் எட்டாம் திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டன. திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேரின் பாடல்கள் திருப்பல்லாண்டுத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையாக அமைந்தது. திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பன்னிருவரின் பாடல்களின் தொகுப்பு பதினொன்றாம் திருமுறையாகவும், சேக்கிழாரின் பெரிய புராணம் (1135 CE) பன்னிரண்டாம் திருமுறையாகவும் அமைந்தன.
காரைக்கால் அம்மையார் (500 CE), பல்லவ அரசன் ஐயடிகள் காடவர்கோன் (600-750 CE) ஆகியோரின் பாடல்களை ஆரம்ப இலக்கியங்களாகவும், சேக்கிழாரின் பெரிய புராணத்தை (12 ஆம் நூற்றாண்டு) திருமுறைகளில் இறுதியாகவும் கொண்டால், நாம் 600 ஆண்டுகாலச் சைவ, இலக்கிய, இறையியல், தத்துவ வரலாற்றை இத்திருமுறைகள் கொண்டிருக்கின்றன என்று அவதானிக்கலாம்.
இந்த வரலாற்றின் போக்கினை, அரசனையும் கடவுளையும் கொண்டாடுவதை விட்டுவிட்டுத் தொண்டனை, நாயன்மாரை, பல்வேறு சாதி, தொழில் பின்புலங்களிலிருந்து வந்தவர்களைக் கொண்டாடும் விதமாகச் சைவம் ஜனநாயகமானதன் வரலாறு என்று சுட்டலாம்; இந்த வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடுதான் மைலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவாகும்.
மயிலை அறுபத்து மூவர் திருவிழாவில், சம்பந்தர் சாம்பலிலிருந்து பூம்பாவையை உயிர்ப்பித்த கதை சடங்காக நிகழ்த்தப்படுகிறது. சண்டிகேஸ்வரர், மூவர் முதலிகள் ஆகியோருக்குத் தனிச் சப்பரங்களும், மீதி நாயன்மார்கள் 18 சப்பரங்களிலும் வீதியுலா வருவார்கள். முண்டகக்கண்ணி அம்மன், வாசுகி - திருவள்ளுவர், கோலவிழி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முருகன், திரௌபதி அம்மன் ஆகியோரின் சப்பரங்களும் வீதியுலாவில் சேர்ந்துகொள்கின்றன. மைலாப்பூர் தெப்பக்குளத்தின் மூலையில் இருக்கும் கிராம தேவதைகளும் இந்தத் திருவிழாவின் பகுதியாக இருக்கின்றனர். கிட்டத்தட்டப் பத்து லட்சம் பேர் பங்கேற்கும் இத்திருவிழாவில், பெரும்பாலோர் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து நான் சேகரித்த வாய்மொழிச் சுயசரிதைகளைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment