Monday, April 14, 2025

சித்திரைத் திருநாள் —— எம்.டி.முத்துக்குமாரசாமி

 சித்திரைத் திருநாள்

——

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தொல்காப்பியம், ஆண்டின் பெரும்பொழுதுகளை ஆறாக வகுக்கும்போது, இளவேனில் காலத்தைச் சித்திரை, வைகாசி எனச் சுட்டுகிறது. தொல்காப்பியர் பருவங்களை மழை, பனி, வேனில் என வரிசைப்படுத்துவது, வேளாண்மைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.


நெடுநல்வாடையில் 160-161 ஆம் வரிகள், "திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து" என்று குறிப்பிடுகின்றன. இதன் பொருள், "உறுதியான கொம்புகளை உடைய ஆடு (மேஷ ராசி) தலையாக/முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து செல்லும் விரைவான இயக்கமுடைய ஞாயிறு" என்பதாக எடுத்துக்கொள்ளலாம். மா. ராசமாணிக்கனார் தனது 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' நூலில் இந்த "ஆடு தலை" என்பது மேஷ ராசியே என்று விளக்கியுள்ளார் எனினும் இந்த விளக்கம் சரியானதுதானா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. மேஷ ராசியை முதன்மையாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின், பிரம்மகுப்தர் போன்ற வட இந்திய வானியலாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். சங்க காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாகக் கருதப்பட்டிருக்கலாம். சங்ககாலத் தமிழர் நுட்பமான வானியல் அறிவைக் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. விண்மீன்களையும் கோள்களையும் வேறுபடுத்தி அறிந்திருந்தனர் (நாண்மீன், கோள்மீன்), சூரிய, சந்திர நாட்காட்டிகளைப் பயன்படுத்தினர். பிற்காலத்தில், பௌர்ணமி அன்று நிலவும் நட்சத்திரத்தின் அடிப்படையில் மாதங்களுக்குப் பெயரிடும் வழக்கம் உருவானது. உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அப்பெயர் பெற்றது. இந்த வானியல் அறிவே பிற்காலக் காலக்கணிப்பு முறைகளுக்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும். 


சிலப்பதிகாரமும் மணிமேகலையும்  சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா பற்றிய விரிவான சித்தரிப்புகளைத் தருகின்றன. இந்த விழா சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டது. சிலப்பதிகாரம், "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என்று இவ்விழாவின் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறது. மணிமேகலை இவ்விழா 28 நாட்கள் (நால்ஏழ் நாளினும்) நடைபெற்றதாகக் கூறுகிறது.  

விழாவின் தொடக்கமாகக் கால்கோள் நாட்டுதல் (மூங்கில் தண்டு நடுதல்) நிகழ்வு நடைபெற்றது. நகரமே தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாளங்காடிப் பூதத்திற்குப் பலியிட்டு, பூவும் பொங்கலும் படைத்து மறக்குடி மகளிர் வழிபட்டனர். இவ்விழாக் காலத்தில் தேவர்களும் மக்களும் கலந்து திரிந்ததாக மணிமேகலை கூறுகிறது. இசை, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  








மருத நிலக் கடவுளான இந்திரனைப் போற்றும் இவ்விழா, மழை வளம் வேண்டியும், பசி, பிணி, பகை நீங்கவும் எடுக்கப்பட்ட ஒரு 'சாந்திப் பெருவிழா'வாக மணிமேகலையில் சித்திரிக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறாத காரணத்தினாலேயே பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்ததாக மணிமேகலைக் காப்பியம் அறவண அடிகள் கூற்றாகப் பதிவு செய்துள்ளது.



பக்தி இலக்கியங்களில் மாசி மகம் , மார்கழித் திருவாதிரை போன்ற பிற மாத விழாக்கள் பெற்ற முக்கியத்துவம் சித்திரை மாத விழாக்களுக்கு இருந்ததா என்பது தெளிவாக இல்லை. திருஞானசம்பந்தர் மைலாப்பூரில் மாசி மாத விழாவையே சிறப்பித்துப் பாடியுள்ளார்,  மதுரையின் முக்கிய திருவிழா கூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாசி மாதத்தில்தான் கொண்டாடப்பட்டது என்றும், அதற்காகவே அங்கு மாசி வீதிகள் அமைக்கப்பட்டன எனப் பல  நாட்டார் வழக்காறுகளில் பதிவாகியிருக்கிறது. 


மதுரையின் சித்திரைத் திருவிழா, ஒப்பீட்டளவில் பிற்காலத்தைய உருவாக்கம் ஆகும். கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், அதுவரை வெவ்வேறு காலங்களில் தனித்தனியாக நடைபெற்ற சைவ சமய விழாவான மீனாட்சி திருக்கல்யாணத்தையும் (இது முன்பு மாசி மாதத்தில் நடந்திருக்கலாம் ), வைணவ சமய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் (இது முன்பு தேனூரில் வைகை ஆற்றில் நடைபெற்றது ) இணைத்து, ஒரே விழாவாக சித்திரை மாதத்தில் கொண்டாட ஏற்பாடு செய்தார். சைவ, வைணவ ஒற்றுமையை வளர்ப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இதற்காக அழகர் மதுரைக்கு வருவது, அதற்குள் திருமணம் முடிந்துவிடுவதால் வைகை ஆற்றிலிருந்து திரும்புவது ஆகியன  புதிய கதையாக  புனையப்பட்டதாக தொ.பரமசிவம் தன்னுடைய அழகர் கோவில் ஆராய்ச்சி நூலில் குறிப்பிடுகிறார். இந்த வரலாற்று மாற்றம் இடைக்கால இலக்கியங்களில் காணப்படும் சித்திரை மாதக் குறிப்புகளிலிருந்து வேறுபட்ட ஒரு பிற்கால வளர்ச்சியைக் காட்டுகிறது. 


சங்க காலத்தில் பருவகாலச் சுழற்சியின் ஒரு பகுதியாகவோ, வானியல் குறிப்புகளாகவோ இடம்பெற்ற சித்திரை மாதம், இடைக்காலத்தில் காப்பியங்களில் பூம்புகார் நகரத்தின் பெருவிழாவோடு தொடர்புபடுத்தப்பட்டு, பக்தி இலக்கியங்களில்  கோயில் விழா குறிப்புகளாக மாறி இன்று தமிழ் கேரள நிலப்பகுதிகளில் விஷுப் புண்ணியகாலமாக நிலைபெற்றிருக்கிறது. 


சித்திரைத் திருநாள் அல்ல தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பது பற்றிய வாத எதிர் வாதங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. தமிழ்ப் புத்தாண்டு இரண்டு நாட்களிலும் பிறப்பதாகக் கொள்வது கூட எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்மதமே. 


சித்திரைத் திருநாளை விஷு கனி பார்த்தலோடு தொடங்குதல் எனக்கு இனிய பல நினைவுகளைக் கொண்டு வருகிறது. அப்பாவும் அம்மாவும் ஆச்சிகளும் கை நீட்டமாகத் தந்த மொடமொட ரூபாய் நோட்டுகளின் மணம் இன்னும் என்னிடம் மாறாமலிருக்கிறது. அதிகாலையில் எழுந்து ஓட்டைக் கண் விட்டுப் பார்த்து கண்ணாடியின் முன் வைக்கப்பட்ட கனிகளின் முன் கண்களைத் திறத்தல் இன்றைக்கும் இனிமையைத் தருவதாகத்தான் இருக்கிறது.  


இப்போதெல்லாம் பருவங்கள் மாறிவிட்டனவா என்ற கேள்வியும் என்னை சதா அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. முன்பு என்னுடைய குறுந்தொகை உரையை வாசித்த முனைவர் தமிழ்மணி பாடல் 21 இல் கொன்றை கார்காலத்தில் ஆவணி புரட்டாசியில் பூப்பதாக வருகிறதே கொன்றை சித்திரை வைகாசியில் அல்லவா பூக்கும், இல்லை கொன்றை இருமுறையாக ஆவணி புரட்டாசியிலும் பூக்குமா என்று கேட்டு எழுதியிருந்தார். குறுந்தொகைப் பாடலில் “புதுப்பூங் கொன்றைக்கானங் காரெனக் கூறினும்” என்றுதான் இருக்கிறது. அதாவது ‘புதியதாகப் பூக்கின்ற கொன்றையையுடைய  கானகம் காலம் கார் காலம் என்று கூறினாலும்’ என்பது அதன் பொருள். நான் இந்த மாதிரியான சந்தேகங்கள் வரும்போது R.E. Hawkins - Encyclopedia of Indian Natural History-Oxford University Press, USA (1987) கலைக்களஞ்சியத்தை பார்ப்பது வழக்கம். அதிலும் கொன்றை பூக்குங்காலம் சித்திரை வைகாசி என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. கார்காலமாகிய ஆவணி புரட்டாசியிலும் கொன்றை பூக்குமா என்று நான் இன்னும்  பார்த்து உறுதி செய்யவில்லை. 


இருப்பினும் என் கவிதைகளில் வானிலை அறிக்கைகள்  

பல்வேறு வகைகளிலும் இடம் பெறுகின்றன. ஒருகவிதையை இப்படி எழுதியிருக்கிறேன்:

“இந்த ஆண்டும்

ஐப்பசியின் அடைமழை 

கார்த்திகையில்தான் பெய்தது

கார்த்திகை நண்பகலில் 

மார்கழியின் அதிகாலை ஊசி குத்தும் குளிர் அனுபவமானால்

பங்குனியில் தோலை எரிக்கும் வெயில் நிச்சயம்

என்பது புது நியதி

சித்திரை மத்தியின்

மாம்பூக்கள் 

இனி வைகாசி இறுதியில்தான்

எல்லா பழங்களுமே

ஒரே அளவில்

ஒரே நிறத்தில்

மெல்லியப் பனிப்படலம் போலொரு 

ஞெகிழிக் காகிதம் சுற்றி 

எல்லா பருவங்களிலும் கிடைக்கும்

உன்னையும் என்னையும் போல”. நிற்க.


அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள். எல்லா மங்கலங்களும், செல்வங்களும் பெருகட்டும், வாழ்வு குதூகலம்  நிறைந்ததாய் சிறக்கட்டும்.


 


No comments: