“ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்” கவிதை நூல் பற்றி கவிஞர் மா.காளிதாஸ்
—
தமிழில் திட்டமிட்டே அல்லது கண்டுகொள்ளப்படாமலே புறக்கணிக்கப்படுகிற எழுத்தாளர்களிடம் தான் இலக்கியம் இன்னும் வீரியமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. அந்த எழுத்தாளர்களின் கவிதைகளையோ, சிறுகதைகளையோ, கட்டுரைகளையோ, பத்திகளையோ எந்த இடத்திலும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் இருக்கும் கவனம், எவ்வகை மனப்பான்மை கொண்டதெனக் கணிக்க முடியாத கள்ள மௌனம் தமிழில் நிலவுகிறது.
திரும்பத் திரும்ப ஒரே வகையான அல்லது ஒரே வகைமைக்குள் அடங்கும் எழுத்துகளை மட்டும் முன்னிறுத்தும் இந்தப் போக்கு தமிழ் மரபில் மட்டும் தொடர்ந்து வருவதற்கான காரணங்களை வெறும் குழு மனப்பான்மைக்குள் மட்டும் அடக்கிவிட முயல்வது கூட அபத்தம் என்றே கருதுகிறேன்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள், முகநூலில் விமர்சனம் உள்ளிட்ட பத்திகள் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர் எம். டி. முத்துக்குமாரசாமி. அற்புதமான படிமங்களும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சிகளும் இவர் கவிதைகளில் ஒரு நீரோட்டம் போலத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற இவரது கவிதைத் தொகுப்பு குறித்து இதுவரை யாரும் பேசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அவசியம் பேசப்பட வேண்டிய தொகுப்பு இது.
“மீண்டும் மீண்டும்
ஒரே காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்
கவிதை எழுதுகிறேன் பேர்வழி என
ஒரு படி உப்பை
எடுத்துக் கொண்டு போய்
கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்
கர்மவினை.”
என்ற கவிதையின் வழி, தமிழ் இலக்கிய சூழலின் முகத்தை ஒரு கைக்குட்டையை போலத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார்.
அறிவியல், புனைவு, இயற்கை, சாதி மதம் மற்றும் மரபு சார்ந்த விசயங்கள், தமிழின் தொன்மைகள், கடவுள் குறித்த நிலைப்பாடுகள், புராண இதிகாசங்கள் இன்றுவரை புகட்டிக் கொண்டிருக்கும் கட்டுக்கதை ‘பாக்கெட் பால்’கள் என இவர் தொடாத அம்சங்களே இந்தத் தொகுப்பில் இல்லை என்று கூறலாம்.
“நீங்களும் நானும்
அந்த நதியைப் பார்த்திருக்கிறோம்
அதில் இரண்டுமுறை இறங்க முடியாது என
ஹெராக்லிட்டஸ் சொல்லாமலேயே
நமக்குத் தெரியும்
ஆடிப்பெருக்குக்கு
முளைப்பாரியையும்
தொன்னை தீபங்களையும்
நதியலைகளில் மிதக்கவிட்டோம்
கம்பங்கூழ், காரக் குழம்பு,
முருங்காய்க்கீரை வதக்கல்
கொழுக்கட்டை, பொரி, சர்க்கரை
மாவிளக்கு எனப் படையலிட்டோம்
தீபங்கள் நீரில் அசைந்தாடிச் செல்வதைப்
பார்த்து நின்றோம்
வீடு திரும்பினோம்
இவ்வுலகு மட்டுமே நாம் அறிவோம்
தீபங்களுக்கும் இல்லை
மறுகரை என்றவாறே.”
என்னும் இக்கவிதையில், நதியையும் நதியோடு இயைந்த சடங்கு சமாச்சாரங்களையும் சொல்ல வந்தவர், ‘ஹெராக்லிட்டஸ்’ பெயரைக் குறிப்பிட்டிருப்பது தான், இக்கவிதையை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.
நெருப்பு குளிர்ந்து உருவானதே நீர் என்ற அவரது அண்டவியல் குறித்த பார்வை, நதி என்பது மாற்றம் மற்றும் நிலையான ஓட்டம் மற்றும் எதிர்நிலை ஒற்றுமையை உள்ளடக்கியது என்ற விளக்கங்களை வாசகனுக்குக் கடத்தும் அதே சமயம், தமிழ் மரபில் நதிக்கரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களையும் அசைபோட வைக்கிறார்.
வாழ்வின் தொடக்கமும் முடிவும் இடைப்பட்டதை எதிர்கொள்தலும் ஒரு நதி போல இருக்க வேண்டும் என்பதை அறிவுரை பகர்தல் போலன்றி எதிர்ப்படும் மனிதரிடம் நலம் விசாரித்தல் தன்மையில் வெளிப்படுத்தி இருப்பது தான் இக்கவிதையின் சிறப்பம்சமே.
கடவுள் குறித்த நம்பிக்கைகளை விட கடவுள் குறித்து இங்கு புனையப்பட்டிருக்கும் கதைகள் தான் மிகவும் பயமுறுத்துவனவாக உள்ளன. அவை கதைகள் அல்ல என்று நம்பி விடாதபடி, தொடர்ந்து சொல்லப்படும் அதற்கான விளக்கங்கள், கடவுளுக்கே அலுப்புத் தட்டுவனவாக இருக்கக் கூடும்.
கடவுள் யார், அவர் ஏன் எந்நேரமும் கருவறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார், அவருக்கும் மனிதனுக்குமான இடைவெளியை அவர் விரும்புகிறாரா, ஆக்கல், அருள்பாலித்தல் அல்லது தீயன அழித்தல் தவிர்த்து வேறு தொழிலேதும் அவருக்கு உள்ளதா, தன் சந்ததிகள் பெருக்கம் குறித்த மறுசிந்தனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தொடராமல் நின்றுவிட்டதில் கடவுளுக்கு என்னவிதமான யோசனைகள் உள்ளன, கடவுள் நிமித்தம் இங்கே நடைபெறும் பெரும் வணிக நடைமுறைகள் குறித்து அவருக்கு எவ்விதமான கருத்தாக்கங்கள் உள்ளன என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்புவதாக உள்ளது கவிஞரின் இக்கவிதை:
“நான் எந்த ஜாலர் வைத்த
வட்ட அடையாள அட்டையையும்
நெஞ்சில் குத்தி இருப்பதில்லை
நீங்கள் மிகவும் அழுத்திக் கேட்டால்
நானொரு பகுதிநேரக்
கடவுள் சல்லாபி என்று சொல்வேன்
ஏனெனில் எனது கடவுள்
பகுதி நேரம்
வியாபார நிமித்தம்
வெளியே சென்றுவிடுகிறார்.”
‘ஜாலர் வைத்த வட்ட அடையாள அட்டை’ என்ற சொற்றொடர் தரும் பொருள், எந்தக் கடவுளுக்கும் நான் அடிமையில்லை; நான் இன்ன அடையாளங்களோடு கடவுளை அணுக வேண்டிய அவசியமில்லை; அப்படி அடையாளங்களோடு அணுகினால் தான் என்னைக் கடவுள் ஆசீர்வதிப்பார் எனில், அத்தகைய கடவுளே எனக்கு அவசியமில்லை என்ற கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. ‘ஜாலர்’ என்பது ஒரு ஜால்ராக் கருவி, கடவுளின் பொருட்டுக் கூட அதைக் கையில் எடுக்க மாட்டேன் என்பதையும் போகிறபோக்கில் உணர்த்திச் செல்கிறது கவிதை.
எனக்கும் குடும்பம் குட்டி உள்ளது, அதை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும், எந்நேரமும் கடவுளை நானோ அல்லது கடவுள் என்னை மட்டுமோ கவனித்துக் கொண்டிருக்க முடியாது, அது தான் உண்மை என்பதை, ‘நானொரு பகுதிநேரக் கடவுள் சல்லாபி’யும், ‘எனது கடவுள் பகுதி நேரம் வியாபார நிமித்தம் வெளியே சென்றுவிடுகிறார்’ என்பதும் தெளிவுபடுத்துகின்றன.
இன்றைய நவீன உலகு, உறவுகளை எவ்வாறு சுருக்கிக் கொண்டுள்ளது என்பதை,
“நம் உறவு
ரிப்பன் கட்டிய முடிச்சுப் பூவோடு
நமக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது
அதை அவிழ்ப்பது பயம்
அதை அவிழ்ப்பது முரண்
எனினும் அதை அவிழ்ப்பது
விழிப்பும் கூட.”
என்கிறார். உறவை ‘ரிப்பன் கட்டிய முடிச்சுப் பூ’ எனச் சுட்டுவது என்னவொரு அழகான படிமம்! அதனுள் என்ன இருக்கிறது? எதிர்பார்ப்புகளோடு அவிழ்க்காமல் அப்படியே இருந்தால் எந்தவொரு (ஏ)மாற்றமும் நிகழாது தானே? ஆனால் அப்படியே இருப்பதில் என்ன இருக்கிறது? சண்டையும் சச்சரவும் பின் கூடுதலும் கூடுதல் புரிந்துணர்வுடன் மேலும் நெருக்கமாகுதலும் தானே உறவு? எத்தனை பரிமாணங்களைத் தருகிறது கவிதை.
(இன்னும் அடுக்கடுக்காக இருக்கின்றன படிமங்கள்... தொடர்ந்து பேசுவோம்.)
புதிய பொருளாதாரக் கொள்கையின் கூறுகளான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் தாக்கங்கள் தாயின் கருவறையிலிருந்து கோயில் கருவறை வரைக்கும் இவ்வளவு அசாத்தியத் தாக்கங்களை ஏற்படுத்துமென்று அதனை வகுத்தவர்களும் நடைமுறைப்படுத்தியவர்களும் அறிந்திருக்கமாட்டார்கள் என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைத்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதற்கு நிகரானது.
தானும் தன் சந்ததியும் மட்டும் உயிர் வாழ்வதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளையும் தயவு தாட்சணியமின்றி செயல்படுத்துவதற்கான, அன்பற்ற நிலையைக் கையாண்டு, அதிகார மற்றும் அடக்குமுறை விதிகளில் தேவைக்கும் அதிகமாகவே திருத்தங்களை மேற்கொள்ள அரசியல் ஆளுமைகளின் மீது பண ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் தான் நினைத்ததைச் சாதிக்கும் பிற்போக்கு மனப்பான்மையை, எல்லா மட்டத்திலும் ஊடுருவுவதற்கான வழிவகைகளை, எவ்வித மூடுமந்திரமுமின்றி வெளிப்படையாக அதேசமயம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றுவதற்கு அடித்தளமிட்டதே தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் அதியற்புதம் என்பதை,
“முகத்தைத் துடைத்துக் கொள்
உன்னிடத்தில் நிலக்காட்சிகளும்
ஊர்களும் தீர்ந்துவிட்டன
இனியொரு உதயத்தில்
நீ காணப்போவதெல்லாம் கடைத்தெருக்களே
வாய்ச்சாலக்கில் இனிக் கட்டமுடியாது
சிந்து பூந்துறையை
அதன் பன்னீர்புஷ்பங்களும்
ஆடி பிம்பங்களின்
இறுதிவெளிகளாய்க் கலைந்துவிட்டன.
உன் அகத்தை
நிலத்தில் தேடுவதற்கில்லை
எல்லையற்ற நீல வானமோ
அலைகளில் கரையும் நீரோ
உனைக் காட்டப் போவதில்லை
உன் வீட்டை
இனி உன் ஊரால் அழைக்க முடியாது
உன் வீட்டின் மணிமாடம்
தாழ் திறப்பதில்லை
உன் நிலவு ஏதோவொரு பாலையில்
எங்கோ ஒளிர்கிறது
உன் பொருநை இனி உனக்கில்லை
காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு.”
என்கிறார் கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசாமி. இது பொருநைக்கு மட்டும் நேர்ந்த அவலமென அவ்வளவு எளிதில் நகர்ந்துவிட முடியாது. வைகையின் அகலம் சுருங்கிவிட்டது. கூவம் எப்போதோ காணாமலே போய்விட்டது. தூர்ந்துபோக வைக்கப்பட்ட கண்மாய்களில் எழுந்த நீதின்றம் தான் நீர்நிலைகள் குறித்த பல நீதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
சாலைகள் அகலப்படுத்துதல், ஆற்றின் குறுக்கேயும் சாலைகளின் குறுக்கேயும் பெரும்பாலங்கள் உருவெடுத்தல் என்பது சாமானியனை மட்டுமே முன்னிறுத்தியா? வயல்களின் குறுக்கே எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படுதல், மலைகளைக் குடைந்து அல்லது அழித்து பாதைகளை உருவாக்குதல் எளிய மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றவா? என்கிற எத்தனை கேள்விகளை எழுப்புகிறது, ‘காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு’ என்ற வரி.
தனிமனித ஆசைகள் எல்லையில்லாமல் பெருகினாலும், இயற்கை ஒருபோதும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. சுனாமியாகப் பெருங்கோபம் கொண்டு சூழலை மறு உருவாக்கம் செய்கிறது. கொரானா போன்ற பெருந்தொற்றை உருவாக்கி வீட்டைவிட்டே மனிதர்களை வெளியே வரவிட முடியாதபடி செய்தாவது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. கூடுதல் வெப்பம், கூடுதல் மழை மற்றும் கூடுதல் வெள்ளப் பெருக்கைக் கொடுத்துத் தன்னைச் சமநிலைப்படுத்துகிறது.
ஒன்றும் முடியாவிட்டால், கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தின் சுவரிலிருந்து ஆலாக பெரு உருவெடுத்து நிற்கிறது. இதையே இன்னொரு வடிவில்,
“யாருக்கும் பலனற்று சிதைவுற்ற
அடுக்ககத்தின் இண்டு இடுக்கொன்றில்
பரவசத்துடன் அடர்ந்திருக்கிறது
மூலிகைத் திருநீற்றுப்பச்சை
அதன் சின்னஞ்சிறிய
விரிந்த பூவிதழ்களுக்கு வானமும்
கீழே விழும் விதைகளுக்குப் பூமியும்
சாத்தியங்களின் எல்லையின்மையைக்
காட்டிக் கொண்டே இருக்கின்றன.”
என்கிறார் கவிஞர்.
பொதுவாகத் தத்துவங்கள் எப்போது பிறக்கின்றன, நம்மை நாம் உணர்வது எப்போது, நம் பிம்பங்கள் தான் நம்மைக் கேள்வி கேட்கின்றன என்கிற உண்மை நமக்கு எப்போது விளங்குகிறது, நமக்கும் இந்த உலகிற்குமான தாத்பரியங்கள் எதுவரை தொடரும் என்கிற உண்மை நமக்கு எப்போது உறைக்கத் தொடங்கும், இதுவரையிலான எல்லாக் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் யாரிடம் அல்லது எங்கு உள்ளது என்ற தேடல் நமக்கு எப்போது உருவாகும் என்பதற்கு 'வயது' என்கிற ஒற்றைச் சொல்லால் இப்படி விடையளிக்கிறார் கவிஞர்:
“மலைப்பாம்பின் தழுவல்
மெல்ல மெல்ல இறுகுவது போல
வயது
உன் உயிர்ச்சரடை முறுக்கும் போது
அந்தத் திரிமுனையில்
ஒரு சுடரைக் காண விழைகிறாய்.
அச்சுடர் மற்றொரு திரியில் பற்ற
அது வேறொன்றில் தொற்ற
அனந்த கோடி தீபங்கள்
ஒற்றைச்சுடராய்த் தரிசனமாகிறது
இருளின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்கவிருக்கும்
முதல் தீப்பொறிக்காய்
உன் உயிர்ச்சரடைத் திரித்தபடியே
இப்போது காத்திருக்கிறாய்.”
‘இருளின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்கவிருக்கும் முதல் தீப்பொறி’ என்பதை, இதுவரையிலான எல்லா அறியாமைகளிலிருந்தும் 'விடுபடுதல்' என்பதாகப் பொருள் கொள்ளும் போது, இத்தனை நாளுக்கான ‘இதற்கான’ காத்திருத்தலுக்குத் தானா இவ்வளவு போராட்டமும் எனும் கேள்வி, நம் எல்லா பிம்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒரு சிறு கல்லின் இலக்கு தவறாத சரியான எறிதலால் சில்லுச்சில்லாக உடைத்தெறிந்து விடுகிறது.
நாம் எண்ணிக் கொண்டிருக்கும் ‘இறைப்புனிதம்’ என்பது எவ்வளவு கேலிக்குரியதும், நகைப்புக்குரியதுமென நாம் எப்போதாவது நமக்குள் கேள்வி எழுப்பி இருக்கிறோமா? அவ்வாறான கேள்விகள் நமக்குள் எழும்பினால், இங்குள்ள இறைத் தத்துவங்கள் என்னவாகும்? நாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பொய் உலகத்திற்குள் உலவுவதன் தேவை குறித்து நாம் சிந்திக்கத் தொடங்கினால் ஒரு ‘விடுபடுதல்’ நமக்குள் நேர்ந்துவிடுமா?
இறைத் தத்துவங்கள் நமக்கு ஒழுக்கநெறிகளை மட்டுமே கற்றுத் தருகின்றனவா? ஒழுக்கநெறிகளுக்கான வரையறைகள் எதிலிருந்து களவாடப்பட்டவை? அவற்றின் மீது எழுப்பப்படும் கேள்விகள் ஏன் அவற்றை ஒரு கேலிச் சித்திரமாக்குகின்றன? அல்லது கேள்வி எழுப்புகிறவரை ஏன் புரட்சியாளராக அடையாளப்படுத்துகின்றன?
“மனம் கசந்து நீ இயற்றிய
இறை மன்றாட்டுப் பாடல்களை
அவர் தன் காப்பிக் கொட்டை
வறுத்து அரைக்கும் எந்திரத்திலிட்டுத்
தூள் தூளாக்கினார்.
கையறுநிலை ஒரு தேக்கரண்டி
கைவிடப்பட்ட அவலம் ஒரு தேக்கரண்டி
அனாதையாகிய அவலம் ஒரு தேக்கரண்டி
என அத்தனை பாடல் கூறுகளையும்
தூக்கிக் கடாசினார்
தன் நாத்திகம்
தன் புனிதமென முரசறிவித்தார்
----------------------------------
----------------------------------
வேலை முடிந்ததென
குவாட்டர் அடித்தார்
கவிழ்ந்து படுத்தார்
நீ இவரே உன் மேல் அன்பு கொண்ட
இறை என
தானியக் கதிர்களைத்
தன் அலகுகளில் ஏந்தியிருக்கும்
ஒரு ஜோடி வெண்புறாக்களைப் பரிசளித்தாய்.”
இக்கவிதையில் வரும் ‘இறை மன்றாட்டு’, ‘தானியக் கதிர்கள்’, ‘வெண்புறாக்கள்’ போன்ற வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாகச் சுருக்கினால், அங்கிருந்து தான் கடவுள் தன்மை மீதான நம் அத்தனை மடத்தனங்களும் வெளிப்படத் தயாராகின்றன என்பது புலப்படும்.
(கவிஞரின் ‘குறுங்கவிதைகள் 55’ நமக்கு மேலும் சுவாரஸ்யங்கள் கூட்டக் காத்திருக்கிறது…)
கடவுள் எங்கு எப்போது எப்படி ஏன் தோன்றினார் என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அவர் ஏன் பல்வேறு சமயங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டுள்ளார், ஏன் ஒரு பொதுவான சமயக் கோட்பாடுகள் அவருக்கென்று இல்லாமல் போனது, அவர் ஏன் தன்னையொரு மேன்மை மிக்கவராகவே வடிவமைக்கும்படி செய்தார் என்கிற கேள்விகளும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
கடவுள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார், அதே நேரம் தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளிப்பார் அல்லது தவறு செய்தவரைத் தண்டிப்பார் என்பது மாதிரியான கருத்தாக்கங்களை எந்தக் கடவுள் எவர் மூலமாகக் கட்டமைத்தார்? இயற்கைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் இருந்து கொண்டு அருள்பாலிக்க வேண்டும்? அவர் ஏன் மனித உருவிலேயே வணங்கப்பட வேண்டும்?
அவருக்கான படையல்கள், பாடல்கள், காணிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் அவரது வரங்கள் மற்றும் சாபங்களில் ஏன் ஒரு பொதுத்தன்மை இல்லை என்பதற்கான விடைகளோடு கூடவே ஏன் ஒரு புதிர்த்தன்மையைக் கொண்டுள்ளன எனப் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்புகிறது கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசாமியின் குறுங்கவிதைகள்.
“மீண்டும் கடவுள் மாறாட்டம்
ஆனால் இம்முறை பிடிபடவில்லை
அசல் யாரென்று
அனைவருக்கும் தெரிந்துவிட்டது.”
என்ற கவிதையில், ‘பிடிபடவில்லை’ என்ற சொல்லில் தொனிக்கும் இரட்டைப் பொருள் அபாரமானது. பொதுவாக, ஒரு கருத்து குறித்து குழப்பமான சூழலில் நாம் எளிதாகச் சொல்கிற ஒரு வாசகம்: ‘எனக்கு ஒரேயொரு விசயம் மட்டும் பிடிபடவே மாட்டேங்குது’.
இந்தக் கருத்தோடு, ‘அசல் யாரென்று அனைவருக்கும் தெரிந்தாலும்’ என்ற வரிகளைப் படிக்கும் போது, கடவுளின் பொய்முகமே வெளிப்பட்டாலும் கூட, ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி, அவரது கட்டமைக்கப்பட்ட உண்மை முகத்திற்கே பெரும்பாலான வாக்குகள் செலுத்தப்படும் என்பது புலப்படுத்தப்படுகிறது. அதே சமயம் ‘கடவுள் மாறாட்டங்களும்’ காலத்திற்கேற்ப நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதையும் கவிஞர் உணர வைக்கிறார்.
“புற்களின் நுனிகளில்
பலி ஆட்டின் ரத்தத் துளிகள்
மந்தை மந்தையாய்ப் புல் மேய்கின்றன
இதர ஆடுகள்.”
தனக்கென்று வராத வரைக்கும் எந்தப் பெருந்துயரும் கடந்து போகக்கூடிய ஒன்றுதான் என்ற மனநிலை, இன்றைய தலைமுறையிடம் மேலோங்கி இருப்பதை அட்சரம் பிசகாமல் சொல்கிறது கவிதை.
“கடைசி உணவின் போது
மேய்ப்பருக்கும் கேட்கவில்லை
உணவாய்ச் சமைந்திருந்த
ஆட்டின் சிணுங்கல்.”
கடைசி விருந்து, கடைசி அப்பம், கடைசி ரத்தம், கடைசிப் புன்னகை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு கடைசிக் கடவுள் அல்லது கடைசியில் இவர் தான் கடவுள் என்பதில் வந்து நின்றுவிடும் போல. வளர்க்கப்படும் எல்லா ஆடுகளும் பலியிடத் தான் என இப்போது வரை அறியாத ஆடுகள் இன்னும் எதை அசை போடுகின்றன என்பது தான் விளங்கவில்லை.
“புத்தனுக்குப் போட்ட நாமம்
அரிதாரம் கலைந்தவுடன்
ஆள்மாறாட்டம் உறுதியாகிவிட்டது
பிரம்மம் அல்ல மாயை
மாயை அல்ல சூன்யம்.”
“மர்ம முடிச்சு
இன்னும் அவிழவில்லை
புத்தரை
விஷ்ணுவின் அவதாரமாக்கியது
திட்டமிட்ட சதியா
திட்டமிடாதா சதியா?”
மேற்கண்ட இரண்டு கவிதைகளிலும் ஒலிப்பது ஒரே குரல் தான். ‘பகவத் கீதை’ என்பது எதன் சாரம்? அதிலுள்ள தத்துவங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன? அதில் கூறப்படும் ஞானம், உள்ளொளி, ஆசையை அடக்குதல், பொறுமை காத்தல் எல்லாம் யாரால் அருளப்பட்டது? ‘எதுவும் நிந்தரமல்ல, இதுவும் கடந்து போகும்’ என்பதன் ‘மூலம்’ எங்குள்ளது என்கிற பேருண்மைகளை எல்லாம் கண்டதுண்டமாக்குகின்றன. அவற்றின் நீட்சியாகத் தான்,
“எது சுடரைப் பாதுகாக்கிறதோ
அதன் மேல் கரி அப்புவது
சுடரின் இயல்பு.”
என்ற கவிதையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
“மின்மயான வாயிற்கதவில்
ஒரு தபால் பெட்டி.”
என்ற இரண்டு வரிகள் ஏற்படுத்தும் கிளர்ச்சி ஒரு தனி ரகம். அங்கு யார் கொண்டு வந்து என்னவிதமான உணர்வுகளை, யாரிடம் சேர்க்கச் சொல்லிக் கடிதம் இடுவார்கள்? கடிதத்தை எழுதியவர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது அது இறந்தவருக்கு எழுதப்பட்ட கடிதமா?
ஒவ்வொருநாளும் அந்தத் தபால் பெட்டியைத் திறக்கும் தபால்காரரின் மனநிலை என்னவாக இருக்கும்? அதிலிருப்பவை புகார்க் கடிதங்களா? நன்றி தெரிவிக்கும் கடிதங்களா? ஒருதலைக் காதல் கடிதங்களா? நிராகரிக்கப்பட்ட காதலின் கடைசிக் கையெழுத்துகளா? கைவிடப்பட்ட ஒரு முதுமையின் கடைசிக் கோரிக்கையா? அனுப்புநர்-பெறுநர் முகவரி, சரியான அஞ்சல் வில்லையுடன் ஒட்டித்தான் போடப்பட்டுள்ளதா? இத்தனை கேள்விகள் இருக்கும் போது நொடியில் சாம்பலாகிவிடுமா மின்மயானத்தில் திணிக்கப்பட்ட அந்த உடல்?
தனிமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் அவரவர் மனநிலையும் ஒரு தனிப்பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியான, விட்டேத்தியான, கைவிடப்பட்ட, எதிலும் பற்றற்ற மனநிலைகள் தனிமையை ஒரேமாதிரியாக அணுகுவதில்லை. தனிமைக்கும், அது உருவான அல்லது உருவாக்கிக் கொண்ட சூழலுக்கும், தனியறை அல்லது வெட்டவெளி தனிமையைக் கையாளும் விதத்தின் வெவ்வேறு சாதக பாதகங்கள் குறித்து மிக எளிய சொற்களால் எடுத்தியம்புகிறது இக்கவிதை:
“வெட்டவெளிக்கும் உனக்குமான
ஒரு பரிமாற்றம்
அதில்
நரகம் தண்டிக்கப்பட்ட தனிமை
சொர்க்கம் விரும்பித் தேர்ந்த தனிமை.”
ஒவ்வொரு காதலிலும் ஒரு செய்தி இருக்கும். அதன் மறுபக்கங்கள் அவ்வளவு கனமானவை என்பதை உண்மையான காதலில் துய்த்தவர்களே உணரமுடியும். முதல் பார்வை, முதல் தயக்கம், முதல் வெளிப்பாடு போல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது முதல் முத்தம் என்பதை,
“முதல் முத்தமே
இவ்வுலகின்
இறுதிச் செய்தி.”
என்கிறார் கவிஞர்.
(நம் மனதை வெல்லவும் கொல்லாமல் கொல்லவும் இன்னும் கூட மிச்சமிருக்கின்றன கவிஞர் முத்துக்குமாரசாமியின் படிமங்கள்.)
நாம் காணும் வானம் என்பது வேறொன்றுமில்லை, நம் மனம் தான். அங்கங்கே கலைந்து கிடக்கும் மேகம் என்பது வேறொன்றுமில்லை, நம் எண்ணங்கள் தான். அவை காட்டும் உருவங்கள் என்பது வேறொன்றுமில்லை, நம் மனதின் கிளர்வுகள் தான். நம் வானில் தோன்றும் நிற மாற்றங்கள் என்பது வேறொன்றுமில்லை, நம் மனதின் பிரதிபலிப்பு தான்.
நம் எண்ணங்கள் சில சமயம் மேலோட்டமாகப் பெய்து, நமக்கும் பிறர்க்கும் சூட்டைக் கிளப்புகின்றன. அடித்துப் பெய்து அதுவரையிலான அத்தனை வெக்கையையும் தணித்து, நம் சூழலையே குளுமையாக்கிவிடுகின்றன. தேங்கி நிற்கும் நமது குளுமையும் நமக்குள் இருக்குள் வெக்கையுமே மற்றொரு மேகமாக நமக்குள் திரள்கின்றது.
இப்படியான ஒரு சிந்தனையை, ஒரு கவிஞனால் இன்னொரு மனதிற்குள் விதைக்க முடியுமென்றால், அது தான் அந்தக் கவிதையின் வெற்றி என்று கருதுகிறேன். இளைப்பாறுதல் வேண்டி மரத்தின் அடியில் நிற்கும் ஒருவனை, ஆசீர்வதிப்பது போல ஒரு பூவை உதிர்த்து விடுதலை நிகழ்த்தியிருக்கிறது எம். டி. முத்துக்குமாரசாமியின் கீழ்க்காணும் கவிதை.
“உண்மையில் மேகம் என்று
எதையும் அழைக்கலாம்
கம்பா நதி மண்டபத்தில்
உன் கண் கட்டி அடர்ந்திருக்கும்
நீலக்குவளை மலர்களை
நம் கண்ணாடிகளில் படிந்திருக்கும்
புகைமூட்டத்தை
உன் கண்களடியில் அடர்ந்திருக்கும்
தூக்கமின்மையின் கருவளையத்தை
வெட்கத்தினால்
முன்பு நீ மறைத்த கட்கத்தினை
நம்மிடையே
இப்போது கனத்திருக்கும் மௌனத்தை.”
இக்கவிதை முடிந்துவிட்டது போலத் தோன்றலாம். ஆனால் மிச்சமுள்ளதை ‘நீயே உன் எண்ண ஓட்டத்துக்குத் தக இட்டு நிரப்பிக் கொள்’ என வாசகனிடம் அப்பொறுப்பைக் கடத்தியதில் தான், இக்கவிதையின் முழுமையே உள்ளதென உணர்கிறேன்.
‘கண்ணாடிகளில் படிந்திருக்கும் புகைமூட்டம்’ என்ற வரியில் சுட்டப்படும் ‘கண்ணாடி’ என்ற சொல், கார்க் கண்ணாடியையா, இரும்பைப் பற்ற வைப்பவன் வெக்கை தாக்காமலிருக்க அணிந்திருக்கும் கண்ணாடியையா, தன் பார்வை இழப்பு வெளியே தெரியாமலிருக்க அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியையா, வெள்ளெழுத்து அல்லது அழகுக்காக அணிந்திருக்கும் கண்ணாடியையா, நம்மை அழகுபடுத்திக் கொள்ள சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கண்ணாடியையா, உடைந்ததால் அவசியமற்றதெனத் தூக்கியெறியப்பட்ட கண்ணாடியையா என்கிற கேள்விகளை எழுப்புவதோடு மட்டும் இக்கவிதை நின்றுவிடவில்லை; ஒரு குறியீடாக நின்று பல்வேறு எதிரொளிப்புக் கோணங்களைத் தருகிறது.
தூக்கமின்மையின் கருவளையம், மறைத்த கட்கம், கனத்திருக்கும் மௌனம் போன்றவற்றுக்கான சூழல் பின்புலங்களோடு இக்கவிதையை அணுகும்போது, கவிஞர் சொல்ல வந்ததைத் தாண்டியும் ‘மேகம்’ என்பதை எவ்வெவற்றோடு பொருத்திக் கொள்ளலாம் என்கிற ஆழமான புரிதலையும் நமக்குள் ஏற்படுத்துகிறது கவிதை.
இக்கவிதையில் உள்ள அடர்ந்திருக்கும், படிந்திருக்கும், மறைத்த, கனத்திருக்கும் போன்ற சொற்கள் மேகத்தோடு பொருந்திப் போகச் செய்திருப்பது கவிஞரின் கைவண்ணத்தைக் காட்டுகிறது. அதே சமயம், ‘அடர்ந்திருக்கும்’ என்ற சொல், ஒரே கவிதையில் அடுத்தடுத்து மிக நெருக்கமாக அமைந்திருப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதில் வேறொரு சொல்லைத் தேர்ந்திருக்கலாமோ என்ற கருத்தையும் எழுப்புகிறது.
மேற்கண்டவாறு ஒரு கவிதையைப் பொருள் கொள்ளுதலே அக்கவிதையைச் சரியாகப் புரிந்து கொண்டதற்கான நேர்மை என்பதை,
“கவிதை
எழுதப்படுவதல்ல
வாசிக்கப்படுவது
பார்க்கப்படுவது
கேட்கப்படுவது
எதில் வேண்டுமென்றாலும்
ஒரு கவிதையை வாசிக்கலாம்
என்ன,
ஒளி எங்கேயிருந்து வருகிறதோ
அதற்கு நேரெதிர்த் திசையில்
பார்க்க வேண்டும்
ஒலியின் அலைகளுக்கிடையிலுள்ள
மௌனத்தைக் கேட்க வேண்டும்.”
என்ற கவிதையின் வழி, கவிதையை அல்லது எவ்வகையான எழுத்தையும் வாசிக்கும் முறைமையையும், மறைமுகமாக எப்படி ஒரு கவிதை அல்லது கதை எழுதப்பட வேண்டும் அல்லது சொல்லப்பட வேண்டும் என்ற முறைமையையும் மிகத் தெளிவாக ஒரு தேர்ந்த வாசக மனநிலையிலிருந்தே வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நகர மனிதர்களின் மனங்களைப் போலவே தான் அவர்கள் வசிக்கும் கட்டடங்களும் உள்ளன என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் அதுவொரு வழக்கமான அறிக்கையாக மட்டுமே அமைந்திருக்கும். ஆனால் அந்த இண்டு இடுக்குகளிடையேயும் கம்பீரமாகச் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் மயானங்களைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே வந்தவர்,
“----------------------------------
-----------------------------------
அவற்றைக் கூறு போட்டு விற்றால்
நல்ல விலைக்குப் போகும்
ஒரே சங்கடம்
சின்னதாய் ஓரமாய் அமைதியாய் இருக்கும்
அங்காளபரமேஸ்வரி
ஆவேசமாய்க் கிளம்பி வருவாள்
மயானக் கொள்ளைக்கு.”
என்கிறார். ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என ஒரு நீர்நிலைகளைக்கூட, காடுகள், மலைகள், வயல்கள் என ஒரு இயற்கைப் பிரதேசங்களைக் கூட விடாமல், எல்லாவற்றையும் அழித்து வாழ்விடங்களாக்கிக் கொண்டே வரும் உங்களிடம் எனக்குப் பிடித்திருப்பதே, உங்களைப் புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கென ஒரு இடத்தை நீங்களே விட்டு வைத்திருப்பது தான் என்ற கேலிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு வெற்றிடத்தை வாசகன் உணர வைத்திருப்பது அசாத்தியமானது.
கடவுள் மற்றும் கடவுள் தன்மை பற்றிய கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கும் சூழலில்,
“உங்களிடம் சொல்லவேயில்லையே
தேடிப்பிடித்து ஒரு கூரிய மூக்கு
புத்தர் தலை சிலையை வாங்கிவிட்டேன்
-------------------------------------
-------------------------------------
புத்தர் சிலையை வாங்கியதிலிருந்து
எந்தக் கேள்விக்கும் தடுமாறுவதில்லை
-------------------------------------
-------------------------------------
அவர்தானே கடவுள் இருக்கிறாரா
என்ற கேள்விக்குக்கூட
மையமாகப் புன்னகைத்த உச்ச நட்சத்திரம்.”
என்ற கவிதையின் வழி, ‘மந்தகாசப் புன்னகை’ மூலம் ‘கடவுளின் இருப்பு குறித்து நீ தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று வழிகாட்டிய புத்தரையே, கடவுளாக்கி வழிபடுவதையும் கேள்விக்கும் கேலிக்கும் உள்படுத்தியுள்ளார்.
எங்கே எது நடந்தாலும் அது பற்றிய துளி அக்கறையுமின்றி, அது குறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், ‘என் வீடு என் மக்கள்’ என்ற சுயநலப் போக்கில் இருப்பவர்களைப் பொட்டில் ஆராய்ந்து சாத்துகிறது ‘மடித்து வைத்த துணிகளுக்குள்’ என்ற தலைப்பிலான இக்கவிதை:
“-----------------------------------------
------------------------------------------
ஒரு முளை கிளம்பிய போது
ஒரு மொட்டவிழ்ந்து
பூ இதழ் விரித்த போது
கூட்டைவிட்டு ஒரு பறவை
வெளியே பறந்தபோது
எங்கோ ஒரு சாப்பிடும் தட்டு
காலியாக இருக்கும் போது
யாரோ நாடுவிட்டு
அகதியாய் வெளியேறிய போது
நீ எதற்கும்
உன் சட்டை முன்பகுதி பொத்தானைப்
பத்திரமாய் மாட்டிக்கொள்
உன் உள்ளாடை
உறுதியாக இருக்கிறதாவெனப் பார்த்துக்கொள்
எப்போதுமே எங்கேயுமே எதுவுமே
அப்படி அப்படியே இருப்பதில்லை.”
இக்கவிதையை வியந்து பார்க்கும் அதே நேரம், பொருளும் தொனியும் மாறாமலிருக்கும் பொருட்டு, ‘ஒரு சாப்பிடும் தட்டு எங்கோ காலியாக இருக்கும் போது’ என்று இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
(கவிஞர் எம். டி. முத்துக்குக்குமாரசாமியின் ‘ரோஜாமொக்குக் கவிதைகள்’ குறித்தும் விரைவில் உரையாடுவோம்.)
No comments:
Post a Comment