Friday, March 13, 2026

காஃப்காவின் குறுங்கதை "பிராமிதியஸ்" * தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

காஃப்காவின் குறுங்கதை "பிராமிதியஸ்" *

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

—————-

பிராமிதியஸைப் பற்றி நான்கு பழங்கதைகள் இருக்கின்றன:

முதல் கதையின்படி, கடவுளர்களின் ரகசியங்களை அவர்களுக்குத் துரோகமிழைத்து மனிதர்களுக்குக் கொடுத்ததால் பிராமிதியஸ் காக்கேசிய மலையில் பாறையில் கட்டிப்போடப்பட்டு அவருடைய இரைப்பையைக் கழுகுகள் கொத்தித் தின்னுமாறு கடவுளரால் தண்டிக்கப்பட்டார்; அவருடைய இரப்பை தொடர்ச்சியாக, நிரந்தரமாகப் புதுப்பிக்கபட்டுக்கொண்டே இருந்தது. 

இரண்டாவது  கதையின்படி, பிராமிதியஸ் அலகுகள் தன்னைக் கிழிக்கும் வலியினால் சினமூட்டித் தூண்டப்பட்டு தன்னைத் தான் கட்டப்பட்டிருந்த பாறையில் இன்னும் அதிகமாக, இன்னும் அதிகமாகப் புதைத்துக்கொண்டார் தான் அந்தப் பாறையோடு பாறையாய் ஒன்றாய் ஆகும் வரை.

மூன்றாவது கதையின்படி, ஆயிரக்கணக்காண ஆண்டுகள் செல்ல பிராமிதியஸின் துரோகம் மறக்கப்பட்டுவிட்டது, கடவுளர்கள் மறந்துவிட்டனர், கழுகுகள் மறந்துவிட்டன, அவரே கூட மறந்துவிட்டார்.

நான்காவது கதையின்படி,எல்லோருமே இந்த அர்த்தமற்ற விவகாரத்தினால் களைப்படைந்துவிட்டார்கள். கடவுளர் களைப்படைந்துவிட்டார்கள், கழுகுகள் களைப்படைந்துவிட்டன, காயம் களைப்பாக மூடிக்கொண்டது.

விளக்க இயலாதபடிக்கு அந்தப் பாறையின் குவிந்த திரள் இருந்தது- பழங்கதை விளக்க இயலாததை விளக்க முயற்சித்தது. அது உண்மையின் துணை அடுக்கிலிருந்து வந்ததால் அது தன்னுடைய முறை வந்தபோது  விளக்க இயலாததாகவே முடிய வேண்டியதாயிற்று.

——-

*பிராமிதியஸ்- கிரேக்க புராணங்களில் வரும் பிராமிதியஸ் கடவுளர்களிடமிருந்து நெருப்பைத் திருடி மனிதகுலத்துக்கு அளித்தவர்; அதனால் காக்கேசிய மலையில் கட்டப்பட்டு அவருடைய இரைப்பையைக் கழுகுகள் கொத்தித்தின்னுமாறு சீயஸினால் (Zeus) தண்டிக்கப்பட்டவர். ஆனால் பிராமிதியஸின் இரைப்பைகள் மீண்டும் ஒரே இரவில் வளர அவற்றை கழுகுகள் மீண்டும் தின்ன என்றென்றெக்குமான வலியிலும் துக்கத்திலும் தண்டனையிலும்  இருப்பவர். ஈசக்கிளிஸின் நாடகமான ‘Prometheus Bound’, ஷெல்லியின் ‘Prometheus Unbound’ முதற்கொண்டு எண்ணற்ற படைப்புகள் பிராமிதியஸின் புராணக்கதையை வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. நெருப்பு மட்டுமல்லாமல் நாகரீகம், கலை, எழுத்து, -என பலவற்றையும் மனித குலத்துக்கு, கடவுளர்களின் விருப்பத்திற்கு எதிராகத் தந்தவராக பிராமிதியஸ் சித்தரிக்கப்படுகிறார்.

 

No comments: