Friday, March 13, 2026

காஃப்காவின் இரண்டு குறுங்கதைகள்


 ஒரு மேன்மைதாங்கிய பேரரசின் செய்தி

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

—-

பேரரசர் - அது அவ்வாறாகச் சொல்லப்படுகிறது- ஒரு செய்தியை உனக்காக அனுப்பியிருக்கிறார், அதாவது எளிமையான குடிமகனாகிய, மேன்மைதாங்கிய பேரரசின் சூரியனின் கீழ்,  கண்காணாத தொலைவில், அற்பமான நிழலாக, அச்சத்தில் பதுங்கி வாழ்கிற உனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். சாவுப்படுக்கையில் இருக்கும் பேரரசர் உனக்கு மாத்திரமே செய்தி அனுப்பியுள்ளார்.  அவருடைய செய்தியைக் கொண்டுவரும் தூதுவனை அவருடைய படுக்கைக்கு அருகே அழைத்து மண்டியிடச்செய்து காதோடு காதாக செய்தியைச் சொல்லியிருக்கிறார்; அதில் எவ்வளவு அடங்கியிருக்கிறதென்றால் அதற்கு அவர் எவ்வளவு  முக்கியத்துவம் கொடுத்தாரென்றால் அந்தத் தூதுவனை திரும்ப அந்தச் செய்தியை தன் காதோடு காதாகச் சொல்லுமாறு கட்டளையிட்டார். பிறகு ஒரு தலையசைப்பின் மூலம் அந்தச் செய்தி சரிதான் என  உறுதி செய்தார்.  ஆமாம், அவருடைய சாவைப் பார்ப்பதற்காகக் குழுமியிருந்த பார்வையாளர்கள் முன்னால்,- எல்லா தடைச்சுவர்களும் உடைக்கப்பட, அகன்ற, திறந்த, கம்பீரமான படிக்கட்டுகளில் நிற்கும் பேரரசின் தனி மதிப்பு வாய்ந்த பேரரசின் இளவரசர்களுக்கு முன்னால் அவர் தன்னுடைய செய்தியைத் தெரிவித்தார். தூதுவன் உடனே தன் பயணத்தை மேற்கொண்டான்; சக்தி வாய்ந்தவன், சோர்வுறாமல் பணியாற்றுபவன்; இப்போது வலது கரத்தினாலும், இப்போது இடது கரத்தினாலும், பெருங்கூட்டத்தின் இடையே தன் வழியைக் கிழித்து, தனக்கான வழியை ஏற்படுத்திச் செல்கிறான்; எங்கேயேனும் தடை ஏற்பட்டால் அவன் தன் மார்பில் ஒளிரும் பேரரசருக்குரிய சூரியக் குறியீட்டினைச் சுட்டிக்காட்டுகிறான்; வழியும் அவனுக்காக, பிற மனிதர்களைக் காட்டிலும்  எளிதாக உண்டாக்கப்படுகிறது . ஆனால் கூட்டமோ அவ்வளவு பெரியதாக இருப்பதால் மக்களின் எண்ணிக்கையோ முடிவற்றதாக இருக்கிறது. அவனால் திறந்த வெளிகளை இப்போது பறந்து அடையமுடியுமென்றால் சந்தேகத்திற்கிடமில்லாமல் சீக்கிரமாகவே அவனுடைய முஷ்டிகள் உன் கதவுகளில் தட்டுவதைக் கேட்கலாம். ஆனால் அவன் தன் பலத்தை எப்படி வீணில் செலவழித்துக்கொண்டிருக்கிறான்; இன்னும் அவன் அரண்மணையின் உள் அறைகளினுள்ளாகவே தன் வழியை உண்டாக்கிக்கொண்டிருக்கிறான். என்றுமே அவன் அதன் கடைசிப் பகுதியை அடையப்போவதில்லை; அதில் அவன் வெற்றி பெற்றாலும் அதில் எந்த லாபமும் இருக்கப்போவதில்லை. அதன் பிறகு அவன் படிக்கட்டுகளின் வழி தன் பாதையைக் கண்டுபிடிக்கப் போராடவேண்டும்; உள்முற்றங்களைக் கடக்கவேண்டும். அதன் பிறகு இன்னொரு அரண்மனை; இப்படியாக ஆயிரக்கணக்கான வருடங்கள். கடைசியாக இருக்கும் வெளிப்புறக் கதவை அவன் உடைத்துத் திறந்து வந்தாலும் - அது என்றுமே, என்றுமே நடக்கப் போவதில்லை- அந்த பேரரசின் தலைநகரம், உலகின் மையம், அவன் முன்னே  விரிந்து கிடக்கும், அதனுடைய மறுத்தல் திணிக்கப்பட்டு, வெடித்து இறுக்குவதாக. யாராலுமே போராடி தன் வழியை இங்கே கண்டுபிடிக்க இயலாது, அதிலும் இறந்த மனிதனிடமிருந்து செய்தியைக் கொண்டுவரும் ஒருவனால் குறைந்தபட்ச வழியைக் கூட கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நீ, அந்தி சாய்கையில், உன் ஜன்னலில் உட்கார்ந்து அந்த செய்தியை நீயாகவே கனவு கண்டு கொள்ளலாம்.

———-

மாவீரன் அலெக்ஸாண்டர்

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

—————

மாவீரன் அலெக்ஸாண்டர் அவனுடைய ஆரம்பகாலத்தில் பல ராணுவவெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவனுடைய ராணுவத்திற்குப் பிரமாதமான பயிற்சி இருந்தாலும், உலகை மாற்றக்கூடிய சக்தி அவனுள் இருப்பதாக அவன் உணர்ந்திருந்தாலும்,  ஆசிய துருக்கியையும் ஐரோப்பிய துருக்கியையும் பிரிக்கும் ஹெல்லஸ்பாண்ட் ஜலசந்திக் கரையிலேயே  அவன் நின்றிருக்கக்கூடும், பயத்தினால் அல்ல, முடிவெடுக்கத் தெரியாததனால் அல்ல, மனோதிடத்தின் பலவீனத்தினால் அல்ல, ஆனால் அவனுடைய உடல் எடையின் காரணத்தினாலேயே என்பது எண்ணிப்பார்க்கத்தக்கதே.

 

No comments: