Sunday, July 5, 2026

எமிலி டிக்கின்ஸன், ஸில்வியா பிளாத், ஹாலினா போஸ்வியாடொவ்ஸ்கா

 


 ஹாலினா போஸ்வியாடொவ்ஸ்காவின் கவிதைகளை மொழிபெயர்க்கும்போது என்னோடு ஒரு போலந்தின் பேரழகி ஒருத்தி தன்னுடைய பொன் கூந்தல் காற்றிலாட என்னோடு கைகோர்த்து மலைப்பாதையொன்றில் நடந்து வருவதாகப் பிரேமை கொண்டேனில்லையா அப்போதே வேறு இரு தோழிகளும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள்; அவர்கள் எமிலி டிக்கின்சனும் ஸில்வியா பிளாத்தும்.


எமிலி டிக்கின்ஸன் தன்னுடைய அக உலகின் தனிமையைத் தன் ஆத்மாவின் பயணமாக என் நெஞ்சம் நிறைக்கப் பகிர்ந்துகொண்டவள். துக்கம், அதில் கிளைக்கும் நம்பிக்கை, நிலைபேறுடைமை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் என் காதோடு காதாக, நெஞ்சோடு நெஞ்சாகப் பரிவின் சுகந்தத்தோடு தொடர்ந்து பேசுகிறவள். “பிரிவு என்பதுதான் நாம் சொர்க்கத்தைப் பற்றி அறியும் முழுமையான அறிவு” என்று அவள் பேசும்போது நான் அவளை ஆவி சேர்த்து அணைத்துக்கொள்கிறேன். அவளோ திக்கித்திக்கி அல்லவா பேசுகிறாள்? இல்லையென்றால் சிறிய துதிப்பாடல் போன்ற கவிதைகளில் அவள் ஏன் இத்தனை சிறு கோடுகளை இட வேண்டும்? உணர்ச்சி மேலீட்டால் அவள் மூச்சு வாங்குவதையல்லவா அவளுடைய சிறு கோடுகள் சொல்கின்றன? “நான் ஒருவருமில்லை, நீயும் அப்படித்தானே” என்று எழுதும்போது அவளால் எப்படி ஒரு முனகலை ஒரு பேரறிவிப்பாக அவளால் மாற்றமுடிகிறது என்று வியப்பில் ஆழ்ந்து போகிறேன். “தாகத்தால் கற்பிக்கப்படுவதே தண்ணீர்” என்று அவள் சொல்லும் போதே அவள் எனக்குத் தேவதையாகவும் ஆசிரியையாகவும் மாறிவிட்டாள். அதனால்தான் நான் எமிலி டிக்கின்ஸனின் புகைப்படங்கள் எதையும் பார்க்கவிரும்புவதில்லை. எமிலி பற்றிய என் கற்பனையின் விரிவு ஓர் உருவமாகக் குறுக்கப்பட்டுவிட்டால் என் இருப்பின் கதி என்ன ஆவது? “ஆத்மா தன் சமூகத்தைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறாள்” என்று அவள் எனக்காக மட்டுமே எழுதினாள்; அதில் ஆத்மா பெண்பால் என்பது அவள் எனக்கு மட்டுமே சுட்டிக் காட்டிய இரகசியம். அதனால்தான் அவளால் “ இறப்புக்காக நிற்பதற்கு எனக்கு நேரமில்லை என்பதால் அவன் எனக்காக நின்றான்” என்று எழுத முடிந்தது. “பரந்த வெளி ஒரு ஏகாந்தம், கடல் ஒரு ஏகாந்தம், மரணம் ஒரு ஏகாந்தம், ஆனால் இவையல்லால் சமூகமும் அவ்வாறாகவே இருப்பதாக,  அந்த அதிக ஆழமுடைய இடங்களை ஒப்பிடுகையில், துருவத் தனிமையின் அந்தரங்கமென்பது ஓர் ஆத்மா தன்னைத் தானே அனுமதித்துக்கொள்வது” என அவள் எனக்குக் கற்பித்த வித்தை  என் அகத்தை வரைபடமாக்கிக்கொள்ளும் தியானம். அவளுடைய கவிதை நூல்களை எமிலியென நினைத்து நான் எத்தனை முறை முத்தமிட்டிருக்கிறேன்!


ஸில்வியா என் பெயராகவே இருந்தவள். எமிலியைப் போல ஸில்வியா உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்தவளில்லை. அந்தரங்கத்திற்கும் பொதுவெளிக்கும் இடைவெளி ஏதுமில்லாமல் ஆக்கியவள். ‘ஏதுமில்லாமல் ஆக்கியவள்’ என்ற பதங்களின் சேர்க்கைதான் எத்தனை வியாக்கியானங்களுக்கு உரியது! ஸில்வியா எமிலியைய் போலத் திக்கித்திக்கிப் பேசினாளில்லை; சொற்களைக் கண்டுபிடிக்கவே சிரமப்பட்டவள்; அத்தகைய சிரமங்களையே காவியமாக்கியவள். நான் இதோ இருக்கிறேன் என என்னோடு கண்ணாமூச்சி விளையாடுகிறவள், இதோ பிடித்துவிட்டேன் அவளை என்று அவளை அள்ளித் தூக்குகையில் மரித்து என் உள்ளத்தைச் சுக்கு நூறாக நொறுக்கிவிடுபவள். “சாம்பலிலிருந்து நான் எழுகிறேன் எனது சிவப்புத் தலைமுடியோடு, நான் ஆண்களைக் காற்று போல விழுங்கிவிடுகிறேன்” என்று பின்னே எழுதுகிறாளில்லையா? அவளைக் கேவல் ஓரிடத்திற்குள் அமுக்கி வைத்திருக்கிறது, இரவுகளில் அவளிடமிருந்து  அது குதித்து வெளியேறுகிறது, தனது கொக்கிகளோடு  அது காதலுக்காக அலைவுறுகிறது. நான் தவறாமல் அவளிடம் சிக்கிக்கொள்கிறேன். அவளுடைய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிப்பது எளிதானதல்ல. “இறப்பு எல்லாவற்றையும் போலவே ஒரு கலை, அதை நான் மிகச் சிறப்பாகவே செய்கிறேன்” என்று ஸில்வியா பிளாத் எழுதும்போது கேவலாக என்னை ஆக்கிரமித்தவள் பேரழுகையாக என்னை நொறுக்கிவிட்டுப்போகிறாள். அவளே கொஞ்ச நேரம் கழித்து கண் சிமிட்டி, “நான் கண்ணை மூடுகையில் உலகனைத்தும் இறந்துபடுகிறது, கண் இமைகளைத் திறக்கும்போது உலகு மீண்டும் பிறக்கிறது” என்று பாடி என்னை வம்புக்கு இழுப்பாள். அருகில் சென்றாலோ “நான் உன்னை என் தலைக்குள் கற்பனையாக உண்டாக்கி வைத்திருந்தேன்” என்று “பைத்தியக்காரியின் காதல் பாடலில்” பாடுவாள். 


ஹாலினா போஸ்வியாடொவ்ஸ்கா என் கண்களில் படாமல் இத்தனை வருடங்கள் ஒளிந்து வாழ்ந்திருக்கிறாள். போனவருடம் என் போலந்து நாட்டுத் தோழிகள் எனக்கு அவளை அறிமுகப்படுத்தினார்கள். இளமையிலேயே மரணமடைந்துவிட்டவள். ஹாலினா புலிகளைப் பழக்குவது சொற்களைப் பழக்குவதை விட எளிது என்று சொல்லும்போது அவளிடம் ஸில்வியாவின் சாயல்களும் போராட்டங்களும் தென்படுகின்றன. ஆனால் அது ஒரு பொய்த்தேவு. “உனது முழுனிறைவான விரல்களில் நான் ஒரு நடுக்கம் மாத்திரமே” என ஹாலினாவால் நேர்மையாகச் சொல்லமுடிகிறது. ஹாலினாவின் முழு உடலும் இவ்வுலகில் இப்போதே எனக் கவிதைகளில் முழு உயிர்ப்புடன், காதலுடன், காமத்துடன் என்னுடன் தோழமை கொள்கிறது. அன்னா அக்மத்தோவா, விஸ்லாவா சிம்போர்ஸ்கா ஆகியோரின் கொடிவழி உறவில் ஹாலினா வந்திருக்க வேண்டும் என நான் ஜாடை பார்க்க விழைகிறேன். பழைய காதலிகளின் சாயலைப் புதியவளிடம் பார்க்க விழையும் முட்டாளைப் போல. “ஒருவரால் காதலைக் கொல்ல இயலாது; பூமியில் அதைப் புதைத்தால் அது மீண்டும் வளர்ந்துவிடுகிறது, காற்றில் தூக்கி வீசினால் இலைகளைப் போல அதற்கு இறகுகள் முளைத்துவிடுகின்றன” என்று ஹாலினாவால் கண்களை அகல விரித்துப் பேசமுடிகிறது. இந்த மாதிரியான எளிமையான சொற்களில் எப்படி அவளால் நேர்மையான தொனியைக் கொண்டுவரமுடிகிறது என்று நான் அசந்து சொக்கிப்போய் இருக்கிறேன். இப்போதைக்கு அது இளமையான காதலின் நேர்மை அது என என் நிலைகொள்ளா மனதைச் சமாதானப்படுத்தி வைத்திருக்கிறேன். ஹாலினா அரிதிலும் அரிதானவள். 

No comments: