நோடெஹிங் ஆற்றங்கரை |
“பாடல்களிலுள்ள அடிநாதமாகிய ரீங்காரத்தைக் கவனிப்பாயா நீ” என்று கேட்ட ரீபாங் தன் கறுப்புக் கண்ணாடியை மூக்கிலிருந்து அகற்றி நெற்றியில் ஏற்றிக்கொண்டு என்னைக் கூர்மையாக உற்றுப் பார்த்தார்.
கற்பாந்த காலமே தூலமானது போல நீண்டிருந்த தேசிய நெடுஞ்சாலை 39 இல் எங்கள் டாடா சுமோ விரைந்துகொண்டிருந்தது. திமாப்பூரை தாண்டிவிட்டோம். சாலையின் இரு மருங்கிலும் ஊசியிலை பைன் மரங்கள் நிறைந்திருந்தன. நம்டஃபா தேசியப் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய கானகத்தின் முகப்பான மியாவ் சிறுநகரை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். எங்களுடன் பிரயாணத்திற்கென்று சேர்ந்திருந்த இரு நாகர் இளைஞர்களின் பெயர்களை நான் கேட்டதைத் தொடர்ந்தே இந்த உரையாடல். ஒருவர் பெயர் டானியல் டிங் சுருக்கமாக டிங் இன்னொருவர் கிய்னாம் நங் சுருக்கமாக நங். பெயர்களைக் கேட்டவுடன் எனக்கு ஓஷோவின் நகைச்சுவைத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு சிரித்து சிரித்து துணுக்கைச் சொன்னேன்: சீனாவில் குழந்தைகளுக்கு எப்படிப் பெயர் வைப்பார்களாம் தெரியுமா, குழந்தைகள் பிறந்தவுடன் கரண்டிகளைத் தூக்கி மேலே போடுவார்கள் கீழே விழும்போது-சிங், சாங், சுங்- என்பது போல என்ன சத்தம் முதலில் கேட்கிறதோ அதையே குழந்தைக்குப் பெயராய் வைத்து விடுவார்களாம். சோக்கோவும் மெவாங் ஓவின் மகள்களும் ( அவர்களின் பெயர்களை இன்னும் கேட்கவில்லை) சத்தமாகச் சிரித்தார்கள். ரீபாங்கும் இளைஞர்களும் புன்னகைக்க மட்டுமே செய்தனர்.
ரீபாங் சோக்கோவை டாட்டியை (கொட்டங்கச்சி வயலின்) எடுத்து கொஞ்சம் வாசி என்றார். சோக்கோ டாட்டியை தம்புராவில் சுதி சேர்ப்பது போல மீட்டினாள். அதன் ரீங்காரம் கார் முழுக்க நிறைத்தது. டாட்டியின் நாதம் அடங்கியபின்னும் கேட்கிறதல்லவா அந்த ரீங்காரம் அதை பெயர்களிலும் கொண்டு வருவதற்கே எங்கள் பெயர்களில் ‘ங்’ அதிகம் இடம் பெறுகிறது. இன்றைக்கு கிறித்தவப் பெயர்களுடன் அவை இணைந்துவிட்டன என்பது மட்டுமல்ல ரீங்காரத்தைக் கவனிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மரபும் என்னவென்று தெரியாமலேயே வளர்கிறார்கள். இருவாட்சியின் குரலொலியில் நீ இந்த ரீங்காரத்தைக் கேட்கலாம்; பாடல்களின்போதும் ஏன் பேச்சின்போதும் அந்த ரீங்காரத்தை ஒரு மாந்தரீகன் கவனிக்கவேண்டும் என்றார் ரீபாங். சில குரல்வளங்களுக்கு கோவில் மணியோசை போன்ற கார்வை உண்டு பாலமுரளிகிருஷ்ணாவிற்கு, மதுரை மணி ஐயருக்கு, சி.எஸ்.ஜெயராமனுக்கு, நாகூர் ஹனீபாவுக்கு என்று என் சிந்தனை ஓடியது. ரீபாங்கிடமும் மற்றவர்களுடனும் நான் இந்தப் பாடகர்களின் குரல் வளத்தினையும் அவற்றின் கார்வைகளின் தனித்தன்மைகளையும் விளக்க முற்பட்டேன். பேச்சுக்கும், எல்லா சப்தங்களுக்கும் கார்வை உண்டு, மலரக் காத்திருக்கும் மொட்டுக்களும், பறவைகளும் தெளிவாக அவற்றைக் கேட்கின்றன என்றார் ரீபாங். மாந்தரீகத்தின் முதல் பாடத்தை அப்பா உனக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டார் என்ற சோக்கோவின் குரலில் வழக்கமான கேலி இல்லை. சோக்கோ எம்.எஸ்ஸி கணிதம் படித்துக்கொண்டிருந்தாள், நல்ல ஆங்கிலம் பேசுவதால் என் மொழிபெயர்ப்ப்பாளராகவும் உதவி செய்தாள். அப்பாவின் மாந்தரீகம் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது என்றே இது வரை நினைத்திருந்தேன். அவள் மாந்தரீகத்தின் முதல் பாடம் என சப்தங்களின் கார்வையை கவனிப்பதைப் பற்றி சொல்லியது எனக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அவளுக்கு நான் மாந்தரீகம் சொல்லித் தந்து பார்த்தேன் அவளுக்கு மண்டையில் ஏறவில்லை என்றார் ரீபாங் விட்டேத்தியாக. மெவாங் ஓவின் மூன்றாவது மகள் இடைப்புகுந்து பாடகிகளான எங்களுக்கு கார்வையை கவனிப்பதா கடினமான காரியம்? பிரச்சினை அதற்கு அடுத்தக் கட்டத்தில் அல்லவா இருக்கிறது என்றாள். அடப்பாவிகளா நீங்கள் எல்லோரும் மாந்தரீகம் படிக்க முயன்று தோற்றுவிட்டதினால்தான் இந்தப் பயல் எப்படி கற்றுக்கொள்கிறானென்று பார்க்கத்தான் படை திரண்டு வருகிறார்களா என நினைத்துக்கொண்டேன். உன் பெயர் என்னடியம்மா நீயும் தரையில் விழும் கரண்டி சப்தம்தானா? பளிங்குத் தரையில் விழுந்த தங்கக்கரண்டியாக்கும் நான் என்று மூக்கை நிமிர்த்திக்கொண்டாளே தவிர பெயர் என்ன என்று சொல்லவில்லை.
கார்வைகளை கவனிப்பதை உங்கள் இனத்துக்கே உரிய தனித்துவ மரபாகச் சொல்ல முடியாது பரந்து பட்ட இந்திய மரபுகளில் மூல மந்திர ஜெபம் என்பது கார்வைகளை உருவாக்கும் சப்தங்களை திரும்பத் திரும்பச் சொல்வதிலும் அவற்றைக் கவனித்து மனதை ஒருமைப்படுத்துவதிலும்தான் அடங்கியிருக்கிறது. நீங்கள் அதை பேசும் கணங்களுக்கும், பாடும் கணங்களுக்கும் நீட்டிக்கிறீர்களாக இருக்கும். இல்லை கூடுதலாக இருவாட்சியின் குரலொலிக்கும் கொண்டு சென்று கேட்கிறீர்களாக இருக்கும். அவ்வளவுதானே என்ற என்னை ரீபாங் இடைமறித்தார். இந்திய, சீன, திபெத்திய, பர்மிய மரபுகளுக்குள் வடகிழக்கு மாநில பழங்குடிகளின் மரபுகளை அடக்குவதே ஆராய்ச்சியாளர்களின் வேலையாய்ப்போய்விட்டது என்ற ரீபாங்கின் முகம் வருத்தத்தில் தோய்ந்திருந்தது. ஒப்பீடு இல்லாமல் தனித்துவ மரபுகள் பற்றிய புரிதலை உருவாக்குவது இயலாத காரியம் என்பதை அவருக்கு நான் விளக்கத் தலைப்பட்டேன்.
கிய்னாம் காரை ஓட்டிக்கொண்டிருந்த டானியலிடம் அதோ பார் அதோ பார் என்று கத்தினான். நடுச்சாலையில் முயல் ஒன்று குந்தியிருந்தது. டானியல் கியரை மாற்றி காரின் வேகத்தை அதிகப்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் முயலை அடித்துவிட்டான். கார் முழுக்க மகிழ்ச்சிக்கூச்சல் அலை மோதியது. காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு எல்லோரும் இறங்கினோம். டானியலும் கிய்னாமும் போய் இறந்த முயலை சாலையோர பள்ளத்திலிருந்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி எடுத்து வந்தனர். டானியல் படு திறமைசாலி எப்படி முயல் நசுங்கிவிடாமல், தூக்கி எறியப்படுவதுபோல அடித்தான் பார்த்தாயா என்றாள் சோக்கோ. நோடெஹிங் நதிக்கரையில் நாளை இரவு முயல்கறியும், அரிசிக்கள்ளும், டாட்டியின் மீட்டல்களோடு கூடிய பாடல்களும் என்று அவர்களுக்குள் குதூகலித்தனர். நான் அதன் பிறகு எதுவும் பேசவில்லை; கண்களை மூடி நித்திரை கொள்வதாக பாவனை செய்தேன்.
======================================
தொடரும்
அடிக்குறிப்புகள்
1. திமாப்பூர் அனுபவங்களை நான் வடகிழக்குமாநிலங்களின் அரசியல்சூழ்நிலைகள் குறித்து எழுதும்போது விவரிப்பதுதான் பொருத்தமானதாகஇருக்கும்.
2. பார்க்க ஓஷோவின் 'தம்மபதம் புத்தரின் வழி I" கண்ணதாசன் பதிப்பக வெளியீடுஎண் 253, சென்னை 2010 பக்கம் 40