Saturday, December 10, 2022

டைரிக் குறிப்புகள் சில

பகவனும் இறைவனும் 
------ 

சிங்கப்பூரிலிருந்து ஒரு தமிழாசிரியர் வாட்சப்பில் அழைத்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது பகவன், இறைவன் ஆகிய சொற்களுக்கு எப்படிப் பொருள் கொள்வது என்று கேட்டார். நான் ‘வள்ளுவர் வழங்கும் மொழி நூலி’ல் பகவன் என்ற சொல் பக் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை சொன்னேன். பகவன் என்பதை பகு+வ்+அன் எனப் பிரிக்கலாம். பகுத்து அருள்பவன் பகவன். பக் என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு பிறந்த சொற்கள் பக, பகவு, பகுதி, பகல், பகை, பகுத்து, பக்கு, பக்கம் முதலியன. பகு முதல் நீண்டு பாகு ஆகும் பாகு என்றால் பாதி . இறைவன் என்பதற்கு எப்பொருளிலும் தங்குகிறவன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண் காதைக்கு உரை எழுதுகிற அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவதையும் இறுத்தல் என்பது தங்குதல் என்னும் பொருட்டாதல் என்பதை மறைமலையடிகள் தன்னுடைய திருவாசக உரையிலும் எடுத்துரைப்பதையும் சொன்னேன். அந்த தமிழாசிரியர் நான் தமிழ் மரபில் ஊறியவன் என்றார் நான் அப்படியா என்று கேட்டுக்கொண்டேன். பகுத்து அருள்பவன் தற்செயலான ஞாபகத்தால் என்னிடம் தங்கியதை எப்படிச் சொல்ல?

 ——— 

 கடைசியில் ஊர் வைத்தியர் ஃபோனில் கூறிய சில பயிற்சிகள்தான் எனக்கு கால் சுளுக்கிலிருந்து நிவாரணம் தரும் போல இருக்கிறது. அவர் சொன்ன பயிற்சிகளில் ஒன்று இரண்டு லிட்டர் தண்ணீர் நிரம்பிய கூஜாவை கையில் மார்பருகே பிடித்துக்கொண்டு என் வீட்டின் உள் மாடிப்படிகளில் ஏறி இறங்குதல். காதலியின் இதயத் துடிப்பை அறிவதற்கான யத்தனம் போலவே நீர் தளும்புதலை அனுமானித்தபடியே மாடிப்படி ஏறி இறங்கினேன். இன்னொரு பயிற்சி உள்ளங்கையை நெற்றியில் வைத்து தலையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு முன்னோக்கி தலையை அழுத்துதல். காதலியின் இதயத்துடிப்பை அறிய முற்பட்டால் அடுத்து அதுதானே செய்ய வேண்டும். 

——— 

 மாட்டினத்தைச் சேர்ந்த Yak என்பதை தமிழில் கடமா என்று மொழிபெயர்க்கிறார்கள். இன்றைய செய்தித்தாளில் கடமாவை உணவுக்கான விலங்குகளில் ஒன்றாக அரசாங்கம் அனுமதி அளித்த செய்தியை வாசித்து அயர்ந்து போனேன். கடாமாவின் கறியும் பாலும் சந்தைப்படுத்தப்படுமென்றால் அதன் வருவாயைக்கருதி பலரும் அதை வளர்ப்பார்கள் கடமாத்தொகை வளரும் என்பது இந்த அறிவிப்புக்குப் பின்னுள்ள தர்க்கமாம். எனக்கு கடமாக்கள் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. அவற்றை நான் திபெத்திய காட்டெருதுகள் என்றே முன்பெல்லாம் பெயரிட்டு அழைத்திருக்கிறேன். பெரிய கண்களும் வலுவான உடலும் கொண்ட கடமாக்கள் தங்கள் வலு அறியாத அப்புராணிகள். சிக்கிம் சென்றபோது காங்டாக் நகரத்திற்கும் மேலே உள்ள ஏரியை கடமாவின் மேல் சவாரி செய்து சுற்றி வந்ததிலிருந்து எனக்கு கடமாக்கள் மேல் சிநேகம் உண்டானது. அதிலிருந்து கடமா செய்திகளை அவ்வபோது வாசித்து என் நட்பை உறுதிப்படுத்திக்கொள்வேன் ஏற்கனவே கடமாத்தொகை 58000 ஆக 2019 கணக்கெடுப்புபடி இருந்ததிலிருந்து 25 சதவீதம் குறைந்துவிட்டது. இப்போது உணவு மிருகமாக அறிவிக்கப்பட்டதால் கறிக்காக எத்தனை கொல்லப்படும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. சாந்தமான கடமா சவாரியில் மலையுச்சி ஏரி ஒன்றை சுற்றிவருவது போன்ற கண் மூடா தியானம் வேறொன்று எனக்கு வாய்த்ததில்லை. என்னுடைய நாட்குறிப்புகளில் கடமா சவாரியின்போது எனக்கு மனதிற்குள் தோன்றிய கம்பனின் சுந்தரகாண்ட வரி ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்’ ஐ குறித்து வைத்திருக்கிறேன். ஏனிந்த தொடர்புறுத்தல் என்று எனக்கு நனவுபூர்வமாகத் தெரியவில்லை. கடாமாவின் கண்களால் ஐம்பூதங்களின் கலவையினால் உருவாகும் விகாரங்களைக் கண்டதால் இருக்கலாம். விழிப்படலங்களற்ற கடமாவின் அகன்ற விழிகள் காண்பதுதான் என்ன? 
 —— 

 துயரங்களால் தூய்மையடைதல் 
—- 
துயரங்களால் தூய்மைப்படுத்தபடுதல் என்ற சொற்சேர்க்கை இன்று அதிகாலை என்னைப் பீடித்தது. பாரசீகக் கவிஞர் ஃப்ரீத் அபு தாலிப் மொஹம்மது இபின் இப்ரஹிம் எழுதிய ‘பறவைகளின் நாடாளுமன்றம்’ ( Parliament of birds) நூலில் தங்கள் அரசனைக் கண்டுபிடிக்க எல்லா பறவைகளும் கிளம்புகின்றன . பல பறவைகள் அரசனைக் கண்டுபிடிக்காமலேயே இறந்துவிடுகின்றன. துயரங்களால் தூய்மைப்படுத்தப்பட்ட முப்பது பறவைகள் மட்டும் மலையுச்சியை அடைந்து தரிசனம் பெறுகின்றன. அந்த தரிசனம் எப்படியிருக்கிறதென்றால் ஒவ்வொருவரும், அனைவரும், தனியாகவும் மொத்தமாகவும் அரசனாய் இருக்கிறார்கள். 
—— 
 சுவாசிக்காத நிலவு 
—— 
கவிதைகளில் மௌனத்தையும் வெறுமையையும் நேர்மறைப் பண்பாக அடையாளம் கண்டு அதை நோக்கி என் கவிதைகளை நகர்த்துவதற்கான அகப் போராட்டங்களில் நான் ஈடுபட்டிருக்கும் இந்த கார்த்திகை நாட்களில் இவ்விரண்டையும் எதிர்மறையாகப் பார்க்கும் ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் கவிதை ஒன்றை வாசித்தேன். அதை எனக்காக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டேன். ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் கவிதை: 
“செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது 
அகண்ட பார்வை வெறுமையாகிறது 
பாடாத நள்ளிரவுப் பறவைகளின் கூட்டம் மௌனத்தில் நீந்துகிறது
 நான் இயற்கையைப் போலவே ஏழ்மையுடன் இருக்கிறேன் 
ஆகாயத்தைப் போலவே நிர்வாணமாய் 
என் சுதந்திரம் பொய்த்தோற்ற பேய்மையால் ஆனது 
நான் சுவாசிக்காத நிலவைப் பார்க்கிறேன் 
தாளை விட வெளுத்த ஆகாயத்தையும் 
உங்கள் விசித்திரமான நோயுற்ற உலகையும் வெறுமையை நான் வரவேற்கிறேன்”
 — 

 கவிதையில் கன்னம் குழிய சிரித்தல் 
—— 
அக்கா மகாதேவியின் கன்னடக் கவிதை ஒன்று, “ஓ அம்மா, நான் காதலில் விழுந்துவிட்டேன் “ என்று ஆரம்பிக்கும். “ அவன் பேரழகன் அவனுக்கு இறப்புமில்லை, நலிவுறுதலும் இல்லை, அவனுக்கு ஆரம்பமும் இல்லை முடிவுமில்லை” என்று மகிழ்ச்சியின் பரபரப்பில் தொடரும் கவிதை அவனை சென்ன மல்லிகார்ஜுனா, அழகன், அவனே என் கணவன் என்று பெயர் சொல்லி முடியும். பெயரற்ற விகாசத்திலிருந்து பெயருடையதை நோக்கிக்குவியும் கவிதையின் போக்கும் அக்கா மகாதேவியின் இந்தக் கவிதையின் கவனிக்கத்தக்க அம்சம் என்று நான் நினைத்ததுண்டு. சென்ன மல்லிகார்ஜுனாவின் பெயரைச் சொல்லும் அக்கா மகாதேவி தன் கன்னங்கள் குழிய சிரிப்பார் என்றொரு காட்சி என்னுள் தோன்றி மறைகிறது . கன்னம் குழிய சிரிக்கும் பெண்ணைக் கண்டால் நான் ஸ்தம்பித்து மயங்கிவிடுவதுண்டு.
 —— 
 மொழிபெயர்ப்பு என்பது ஈகை
 —- 
சில சமயங்களில் சின்னஞ் சிறிய வாக்கியங்கள் திகைக்கவைக்கும் சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட வகையில் ஒரு வாக்கியம் Translation is generosity. தெரிதாவுடையது. மொழிபெயர்ப்பு என்பது ஈகை. என்னவொரு ஆச்சரியமான புரிதலை அனைத்து வகையான மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் இந்த வாக்கியம் உண்டாக்குகிறது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச்செல்லும் ஓடையாக மட்டும் இருக்க வேண்டியதில்லை; இயற்கையை நம் அகத்தோடு பேசவைக்கும் கவிஞன், சிசுவின் மழலையொலிகளை புரிந்துகொள்ளும் தாய், சப்தங்கள் வார்த்தையாகிற சமூகத் தருணங்கள், காதலில் அபூர்வ நித்தியம் கொள்ளும் கணங்கள், ஒரு பறவையின் சிறகடிப்பில் இருக்கும் சுதந்திரம், புராதனங்களில் ஒளிந்திருக்கும் ஏக்கம், மூலிகை ஒன்றின் மருத்துவ குணம், ஒலியை இசையாக்கும் கலைஞன், என மொழிபெயர்ப்பாளர்களிலும் மொழிபெயர்ப்புகளிலும்தான் எத்தனை வகை! மக்கள் கூட்டம் சமூகமாகத் திரள்வது என்பதே மொழிபெயர்ப்பாளர்களின் ஈகையால்தான் என்று கூட ஒருவர் இதை நீட்டிக்க முடியும். ஒப்பந்தங்களால் உருத்திரளும் சமூகம் என்ற ரூசோவின் கருத்தாக்கத்தைவிட மொழிபெயர்ப்புகளின் ஈகையால் இணைக்கப்படும் சமூகம் என்பது அர்த்தபரிமாற்றத்தை சமூகத்தின் மைய கண்ணியாக மாற்றிவிடுகிறது. 
 —— 
 இன்னும் பலதும் 
—— 
பிரயாணம் என்பதே மிகப் பெரிய உருவகமாக இருக்கும்போது பிரயாணத்தை எதனால் மறைமுகமாகச் சுட்டுவது என்ற குழப்பம் தோன்றிவிடுகிறது. ஓவ்வொரு பயணத்திற்கு முன்பும் நான் பரபரப்பினை அடைகிறேன். மனதில் புதிதாய் பிறந்த குழந்தையின் அலங்க மலங்க விழிக்கும் பார்வை உலகை அறிவது போல எல்லாம் புதிதாகிவிடுகின்றன. பயணத்திற்காக உள்ளங்கால் குறுகுறுப்பது தவிர வேறெதுவும் பெரிதாய் உணர்வாய் பீடிப்பதில்லை. வீடு திரும்பிய பின்போ ஈரம் உலர்ந்துவிட்டது போலாகிவிடுகிறது. ஈரத்துக்கும் உலர்தலுக்கும் இடையே ஒரு வாழ்வோ மரணமோ சம்பவித்துவிடுகிறது. இடையே காதலும் பிரிதலும் போல இன்னும் பலதும். 

 —— 
 நிறங்களில் அமிழ்ந்திருத்தல் 
—— 
அமேசான் பிரைமில் ‘வதந்தி’ தொலைக்காட்சித் தொடரை பார்க்கும்போது நான் கதையின் போக்கையோ நடிப்பையோ பார்க்காமல் கன்னியாகுமரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், மரங்கள் செடி கொடிகள், வீடுகள் அவற்றின் வண்ணங்கள் என பின்னணிக்காட்சிகளையேப் பார்த்து மயங்கிக்கொண்டிருந்தேன். பச்சை கலந்த அடர் நீலம், கடும் மஞ்சள் ஆகிய நிறங்கள் சுவர்களுக்கு அடிக்கப்பட்டிருப்பதை நான் ஆச்சரியமாகக் கவனித்தேன். ஒரு நகர வீட்டின் வெளிர் பச்சை சுவர்களாய் இருந்த என் வீட்டினை பச்சை கலந்த அடர் நீலமும் கடும் மஞ்சளும் வண்ணங்களாக மாற்றி அவற்றிற்கு கிராமப்பகுதி வீடுகளின் நிறங்களும் மணங்களும் கொண்டு வந்தபோது எல்லோரும் என்னை பரிகசித்தார்கள். நான் வீட்டை பழசாக்கிவிட்டதாக பலரும் சொன்னார்கள். என் வீட்டில் தங்கிய சில வெளிநாட்டு நண்பர்கள் என் வீடு Mexican soap opera- வில் வரும் வீடுகளைப் போல இருப்பதாக அபிப்பிராயப்பட்டார்கள். நான் உடைந்து தளர்ந்த பழைய அறைக்கலன்களை மாற்றாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதும் என் வீட்டம்மணி, பையன்கள் உட்பட யாருக்கும் பிடிக்கவில்லை. நான் ‘வதந்தி’ தொடரை நேற்று பார்க்கும்வரை வருகிற பொங்கலுக்கு நகர வீட்டின் வண்ணங்களை மறுபடியும் அடித்துவிடலாம் என்றே என்னையும் எல்லோரும் நினைக்க வைத்துவிட்டார்கள். ‘வதந்தி’ யைப் பார்த்து என்னுடைய கண்டுபிடிப்பு என்னவென்றால் என்னுடைய நனவிலியில் எங்கோ ஒரு பகுதியில் கன்னியாகுமரியின் கிராம, சிறு நகர் வீடுகளின் நிறங்கள் அடர்ந்திருக்கின்றன; கூடவே உடைந்து சிதைந்த தேக்கு மர அறைக்கலன்களும். அவை எனக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளிக்கின்றன. என்னால் கன்னியாகுமரியின் வனப்பகுதியை இங்கே வேளச்சேரிக்கு கொண்டுவர இயலாது; நான் வசிக்கும் வேளச்சேரியின்பகுதியும் ஐஐடி வளாகத்தின் பகுதியும் வனப்பகுதிதான் என்றாலும் கூட. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற நிறங்களில் நான் அமிழ்ந்திருக்கலாம்தானே?

 ——— 
 கவிதாகணம் 
— 
எப்போது என்று நினைவில்லை. முன்பு ஒரு முறை ஜெய்ப்பூரில் நடந்த உருது கவிகளின் சம்மேளனம் ஒன்றில் கலந்துகொண்டேன். ஒவ்வொரு கவிதை வாசிக்கப்படும்போதும் அதில் வரும் முக்கியமான வரிகளுக்கு ஆஹா ஓஹோ பேஷ் சபாஷ் போன்ற பெரும் ஆராவரக் கூச்சல்களும் உச்சுக்கொட்டல்களும் மாலைமாலையாக கண்ணீர் வடித்தலும் வாய் விட்டு சிரித்தலும் என சம்மேளனம் படு களேபரமாய் இருந்தது. கவிதை வாசிப்பது என்றால் இப்படிப்பட்ட சபையில் அல்லவா வாசிக்கவேண்டும் என்ற மெலிதான பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் கவிதாகணம் என்பது அமைதியாய் மனதிற்குள் துய்க்கவேண்டியது இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. அதிக ஆர்ப்பாட்டத்தினால் கவிதை வரிகள் உண்டாக்குகின்ற அபூர்வ கணங்களின் பவித்திரம் சீரழிந்துவிடுகிறது என்றும் எனக்குத் தோன்றியது. பாரசீக இரானிய கவி ஹஃபஸின் (Hafez) கஸல் கவிதையில் வரும் சில வரிகளைக் கவனியுங்கள்: 
 “ நீ தனிமையாக இருக்கும்போதும், இருட்டில் அமிழ்ந்திருக்கும்போதும் , 
 உனது இருப்பின் திகைக்கவைக்கும் ஒளியை 
 உனக்கே நான் காட்ட இயலும் என்றே விரும்புகிறேன்” 
 இந்த வரிகளின் கவிதாகணம் என்பதை இவ்வரிகள் என் காதுகளுக்குள் மெலிதாக கிசுகிசுக்கப்படும்போதே உணர்ந்து நான் உயிர்த்தெழுவேன்; இவ்வரிகள் மேடையில் ஒரு நடிகனால் சப்தமாக நடித்துக்காட்டப்பட்டதாக இருந்தாலும் கூட. ஹஃபஸின் இன்னொரு வாசகம் ‘ கலை என்பது காதலர்களுக்கிடையிலான உரையாடல்’ என்பது; அதை சத்தம் போட்டு ஊரைக்கூட்டியா சொல்ல முடியும்? ஹஃபஸின் கஸல்களில் வரும் இன்னும் சில வரிகள்; 
“ இன்னும், இத்தனை காலத்திற்கு பின்பும் கூட ஆதவன் பூமியிடம் எப்போதும் சொல்வதில்லை 
‘நீ எனக்கு கடன்பட்டிருக்கிறாய்’ என பாருங்கள், 
அத்தகைய அன்பு என்ன செய்கிறது என்று அது முழு ஆகாயத்தையும் ஒளியூட்டிவிடுகிறது!” 

 ஹஃபஸை விடுங்கள் அவர் இறையியல் ஆன்மீகக் கவிதைகளை எழுதிய பதிமூன்று பதினான்காம் நூற்றாண்டு கவி. இருபதாம் நூற்றாண்டு கவியான எஸ்ரா பவுண்டின் “ மனம் புல்லின் நுனியில் அலையும் போதெல்லாம், ஒரு எறும்பின் முன்னங்கால்கள் உன்னைக் காப்பாற்றும்” போன்ற வரிகளுக்கெல்லாம் ஆஹாரம் ஊஹாரம் கொட்டினால் கவிதாகணம் என்ன ஆகும்? 
 ——— 
 எளிமையின் அழகும் பாண்டி விளையாட்டும்
 -- 
இலக்கியத்திலும் வாழ்விலும் எளிமையின் அழகே வியக்கத்தக்கது. இதை நான் மிலராட் பாவிச்சின் 'காசர்களின் அகராதி' குறித்து எண்பதுகளின் இறுதியில் விரிவாக பேசியபோதும் எழுதியபோதும் கூட சொல்லி வந்திருக்கிறேன். பாவிச்சின் மாயாஜால உத்திகளும் நடையும் அவற்றின் வியப்பு அடங்கிய பின்னும் நம்மை பிரமிக்க வைக்கிறதென்றால் அதற்கான காரணம் பாவிச் தன் மாயாஜாலத்தை செர்பியாவின் மூன்று இனங்களுக்கும்/ மதங்களுக்கும் இடையிலான எதிரெதிர் நிலைகளின் புனைவு வெளியை நிர்மூலமாக்கப் பயன்படுத்துவதால்தான். செர்பிய இனங்களுக்கு இடையிலான போரை 'காஸர்களின் அகராதியை'ப் போல வேறெந்த இலக்கியப்படைப்பும் நிரந்தரமாக அபத்தமாக்கவில்லை. அந்த எளிமையின் அழகே நம்மை ஆட்கொள்ளவேண்டும். தவிர, ஆண் பிரதி /பெண் பிரதி வித்தியாசங்கள் என்பவையெல்லாம் விளையாட்டு மட்டுமே. அதுபோலவேதான் கோர்த்தசாரின் ஹாட்ச்பாட்ச் நாவலின் அத்தியாயங்களை எத்தனை வரிசைக்கிரமங்களில் வாசிக்கலாம் என்பதும். உத்திகளுக்கு தன்னளவில் எந்த இலக்கிய அந்தஸ்தும் கிடையாது; அவை என்ன காரணங்களுக்கு சேவை செய்கின்றன என்பதே முக்கியம். மேலும், பாலே நடனத்தில் ஒருவர் துள்ளுவதற்கும், சாதாரணமாக ஒருவர் துள்ளுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். எல்லா துள்ளுதல்களும் துள்ளுதல்கள் அல்ல. 
——— 
 நிலக்காட்சி கவிதைகள் - பரவசத்தின் அருகில்தான் பேரெழில் 
—- 
அமேசான் பிரைமில் ‘வதந்தி’ தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா- அதில் முக்கியமாக என் மனதில் தங்கிவிட்ட நிலக்காட்சி செம்மண் தேரிக்குள் கதாநாயகன் செல்லும் காட்சி. நான் பாண்டிச்சேரி பகுதியில், திருச்செந்தூர்- உவரி பகுதியில் செம்மண் தேரி நிலங்களைப் பார்த்திருக்கிறேன். ‘வதந்தி’ தொடரில் காட்டப்படும் கன்னியாகுமரி மாவட்ட செம்மண் நிலம் அடர்சிவப்பு நிறத்தில் இன்னும் வசீகரமாக இருந்தது. ஒரு வேளை டிஜிட்டலாக அதன் செம்மண் நிறத்தை அதிகபடுத்தி இருப்பார்களோ என்ற எண்ணம் கூட எனக்கு ஏற்பட்டது. என்னுடைய ஆரம்பகால கல்விப்புல வாழ்க்கையில் என்னை வெகுவாக பாதித்த நூல்களில் ஒன்று வரலாற்றாசிரியர் Simon Schama எழுதிய Landscape and Memory என்ற நூல். ஸ்காமா தன்னுடைய புத்தகத்தில் மரங்கள் (காடு), பாறை, தண்ணீர் என்ற பகுதியில் இந்த மூன்றும் நிலங்களின் பகுதியாக ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படை வளர்ச்சிக்கு எப்படி அடிகோலின என்று எழுதுகிறார். நிலக்காட்சிகளின் உள்ளே இருக்கும் மனிதனின் நனவிலி புராணங்கள் ஒரு பண்பாட்டின் அடிப்படை அடையாளங்களை தீர்மானிப்பதாக இருக்கின்றன என்பதை ஸ்காமா விரிவாக எடுத்துக்காட்டுவது எனக்கு மிகவும் உவப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. ஃப்ரெஞ்சுக்கவி பாதலேரும் ஜப்பானியக்கவி பாஷோவும் கூட நிலக்காட்சிகளை தங்கள் கவிதைகளின் அடிப்படை உருவகங்களாகக் கொண்டிருக்கின்றனர். ஓவியங்களுக்கும் கவிதைகளுக்கும் இடையிலுள்ள பொதுவான காட்சிப்படுத்தும் தன்மைகளிலும் நிலக்காட்சிகள் முக்கியமானவை. ஆஹ் நான் வதந்தித் தொடரில் பார்த்த செம்மண் நிலத்தைப் பற்றி சொல்ல நினைத்து வேறு பலவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். செம்மண் தேரி நிலங்களை நான் அடிக்கடி கனவு காண்கிறேன். என்ன சொல்கின்றன அவை? உவரியில் பார்த்த நிலக்காட்சியைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். 
உவரியின் நிலக்காட்சி 
— 
காலத்தின் புனைவாய் பிரேமையின் மடிப்புகளோடும்
 உறக்கத்தின் ஆழ்நிலை ஓடைகளோடும் 
புவியில் உன் இருப்பின் மென்கதுப்பாய் 
தூய்மையின் குருதியாய் திட்பமாய் 
உவரியின் செம்மண் தேரிகள் துலக்கமாகின்றன 
உவரியின் உப்புக்காற்று பனைகளூடே 
உன் உன்மத்தத்தின் புயல் போலவே வீசுகிறது 
கடல் அலைகள் ஆர்ப்பரித்து கொந்தளிக்கையில் 
உன் திகைப்பின் பூர்ணிமை திமிறி எழுகிறது 
அடிவானத்தில் அதன் சன்னமான 
மணல் போன்ற செந்நிற கிரணங்கள்
 தேரியின் புழுதியோடும் உன் குருதியோடும் கலக்க 
எங்கும் செந்நிற ஐக்கியம் 
நீயும் நிலவும் நீர்நிலையும் நிலமும் கடலும் 
கலந்த கணத்தில் நானுனக்கு சொல்வதெல்லாம் 
உவரியிலிருந்து உன் ஏக்கத்தின் தொலைவில்தான் பரிபூரணம்
 உன் பரவசத்தின் அருகில்தான் பேரெழில் 
உன் ஆழ்மனச் சித்திரமே இவ்வுலகு 
நீயே தேரி 
நீயே திரு 
 —— 

* உவரி- திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை தாலுக்காவில் இருக்கிற கடலோர கிராமம். செம்மண் தேரிகளால் நிரம்பியது.

No comments: