Monday, December 19, 2022

மகமது தர்வீஷின் மேலும் இரண்டு கவிதைகள்

 முட்கள் செறிந்த பேரிக்காய் புதரின் நிலைபேறு

———-
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
——
என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள், தந்தையீர்?
காற்றை நோக்கி என் மகனே…
போனபார்டேயின் துருப்புகள் ஏக்கரின் நிழல்களைக் கண்காணிக்க அமைத்த மேட்டின் அருகில்
சமவெளியிலிருந்து அவர்கள் இருவரும் வந்து சேர்கையில்
ஒரு தந்தை தன் மகனுக்குச் சொல்கிறார்: பயப்படாதே, பயப்படாதே தோட்டாக்களின் விசில் சத்தத்துக்குப் பயப்படாதே
தூசில் இருப்பது பாதுகாப்பானது
நாம் பத்திரமாய் இருப்போம்
வடக்கில் ஒரு குன்றினை ஏறிவிடுவோம்
துருப்புகள் வெகு தூரத்திலுள்ள தங்கள் மக்களிடம் சென்றபின்
நாம் திரும்பிப் போய் விடுவோம்
நாம் அங்கே இல்லாதபோது நம் வீட்டில் யார் வாழ்வார்கள் தந்தையே?
அது அங்கே அப்படியேதான் இருக்கும், என் மகனே
அவர் தன் கால்களை உணர்ந்தபோது சாவியையும் உணர்ந்தார்,
நம்பிக்கையடைந்தார்,
அவர்கள் முள்ப்புதர் வேலிஒன்றைத் தாண்டியபோது
அவர் அவனிடம் சொன்னார்
மகனே, நினைவில் கொள், இங்கேதான்
பிரிட்டிஷ்காரர்கள் உன் தந்தையை
இரண்டு இரவுகள் முட்கள் செறிந்த பேரிக்காய் புதரில்
சிலுவையில் அறைந்தார்கள், ஆனால் அவர் அவர்களிடம்
எந்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை
நீ வளரும்போது என் மகனே,
நீ அந்த துப்பாக்கிகளின் வாரிசுதாரர்களிடம் சொல்வாய்
அவர்கள் இரும்பில் அழியாமல் சேர்ந்திருக்கும் ரத்தத்தின் கணக்கை
நீங்கள் எதற்கு குதிரையை தனியாக விட்டுவந்தீர்கள்?
வீட்டிற்கான துணையாக இருப்பதற்காக, என் மகனே
வீட்டிலுள்ளோர் வீடு நீங்குகையில் அவை மரிக்கின்றன என்பதால்
நிலைபேறு தன் கதவுகளைத் திறக்கிறது, வெகு தூரத்தில்,
இரவைத் துரத்திப் பின்செல்வோருக்கு.
பயமுறுத்தும் நிலவைப் பார்த்து தரிசுகளில் ஓநாய்கள் ஊளையிடுகின்றன
ஒரு தந்தை தன் மகனுக்கு சொல்கிறார்: உன் தாத்தாவைப் போல வலுவானவனாய் இரு
வெள்ளம் அமிழ்த்திய நிலத்தில் நிற்கும் கடைசி கருவாலி மர குன்று வரை என்னுடன் ஏறிவிடு
நினைவில் கொள் மகனே; இங்கேதான் துருக்கிய சுல்தானின்
துருப்புகள் தங்கள் கோவேறுக்கழுதை போரிலிருந்து
கீழே விழுந்தார்கள், என்னுடனே பாதங்களிட்டு வா
நாம் அப்போதுதான் திரும்பிச் செல்லமுடியும்
எப்போது தந்தையே?
நாளைக்கு. ஒருவேளை இன்னும் இரண்டு நாட்களில், மகனே
அடுத்த நாள் அசட்டையாய் கழிந்தது, நீண்ட குளிர்கால இரவுகளில் அவர்கள் பின்னே காற்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது
ஜோஷுவா பென் நூனின் துருப்புகள் அவர்கள் வீட்டிலிருந்து எடுத்த கற்களால் கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் இருவருமே சுரங்கவழி நீர்ப்பாதையில் மூச்சிறைத்துக்கொண்டிருந்தார்கள்
இங்கேதான் முன்னொரு நாள் நம் கடவுள் கடந்து சென்றார்
இங்கேதான் அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்
அவர் அதிகமும் அன்பைப் பற்றி பேசினார்
என் மகனே நாளையை நினைவில் கொள்
அந்த துருப்புகள் போன பின்
சிலுவைப்போரின் கோட்டைகளை
ஏப்ரல் மாதத்தின் புற்கள் சிறுகச் சிறுக மென்று அழித்துவிட்டன.

-------
என்னுடைய முடிவுக்கும் அதன் முடிவுக்கும்
——
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
-நீ நடப்பதால் களைப்படைந்திருக்கிறாயா
குழந்தாய், களைப்படைந்திருக்கிறாயா?
— ஆமாம் தந்தையே
அந்தத் தடத்தில் உன் இரவு நீண்டதாக இருந்தது
இதயம் உன் இரவின் பூமியில் நீரோட்டமாய் ஓடியது
— நீ இன்னும் ஒரு பூனையைப் போல லேசாக இருக்கிறாய்
என் தோளில் ஏறிக்கொள்
இது வடக்கு கலீலீ
சீக்கிரத்தில் நாம்
வெள்ளம் அமிழ்த்திய நிலத்தில் கடைசி கருவாலி மரத்தையும் கடந்து விடுவோம்
லெபனான் நமக்குப் பின்னால் இருக்கிறது
டமாஸ்கஸிலிருந்து ஏக்கரின் அழகிய சுவர்கள் வரையிலான முழு வானமும் நம்முடையது
-அப்புறம் என்ன?
அதன் பிறகு நாம் வீட்டுக்குப் போவோம்
உனக்கு வழி தெரியுமா குழந்தாய்?
ஆமாம், தந்தையே
பிரதான சாலையிலிருக்கும் கரூப்பா மரத்தின் கிழக்கிலிருந்து
ஒரு சிறிய பாதையில் ஒளிந்திருக்கும் முட்கள் செறிந்த பேரிக்காய் புதருக்கு முதலில், அதிலிருந்து அகலமாகி, அகலமாகி, கிணற்றுக்குச் செல்லும் பாதை
திராட்சைத் தோட்டத்தை பார்த்தபடி இருக்கும்
அது புகையிலையும், இனிப்புகளூம் விற்கும் ஜமீல் மாமாவுக்குச் சொந்தமானது
அதன் பிறகு அந்தப் பாதை கதிரடிக்கும் தரையில் தன்னை இழந்து நேராக வீட்டில் வந்து முடியும்
ஒரு கிளியின் வடிவத்தைப் போல
-உனக்கு அந்த வீடு தெரியுமா குழந்தாய்?
எனக்கு வீடும் அதன் பாதையும் தெரியும்
இரும்புக் கதவருகே மல்லிகை
கற்படிக்கட்டுகளில் சூரிய ஒளிக் கற்றைகள்
நம்மையும் நம்மைத்தாண்டியும் பார்க்கும் சூரிய காந்தி மலர்கள்
தாத்தாவுக்கான காலை உணவை பிரம்புத் தட்டில் தயார் செய்யும் தேனீக்கள்
முற்றத்தில் ஒரு கிணறு, ஒரு காற்றாடி மரம், ஒரு குதிரை
பிறகு புதருக்குப் பின்னால் நம் பக்கங்களைப் புரட்டிச் செல்லும் ஒரு நாளை
— உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா, தந்தையே?
நான் உங்கள் கண்களில் வியர்வையைப் பார்க்கிறேன்
-என் மகனே, நான் களைப்படைந்திருக்கிறேன்.. என்னைத் தூக்கிச் செல்வாயா?
— நீங்கள் என்னைத் தூக்கிச் சென்றது போலவே தந்தையே
நான் இந்த ஏக்கத்தை தூக்கிச் செல்வேன்
ஏனெனில்
என்னுடைய ஆரம்பங்களே அதன் ஆரம்பங்கள்
நான் இந்தப் பாதையை என் முடிவு வரை
நடப்பேன் … அதன் முடிவு வரைக்கும் கூட

No comments: