Sunday, December 18, 2022

மகமது தர்வீஷின் மூன்று கவிதைகள்

 உடலிலிருந்து நீரோட்டமாய் வழியும் ஒரு இரவு

—-
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
ஜூலை இரவொன்றில் மல்லிகை, பாடல்
தெருவில் சந்திக்கும் இரு அன்னியர்கள் பற்றியது
அது எந்தவொரு இலக்கிற்கும் இட்டுச்செல்வதில்லை
இரண்டு வாதுமை கண்களுக்குப் பின் நான் யார்? அன்னியன் சொல்கிறான்
நீ என்னை நாடுகடத்தியபின் நான் யார்? அந்த அன்னியப் பெண் சொல்கிறாள்
நாம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது
ஆதி கடல்களின் உப்பை நினைவுகூரும் உடலுக்குள் கடத்தாமல் இருப்பது..
அவள் அவனிடத்தில் ஒரு வெப்ப உடலாக திரும்பி வருபவளாக இருந்தாள்
அவன் அவளிடத்தில் ஒரு வெப்ப உடலாக திரும்பி வருபவனாக இருந்தான்
இவ்வாறாகவே அன்னிய காதலர்கள் தங்கள் காதலை விட்டு விலகுகிறார்கள்
அலங்கோலமாக, தங்கள் உள்ளாடைகளை
படுக்கைவிரிப்பின் மலர்களிடையே விட்டுச் செல்பவர்களாக
-நீ என்னை உண்மையாகக் காதலித்தால்
ஒரு பாடலின் பாடலை எனக்காகத் தா
என் பெயரை பாபிலோனின் தோட்டத்திலுள்ள மாதுளை மரப்பட்டைகளில் செதுக்கு
-நீ என்னை உண்மையாகக் காதலித்தால்
என் கனவை என் கையில் வை, மரியமின் மகனிடம் சொல்
நீ உனக்கு செய்துகொண்டதை நீ எப்படி எங்களுக்குச் செய்ய இயலும்
ஓ தெய்வமே எங்களை இன்னொரு நாளையாக மாற்றுவதில் ஏதேனும் நீதி இருக்குமா
நானெப்படி மல்லிகை நாளையிலிருந்து குணப்படுத்தப்படுவேன்?
நானெப்படி மல்லிகை நாளையிலிருந்து குணப்படுத்தப்படுவேன்?
அவர்கள் அறையின் கூரை வரை நிரப்பும் இருட்டில்
ஊடி அமர்ந்து இருக்கிறார்கள்; அவள் அவனிடம் சொல்கிறாள் என் மார்புகளால் கவனம் சிதறாதே
அவன் சொல்கிறான்: உன் மார்புகளே இந்த இரவின் தேவைகளை ஒளியூட்டுவது
உனது மார்புகளே என்னை முத்தமிடும் இரவு,
நாம் நிரம்பியிருக்கிறோம்
இடமோ இரவின் கோப்பையை மீறி வழிகிறது
அவள் அந்த விவரணைக்கு சிரிக்கிறாள்
அவள் மேலும் சிரிக்கும்போது இரவின் வீழ்தல் அவள் கையில் மறைகிறது
என் அன்பே, அது என் அதிர்ஷ்ட சீட்டாய் இருக்குமென்றால்
நானொரு இளைஞனாய் இருந்திருந்தால் நீயாகவே நான் இருப்பேன்
நானொரு பெண்ணாய் இருந்திருந்தால் நீயாகவே நான் இருப்பேன்
அவள் அழுகிறாள், அது அவள் வழி, திராட்சைரச நிறமுடைய சொர்க்கத்திலிருந்து திரும்பிவந்தவளாக;
என்னைக் கூட்டிச் செல்
காற்றாடி மரங்களின் மேல் நீலப்பறவை இல்லாத
நிலத்துக்கு, ஓ அன்னியனே
அவள் மேலும் அழுகிறாள் வனங்களின் வழியே பயணத்தை பாதியில் நிறுத்துபவளாக
தனக்குத் தானே நான் யார் என்று கேட்பவளாக
நீ என்னை என் உடலிலிருந்து நாடுகடத்தியபின் நான் யார்?
எனக்கும், உனக்கும், எனது நிலத்துக்கும் என் சோகமே
இரண்டு வாதுமை கண்களுக்குப் பின் நான் யார்?
எனக்கு என் நாளையைக் காட்டிக்கொடு
இவ்வாறாகவே காதலர்கள் விடைபெறுகிறார்கள்
அலங்கோலமாக, ஜூலை இரவின் மல்லிகை வாசம் போல
ஓவ்வொரு ஜூலையும் மல்லிகை என்னை
ஒரு இலக்கற்ற தெருவுக்குக் கூட்டிச் செல்கிறது
நான் என் பாடலைத் தொடர்கிறேன்
மல்லிகை
ஜூலையில்
ஒரு இரவு…

-----------------------------------------------------------------
சிட்டுக்குருவி, அது அப்படியே, அது அப்படியே
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
————-
மரபின் பன்மை பொருண்மை: இந்தப் பிளந்த மருள் மாலை நேரம் கண்ணாடிக்குப்பின்னுள்ள வீரியமாய் என்னை அழைக்கிறது
நான் அடிக்கடி உன்ணைக் கனவு காண்பதில்லை, சிட்டுக்குருவி
சிறகு சிறகைக் கனவு காண்பதில்லை
நாம் இருவருமே பதற்றமாய் இருக்கிறோம்
—-
என்னிடம் இல்லாதது உன்னிடம் இருக்கிறது; உன் இணையின் நீலத்தன்மை
உன் அடைக்கலம் காற்றிலிருந்து காற்றிற்குத் திரும்புவது
அதனால் நீ என் மேல் பறக்கிறாய்! என்னுள் இருக்கும் ஆன்மா
ஆன்மாவுக்காக தாகித்து இருக்கிறது, அது உன் இறகுகளால் பின்னப்படும் நாட்களை பாராட்டுகிறது
என்னைக் கைவிடு அது உனக்கு விருப்பமென்றால்
என்னுடைய வீட்டிற்காக, என் வார்த்தைகள் குறுகலானவையாக இருப்பதால்
——
ஒரு மகிழ்ச்சியான விருந்தாளியைப் போல அதற்கு கூரை தெரியும்
ஒரு ஜன்னலில் அமர்ந்திருக்கும் பாட்டி நீரும் ரொட்டியும் எங்கேயிருக்கிறது என அறிவது போல
அதற்குத் தீனித்தொட்டி எங்கே இருக்கிறது எனத் தெரியும்
எலிகளுக்கான பொறி எங்கே இருக்கிறது என்பதும்
அது தன் சிறகுகளை தன் சால்வையை நழுவ விடும் பெண் போல தன் சிறகுகளை சிலிர்த்துக்கொள்கிறது
அந்த நீலத்தன்மை பறக்கிறது
—-
என்னைப் போலவே மன உறுதியற்றது
இந்த திடசித்தமில்லாத கொண்டாட்டம்
இதயத்தை வழித்து வைக்கோலில் வீசுவதாய் இருக்கிறது
ஏதேனும் ஒரு நடுக்கம் வெள்ளிப்பாத்திரத்தில் ஒரு நாளேனும் நிலைத்திருக்கிறதா?
என் பதிவு நகைச்சுவையற்றதாயிருக்கிறது
ஆனாலும் நீ வருவாய் சிட்டுக்குருவி
அடிவானம் எவ்வளவு அகலாமயிருந்தாலும் பூமி குறுகலாகவே இருக்கிறது
——
உன் சிறகுகள் என்னிடமிருந்து என்னதான் எடுத்துச் செல்லும்?
அழுத்தம் , ஒரு பொறுப்பற்ற தினம் போல ஆவியாகிவிடும்
ஒரு கோதுமை மணி அவசியம் இறகுகள் சுதந்திரமாய் இருக்க
என் கண்ணாடிகள் உன்னிடமிருந்து என்ன எடுத்துக்கொள்ளும்?
என் ஆன்மாவுக்கு ஒரு ஆகாயம் கட்டாயம் வேண்டும், முழுமை அதை பார்ப்பதற்காக
—-
நீ சுதந்திரமாய் இருக்கிறாய் நானும் சுதந்திரமாய் இருக்கிறேன்
நாம் இருவருமே விரும்புகிறோம்
இல்லாததை. அதனால் என்னை கீழ் நோக்கி அழுத்து நான் மேலே எழுவதற்கு.
மேலே எழு நான் கீழ் நோக்கி சரிவதற்கு. ஓ சிட்டுக்குருவி!
எனக்கு ஒளியின் மணியைக்கொடு
நான் காலத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டை உனக்குத் தருகிறேன்
நாம் ஒருவரை ஒருவர் முழுமையாக்குகிறோம்
ஆகாயத்திற்கும் ஆகாயத்திற்கும் இடையில்
நாம் பிரிந்து போகையில்
—-------------------------------------------------------------------
எத்தனை தடவைகள் எல்லாம் முடிவடையும்?
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
——
அவன் தன் நாட்களை சிகரெட் புகையில் தியானிக்கிறான்
அவன் தன் சட்டைப்பை கடிகாரத்தை பார்த்தவாறே
நான் மட்டும் இதன் நகர்வுகளை தாமதப்படுத்த முடியுமென்றால்
வாற்கோதுமை முதிர்வதைத் தள்ளிப்போட முடியுமென்றால்
அவன் தன்னிடமிருந்து விலகி நிற்கிறான், அயர்ந்தவனாய், மனக்குறைகளுடன்
கோதுமையின் மணிகள் கனத்திருக்கின்றன, கதிர் அருவாள்கள் சோம்பிக்கிடக்கின்றன, நிலம்
தீர்க்கதரிசியின் கதவிலிருந்து தூரத்திலிருக்கிறது
லெபனானின் கோடை தெற்கிலிருக்கும் என் திராட்சைகளைப் பற்றி என்னிடம் பேசுகிறது
லெபனானின் கோடை இயற்கைக்கு அப்பால் இருப்பதைப் பற்றிப் பேசுகிறது
ஆனால் என் கடவுளை நோக்கிய பாதை
தெற்கின் நட்சத்திரத்திலிருந்து தொடங்குகிறது
நீவிர் என்னிடம் பேசுகிறீரா, தந்தையீர்?
றோட்ஸ் தீவில் அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டார்கள், மகனே
அது நம்மை எப்படி பாதிக்கும் தந்தையே, அது அப்படி நம்மை பாதிக்கும்?
எல்லாம் முடிந்துவிட்டது
எத்தனை தடவைகள் எல்லாம் முடிவடையும் தந்தையே?
அது முடிந்துவிட்டது. அவர்கள் தங்கள் கடைமையைச் செய்தார்கள்
அவர்கள் தங்கள் உடைந்த துப்பாக்கிகளோடு எதிரியின் விமானத்தோடு போரிட்டார்கள்
நாம் நம் கடமையைச் செய்தோம், நாம் சீன மரத்திலிருந்து தள்ளியே இருந்தோம்
அதன் தலைமை அதிகாரியின் தொப்பியை தொந்திரவு செய்யாவன்ணம்
நாம் நமது மனைவிமார்களின் மோதிரங்களை விற்றோம்
என் குழந்தாய்
அவர்கள் சிட்டுக்குருவிகளை வேட்டையாடுவதற்காக
அப்படியானால் தந்தையே நாம் இங்கேயே இருக்கப் போகிறோமோ?
கடலுக்கும் வானத்துக்கும் இடையில்
காற்றில் ஆடும் காற்றாடி மரத்துக்கு அடியில்
குழந்தாய் எல்லாமே இங்கேயும்
அங்கே இருப்பதின் சிலதைப் போலவே இருக்கும்
இரவு வருகையில் நாம் நாமாகிவிடுவோம்
ஒரே மாதிரி இருப்பதன் நிரந்திர நட்சத்திரத்தினால்
நாம் எரியூட்டப்படுவோம்
தந்தையே என்னை உற்சாகப்படுத்த ஏதாவது சொல்லுங்கள்
நான் ஜன்னலைத் திறந்து விட்டு வந்திருக்கிறேன்
கூவும் புறாக்களுக்காக
கிணற்றின் விளிம்பில் என் முகத்தை விட்டு வந்திருக்கிறேன்
நான் என் பேச்சை
அலமாரிக் கயிற்றில் விட்டு வந்திருக்கிறேன்
அது தன் கதையைச் சொல்வதற்காக
நான் இருளை விட்டு வந்திருக்கிறேன்
என் காத்திருப்பின் கம்பளி மூடிய இரவில்
நான் மேகங்களை விட்டு வந்திருக்கிறேன்
தன் கால்சாராய்களை விரிக்கும் அத்தி மரங்களின் மேல்
நான் தூக்கத்தை விட்டு வந்திருக்கிறேன்
தன்னைத் தானே அது புதுப்பித்துக்கொள்ள
நான் அமைதியை விட்டு வந்திருக்கிறேன்
தனியாக, அங்கே அந்த நிலத்தில்
— நான் விழித்திருக்கும்போது கனவு கண்டீர்களா தந்தையே?
- எழுந்திரு, நாம் திரும்பப் போகலாம் குழந்தாய்!
---------------------------------------------------------
கல்வாரியில் பாறை உடைப்பவன்
—-
மகமது தர்வீஷின் ‘அடையாள அட்டை’ கவிதையை மொழி பெயர்க்கலாமென்றால் இணையத்தில் அந்தக்கவிதை பல மாற்று வடிவங்களில் கிடைக்கிறது. ஒரு வடிவம் ‘எழுதிக்கொள் நான் ஒரு அரேபியன்’ என்று ஆரம்பிக்கிறது இன்னொரு வடிவத்திலோ ‘எழுதிக்கொள் உன் பதிவேடுகளில், நான் ஒரு அரேபியன்’ என்று ஆரம்பிக்கிறது. பத்திகளில் முடிவில் சில வடிவங்களில் ‘ எனக்கு ஒன்பது குழந்தைகள், பத்தாவது அடுத்த கோடையில் வரவிருக்கிறது, இதற்காகக் கோபப்பட வேண்டுமா’ என்றிருக்கிறது வேறு சில வடிவங்களிலோ ‘நீ இதற்காக கோபப்படுவாயா? ‘ என்று வேறொருவரைப் பார்த்து விளிக்கிறது. மிகச் சிறிய வேறுபாடுகள்தான் ஆனால் கவிதையின் தொனி முழுமையாக மாறிவிடுகிறது. கல்வாரியில் பாறை உடைப்பவனாக தன்னை இந்தக்கவிதையில் அடையாளப்படுத்திக்கொள்ளும் தர்வீஷ் அதை வைத்தே தன் அரேபிய தேசிய அடையாளத்தைக் கட்டுகிறார். தேசிய அடையாளம் இப்படியாக தர்வீஷுக்கு கடின உழைப்பாளியையும் சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்பவனின் வாழ்வாதார இருப்பை வைத்தும் கட்டமைக்கப்படுகிறதே அல்லாமல் அரேபிய, பாலஸ்தீனிய மரபுகள், தத்துவார்த்தங்கள் ஆகியவற்றை வைத்துக் கட்டமைக்கப்படுவதில்லை. எந்த விதமான மரபுக்கான உரிமை கோரலும் தர்வீஷிடம் இல்லை. ‘அடையாள அட்டை’ கவிதை வெளிவந்தபோது அது மக்களிடையே உண்டாக்கிய உணர்வு எழுச்சியைப் பார்த்து பயந்த அரசு அவரை சிறையிலடைத்தது. தர்வீஷும் எட்வர்ட் செய்தும் (Edward Said) நெருங்கிய நண்பர்கள். செய்து மறைந்தபோது தர்வீஷ் அவருக்காக எழுதிய கவிதையில் ஒரு வரி வருகிறது, “ அவன் நான் அங்கேயிருந்து வருகிறேன், இங்கேயிருந்து வருகிறேன் என்று சொல்கிறான் ஆனால் நான் அங்கேயுமில்லை, இங்கேயுமில்லை. எனக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன அவை சந்தித்து பிரிகின்றன; எனக்கு இரண்டு மொழிகள் இருக்கின்றன அதில் ஒன்றை நான் மறந்துவிட்டேன் , அது கனவுகளின் மொழி”

2


0


1

No comments: