Sunday, December 25, 2022

மகமது தர்வீஷின் மேலும் மூன்று கவிதைகள்

 6. ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியான கனவு காண்பவர்களின் மலைக்கணவாய்க்கு

——

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

———

…நாங்கள் வெளியேறியபோது எங்கள் குழந்தைப்பருவத்தை வண்ணத்துப்பூச்சிகளுக்கு விட்டு வந்தோம்

படிகளில் கொஞ்சம் ஓலிவ் எண்ணெய், 

ஆனால் நாங்கள்மறந்துவிட்டோம்

எங்களைச் சுற்றியிருந்த புதினாவுக்கு வாழ்த்து சொல்ல எங்களுடைய எதிர்காலத்திற்கு ஒரு வேகமான வணக்கத்தைச் சொல்வதற்கும்

வண்ணத்துப்பூச்சிகள் எங்களைச் சுற்றி எழுதும் நிறங்கள் தவிர

நண்பகலின் மசி வெள்ளையாய் இருக்கிறது….

*

ஓ வண்ணத்துப்பூச்சி, உனக்கே சகோதரியானவளே

நீ எப்படி இருப்பாயோ அப்படியே இரு

எனது ஏக்கத்திறகு முன்பும் என் ஏக்கத்திற்கு பின்பும்

ஆனால் என்னை உன் இறக்கைகளில் சகோதரனாக எடுத்துக்கொள், என் பைத்தியம் என்னோடு சூடாக இருக்கவிடு

ஓ வண்ணத்துப்பூச்சி, உனக்கே தாயானவளே

கைவினைஞர்கள் வடிவமைத்த பெட்டிகளிடம் என்னை விட்டு விடாதே

என்னை விட்டுவிடாதே

ஆகாயத்திலிருந்து அவளுடைய சகோதரியான கனவு காண்பவர்களின் மலைக்கணவாய் நோக்கி

நீரின் கண்ணாடிகளைச் சுமந்துகொண்டு 

வண்ணத்துப்பூச்சியின் எல்லை ஒன்றிற்கு

ஆகாயத்திலிருந்து வருபவர்களாக இருக்கும் ஆற்றலால்

நாமும் அவள் சகோதரியான

கனவு காண்பவர்களின் மலைக்கணவாய்க்கு

*

வண்ணத்துப்பூச்சி தன் ஒளியின் ஊசியால் பின்னுகிறது

அதன் இன்பியல் ஆபரணம் அது தன்னிலிருந்து பிறப்பதால் உண்டாகிறது

அது தன் துன்பியலின் நெருப்பில் நடனமாடுகிறது

*

பாதி ஃப்னீக்ஸ் பறவையாக அவள் இருப்பதால் அவளை எது தொடுகிறதோ அது நம்மைத் தொடுகிறது

ஒரு இருண்ட படிமம்

ஒளிக்கும் நெருப்புக்கும் இடையில்

இரண்டு வழிகளுக்கு இடையில்

இல்லை. அது விளையாட்டுத்தனமோ விவேகமோ இல்லை

நம் காதல்

இவ்வாறாக எப்போதுமே…. இவ்வாறாக

ஆகாயத்திலிருந்து அவளுடைய சகோதரியை நோக்கி

கனவு காண்பவர்களின் கணவாய்க்கு

*

வண்ணத்துப்பூச்சி என்பது பறக்க ஏங்கும் தண்ணீர், 

அது இளம்பெண்களின் வியர்வையிலிருந்து தப்பிச்செல்கிறது

அது நினைவுகளின் மேகமாக வளர்கிறது

வண்ணத்துப்பூசி என்பது இந்தகவிதை சொல்வது இல்லை

ஒரு கனவு கனவு காண்பவர்களை உடைத்துவிடுவது போல

அதிகப்படியான ஒளிர்விலிருந்து அது சொற்களை உடைக்கிறது

*

இருக்கட்டும்

நமது எதிர்காலம் நம்முடனே இருக்கட்டும்

நாம் கடந்தகாலமும் நம்முடனே இருக்கட்டும்

இன்றைய நாளின் விருந்து வண்ணத்துப்பூச்சியின் விடுமுறைக்குத் தயாராகட்டும்

கனவு காண்பவர்கள் ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியை நோக்கி கடந்து செல்லட்டும்

*

ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியை நோக்கி கனவு காண்பவர்கள் கடந்து செல்வதாக…



7. அபு ஃப்ராஸ் அல்-ஹமாதானியின் ரூமியாத்திலிருந்து

—-

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

——

ஒரு எதிரொலி திரும்புகிறது. ஒரு அகண்ட தெருவின் எதிரொலியில்

இருமலின் சப்தங்களுக்கிடையே காலடி ஓசைகள்

அவை கதவை நோக்கி வருகின்றன பின்னர் விலகிச் செல்கின்றன. எங்களைக் காண வரும் பார்வையாளர்கள்

நாளை, வியாழக்கிழமை வருகைகளுக்கானது. அங்கே எங்கள் நிழல்

தாழ்வாரங்களில். எங்கள் சூரியன் பழக்கூடைகளில்

அங்கே ஒரு தாய் சிறையதிகாரியிடம் திட்டுகிறாள்:

எங்களுடைய காபியை ஏன் புல்லில் ஊற்றினாய்

கேடுகெட்டவனே? அங்கே உப்பு மணத்தில் கடல்

அங்கே உப்பை சுவாசிக்கும் கடல். என் சிறை அறை

புறாவின் சத்தத்தினால் ஒரு செண்டிமீட்டர் அகலமாகியிருக்கிறது; பற

அலெப்போவுக்கு பறந்து செல், புறாவே, 

என் ரூமியாவுடன்

என் வாழ்த்துகளை என் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு எடுத்துச் செல்

ஒரு எதிரொலி

இன்னொரு எதிரொலியினுடையது. அதன் எதிரொலி ஒரு உலோக ஏணி, ஒளியூடுருவல், ஈரப்பதம், ஆகியன உடையது

வைகறையில் அதை நோக்கிச் செல்வோரை அது நிரப்புகிறது

வெளியில் உள்ள துளைகள் வழியாக கல்லறைகளுக்குள் வருவோரையும்

என்னையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் மொழிக்கு

நான் சொன்னேன்: எந்த வார்த்தைகள் கவிதையில் வாழ்கின்றனவோ அவையே மக்களுக்கு பயனுறும்

முரசுகள் அவர்களுடைய தோலில் நுரைமெத்தை போல மிதக்கையில்

என் சிறை அறை மேலும் அகண்டது, அந்த எதிரொலியில், ஒரு பலகணியாக உருமாற

வியர்த்தமாய் என்னுடன் என் ரயிலின் ஜன்னல்களுக்கு துணைவந்த பெண்ணின் ஆடையைப் போல.

அவள் சொன்னாள்: என் தந்தைக்கு உன்னைப் பிடிக்கவில்லை. என் தாய்க்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நாளை அதனால் இழப்புக்குத் தாயாராக இரு,

என்னை எதிர்பார்க்காதே, வியாழக்கிழமை காலை, எனக்கு

அடர்த்தி என்னைத் தன் சிறையில் ஒளித்து வைப்பது பிடிப்பதில்லை

அர்த்தத்தின் நகர்வுகளையும் காடுகளை மட்டும் நினைவில்கொள்ளும் உடலையும்  எனக்கு விட்டுச்செல்

அந்த எதிரொலிக்கு என் சிறை அறை போலவே ஒரு அறை இருக்கிறது, தனக்குத் தானே பேசிக்கொள்வதற்கான ஒரு அறை

என் சிறை அறை என் சித்திரம் அதை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை

என் காபியை காலையில் பகிர்ந்து கொள்ள, இருக்கையில்லை

என் நாடுகடத்தலை மாலையில் பகிர்ந்துகொள்ள, காட்சியில்லை

நான் பாதையை  அடைந்தததின் பெருவியப்பை பகிர்ந்துகொள்ள.

ஆகையால் நான் போர்களில் குதிரைகள் என்ன விரும்புமோ அதுவாக இருக்க விரும்புகிறேன்

ஒரு இளவரசனாக அல்லது 

ஒரு அழிபாடாக!

என் சிறை அறை ஒரு தெருவாக, இரண்டு தெருக்களாக அகண்டுவிட்டது, இந்த எதிரொலி

ஒரு எதிரொலி, இடர்வரவின் முன்னறிகுறியாக, வெற்றியின் அறுதியாக, நான் என் சுவரிலிருந்து எழுந்து வருவேன்

ஒரு சுதந்திர ஆன்மா தன்னிடமிருந்தே ஒரு குருவிடமிருந்து எழுந்து வருவது போல

நான் அலெப்போவுக்கு போவேன். ஓ புறாவே, பற

என் ரூமியாவை எடுத்துக்கொண்டு என் ஒன்றுவிட்ட சகோதரனிடம் பறந்து செல்

பனித்துளியின் வாழ்த்துக்கள்! 

————-

*அபு ஃப்ராஸ் அல்-ஹமாதானி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய இளவரசர், கவிஞர்

  • ரூமியாத்- அரேபிய செவ்வியல் கவிதை வடிவம்- நான்கு வரிகளாலான பத்திகளையுடையது.



8 பயணிக்கு பயணி சொன்னது: நாங்கள் திரும்பி வரமாட்டோம்

——

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

——-

எனக்கு பாலைவனத்தைத் தெரியாது

ஆனால் நான் அதன் எல்லைகளில் என் வார்த்தைகளை வளர்த்தேன்

சொற்கள் என்ன சொல்லாவேண்டுமோ அவற்றைச் சொல்லின, 

நான் ஒரு விவகாரத்தான பெண் போல அவற்றைக் கடந்தேன்

நான் அவளுடைய உடைந்துபோன மனிதன் போல அவற்றைக் கடந்தேன்

அவற்றின் லயம் மட்டுமே என் நினைவிலிருக்கிறது

நான் அதைக் கேட்கிறேன்

அதைப் பின்பற்றுகிறேன்

வானத்தை நோக்கிய பாதையில்

அதை ஒரு வெண்புறா போல வளர்க்கிறேன்

என் பாடல்களின் ஆகாயம்-

நான் சிரிய (நாட்டின்) கடற்கறையின் புதல்வன்

அதை நான் என் நகர்வில் குடியமர்த்தியிருக்கிறேன்

இல்லையென்றால்

நான் கடல் மக்களிடையே வாழ்கிறேன்

ஆனால் கானல் என்னை கிழக்கு நோக்கி

 ஆதி நாகரிகங்கள் நோக்கி

வலுவாக இழுக்கிறது

நான் அருமையான குதிரைகளுக்கு நீர் வார்க்கிறேன்

எழுத்துருவின் துடிப்பை அதன் எதிரொலியில் நான் உணர்கிறேன்

இரண்டு திசைகளிலிருந்தும் ஒரு ஜன்னலாகத் திரும்பி வருகிறேன்

நான் யாரென்பதை மறந்துவிடுகிறேன்

ஒரு குழுமமாக இருப்பதற்காக

என் ஜன்னலின் கீழ் பாராட்டுரைக்கும் மாலுமிகளுக்கு சமகாலத்தவனாக இருப்பதற்காக

போர்வீரர் தங்கள் உறவினருக்குச் சொல்லும் செய்தி இவ்வாறாயிருக்கிறது:

நாங்கள் போனபடியே திரும்பி வரமாட்டோம்

நாங்கள் அவ்வபோது கூட திரும்ப வரமாட்டோம்

எனக்குப் பாலைவனத்தைத் தெரியாது

ஓயாது நினைவில் ஊடாடும் அந்த வெளிக்கு நான் எவ்வளவுதான்

வருகை தந்திருந்தாலும் 

நான் பார்க்காத பாலைவனம் என்னிடம் சொன்னது:

எழுது!

நான் சொன்னேன்: கானலில் இன்னொரு எழுதுதல் இருக்கிறது

அது சொன்னது: கானலை பச்சை நிறமாக்க எழுது

நான் சொன்னேன்: இன்மை என்னிடத்தில் குறைவுபட்டிருக்கிறது

அதற்கான சொற்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை

அது சொன்னது: எழுது அது உனக்குத் தெரியவரக்கூடும்

நீ எங்கே இருந்தாய் நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரிவதாக

நீ எப்படி வந்தாய், நாளை நீ என்னவாக இருப்பாய் என்பது தெரிவதாக

உனது பெயரை என் கையில் கொடுத்துவிட்டு எழுது

நான் யார் என்பது உனக்குத் தெரிவதாக, நீ மேகம் போல

வெளியில் சென்றடைவாயாக

ஆகையால் நான் எழுதினேன்: யார் அவன் கதையை எழுதுகிறானோ அவன் சொற்களின் நிலத்தை மரபுரிமையாய் பெறுகிறான்

அவன் அவற்றின் அர்த்தங்களுக்கு முழுச் சொந்தக்காரனாகிறான்

எனக்கு பாலைவனத்தைத் தெரியாது

ஆனால் அதைப் பிரிய, போய்வருகிறேன் என்றேன்

எனது பாடலின் கிழக்கே இருக்கும் பழங்குடியினரே போய்வருகிறேன்

வாளின் பன்மையிலான இனமே போய்வருகிறேன்

பனை மரத்தினடியில் இருக்கும் என் தாயின் புத்திரனே போய்வருகிறேன்

நம் கிரகங்களைப் பாதுகாத்து வரும் *ஏழு புனிதப் பாடல்களே

போய்வருகிறேன்

அமைதி என்னைத் தழுவட்டும்: இரண்டு கவிதைகளுக்கு நடுவே

ஒரு கவிதை எழுதப்பட்டுவிட்டது

இன்னொன்றின் கவிஞன் தீவிர உணர்வெழுச்சியில் இறந்துவிட்டான்

நானா அது?

நான் அங்கே இருக்கிறேனா அல்லது இங்கேயா?

என் ஒவ்வொரு நீயிலும் நான் இருப்பதாக,

நானே நீ, முன்னிலை ஆள், அது நாடுகடத்துவதல்ல

நான் நீயாக இருப்பது, அது நாடுகடத்துவதல்ல

நீ நானாக என்னுடைய நான் உன்னுடையதாக இருப்பது, அது நாடுகடத்துவதல்ல

கடலும் பாலைவனமும் இருப்பதாக

பயணியின் பாடல்கள் இன்னொரு பயணிக்காக:

நான் சென்றது போலவே திரும்பவரமாட்டேன்,

நான் திரும்பவரவேமாட்டேன்… அவ்வபோது கூட!

——

* எழு புனித பாடல்கள் Muʻallaqāt என்று அழைக்கப்படுகின்றன. புனித மெக்காவில் மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் உள்ள கஃபாவில் (கனசெவ்வக வடிவக் கட்டிடம்) இந்த எழு புனித பாடல்களும் எழுதி தொங்கவிடப்படுள்ளன. உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. ஏழுமுறை இடஞ்சுழியாகச் சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

No comments: