கை சொடக்கு போடும் நேரத்தில் மலை உச்சிக்குத் தூக்கி சென்றது போல அவர் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். திருமூலர், சிவவாக்கியர் இருவரில் யாரேனும் ஒருவரை மட்டும் நீங்கள் தெரிவு செய்ய வேண்டுமெனில் யார் உங்கள் தெரிவாக இருப்பார் என்பதே அந்தக் கேள்வி. உடனடியாக அப்படியெல்லாம் ஒப்பிட்டு பதில் சொல்ல முடியுமா என்று பதில் சொல்லாமல் தப்பிவிட்டேன் என்றாலும் காலை நடை முழுவதையும் அந்தக் கேள்வி ஆக்கிரமித்திருந்தது. சிவவாக்கியரிடம் ஏச்சு வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கு கூறு இருக்கிறதா, அறிவு இருக்கிறதா இப்படி சடங்குகளில் மயங்கிக் கிடக்கிறாயே என சிவவாக்கியர் கன்னா பின்னா என்று ஏசுவார். திருமூலர் அப்படி ஒன்றும் ஏசமாட்டார். கோவிலுக்குப் போகிறாயா, போ, போகாமல் இருக்கிறாயா, இரு, சைவ சித்தாந்தத்தைக் கற்று ஒழுகுகிறாயா, ஒழுகு, இல்லை நாதன் உள்ளே இருக்கிறான் என்று விச்ராந்தியாக ஊர் சுற்றுகிறாயா சுற்று என சுதந்திரமாக அய்யன் மூலன் விட்டுவிடுவார்; சூட்சுமம் போன்ற வடமொழி சொற்களை சூக்குமம் என்று நம் நாக்கு மடங்குவதற்கு ஏற்ப சமாதானப்படுத்திவிடுவார். ஐந்தெழுத்து மூல மந்திரத்தில் அதி சூக்குமம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று திருமூலர் கற்றுத்தராமல் என்னால் இன்றளவும் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டுக்கொண்டு இருக்க முடியுமா? இப்படி நான் எழுதும்போது நான் குழந்தையாக இருந்தபோது நடந்தது நினைவுக்கு வருகிறது. உன் பெயர் என்ன என்னிடம் கேட்கும் போதெல்லாம் நான் ஒரு சிக்கலான கட்டுரை அளவுக்கு நீளமாக இருக்கும் என் பெயரை ஒற்றை எழுத்தாக சுருக்கி ‘சி’ என்று சொல்லியிருக்கிறேன். அம்மாவுக்கு பெரிய சிரிப்பாணியை வரவழைக்கும் பெயர் அது. அம்மா சி என்பதை வைத்து என்னை செல்லமாக “சீப்பா” என்று கூப்பிடுவார்கள். அப்படி அம்மா கூப்பிட்டால் நான் ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறேன் என்றும் அடி நிச்சயம் என்பதும் சில சமயங்களில் உண்மை. சீப்பா என்ற புனைபெயரில் ‘இனி’ பத்திரிக்கையில் காமிக்ஸின் அரசியல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். என் பையன்களை குழந்தைகளாக ஆளுக்கொரு மடியில் இருத்தி Brow binkey, eye winkey, nose noppy, cheek cherry, mouth merry என்று ஒவ்வொரு அவயங்களாகத் தொட்டு என் அம்மா என்னைக் கொஞ்சுவதைப் போன்றே நான் அவர்களைக் கொஞ்சும்போது அவர்கள் பதிலுக்கு சீப்பா சீப்பா என்று மழலையில் களித்து என்னைக் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த பரமானந்தத்திற்கு ஈடு ஏது? ஆகவே சிவவாக்கியரின் வழி திருமூலரை அடைவதே என் தெரிவு என்று என்னை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்றவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். இப்போது நாயோட்டு மந்திரத்தைத் தியானித்துக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment