Saturday, November 24, 2012

எஸ்.ராமகிருஷ்ணனின் “ காந்தியைப் பின் தொடர்வது” பதிவினைக் குறித்து

எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் “காந்தியைப் பின்தொடர்வது” கட்டுரையைப் படித்ததிலிருந்து மனம் சஞ்சலப்பட்டு அலைபாய்ந்துகொண்டேயிருந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவில் எந்தப்பகுதி என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது என்பதை அறிய கட்டுரையை மீண்டும் படித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார் :

“ஒரு மாணவி என்னிடம் காந்தியை ஏன் கோட்ஸே கொன்றான் என்று கேட்டாள்
உங்களில் யாராவது பதில் சொல்லுங்கள் என்று மற்ற மாணவிகளிடம் சொன்னேன்
உடனே ஒரு மாணவி கோட்ஸேயின் தம்பியை காந்தியின் ஆட்கள் கொன்றுவிட்டார்கள், அதற்குப் பழிவாங்குவதற்கு என்று சொன்னாள்
நீ எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்டேன்
பத்து என்று சொன்னாள்
இதை எங்கிருந்து தெரிந்து கொண்டாய் என்றதும்,
அப்படிதான் சொல்றாங்க என்றாள்
அவள் சொன்னது சரியா என்று மற்ற மாணவர்களிடம் கேட்டபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரி என்று கையை உயர்த்தினார்கள்.”

சரி, மாணவிகள் மகாத்மா காந்தி படுகொலையை ஏதோ மதுரை பக்கத்து வட்டார வழக்கு தமிழ்ப்படம்போல் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் எஸ்.ராமகிருஷ்ணண் என்ன விளக்கம் அளித்தார்? அதுவும் பதிவில் இல்லை. மாகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணம் இந்துத்துவ கருத்தியலும் வெறியும் என்று ராமகிருஷ்ணன் சொன்னாரா? சொல்லிவிட்டு எழுத மறந்துவிட்டாரா? ஒரு வேளை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு   காந்தியின்  கொலைக்கு பின்னால் இருந்த கருத்தியல், சதி வலை ஆகியவற்றை விளக்குவதற்கு  ஆர்வம் இல்லையோ என்று மனம் சஞ்சலத்திலேயே உழன்றுகொண்டிருந்தது.

விக்கிப்பீடியா கட்டுரைகளில் கூட காந்தியைக் கொலை செய்ய 1938 ஆம் ஆண்டிலிருந்தே இந்து தேசிய கருத்தியலாளர்கள் பல சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் அவற்றில் பல தோல்வியுற்றதாகவும் கடைசியில் ஜனவரி 30, 1948 இல் நாதுராம் வினாயக் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதாகவும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.  தமிழில் வலதுசாரி அரசியல்  இலக்கியத்திலும் சிந்தனைத் துறையிலும் வலுவாக கடந்த ஐந்தாண்டுகளில் வேரூன்றியதிலிருந்தே மகாத்மா காந்தி கொலை வழக்கினைப் பற்றிய கட்டுரைத் தொடர்கள் தினசரிச் செய்தித்தாள்களிலும், வலைத்தளங்களிலும் வந்துகொண்டிருக்கின்றன. புத்தகங்களும் வெளியாகியிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாகயிருந்த அப்துல் கலாம், காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போதிய நிரூபணங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட இந்துத்துவ கருத்தியல் சிற்பியான சாவர்க்காரின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் திறந்து வைத்தபோது அதையொட்டி வெளிவந்த செய்திகள் பலவும்   கோட்சேயின் இந்துத்துவ கருத்தியல் பின்புலத்தை சுட்டிக்காட்டின. வெகுவாக அறியப்பட்ட, நன்கு தெரிந்த உண்மையை பட்டவர்த்தனமாக சொல்வதற்கு எதற்கு மீனம் மேஷம் பார்க்கவேண்டும்? அல்லது சொல்லாமல் விடவேண்டும்?

ஒருவேளை நான் வளர்ந்த சூழலும் வளர்க்கப்பட்ட விதமும்தான் என்னை இப்படி தொந்திரவு செய்துகொண்டிருக்கிறதோ என்றும் தோன்றியது.

என் அம்மாவின் அப்பா கே.எல்.சண்முகத்திற்கென்று ஒரு ராசி. எங்கெங்கெல்லாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கலவரங்கள் நடந்தனவோ அந்தந்த ஊர்களில் கலவர காலங்களில் வேலைக்கான போஸ்டிங் இருக்கும். தாத்தா மத்திய தொலைபேசித் துறையில் எஞ்சினியராக இருந்தார். நவகாளி கலவரம் நடந்தபோது கல்கத்தாவில் வேலை. அப்போது என் அம்மா ஒரு வயது குழந்தை. தாத்தா வேலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது கலவரம் வெடித்துவிட்டது. ஆச்சி குழந்தையோடு தனியாக வீட்டில் இருந்தார்கள். போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பித்துவிட்டது. அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப கால் நடையாய் வர வேண்டியதாயிற்று. வழியில் கலவரத்தின் மையத்தில் சிக்கிக்கொண்டார். யார் அடித்தார்கள் என்ன என்றெல்லாம் தெரியாது தாத்தாவுக்கு உடம்பெல்லாம் அடி. தவிர, கத்திக்குத்துகளை நேரடியாகப் பார்த்ததில் தாத்தாவுக்கு மனம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. எப்படி வீடு போய் சேர்ந்தார் என்றே அவருக்கு தெரியவில்லை. பயத்தில் வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்து தாத்தாவுக்கு கைவைத்தியம் பார்த்துக்கொண்டு கலவரம் அடங்கும் வரை இருந்த நாட்களைப் பற்றி ஆச்சி பின்னாளில் எனக்கு கதை கதையாய் சொல்லியிருக்கிறாள். மகாத்மா காந்தி கலவரத்தைக் கைவிட வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததும் கலவரம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியதையும் ஆச்சி சொல்வாள். தாத்தாவையும் குழந்தையும் தூக்கிக்கொண்டு ஆச்சி தனியாய் திருநெல்வேலிக்கு வந்துவிட்டாள். தாத்தா மனம் பேதலிக்காமல் மீள கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆனது. ஆச்சி காந்தியைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் மகான் என்றே சொல்வாள். பொட்டி ஶ்ரீராமுலு தனி மொழிவாரி மாநிலமாக ஆந்திரப்பிரதேசம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து துரதிருஷ்டவசமாக உயிரிழந்தபோது தாத்தாவுக்கு விசாகப்பட்டிணத்திலோ, விஜயவாடாவிலோ வேலை. அப்போது ஆந்திரா முழுவதும் பெரும் கலவரங்கள் மூண்டன. தாத்தா நல்லவேளையாக கலவரப்பகுதியில் இல்லை ஆனால் குடியிருந்த வீடு தாக்கப்பட்டது சூறையாடப்பட்டது. உடமைகள் எல்லாம் இழந்து திருநெல்வேலிக்குத் திரும்பினர். அதற்கப்புறம் தாத்தா தமிழ்நாட்டுக்கு வெளியே வேலைக்குப் போகவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு தொலைபேசி கேபிள்போடுவதிலேயே அவருடைய எஞ்சிய பணிக்காலம் கழிந்தது. ஆச்சி உண்ணாவிரதம் இருந்த ஒருவரை சாகவிட்டதை நினைத்து நினைத்து மருகுவாள். பொட்டிஶ்ரீராமுலுகாருவை காந்தி மகான் இருந்திருந்தால் இப்படி சாகவிட்டிருப்பரா இந்தா பிடின்னு ஆந்திராவைத் தூக்கிக் கொடுத்திருக்க மாட்டாரோ என்று ஆச்சி பல தடவை புலம்பியிருக்கிறாள். சுதந்திர இந்தியாவில் ஆச்சியின் நீண்ட துயரம் மிகுந்த வாழ்நாட்களில் காந்தி மகான் இல்லாமல் போனதை நினைத்து வருந்தும் தருணங்களுக்குக் குறைவிருக்கவில்லை.

என் அப்பாவின் அப்பா எம்.டி.முத்துக்குமாரசாமி அவர் தம்பி எம்.டி.அனந்தராமன் அவர்களின் மைத்துனர் எஸ்.நாகராஜன் இன்னும் பல தாத்தாமார் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள். தாத்தா எம்.டி.முத்துக்குமாரசாமி ராஜாஜிக்கு நெருக்கமாக இருந்தார்; ராஜாஜி காங்கிரசில் இருந்து பிரிந்து தனியே புதுக்கட்சி ஆரம்பித்தபோது சுதந்திரா கட்சியின் வைஸ்பிரசிடெண்டாய் பதவி வகித்தார். குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணையவேண்டும் என்ற போராட்டத்திலும் அவர்கள் தீவிரமாக பங்கேற்றனர். சின்ன தாத்தா எம்.டி.அனந்தராமனின் புகைப்படத்தை ஜனதா தளம் வெளியிட்ட காலண்டரில் நேசமணி ஆகிய குமரி மாவட்ட தலைவர்களின் புகைப்படங்களோடு பார்த்திருக்கிறேன். ஆச்சி சாதம் பிசைந்து கவளம் கவளமாய் உருட்டி கையில் போடுகையில் குடும்பக் கதைகளோடு கதைகளாக சுதந்திரப்போராட்ட சம்பவங்களையும் சொல்லியிருக்கிறாள். அன்னம் உள் இறங்குகையில் காந்தியின் பெயரும் சேர்ந்து உடலில் உதிரமாகிவிட்டது. ஆச்சியின் தம்பி எஸ்.நாகராஜன் சுசீந்திரம் தேர்த்திருவிழாவின் போது தேரில் தேசியக்கொடியை ஏற்றியது இன்னும் நினைவில் நிற்கும் கதைகளில் ஒன்று. போலீஸ் தேடி வந்தபோது தப்பி தாத்தா எஸ்.நாகராஜன் மும்பைக்கு ஓடிப்போனதும் கம்யூனிஸ்ட் ஆனதும் பின் “அவன் அமரன்” என்ற முதல் இடதுசாரி தமிழ்த் திரைப்படத்தை இயக்கியதும் குடும்பத்தில் பிரபலம்.

நான் காந்தி உயிர்துறந்த தேதியான ஜனவரி30இல் பிறந்தேன். அந்தத் தற்செயல் அம்மா ஆச்சிக்கு மகான் காந்தியோடு குடும்பத்திற்கும் எனக்கும் உள்ள ஜென்ம பந்தத்தைச் சொல்வது. பள்ளி நாட்களில் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் காலை பத்துமணிவாக்கில் சங்கு ஊதுவதும் அதைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மகாத்மா காந்திக்கு மௌன அஞ்சலி செலுத்துவதும் நடக்கும். எனக்கு மானம் போகும். மகாத்மா இறந்த நாளிலா பிறந்த நாள் கொண்டாடி சாக்லேட் தரமுடியும்? மகாத்மா காந்தியை வருடம் தவறாமல் நினைத்தே ஆகவேண்டிய அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு மக்கா கிடைக்கும் என்று தேற்றுவார் அப்பா.

கல்லூரி நாட்கள் வரை காந்தியின் மேல் விமர்சனங்கள் உண்டு அவரை விமர்சிக்கலாம் என்றே தெரியாமலேயேதான் வளர்ந்தேன். காந்தியின் புகைப்படத்திற்கு முன்னால் நின்று தாகூரின்  கீதாஞ்சலியை மனனமாக ஒப்பிக்கும் பழக்கமும் வயலின் படிக்க போன இடத்தில் டீச்சரின் கிருபையால் ஏற்பட்டது. இன்றைக்கும் கூட காந்தியின் புகைப்படத்தைப் பார்த்தால் மனம் தன்பாட்டுக்கு “This is my prayer to thee my Lord” என்று ஆரம்பித்து “Never to disown the poor, nor bend my knees before the insolent might” என்ற வரி வரும்போது பிரக்ஞை தட்டும். ஞானக்கூத்தனின் ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ கவிதையை ஒட்டி எழுந்த ஒரு விவாதத்தின்போது எஸ்.ஆல்பர்ட் சொல்லித்தான் காந்தியின் மேல் விமர்சனம் உடையவர்களும் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரிய வந்தது. என் ஆழ்ந்த மரியாதைக்கும் பேரன்புக்கும் உரிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்தான் காந்தியின் நூல்களை படிக்கும்படி ஊக்குவித்தார். திருச்சியில் எஸ்.ஆல்பர்டைச் சுற்றி ராஜன் குறை, அம்ஷன்குமார், க.பூரணசந்திரன், கோ.ராஜாராம், விஜயகுமார் என்று பெரும் இலக்கிய வட்டம் இருந்தது. நான் அதில் வாண்டுக் கத்திரிக்காயாய்ப் போய் சேர்ந்தேன். எஸ்.ஆல்பர்ட்டுக்கு என் மேல் விசேஷ பிரியம் என்று நான் பல தடவை நினைப்பேன். அப்புறம்தான் தெரிந்தது அவருடன் பழகும் அத்தனை பேரும் அப்படித்தான் நினைப்பார்கள் என்று. எஸ்.ஆல்பர்ட்டின் ஏற்பாட்டின்பேரில் ‘பாதல் சர்க்கார் நாடக விழா’ ஒன்றும் அதை ஒட்டிய கருத்தரங்கும் நடந்தது. அதில் நான் அகஸ்டோ போயெல் பற்றி கட்டுரை வாசித்ததாக நினைவு. இரவு மாணவர்களும் பங்கேற்பாளர்களுமாய் கூடிய கூட்டத்தில் எஸ்.என்.நாகராஜன் உரையாற்றினார். அது ரகசியமாய் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டம். மைதானமே தீப்பிடித்துவிட்டது போல பிரமை. உடனடியாக ஆயுதமேந்திய புரட்சியில், போராட்டத்தில் ஈடுபடாவிட்டால் தலை சுக்கு நூறாய் வெடித்துவிடும் போலிருந்தது. எஸ்.ஆல்பர்ட் ‘நீ இங்கேர்ந்து கெளம்பு’ என்று கிட்டத்தட்ட கையைப் பிடித்து என்னை கூட்டத்திலிருந்து இழுத்து வந்துவிட்டார். அகிம்சையை மனதிலும் சொல்லிலும் செயலிலும் சதா செயல்படுத்துகிறவன் தான் பெரிய புரட்சியாளன் என்று பேசிக்கொண்டே வந்த எஸ்.ஆல்பர்ட் நான் ஹாஸ்டலுக்குப் போய் சேர்ந்துவிட்டேன் என்று உறுதியான பின்புதான் தன் வீட்டுக்குப் போனார்.

பாதல் சர்க்கார் நாடகவிழா நடந்து முடிந்த சில பல மாதங்களுக்குள்ளாகவே எஸ்.ஆல்பர்ட் காந்தி கருத்தரங்கினை திருச்சி செயிண்ட் பால் செமினரியில் நடத்தினார். அந்தக் கருத்தரங்கில் அஷிஷ் நந்தியை நான் சந்தித்தேன். நந்தி சுதந்திரம் பெற்றவுடனயே மகாத்மா காந்தி இந்திய தேசத்திற்கு எப்படி தேவையற்றவராகிவிட்டார் என்று உரையாற்ற ஆரம்பித்தபோதே  எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. கருத்தரங்கிற்கு வெளியே அவரோடு நிறைய உரையாட முடிந்தது. நாட்டுப்புற கலைகளை, மரபுகளை, கிராம அமைப்புகளை ஆராய வேண்டும் என்ற எண்ணம் முதல்முறையாகத் தோன்றியது. போன வருடம் சஷி காந்தின் ‘கேளாய் திரௌபதி’ கூத்து ஆவணப்படத்தினை திரையிடும் நிகழ்வில் படத்தைப் பற்றி பேச நந்தி வந்திருந்தார். நான் நந்தியை அறிமுகப்படுத்தி பேசப் போயிருந்தேன். அவருக்கு திருச்சி கருத்தரங்கு நினைவில் இல்லை. காந்திதானே இந்தியாவின் முதல் நாட்டுப்புறவியலாளர் என்றேன் அசிஷ் நந்திக்கு அதன் பிறகு ‘தேசிய நாட்டுப்புறவியல் மையத்தில்’ என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று விளக்கம் எதுவும் தேவைப்படவில்லை.


டெல்லிக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று கொண்டிருந்த காலத்தில் நான் வழக்கமாகத் தங்கும் இந்தியா இண்டெர்நேஷனல் சென்டரில் தற்செயலாக மகாத்மா காந்தியின் பேரனான பேராசிரியர் ராமச்சந்திர காந்தியை நானே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தித்தேன். அவருக்கு நாட்டுப்புறவியல் ஆராய்ச்சியில் பெரும் ஈடுபாடு இருந்தது. அவருடைய உரைகளைக் கேட்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல முறை பேச வாய்ப்புகள் உருவான பின் அவர் என் நெருங்கிய நண்பரான வீணாபானி சாவ்லாவின் அக்காவைத்தான் மணம் முடித்திருக்கிறார் என்று தெரிய வந்தது. இவ்வாறு உரையாடல் லகுவானபின் காந்தியின் கிராம சுயராஜ்யம் பற்றி விரிவாக உரையாட முடிந்தது. சுதந்திர இந்தியாவில் இன்னும் பல்லாண்டுகள் உயிரோடிருந்திருந்தாரானால் காந்தி கிராமங்களின் தொகுதியால் ஆன இந்தியக்குடியரசை நிச்சயம் உருவாக்கியிருப்பார். சாதியோ மதமோ அல்ல கிராமமே காந்திய சிந்தனையின் அடிப்படை அலகு, கூறு என்றார் பேராசிரியர் ராமச்சந்திர காந்தி. நகரங்கள் உருவாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே என்று கேள்வி எழுப்பினேன். நம் நகரங்களும் கிராமங்களின் தொகுதிதானே என்றார். காந்தி மட்டும் உயிரோடிருந்திருந்தால் என்ற பெருமூச்சோடு நாங்கள் பிரிந்தோம்.

பேராசிரியர் ராமச்சந்திர காந்தியின் மகள் லீலா காந்தியை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது . அவரை நான் முதல் முறையாக சந்தித்தபோது தெரிதாவை வாசித்துக்கொண்டிருந்தார். தெரிதாவின் கடைசி கால சிந்தனையான பண்பாடுகள் தாண்டி, ஆண்டான் அடிமை தாண்டி எல்லா எல்லைகளையும் தாண்டி மனிதர்களுக்குள் ஏற்படுகிற நட்பின் தன்மை என்ன அது எப்படி தேசம் தாண்டியதாக இருக்கிறது, நட்பின் அரசியல் என்ன, சாதாரணமான கருத்தாக்கமாகத் தோன்றும் ‘விருந்தோம்பல்’ என்பதே தெரிதாவின் விளக்கத்தில்  அகதிகளை விருந்தோம்புவது என்று விரிந்து தேசம் என்பதின் புனிதத்தையும் பவித்திரத்தையும் தகர்த்துவிடுகிறது என்பதாக எங்கள் உரையாடல் விரிந்தது. லீலாவின் புத்தகம் Affective Communities: Anticolonial Thought, Fin-de-Siècle Radicalism, and the Politics of Friendship 2006ல் வெளிவந்தது. என்னுடைய புத்தக அலமாரியில் இருக்கும் எனக்குப் பிரியமான புத்தகங்களில் அதுவும் ஒன்று.


நட்பு, affective communities, ஆகிய கருத்தாக்கங்களோடு காந்தியின் பொருளாதாரத் தன்னிறைவுடைய கிராமங்களால் ஆன தேசத்தை எப்படி உருவாக்குவது என்று சிந்தித்துபார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எத்தியோப்பிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அடிஸ் அபாபா பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் பயிற்றுவிக்கும் பேராசிரியராய் இரண்டு வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். எத்தியோப்பியா கிட்டத்தட்ட எண்பது தனித் தனி பழங்குடி இனக்குழுக்கள் உள்ள நாடு. Orthodox கிறித்தவர்கள், இஸ்லாமியர், அரேபிய கலப்பினத்தவர் ஆகியோரையும் உள்ளடக்கியது. இந்த இனக்குழுக்களுக்கு இடையே நம் நாட்டில் சாதிகளுக்கிடையே உள்ள உறவை, ஏற்ற தாழ்வுகள் உள்ளதாகத் தீர்மானிக்கும் கருத்தியலான வருணாசிரம தர்மம் போல் எத்தியோப்பியாவில் எந்த கருத்தியலும் இல்லை. அந்த வகையில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு. ஹெகலிய முரணியக்கத்தில் எதிர்நிலைகள் மோத, வரலாறு நகர, அப்பம் பிரித்துக்கொள்ளும் பெருச்சாளி கூட்டமாய் இனக்குழுக்கள் இயங்கின என்று வரலாறு எழுத முடியாத நாடு எத்தியோப்பியா. சிறு சிறு சமூகங்கள், அருகே அருகே வாழும் இனக்குழுக்கள். சண்டைகளில்லாமல் இல்லை. ஆனால் நீடித்த விரோதங்களும் இல்லை. ஜே.சி.குமரப்பா பொருளாதார அமைப்புகளை தேனீக்கள், புலிகள், சிங்கங்கள் என்று விளக்குவது எத்தியோப்பிய அறிவுஜீவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அணுக்கமாயிருந்தது. தானும் உண்டு தன் சமூகத்தினருக்கும் பகிர்ந்துண்டு சேமித்தும் வைக்கும் தேனீ பொருளாதாரம் என்று ஜே.சி.குமரப்பா விளக்குவதை நான் எடுத்துச் சொல்ல சொல்ல அவர்கள் கண்கள் விரிந்தன, தன்னிறைவு கொண்ட சம அந்தஸ்திலான இனக்குழு சமூகங்களால் ஆன ஒரு குடியரசை கற்பனை செய்ய அவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்த இனக்குழுவின் பாரம்பரியத்திற்கும் மரபுகளுக்கும் கலைகளுக்கும்  சுய கௌரவத்திற்கும் எந்த பங்கமும் வராது என்பதும் காந்தீய கிராம சுயராஜ்யத்தை கற்பனை செய்பவர்களுக்கு உடனடியாக பிடிபட்டுவிட்டது.   இனக்குழுக்களுக்கான மரபுகளை ஆவணப்படுத்துதல், அந்த ஆவணங்களை இதர குழுக்களிடையே நட்பினை வளர்க்க பயன்படுத்துதல், தன்னிறைவு பெறக்கூடிய பொருளாதார செயல்பாடுகளை உருவாக்குதல் என்று காந்தீய சிந்தனையின் அடிப்படையில் ஒரு செயல்திட்ட அறிக்கையை எழுதி அவர்களுடைய பரிசீலனைக்காக சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையை ஒரு பொது மக்களுக்கான உரையாகவும் நான் பேச அடிஸ் அபாபா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. உரை முடிந்த பின் விவாதத்தில் ஒருவர் கேட்டார் எல்லாம் சரிதான் இந்த காந்தீயத் திட்டத்தில் குடியரசின் மைய அரசுக்கு என்ன பங்கு என்றார். மைய அரசு சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்று கண் சிமிட்டினேன். கை தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.


அன்றிரவு இரவு விருந்தின் போது என்னை எத்தியோப்பியாவிற்கு அழைத்த பேராசிரியர் அஸீஸ் ஆமாம் நீங்கள் என்ன காந்தீயவாதியா என்று வினவினார். நானா என்று இழுத்துவிட்டு அது ஒருவகை ஜென்ம பந்தம் என்றேன். Spirit to spirit connection? என்றார் மீண்டும். ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தேன்.

“காந்தியையா சுட்டுக்கொன்றார்கள்? என்ன தேசம் உங்கள் இந்தியா?” என்று கேட்டார் ஒரு எத்தியோப்பிய இளம்பெண். எனக்கு அவமானத்திலும் சோகத்திலும் நாடி நரம்புகளெல்லாம் கூசி அடங்கிவிட்டது. “நாம் காந்தியை கொன்று இருக்கக்கூடாது” என்ற ரமேஷ்-பிரேதனின் கவிதை வரி நினைவுக்கு வந்தது.

No comments: