Monday, November 26, 2012

தீண்டாமையைப் பற்றிப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்?

அன்புள்ள எம்.டி.எம்,
….. இந்து மதத்தின் மூல நூல்களில் (சுருதி) தீண்டாமை (untouchability) எங்குமே குறிப்பிடப்படவில்லை, அதைச் சொல்வது ஸ்மிருதி நூல்கள்தான் அவை காலத்தால் மாறக்கூடியவை   என்ற கருத்து பலரால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?…..

மிக்க அன்புடன்,
எம்.சரவண குமார்

அன்பிற்குரிய சரவணகுமார்,

உங்களுடைய நீண்ட கடிதத்தில் நீங்கள் எழுப்பியிருக்கும் ஆரெழு கேள்விகளில் மேற்சொன்ன ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக்கொண்டு பதில் எழுத முயற்சிக்கிறேன்.

முதலில் தீண்டாமை என்றால் என்ன தீண்டத்தகாதவர்கள் என்றால் யார் இந்தக் கொடுங்கோன்மை கருத்துக்களின் மூலம் என்ன, வரலாறு என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக்குழுக்களை தன் சமூகப் பிரஜைகளாகவே கருதவில்லை; அப்படிப்பட்ட இனக்குழுக்களை சார்ந்தவர்களையே வர்ணாசிரம தர்மத்தை செயல்படுத்தியவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் குறிப்பிட்டு கொடும் அநீதி இழைத்து வந்தனர் என்பதற்கான பல ஆதாரங்களை மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் நாம் பார்க்கலாம்.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை ஒன்று கட்டி அதில் பஞ்ச பாண்டவர்களையும் குந்தியையும் வஞ்சகமாகத் தங்கவைத்து மாளிகையோடு சேர்த்து அவர்களை எரித்துக் கொல்லத் திட்டமிடுகிறான் துரியோதனன். விதுரர் மூலம் ஒற்றுச் செய்தி அறிந்த பாண்டவர்கள் சுரங்கப்பாதை மூலம் தப்பிச்செல்கின்றனர். அப்படி தப்பிச் செல்கையில் குந்திக்கும் பாண்டவர்களுக்கும் பதிலாக ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த தாயையும் அவளுடைய ஐந்து மகன்களையும் அரக்குமாளிகையில் தூங்க வைத்துட்டு செல்கின்றனர். குந்திக்கும் பாண்டவர்களுக்கு பதிலாக அவர்கள் தீயில் கருகி சாகின்றனர். பதிலிகளின் கருகிய உடல்களைப் பார்க்கும் துரியோதனாதிகள் பஞ்ச பாண்டவர்களும் குந்தியும் இறந்துவிட்டதாக மகிழ்கின்றனர். சுரங்கப் பாதையில் பீமன் குந்தியை முதுகில் தூக்கிக்கொண்டு ஓடும் போது குந்தியின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது. அவள் கேட்கிறாள் பீமா அவளும் என் போல் தாய்தானே அவர்களும் உங்களைப் போல பிள்ளைகள்தானே அவர்களைச் சாகவிட்டுவிட்டு நாம் மட்டும் தப்பிப்பது முறையா என்று. கூடவே உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தருமபுத்திரர் சொல்கிறார்: 'தாயே கவலைப்படாதே அவர்கள் நால் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல மிருகங்களுக்கு சமானமானவர்கள் அவர்கள் இறப்பதால் நமக்கு எந்த பாவமும் வராது.'

மாகாபாரதத்தில் இன்னொரு சம்பவம். குந்தியோடு அஸ்தினாபுரம் திரும்பிவிட்ட பாண்டவருக்கு  வேறு வழியில்லாமல் வனாந்திரப்பகுதியையும் சில பொட்டல் வெளிகளையும் ராஜ்யத்தின் பங்காகப் பிரித்துக்கொடுக்கிறார் திருதராஷ்டிரன். வனப்பகுதியை அழித்து இந்திரபிரஸ்தம் நிறுவுவது என்று பாண்டவர்கள்  முடிவு செய்கிறார்கள். காண்டவ வனம் என்று அழைக்கப்பட்ட வனத்தினை தீயிட்டு அழிக்க கிருஷ்ணனும் அர்ஜுனனும் முடிவு செய்கிறார்கள். காண்டவ வனத்தில் காலங்காலமாக வசிக்கும் காட்டுவாசிகள், பழங்குடியினர் வன அழிவினை அனுமதிக்க முடியாது என்று வாதிடுகின்றனர். போர் மூள்கிறது. போரில் வென்ற கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஏராளமான பழங்குடி மக்களும் பறவைகளும் விலங்குகளும் உள்ளிருக்கவே காண்டவ வனத்தினை தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்குகின்றனர். அப்போதும் அர்ஜுனன் கேட்கிறான் ஏராளமான மக்கள் வனத்தினுள்ளே இருக்கிறார்களே அவர்களை அழிப்பது முறையா என்று. கிருஷ்ணன் சொல்கிறான் அவர்கள்தான் நால் வர்ணத்திற்குள்ளாகவே வரமாட்டார்களே அவர்கள் மிருகத்திற்குச் சமமானவர்கள்தானே அவர்களை அழிப்பதில் என்ன தவறு என்று. எரித்து சாம்பலாக்கப்பட்ட காண்டவ வனம் இருந்த இடத்தில் எழுகிறது தேவ சிற்பி மயனால் கட்டப்பட்ட மினுக்கும் நகரம் இந்திரபிரஸ்தம். மராத்திய சிந்தனையாளரும் மானிடவியலாளருமான ஐராவதி கார்வே தன்னுடைய ‘யுகாந்தா’ என்ற நூலில் மகாபாரதத்தில் வரும்  காண்டவ வன தகனம் இந்து உயர் சாதியினருக்கும் பழங்குடியினருக்குமான உறவு என்ன என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்லும் சம்பவம் என்று குறிக்கிறார். ந.முத்துசாமி கூத்து நாடகசிரியர் திருவேங்கடத்தோடு இணைந்து ‘காண்டவ வன தகனம்’ என்ற கூத்து நாடகத்தை எழுதியிருக்கிறார். புரிசை கண்ணப்பத்தம்பிரான் கூத்து நாடகக்குழுவினரால் கூத்தாக பல முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பீமனுக்கும் ராட்சசி/காட்டுவாசி எனப்படுகிற இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன் மகாபாரதப் போரில் எப்படி நடத்தப்பட்டான் என்பது நால் வர்ணத்தார் தங்கள் சமூக சட்டகத்திற்குள் வராதவர்களை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். மகாபாரதப் போரில் தன் தந்தை பீமனின் பொருட்டு பாண்டவர்கள் பக்கத்திலிருந்து போர் புரிந்து கௌரவ சேனையில் பெரும் அழிவுகளை ஏற்படுத்துகிறான் கடோத்கஜன். அவனை யாருமே தடுக்க முடியவில்லை. துரியோதனன் கர்ணனைக் கூப்பிட்டு இந்திராஸ்திரத்தை ஏவி கடோத்கஜனைக் கொல்லச் சொல்கிறான். இந்திராஸ்த்திரத்தையோ ஒரே ஒரு முறைதான் எய்ய முடியும். கர்ணன் அதை அர்ஜுனனைக் கொல்வதற்காக என்று பத்திரமாக வைத்திருக்கிறான். துரியோதனின் வற்புறுத்தலால் வேறுவழியின்றி கர்ணன் இந்திராஸ்திரத்தை கடோத்கஜனைக் கொல்ல பயன்படுத்தும்படியாகிறது. கர்ணனின் இந்திராஸ்திரத்துக்கு கடோத்கஜன் மடிந்தான் என்பதை அறியும் கிருஷ்ணன் புன்னகைக்கிறான். அர்ஜுனனைக் கொல்ல கர்ணனிடம் இந்திராஸ்த்திரம் இல்லை என்பதால் மட்டுமல்ல உண்டாவது அந்தப் புன்னகை போனது ஒரு காட்டுவாசி உயிர்தானே என்பதாலும் ஏற்படுகின்ற அலட்சியத்தின் வெளிப்படு அந்தப் புன்னகை. அதை கிருஷ்ணன் கடோத்கஜனின் மரணத்திற்கு பீமனைத் தேற்றி ஆறுதல் சொல்லும்போது ‘எதற்காக இவ்வளவு துக்கப்படுகிறாய் போனது ஒரு காட்டுவாசிதானே’ என்று வெளிப்படையாகவே சொல்கிறான். நால் வர்ண மணக் கலப்புக்குள் ‘முறையாகப்’ பிறந்த அபிமன்யுவின் மரணத்திற்கு பெரும் துக்கம் அனுஷ்டிக்கும் பாண்டவசேனை கடோத்கஜனின் மரணத்திற்கு எந்த துக்கமும் அனுஷ்டிக்கவில்லை. பீமன் தனியே அழுகிறான். பீமனை மைய காதாபாத்திரமாக வைத்து மகாபாரதத்தின் உள் அதிகார அமைப்புகளை தீவிரமான விசாரணைக்குட்படுத்தும் எம்.டி.வாசுதேவன் நாயரின் மலையாள நாவல் “ரெண்டாம் முழம்” நால் வர்ண சாதி அமைப்பு அதற்கப்பாற்பட்டவர்களை எப்படி நடத்தியது என்று கடோத்கஜனின் மரணத்தை முன்னிறுத்தி ஒரு அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்கிறது.

நவீன இலக்கிய மனம் கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்கள்தான் கடோத்கஜனை அவன் அப்பன்மார்களும் தாத்தன்மார்களும் நடத்தியவிதத்தைக் கண்டு மனம் கொதித்தார்கள் என்றில்லை. பழங்கால சமஸ்கிருத நாடகாசிரியரான பாசான் கடோத்கஜனை மையமாக வைத்து இரண்டு நாடகங்கள் இயற்றியிருக்கிறார். அந்த நாடகங்களும் கடோத்கஜனின் காட்டுவாசி அடையாளத்தினால் நால் வர்ண சாதி அமைப்புக்குள் அவன் ஏற்றுக்கொள்ளப்படாததன் தார்மீகத்தை அலசுகின்றன.  பாசானின் நாடகங்களில் ‘தூத கடோத்கஜம்’ ந.முத்துசாமியால் ஆங்கிலம் வழி மொழிபெயர்க்கப்பட்டு கூத்துப்பட்டறையால் நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

நால் வர்ண சாதிகளின் குல தர்மத்தை ஒழுங்கமைத்துக்கொடுத்த உபதேச நூலே மகாபாரதத்தின் பகுதியாக வரும் பகவத்கீதை என்ற கல்விப்புல பார்வை ஒன்று உண்டு. பகவத் கீதையும் நால் வர்ண சாதியினருக்கு அப்பாற்பட்ட இனக்குழுவினரை கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை; நால் வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்களை இந்த உலகில் இருப்பதாகவே அது கருதவில்லை. பகவத் கீதையே பிறப்பாலான சாதியே மனிதனின் சாரம் அதை எந்த வகையிலும் மீற முடியாது என்று மனுசாத்திரத்தின் சட்டங்களை உறுதிப்படுத்துகிறது என்று பகவத் கீதையை வாசிக்கிறார் காயத்ரி ஸ்பிவக். மனுவின் சாத்திரமே ‘பகவான்’ கிருஷ்ணனின் ரகசியம். பழங்குடிகளாலான சமூகத்தில் சொந்த பந்தத்தைக் கொல்வது என்பது பெரும் பாவம். பழங்குடிகளான சமூகம் சாதி சமூகங்களாக மாறும்போது சாதியை அருவமான கருத்தியலாகக் கட்டமைக்கிறது பகவத் கீதை என்று மேலும் எழுதுகிறார் காயத்ரி ஸ்பிவக் Post colonial reason என்ற புத்தகத்தில். டி.டி.கோசாம்பியின் Myth and Reality புத்தகத்தில் பழங்குடி இனக்குழுக்கள் ஹெகலிய வரலாற்று முரணியக்கத்தில் சாதிகளாக உறுதிப்பட்டதை பின்பற்றியே தன் வாதத்தினை முன் வைக்கும் காயத்ரி ஸ்பிவக் இந்த முரணியக்க வாதத்தை கச்சா முரணியக்க சிந்தனை (crude dialectics) என்று கவனப்படுத்தவும் தவறவில்லை. அதாவது ஏற்கனவே நால் வர்ண அமைப்பினால் கெட்டித்தட்டிப்போய் இறுக்கமாகிவிட்ட சாதி அமைப்பினை புதிதான வளர்ச்சி என்று பார்ப்பதை கச்சாவான அணுகுமுறை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

வால்மீகி ராமாயணத்திலோ ராமன் வேதங்களைக் கற்றுகொண்டு தவம் புரிய முற்பட்ட சம்பூகன் என்ற காட்டுவாசியை கொன்று அழித்தான் என்று ஒரு சம்பவம் வருகிறது.

நால் வர்ண சாதி, சமூக அமைப்புக்குள் வராதவர்களை உலகில் இருப்பவர்களாகவே கருதாத போது இந்து ஸ்ருதி மூல நூல்கள் அவர்களைப் பற்றிப் பேசும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? நால் வர்ண சாதி சமூக அமைப்புக்குள் வருகின்ற சூத்திரர்களுக்கே வேதத்தைப் படிப்பதோ கேட்பதோ மறுக்கப்பட்டிருக்கும்போது -வேதம் கேட்க விரும்புகிற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்கிறது மனு நீதி- நால் வர்ணத்தினருக்கு அப்பாற்பட்ட ‘பரதேசிகள்’ ‘சண்டாளர்கள்’ (பழைய அர்த்தத்தில் முறையே ‘வெளி நாட்டவர்’ ‘கலப்பு மணத்தில் பிறந்தோர்) காட்டுவாசிகள், பழங்குடியினர், இதர இனக்குழுவினர்  ஆகியோரைப் பற்றி, அவர்களின் சமூக இடம் பற்றி, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஆக்குவது பற்றி  ஸ்ருதி நூல்கள் எப்படிப் பேசும்?

ஆக சரவணக்குமார் உங்கள் கேள்வியின் அடிப்படையே தவறானது. இந்து ஸ்ருதி நூல்கள் யாரால், யாருக்காக, எப்போது இயற்றப்பட்டவை என்பதை அறிந்தவர்கள் எவரும் அவை தீண்டாமையை பேசவில்லையே என்று ஜம்பம் அடிக்க மாட்டார்கள். அப்படியே அறிவீனமாய் பேசுபவர்கள் கூட வர்ணாசிரம தர்மம் என்ற சாதிகளின் அதிகாரப் படிநிலையை, ஏற்ற தாழ்வு அடிப்படையை இந்து மூல நூல்கள் பேசவில்லை என்று சொல்ல முடியாது.

ஸ்ருதி இந்து மூல நூல்கள் என்று பேசும்போது நாம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், 108 தொகுப்பட்ட உபநிடதங்கள், வேதாங்கங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுகிறோம் என்பதை மறந்துவிடலாகாது. இதில் ரிக் 10,800 செய்யுள்களையும் யஜுர், சாமம், அதர்வணம் ஆகியன முறையே 2000, 1875, 5987 செய்யுள்களையும் கொண்டவை. சம்ஸ்கிருதத்தில் வாய்மொழி வாய்பாடு வேத பாராயணங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்வதற்காக நான்கு வேதங்களையும் அவை ஓதப்படும் சூழலில் வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். எனவே இதைப்பற்றி ஓரளவு முதன்மைத் தகவல்களின் அடிப்ப்டையிலேயே நான் பேசமுடியும். வேதாங்கங்களை இந்து மூல நூல்களின் பகுதியாக கருதுவதை சில வேதபாடசாலைகளும் சில சிந்தனைப்  பள்ளிகளும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த நூல்களில் எங்கெல்லாம் நால் வர்ண சாதி அமைப்பு குறிப்பிடப்படுகிறதோ அவற்றில் சில இடங்களையாவது பார்த்து விடுவோம்.

ரிக் வேத புருஷ சூக்தம் இன்று வரை கோவில்களிலும் சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் ஹோமங்களின்போதும் ஓதப்படுவது. புருஷ சூக்தத்திற்கு நிகரான செய்திகளைக் கொண்ட செய்யுள்கள் யஜுர் வேதம் அத்தியாயம் 31 செய்யுள் 21இலும் படிக்கக்கிடைக்கின்றன. புருஷ சூக்தம் ஆதி புருஷன் என்று பிரும்மத்தை, பிரபஞ்சத்தை  உருவகப்படுத்தி  உலகம் தோற்றம் கொள்ளும் புராணத்தைப் பாடுகிறது:

“ ப்ராம்ணோஸ்ய முகமாஸீத் | பாஹூ ராஜன்ய: க்ருத: | ஊரு ததஸ்ய யத்வைச்ய: | பத்ப்யாக்யம் சூத்ரோ அஜயத || “

“ஆதி புருஷனின்/ கடவுளின் முகம் பிராமணனாக ஆயிற்று, கைகள் க்ஷத்திரியனாக ஆயின, தொடைகள் வைசியனாக ஆயின அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான். “ என்பது மேற்சொன்ன புருஷ சூக்த சுலோகத்தின் மொழி பெயர்ப்பு.

யஜுர் வேதம் அத்தியாயம் 16இல் 66 சுலோகங்களுமே அன்று வேத கால சமூகத்திலிருந்த சாதியினரை வரிசைப்படுத்துகின்றன. அவற்றில் சூத்ர வர்ணத்தைத் தாண்டிய சாதியினரின் பெயர்களைக் குறிப்பதில்லை.

கிருஷ்ண யஜுர் வேதம் காண்டம் 1 பிரபாதிகை 8 பாடல் 1

“ ஓ அக்னீ கிராமத்திலோ, காட்டிலோ, சமூகத்திலோ மனதிலோ, சூத்திரனுக்கோ வைசியனுக்கோ நாங்கள் என்ன பாவம் பன்ணியிருந்தாலும் ருத்ரனே இறைவா நீயே எங்களுக்கு பாவ விமோசனம்’” என்று துதிக்கிறது.

இப்படி பல உதாரனங்களைக் கொடுத்துக்கொண்டே போகலாம்.

நால் வருணங்கள் சாதிகளில்லையே என்று வாதிடக்கூடிய ஒரு அசட்டுக்கூட்டமும் இருக்கிறது. அவர்கள் பிராமாணாஸ் என்று அழைக்கப்படும் வேதங்களை சடங்குகளில் ஓதுவதற்கான விதி முறைகளை சொல்கின்ற நூலையோ வேதங்களுக்கு மிக விரிவான உரைகள் எழுதிய மீமாம்சை நூல்களையோ வாசித்திருப்பதில்லை.

வேதங்களுக்கான மீமாம்ச உரைகள் புருஷ சூக்த படிமத்தினை இரண்டு வகையான ஏற்ற தாழ்வுகளாகக் கட்டமைக்கின்றன. ஒன்று பிராமனர்,  க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நாம் அறிந்த பிரமிட் சமூகப் படி நிலை அமைப்பு. மற்றொன்று புலனுணர்வுகளை ஏற்ற தாழ்வுள்ள படி நிலை அமைப்பாகக் காணுதல். இதன்படி மூளை புலனுணர்வுகளின் படி நிலை அமைப்பில் உச்சத்தில் சமூக படி நிலை அமைப்பில் எப்படி பிராமணர்கள் இருக்கிறார்களோ அது போல உச்சத்தில் இருப்பது. மற்ற புலனுணர்வுகளெல்லாம் தாழ்ந்த நிலையில் இருப்பது. ஆகையால் மூளை உழைப்பும் ஞான மார்க்கமும் உயர்ந்த மெய்ஞானம்; உடலுழைப்பு, உணர்ச்சி சார் தேடல் எல்லாம் தாழ்ந்த ரக மெய்ஞானங்கள். அறிதல் முறை, மார்க்கத்தினை தெரிவு செய்தல், கடைசியாகப் பெறப்படும் ஞானம் எல்லாமே பிறப்பினால் அடையாளப்படுத்தப்படும் வர்ணம் சார்ந்தவையாகிவிடுகின்றன. இதைத் தெளிவாகச் சொல்லும் பிருஹதாரண்ய உபநிடதத்துக்கு ஆதிசங்கரர் எழுதிய உரையும் மீமாம்சகர்களின் உரைக்கும் எந்த வித்தியாசமுமில்லை. உணர்வுகளின் படி நிலை, சாதிகளின் சமூகப் படிநிலை ஆகியவற்றை இவ்வாறாக தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்த தரிசனம் வேதாந்தம் என அறியப்பட்டது.

வேதாந்தத்திற்கு நேர் எதிரான சிந்தனை முறைகளை அல்லது தரிசனங்களை சமணமும் பௌத்தமும் முன் வைத்தன. கௌதம புத்தர் புலனுணர்வுகளின் சேர்க்கையே மனம் மூளை என்றார். புலனுணர்வுகளிடையே படி நிலை காண முடியாது என்றார். மனம் மூளை உண்மையில் சூன்யமே வெற்றிடமே புலனுனர்வுகளின் வழி சேர்கிற தரவுகளின் சேர்க்கை தொகுதி அன்றி வேறில்லை என்றார். சமூக படி நிலை அமைப்புக்கு எதிராக சம அந்தஸ்துள்ள தனி மனிதர்களைக் கொண்ட பௌத்த சங்கங்களை நிறுவினார். சடங்குகளையும் யாகங்களையும் முற்றிலுமாக ஒதுக்கினார்.

வேதகால சடங்குகளும் யாகங்களும் மிகவும் வன்முறையானவை என்பது மாகாபாரதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் வரும் யக்ஞங்களின் விவரணைகளை மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கேக்கூட புரியும். அந்த வேதச்சடங்குகளில் அண்டா அண்டாவாக தானியங்களும் நெய்யும் தீயில் கொட்டப்பட்டன. யானைகள் குதிரைகள் இன்னும் பல வகையான மிருகங்கள் பலியிடப்பட்டன. வேதங்களின் அர்த்தங்கள் தெரியாத சாமானியர் வேள்விகளில் என்ன ஏது என்று தெரியாமலேயே பங்கேற்றனர். இந்த சடங்குகளின் வன்முறைக்கு எதிராகவே அகிம்சையை பௌத்தமும் சமணமும் கருத்தாக்கமாக கண்டு பிடித்தன; மதச் செயல்பாடாக முன்னிறுத்தின. மூச்சுக்காற்று கூட கிருமிகளை கொன்று விடும் என்பதினால் வாயில் வெள்ளத்துணியைக் கட்டிக்கொண்டு மயில் பீலியால் தெரு கூட்டி நடந்த நிர்வாண சமணத் துறவியர் வேதச்சடங்குகளின் வன்முறைக்கு நேரெதிரான குறியீடுகள் ஆயினர். இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றினை எழுதும் ஆசிரியர்கள் இதனாலேயே பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து தரிசனங்களுக்கு எதிரான மதங்கள் என்ற பொருளில் ஷ்ராமண மதங்கள் என்று குறிக்கிறார்கள். 

வர்ணாசிரம தர்மத்தையும் எனவே சாதி அமைப்பையும் தத்துவார்த்தமாகவும் மத ரீதியாகவும் தகர்த்ததாலேயே பௌத்தத்தை அம்பேத்கர் தன் மதமாகத் தேர்ந்தெடுத்தார். சமணத்திலிருந்தும் பௌத்தத்திலிருந்தும் பெறப்பட்ட அகிம்சையை மகாத்மா காந்தி தன் அரசியல் நெறிமுறையாய் கைக்கொண்டார்.

காலப்போக்கில் பௌத்த சமண சமயங்களுக்கும் சைவ வைணவ சாக்த சமயங்களுக்குமிடையே பல கொடுக்கல் வாங்கல்கள் பல தளங்களில் நடந்துள்ளன. இந்த பரிவர்த்தனைகளினால் பௌத்தமும் சமணமும் தங்கள் தனித்துவங்களை இழந்து இந்து மதப்பிரிவினைகள் ஆகிவிட்டன என்று வாதிடுபவர்கள் சமணமும் பௌத்தமும் முற்றிலுமாக சாதி அமைப்பினை எதிர்க்கின்ற மதங்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.

சாதியினை சாராம்சமாகக் கண்டு அதையே இந்தியத் துணைக்கண்டத்தின் கலாச்சார அலகு என்று “ஆய்வுகளை” (?!) முன்வைக்கும் அதி தீவிர இந்துத்துவர் சமண பௌத்த சமயங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டினை எதிர் நிலைகளை தொடர்ந்து வன்முறையாக அழித்துக்கொண்டே இருப்பர்.

14 comments:

Venkatesan Chakaravarthy said...

அன்புள்ள எம் டி எம்,
நான்கு வேதங்களை விமர்சனம் செய்யாமலும், அவற்றை போற்றி துதிக்காமலும், நடுநிலையுடன் வரிக்கு வரி ஆங்கிலத்திலோ, தமிழிலோ அர்த்தம் மட்டும் சொல்லிக் கொண்டு போகும் நூல்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன். மூலத்தை நானே படித்துப் பார்க்க விருப்பம். நன்றி.

mdmuthukumaraswamy said...

அன்பிற்குரிய வெங்கடேசன்,
http://www.sacred-texts.com/hin/index.htm#vedas என்ற இணைப்பிலுள்ள வேத நூல்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்துப் பாருங்களேன். அன்புடன், எம்.டி.எம்

Venkatesan Chakaravarthy said...

சுட்டிக்கு நன்றி. இந்த தளத்தை நான் முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆங்கில செய்யுள் வடிவில் புரிவதற்கு கடினமாய் உணர்ந்தேன். வேறு ஒரு நூல் பரிந்துரை செய்ய இயலுமா?

mdmuthukumaraswamy said...

Sacred texts.comஇல் உள்ள நூல்களே சிறந்த மொழிபெயர்ப்புகள். மூலத்துக்கு நெருக்கமானவை. என்னைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேண்டிய பத்திகளை சுட்டியிலுள்ள புத்தகங்களிலிருந்து முதல் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டு அவற்றை மூலத்தை ஒப்பு நோக்கி செழுமைப்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் எளிமையான செறிவான மொழிபெயர்ப்புகள் ஆங்காங்கே கிடைக்கின்றனவே தவிர முழுமையாக ஓரிடத்தில் கிடைப்பதில்லை. எளிமையான தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடும் உச்சரிப்பு குறிகளோடும் ராமகிருஷ்ண மட வெளியீடுகளாக வேத மந்திரங்கள், ஶ்ரீருத்ரம், சில உபநிடதங்கள் கிடைக்கின்றன. உதிரி உதிரியாக எராளமான மொழிபெயர்ப்புகள் சைவ மடங்களாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சிறு பதிப்பகத்தாராலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பலவற்றை நான் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை உங்களுக்கு பரிந்துரைப்பதில் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் உங்களுக்கு அவை கடைகளிலோ நூலகங்களிலோ கிடைப்பதில்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

உளறல்.

Venkatesan Chakaravarthy said...

நீங்கள் குறிப்பிடும் ராமகிருஷ்ண மடத்தின் எட்டு உபநிடதங்களின் மொழிபெயர்ப்புகளை படித்துள்ளேன். கட உபநிடதம் கூறும் மறுபிறவி போன்ற பல கருத்துக்களை ஏற்க தயங்கினாலும் மொத்தத்தில் இந்நூல்களின் மீது எனக்கு ஒரு மதிப்பு வந்தது. நர்மதா பதிப்பகம் வெளியிட்டு வடுவூர் நாராயணன் என்பவர் எழுதிய வேதங்களின் பொருளை தொகுத்துக் கூறும் விரிவான நூல் ஒன்று கிடைத்தது. ஆனால் இந்நூல் வேதங்களை ஆராதிக்கும் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ளது.

நான்கு வருணங்கள் பற்றியும் அவற்றின் ஏற்றத்தாழ்வு பற்றியும் எத்தனை சுலோகங்கள் கூறுகின்றன? அவை எந்த "context" இல் கூறப்படுகின்றன? எவ்வளவு வெளிப்படையாக கூறுகின்றன? சாதிகளை கட்டமைப்பது மட்டுமே வேதங்களின் நோக்கமா? யாகங்கள் போன்ற சடங்குகள் தவிர, வேதங்களில் வேறு ஏதும் இல்லையா? இப்படி எனக்கு பல வினாக்கள் உள்ளன. இவற்றுக்கு விடை தேட வேத மூலத்தை முழுவதும் நானே படித்துப் பார்க்க விரும்பிகிறேன். நீங்கள் குறிப்பிட்ட sacred texts தளத்தை ஒரு நல்ல ஆங்கில அகராதி துணையோடு படிப்பதை தவிர வேறு வழி இல்லை போல் உள்ளது.

உங்கள் உதவிக்கு நன்றி.

mdmuthukumaraswamy said...

1.//நான்கு வருணங்கள் பற்றியும் அவற்றின் ஏற்றத்தாழ்வு பற்றியும் எத்தனை சுலோகங்கள் கூறுகின்றன? அவை எந்த "context" இல் கூறப்படுகின்றன? எவ்வளவு வெளிப்படையாக கூறுகின்றன// ஒரு சிறு புத்தகம் அளவுக்கு எழுதினால்தான் அதை முழுமையாகச் செய்யமுடியும்
2.//சாதிகளை கட்டமைப்பது மட்டுமே வேதங்களின் நோக்கமா? யாகங்கள் போன்ற சடங்குகள் தவிர, வேதங்களில் வேறு ஏதும் இல்லையா?// நிச்சயமாக சாதிகளைக் கட்டமைப்பது மட்டும் வேதங்களின் நோக்கங்கள் இல்லை. வேதங்களில் யாகங்கள் போன்ற சடங்கு முறைகளும் பெரிதாகச் சொல்லப்படுவதில்லை. அவை சடங்குகளின் போது ஓதத்தக்கவை என்ற குறிப்புகளே காணக்கிடைக்கின்றன. சடங்கு முறைமைகள் பிராமணாஸ் என்ற நூலில்தான் படிக்கக்கிடைக்கின்றன. வேதங்கள் பிரமாதமான லய ஒழுங்கு கொண்டவை. ஓதக் கேட்பது பேரானந்த அனுபவம். ரிக் வேத பாடல்கள் இயற்கை துதிப்பாடல்கள்; உலகில் இணையற்ற கவித்துவம் கொண்டவை அவை. உபநிடதங்கள் தத்துவப் பனுவல்கள். என்னுடைய கட்டுரை மூல நூல்களில் நால் வர்ணம் குறிப்பிடப்படுகிறதா இல்லையா என்பதை ஒட்டிய கேள்விகளுக்கு விடையளிப்பது மட்டுமே. அதற்கு விடையளிப்பதால் வேதங்களின் இதர பண்புகளை மறுப்பதோ குறுக்குவதோ ஆகாது. பலரஇயும் மூல நூல்களை படிக்கத் தூண்டுவதும் என் நோக்கம். நீங்கள் புதிதாக ஏதும் கண்டு பிடித்தால் எனக்கும் சொல்லுங்கள். நன்றி.

Venkatesan Chakaravarthy said...

// ஓதக் கேட்பது பேரானந்த அனுபவம்.
கோவில்களில் நானும் இதை அனுபவித்திருக்கிறேன் (குறிப்பாக இசை போன்று ஓதப்படும் சாம வேதம் பிடிக்கும்). மறைந்த என் அண்ணனும் சுக்ல (அல்லது கிருஷ்ண?) யஜுர் வேதம் முழுதும் ஓதத் தெரிந்தவர். எனக்கும் சிறு வயதில் கற்றுக் கொடுக்க முயன்றார். அந்த ஏற்ற இறக்கங்கள் சரிவர எனக்கு கை கூடாததால் துரத்தி விட்டார் :-)

நான் வாரம் ஒரு முறையேனும் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவன். அங்கு செல்வது பிடித்திருக்கிறது. மனதிற்கு அமைதி தருகிறது. இது முட்டாள்தனம் என்ற ஏளனத்தை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் சமீப காலமாக கோவிலுக்கு செல்வது குற்றமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்து மதம் என்பது ஜாதி வாரியாக மக்களை பிரித்து அடிமைப்படுத்துவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு உண்டாக்கப் பட்ட ஒரு கோட்பாடா? இதில் வேறு நல்ல விஷயங்களே இல்லையா? இந்து மத வழிபாடுகளில் ஈடுபடுவது ஜாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதற்கு சமமா? ஜாதிகள் ஒழிய வேண்டுமானால் இந்து மதம் முழுதையும் அழித்து விட வேண்டியதுதானா? இது போன்ற கேள்விகளுக்கு விடை தேட முதல் படியாக, வேதங்கள், பல்வேறு ஸ்ம்ரிதிகள், வால்மீகி ராமாயணம், வியாச பாரதம், கீதை, புராணங்கள், திவ்யப் பிரபந்தம், தேவாரம் என அனைத்து மூலங்களையும் படித்துவிட ஆசை. இந்த நீண்ட பயணத்தின் முதல் அடி எடுத்து வைக்க உங்கள் பதிவு உந்துதலாய் இருக்கிறது.

mdmuthukumaraswamy said...

சாதியும் இந்து மதமும் ஒன்று என்று நான் கருதவில்லை. சாதியை முற்றிலும் ஒழித்துவிட்டால் இந்து மதத்திற்கு எந்த பங்கமும் வந்துவிடாது மாறாக இன்னும் வலுவாக மாறும் என்றே நான் நம்புகிறேன். உலகிலுள்ள அத்தனை மதங்களும் தங்கள் மூல நூல்களை வாசித்து வாசித்து காலத்துக்கேற்ற புது விளக்கங்கள் கொடுத்து தங்களை புதுப்பித்த வண்ணமே இருக்கின்றன. அந்த புதுப்பித்தலில் மதங்களைச் சார்ந்த இறையியாலாளர்களும் சுதந்திர சிந்தனையாளர்களும் தொடர்ந்து ஈடுபடுவதை நாம் உலகெங்கும் பார்க்கிறோம். வரலாறுகளையும் மூல நூல்களில் சொல்லப்பட்டிருப்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை திரிக்கவும் முடியாது. அவற்றை சரிவர புரிந்துகொண்டு மேலே செல்ல வேண்டியதுதான்.

Venkatesan Chakaravarthy said...

இதைப் பற்றியெல்லாம் அதிகம் அறியாத என்னோடு இவ்வளவு நேரம் பேசியமைககு நன்றி.

எனக்கு ஒரு சந்தேகம் இணையத்தில் நான் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் என்னவாயிற்று? இது அமல் செய்யப்பட்டுள்ளதா? உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?

mdmuthukumaraswamy said...

ஆமாம் அந்த சட்டம் அமலில்தான் இருக்கிறது. கோவில் அர்ச்சகர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவு என்பதால் யாரும் அர்ச்சகராக முனைவதில்லை. ஓதுவார்கள் நிலமை இன்னும் மோசம். தேவார, திருவாசக பதிகங்களை பண் பிசகாமல் பாடுகிற ஓதுவார்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். கிறிஸ் ஃபுல்லர் என்ற ஆங்கில மானிடவியலாளர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் குறித்து முக்கியமான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த சுட்டியில் http://www2.lse.ac.uk/anthropology/people/fuller.aspx அவருடைய நூல்கள் பற்றிய விபரங்களைக் காணலாம். இதில் அனைவரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்தும் எழுதியிருக்கிறார். அவருடைய மீனாடசி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் பற்றிய புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. யாரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சமஸ்கிருத பேராசிரியை ஊடே ஹூஸ்கன் களப்பணி செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் கட்டுரை இணையத்தில் பதிவிடப்படவில்லை. தமிழ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பொருளில் ஆய்வு செய்யவில்லை.
மேலும் ஒரு விஷயம். நான் தினமும் வீட்டில் ஶ்ரீருத்ர ஜெபத்தோடு சிவ பூஜை செய்கிறவன். ஶ்ரீவித்யா உபதேசம் பெற்றவன். கடந்த பதினாறு பதினேழு வருடங்களாக தொடர்ந்து உபாசனையில் இருப்பவன். நான் பிறப்பால் பார்ப்பனன் அல்லன்.கலப்பு மனம் புரிந்தவன். நான் என் உபாசனையை மறைப்பதோ வெளியில் சொல்வதோ கிடையாது. நான் வேதங்களைக் கற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையும் வரவில்லை. இதே வலைத்தளத்திலேயே நான் வெளிப்படையாக அது பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

என் தளத்திற்கு வந்து என் கட்டுரையைப் படித்துவிட்டு என்னோடு உரையாடியதற்கு நன்றி.

Venkatesan Chakaravarthy said...

நீங்கள் குறிப்பிடும் பதிவை படித்தேன். இந்தப் பதிவும் உங்கள் பதில்களும் எனக்கு ஒரு சிறு தெளிவு தருகின்றன (அல்லது அதை போன்ற ஒரு பிரமை!) ஒரு எளிய கேள்வியோடு இந்த உரையாடலை முடித்துக் கொள்கிறேன். உங்கள் பதிவுகளில் இருந்தும், உங்களைப் பற்றிய மற்றவர் பதிவுகளில் இருந்தும் நீங்கள் ஒரு சமயம் தில்லியில் வசித்ததாக அறிகிறேன். தற்போதும் இங்குதான் வசிக்கிறீர்களா? (நான் தில்லியில் வசிப்பவன்).

Venkatesan Chakaravarthy said...

மற்றொரு பதிவில் நீங்கள் சென்னை வேளச்சேரியில் வசிப்பதாய் அறிகிறேன். Bye for now.

mdmuthukumaraswamy said...

நான் என்றுமே டெல்லியில் வசித்ததில்லை. அடிக்கடி வேலை காரணமாகப் போய் வந்திருக்கிறேன். சென்னை வேளச்சேரியில்தான் வசிக்கிறேன்.