Tuesday, December 11, 2012

யோக நித்திரை ஏகினான் ஶ்ரீமான் எம்டிஎம்


ஶ்ரீமான் பொதுஜனம் உவாச:

மஹாமஹா சூரரும் மஹாமஹா தீரரும் பாரத தேசத்தை ஒற்றைக்குக் காப்பாற்றப் புறப்பட்ட வில்லாளியும் வலக்கையால் ஹிந்து மத அஸ்திரங்களையும் இடக்கையால் ஹிந்துத்துவ அரசியல் அஸ்திரங்களையும் எது எந்த அஸ்திரம் என தெரியாதவாறு சவ்யசாசியாய் எய்யக்கூடியவரும், முன்பு ஒரு முறை மஹா பண்டித மஹா வித்வான் ஶ்ரீலஶ்ரீ தமிழவனுக்கு ஸ்திரீயை ஆலிங்கனம் செய்து இதழோடு இதழ்பொருத்தி இனியபானம் செய்யும் முறை தெரியாது என நுணுக்கமாகக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த  மஹோன்னத மஹாபண்டித மஹாவித்வான் பிரம்மஶ்ரீ பண்டித சிரோமணி மஹாஉபாத்தியாய ஶ்ரீலஶ்ரீ வெங்கட்சாமிநாதனார் அவர்களால் ‘அவர் எழுத்தைப் பார்த்தால் முகத்தில் எப்போதும் கடுகும் சீரகமும் வத்தல் மிளகாயும் வெடித்துக்கொண்டே இருக்கிறதோ’ என்று சந்தேஹிக்கப்பட்ட முகதேஜஸ் உடையவருமான ஶ்ரீலஶ்ரீ அரவிந்தன் நீலகண்டனார் அவர்கள் எய்த அஸ்திரங்களையெல்லாம்  தன் இடது கால் சுண்டுவிரல் நகநுனியினால் எற்றி அலக்ஷியம் செய்து சித்தம் முழுக்க சிவமயமயமானவனும் செய்யும் செயலெல்லாம் சிவபூஜையாக்கியவனும் விடும் ஒவ்வொரு மூச்சும் பஞ்சாட்ஷரமாக அருளப்பட்டவனும் சிவபெருமானின் பரிபூரண அருளை ஜென்மாஜென்மத்திற்கும் பெற்றவனும் ஶ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரி கோடி சூரியப்ரகாசத்தோடு நேரில் தோன்றி இவன் என் செல்லக்குழந்தை என அண்டசராசரங்களும் அறியும்படி அறிவிக்கப்பட்டவனும் ஸ்கந்தப்பெருமானின் அம்சமோ என ஐயுறும் வகையில் முத்துக்குமாரசாமி என்ற நாமதேயம் பெற்றவனும் முற்போக்கு துஷ்டர்களால் எம்டிஎம் என்று அழைக்கப்படுபவனுமான ஶ்ரீமான் எம்டிஎம் தன்னிடம் கேழ்க்கப்பட்ட ஆதாரங்கள் எதையும் தர மறுத்தவனாய் தன் முற்போக்கு பாபசிந்தனைகள் எதையும் புனராலோசனை செய்யாதவனாய், கல்லூரி உபாத்தியாயரின் தோரணையுடன் கொட்டாவி விட்டவனாயும், தாழ்ந்த குலத்தோருக்கே உரித்தானதாக நாட்டிய சாஸ்திரத்தினால் சொல்லப்பட்ட, கலியுக கலஹ ஹாஸ்ய உணர்வு தூண்டப்பட்டு நாசிகள் விடைக்க அதிஹசிட்ட நகைபுரிபவனாயும், சப்பர மஞ்சக்கட்டிலில் உருண்டு புரண்டு சிரிப்பவனாயும், தமிழ் ஹிந்து தளத்தில் இந்த ஐம்பத்தி மூன்றாம் பசலியில் புழங்கும் மணிப்பிரவாளத்தை நினைந்து நினைந்து ஹாஸ்யம் பீடித்ததால் கண்களில் ஜலம் தாரை தாரையாய் வழியக்கூடியவனாயும் இருந்து தனக்கு துஷ்ட முற்போக்கு குருநாதர்கள் யாருமில்லையே என்ற நினைவால் தன்னுணர்வடைந்து சயனித்து அவ்வாறாகவே யோகநித்திரை ஏகினான் ஶ்ரீமான் எம்டிஎம்.  

அன்னாரின் குறட்டையொலியைக் கேட்டு ஶ்ரீமான் எம்டிஎம் அவர்களின் உபன்னியாஸமோ அல்லது உபன்னியாஸத்திற்கு அவரது மாணாக்கர்களின் மயக்கமோ என சந்தேஹித்த மஹா பண்டித மஹா வித்வான் ஶ்ரீலஶ்ரீ ஜடாயு அவர்கள் முற்போக்கு துஷ்டர்களின் சப்தங்கள் எங்கிருந்தெல்லாம் வருகின்றன என்று அங்கலாயிக்கலானார். ஏற்கனவே ஶ்ரீலஶ்ரீ ஜடாயு அவர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குல தர்மம் ஸ்வதர்மம் என்று உபன்னியாஸம் செய்தது குல தர்மத்தை ஆதரித்து அல்ல என்று நிறுவி தன்னை முற்போக்கு துஷ்டர் கோஷ்டியில் சேர்த்துகொள்ள பிரம்மப்பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார். மலைமுழுங்கி மஹாதேவர்கள் சத்திரத்துக்கு இருவர் என்று தங்கியிருக்கும் இந்தக் கலியுகத்தில் மலையளவு மஹாபாரத ஆராய்ச்சி நூல்கள் குவிந்திருப்பதாய் கூறிவிட்டு ஐராவதி கார்வே என்ற ஒரே ஒரு ராட்சசியை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு மௌனமாய் யோக நித்திரை ஏகிவிட்ட ஶ்ரீமான் எம்டிஎம்மைப் பார்க்க பார்க்க அவருள் கடும் சினம் மூண்டது. ராட்சசி ஐராவதி கார்வேயை பெருங்கதையாடலை சிதைத்த அரக்கி என முஷ்டி மடக்கி விட்டார் ஒரு  குத்து. 

குல தர்மம் ஜாதி முதலியனவற்றுக்கு எதிரான ஶ்ரீலஶ்ரீ ஜடாயு அவர்கள் தங்களுள் மூத்தவரும் தன் அனுபவத்தால் எல்லாவற்றையும் அளந்தபடியால் உலகளந்த பெருமாள் என தமிழுலகில் அறியப்பட்ட மஹோன்னத மஹாபண்டித மஹாவித்வான் பிரம்மஶ்ரீ பண்டித சிரோமணி மஹாஉபாத்தியாய ஶ்ரீலஶ்ரீ ஜெயமோகனார் அவர்கள் மஹாத்மா காந்தி அவர்களையே பனியா என்று விதந்தோதியதையும் மஹாத்மா காந்தி அவர்களை வைத்தே வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தி எழுதியும் பேசியும் உண்மையான காந்தீயவாதிகள் முகத்தில் கரி பூசியும் மாயப் பைசாச யட்சிகதைகளுள் ஒன்றாக மஹாத்மா காந்தியையும் சேர்த்துவிட்டதையும் ஏன் விமர்சிக்கவில்லை என ஶ்ரீமான் பொதுஜனம் மனத்தின் ஆழத்தில் கேள்வி எழுந்துள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் ஜலதாரையில் அபூர்வமாய் துள்ளி விழும் கடல் மீன்களைப் போலவே பாரதப் புண்ணிய பூமியில் விழுந்தவையே தீண்டாமையும் வர்ணாசிரம தர்மமும் ஜாதியும் என்று நன்றாகவே விளங்கிவிட்டது ஶ்ரீமான் பொது ஜனத்திற்கு. 

தன் மூடிய இமைகளுக்குள் அந்த அலகிலா ஈசனின், ஆனந்த நடராஜனின் அஜபா நடனத்தினை பார்த்துக் களித்திருக்கிறானோ ஶ்ரீமான் எம்டிஎம்? அவன் முகத்தில் ஏனிந்த மந்தஹாஸப் புன்னகை?
Post a Comment