Tuesday, December 11, 2012

மகாகவி பாரதியார் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி ஆற்றிய அரிய சொற்பொழிவு
















நண்பர் வாசுதேவன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட மகாகவி பாரதியின் உரையையும் புகைப்படத்தையும், வாசுவுக்கு மனமார்ந்த நன்றியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]

இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக் கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் ‘பாத்திஹா’ (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்.

பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ் ஜோதி
(அல்லா, அல்லா, அல்லா!)

கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)

எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு:
பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.

மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்கிரஹாரதலையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக்கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார் கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்: “நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர் தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கைகால் முதலில் உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக் காத்து எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை, இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராத மாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி “இஸ்லாம்” என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முதற்பட்டு வாருங்கள்” என்று முஹம்மது நபியாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து, “மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா, முஹம்மதுர்ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது” என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.

இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தம் குமாஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்து பிறகு அவருக்கே மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்துகொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதினின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே இருந்து, நீ நோய் வேதனை பொறுக்க மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்ப வேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றப்படி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில், “எந்த மனிதனும் தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.

முஹம்மது நபியை முதல்முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யம் தோன்றும்படி, கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி என்பதும், பக்த குல சிரோமணி என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.

மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டிவிட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;

“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்த போதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.

இந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைர்யத்துடன் இருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, “கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை” என்று மனத்துடன் சொல்வோன் உண்மையான தெய்வபக்தன். தெய்வ பத்தி ஒன்றைத் தவிர வேறெந்தச் சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்தப் பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. “பாம்பென்றால் படையும் நடுங்கும்.” இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கல் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணை கொண்டு முஹம்மது நபி வென்றார். ‘கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும்’ அவரிடத்தே இருந்தன. ஆதலால் அவருக்கு,

எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
விடுத்ததாய் மொழிக் கொங்கணும் வெற்றி
வேண்டு முன்னர் அருளினர் அல்லா.

இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும் நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞான ஒளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.

அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ
எங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே

என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.

இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமெலீட்டால், “கடவுளே கடவுளே” என்று கதறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டியிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும், “ஏன், ஏன்” என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகிக தந்திரி. வியாபாரமானாலும் யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.

எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினினும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸ்ல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸ்த்யத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.

இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார்.

அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நம் நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு இல்லை. கேள்வியால் மஹா பண்டிதரானார்; ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும் தீர்க்கதரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரியான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது வானுலகம் புகுந்தார்.

மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸ்ஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரனை செய்வது வழக்கம். அதனின்றும் விக்கிரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய “பழைய ஏற்பாடு” என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்துகொண்டார். கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின் அவதாரமாக ஒப்புக் கொள்ளவில்லை. விக்கிரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமே யல்லது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு:

இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸூக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.

அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை எனினும் ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்றாக விளங்கும் வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவிபோலே ஆக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.

இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு முஸல்மான்களிலே, ஷியா ஸுந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின.

குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.



No comments: