Wednesday, December 26, 2012

சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை


“மு என்ற இராமதாசு” என்ற சீர் மிகு கதையை சில்வியா என்ற அய்ரோப்பிய அம்மையார் பெயருடையவர் திருவள்ளுவர் ஆண்டு 2043 மார்கழித் திங்கள் எழுதினார் என்பது கெட்டியான சமக்காளத்தினால் வடிகட்டிய பொய். இந்தப் பரியை நரியாக்கிய படலம் முத்துக்குமாரசாமி என்ற புலவரால் இயற்றப்பட்ட சிற்றிதழ் ஓத்து ஒன்றில் புறனடைத் தகவலாகக் கொடுக்கப்பட்டு அதுவே உருசியன் மொழிபெயர்ப்புக்குள்ளாகி அதிலிருந்து சப்பானிய பாசைக்குச் சென்று மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து நீரில் உப்பைச் சேர்த்துக்கொண்டே போனால் மண்ணூறல் எடுவித்த நீரினை யார்தான் உலகுக்குக் காட்டுவது என்ற குமுகாய அக்கறையினால்தான் இந்த உலத்தத்தினை திண்ணைப் பள்ளி வழக்கின்படி இடுகிறேன்.

“மு என்ற ராமதாசு” புனைவு பழைய வைணவத் தொன்மம் ஒன்றில் மீனவப் பெண்ணாக சீதேவித் தாயார் தோற்றரவம் எடுக்க  சௌரிராசப் பெருமாள் அவரைக் கைத்தலம் பற்ற மீனவனாய் ஊருலவுத் திருமேனி கொண்டு செல்லும் நிகழ்வினையும்  இராமதாசு என்ற வழுக்கைத் தலை முதியவர் தான் கல்லூரி மாணவராய்  இருந்தபோது தனக்குப் புரையில்லாத திருமகள் ஒருவரின்பால் பொருந்தாக் காமத்தின்பால் ஈர்க்கப்பட்டு சிற்றுந்து ஒன்றில் சென்ற நிகழ்வின் நினைவலைகளையும் இணைக்கிறது. 

இதற்கு ஓத்து எழுதுகிற புலவர் முத்துக்குமாரசாமி இராமதாசு வேடம் தாங்கியிருக்கும் மு உண்மையில் கம்ப நாடன் இயற்றிய ஒப்பிலா இராமகாதையின் தலைமகனே உலகளந்த உத்தமனே இராமபிரானே என்று விளம்புகிறார். இந்தத் தலை கீழ் வவ்வலுக்கு திருகு தாளப் பெருமானன் முத்துக்குமாரசாமி “இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ!” என்ற கம்பனின் வரியையும் “ அத்தேவர் தேவர் அவர் தேவரென்றிங்ஙன், பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே, புத்தேதுமில்லாதென் பற்றரப் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி” என்ற மாணிக்கவாசகர் பாடலையும் கொண்டு கூட்டி பொருள் சொல்கிறார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன முடிச்சு என நல்லுள்ளங்களில் வினா எழுமா எழாதா? இதைத்தான் பரியை நரியாக்கிய படலம் என்று முன்னிகையில் குறித்தேன். ஆவுடையாருக்கு நாமம் சாற்றுதலும், எம்பெருமானின் ஊருலவுத் திருமேனிகளுக்கு உத்திராக்கம் அணிவிப்பதுமே தன் கடன் பணி செய்து கிடப்பது என்று இறும்பூதியிருக்கிறாரோ புலவர் முத்துக்குமாரசாமி? அய்யா! ஒரு கண்ணால் தில்லை கனகசபாபதியின் நடனம் மறு கண்ணால் கோவிந்தசாமியின் கிடந்த திருக்கோலம் என்ற சிதம்பரத் திருக்காட்சி தற்கால இலக்கியப் பனுவலுக்கு திறனாய்வு ஓத்து எழுத ஒத்து வருமோ?

 முதலில் மீனவ பத்மினி நாச்சியாரைப்  பார்க்க மீனவ சரமும் (கைலி), கறுப்புக் கண்ணாடியும், கழுத்தில் வண்ணக் கைக்குட்டையும் அணிந்து மீனவக் குமுகாயத்தினர் சுற்றிக் கும்மாபம் போட மாசித் திருவிழாவின்போது சௌரிராசப் பெருமாள் ஊருலா போவதையும் சிற்றுந்தில் கறுப்புக் கண்ணாடி அணிந்து சீன்சு கால்ச்சட்டை அணிந்து குப் குப் என ரயில் வண்டி போல புகை விட்டுச் செல்லும் மு என்ற இராமதாசினையும் ஒப்பிடுவதே இமாலயக் குற்றம்.  இந்த முவன்னா ராவன்னாவைப் பார்த்தா பாடுவாள் எவளும் ‘கைத்தலம் பற்றக் கனா கண்டேன் தோழி’ என்று? 

பொய்யுரைப் புலவர் முவன்னா குவன்னா சாவன்னா இதற்குக் காட்டும் தருக்கம் என்ன? சமசுகிருதத்தை தெருமுனை சிற்றங்காடியில் தேத்தண்ணீர் வாங்குவதற்குக் கூட பயன்படுத்துபவர் அல்லரா அவர்? வேத காலத்திற்கு சென்றுவிடுகிறார். பாற்கடலைக் கடைந்தபோது ஆலாகால விசம் தோன்றியதே அதை உருத்திரன் இனிப்புருண்டை விழுங்கியது போல விழுங்கினாரே அப்போது உருத்திரனை பாத்திரமாகக் கொண்டு உண்மையில் விடமருந்தியவர் திருமாலே என வைணவ உரையாசிரியர்கள் சாத்தமுது படைத்திருக்கிறார்களாம். அது சாத்தமுதா திருக்கண்ணமுதா என்ற குடுமிப்பிடிச் சண்டை இப்போது வேண்டாம். இதை வைத்து முவன்னா குவன்னா சாவன்னா என்ன சில்லடிக்கும் வேலையை செய்கிறார் என்று பார்ப்போம். விடமருந்தி கண்டம் கருத்த உருத்திரனே திருமாலாகிவிட்டபடியால் அதே தருக்கத்தின்படி மீனவப் பாத்திரம் தரித்த சௌரிராசப் பெருமாளே மீனவன் என்று வாதிடுகிறார். எங்கே போய் முட்டிக்கொள்வது? இதைத்தான் கேட்பார் செவி சுடு கீழ்மை என நம்மாழ்வார் சுட்டினரோ? வானிலிருந்து நிலம் நோக்கிப் பொழிகிறது மாரி என்றால் விழுந்த துளி சலமே மாரி, வான் என்று எதிர் ஓத்து எழுதுகிறவரிடம் எங்களுக்கெல்லாம் காதுகுத்தி நெடுநாட்கள் ஆகிவிட்டன என்று மட்டுமே மறுமொழி தரஇயலும்.

கறுப்புக் கண்ணாடி அணிந்த இராமதாசு கதையில் மீனவப் பெண்ணுடன் கடற்கரையில் கலவி கொள்ளுமிடத்தே அந்த மீனவப் பெண் அப்பப்ப கிருட்டிண கிருட்டிண அம்மம்ம இராம இராம என்று ஒலியெழுப்புகிறாள். அய்ரோப்பிய இலக்கியங்களிலோ அய்ரோப்பிய நாரீமணிகள் உயர் குதிகுளம்பு சப்பாத்துக்கள் அணிந்த தங்கள் கால்களை உயரத் தூக்கி சேசுவே சேசுவே என்று ஒலியெழுப்புகிறார்களாம். கலவியின்போது அய்ரோப்பிய நாரீமணிகள் தங்கள் சப்பாத்துக்களை களைவதில்லை என்பதை 219 புறனடைகள் கொடுத்து நிறுவுகிற முவன்னா குவன்னா சாவன்னா இராமதாசு கதைப் பனுவலில் வரும் மீனவப்பெண்ணும் தன் மிதியடியை கலவியின் போது கழற்றவில்லை என்ற வெள்ளிடைமலை தகவலை உற்று நோக்கச் சொல்கிறார். அப்பப்ப அம்மம்ம என்று நாமே கத்தத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இந்த ஒரே ஒரு  பனுவல் உள்க் குறிப்பினை வைத்து மட்டுமேதான் இக்கதையின் ஆசிரியர் வெளி நாட்டு இலக்கியம் பயின்ற சில்வியா அம்மையார் என்ற முடிவுக்கு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மிதியடி கழற்றா கலவி என்பதுதானே அவருடைய கட்டுரைத்  தலைப்பு? என்னவொரு நெஞ்செழுத்தம்! என்னவொரு தலைக்கனம்! இந்த அம்மம்ம அப்பப்ப உரைக்கு ஆச்சு செல்லம்மா ஆச்சு என்ற ஆண்குரல் மூச்சிரைப்பினை சேர்க்கவில்லை என்று எதிர் எக்கு வைக்கும் புலவர்காள் மடல்களை யான் விரிவஞ்சி தவிர்த்தனன்.

குழம்பி ஒரு மிடறு தேத்தண்ணீர் மறு மிடறு எனக் குளகம் எழுதும் புளுகன் தற்காலத் திணைக்குறிப்புகள் தருகிறேன் பேர்வழி என சிற்றுந்தில் செல்லும் இராமதாசு காணும் கவின் காண் காட்சிகளில் வரும் மஞ்சள் நத்தி மலர்களை வேங்கை மலர்கள் என திரிப்பதன் உள் நோக்கம் என்ன? சங்கப் பாடலிலே குறிஞ்சிக் கலியினிலே  குன்றுகளிலிருந்து கொட்டும் அருவியில் நிறைந்திருக்கும் வேங்கை மலர்களைக் கண்டால் யானைகள் இரண்டு திருமகளின் மேல் நீரைச் சொரிவது போல இருக்கிறது என்றொரு குறிப்பு வருகிறது. நன்று. இதை எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் போல சிவந்த பொன்போன்ற நிறத்தவனாய் சீராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர் என்ற ஞானசம்பந்தர் பதிகத்தோடு இணைப்பதன் தேவை திருமகளே எரியொடு ஆடிய ஈசனின் பெண் வடிவே என நிறுவுவதற்குத்தானே?  இதற்குத்தானே மஞ்சள் நத்தி மலர்கள் வேங்கை மலர்களாய் மாறின? அய்யா முத்துக்குமாரசாமி பெருமகனாரே மாலுக்கு மூத்தவன் ஈசன்  அவனே முழு முதற் கடவுள் என நிறுவி என்ன கண்டீர்? 

புற சமயிகளான நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் என ஞானசம்பந்தர் அதே திருச்சிராப்பள்ளி பதிகத்திலே பாடுகிறாரே அவர்கள் வைணவ சைவ சண்டைகளைப் பார்த்து, கேட்டு எள்ளி நகையாடுவதற்கான நொறுக்குத் தீனி வழங்கியது அன்றி என்ன சாதித்தீர் நீர்? தற்கால இலக்கியத் திறனாய்வு ஓத்து எழுதுவதற்கு மரபிலக்கிய புறனடைகள் எதற்கு என தமிழ்க்குரவர் கேட்டே ஆக வேண்டிய சூழல் சூல் கொண்ட மேகமாய் நம் தலைகளின் மேல் உலவுகிறது.

ஒரே இதழ் அச்சாக்கம் பெற்று பிறகு காணாமல் போன ‘வைரசு’ என்ற இலக்கிய சிற்றேடே “மு என்ற ராமதாசு” கதையினை வெளியிட்டிருக்கிறது. வேறு எந்த பொத்தகங்களையும் வைரசு வெளியிட்டதாகவும் தகவல் இல்லை. இப்படிப் பெயர் கொண்ட இலக்கிய ஏட்டில் வெளிவரும் கதைகளுக்கு கிருமி நாசினியாய் திறனாய்வு எழுதுவதே சாலப் பொருந்தும். அதைச் செய்தாரா குதிரையிட்டது எத்தனை முட்டையெனெ கணக்கு எழுதும் மீயென்னா தெயென்னா முத்துக்குமாரசாமி என்றும் பார்த்து விடுவோம். 

இராமதாசு ஓட்டிச் செல்லும் சிற்றுந்தின் இலக்கம் த. நா. கஎகூஅ என்று முதல் பத்தியில் வருகிறது. இராமதாசு சௌரிராசப் பெருமாளாகவும் செல்லம்மா செம்படவ நாச்சியாராகவும் உருவு மாறி சீவாத்மா பரமாத்மாவோடு வருணம் மேயும் பெருமணல் உலகில் கலக்கின்ற பத்தியிலே தூரத்திலே நிற்கிறது அந்த சிற்றுந்து. இங்கே நான் எந்த முன்னூகத்தையும் முன்னிறுத்தவில்லை. பனுவலினுள் உள்ள சான்றுகளை மட்டுமே குவி ஆடி கொண்டு காண்கிறேன். அங்கே காணப்படுகிற இலக்கமோ த.நா. ககூஎஅ இராமதாசு முதல் பத்தியில் உதைத்து  எழுப்பி, சீழ்கை ஓலி எழுப்பி, மஞ்சள் நத்தி மலர்களைக் கம்பு தோறும் கண்டு களித்து தன் செம்படவத் தலைவியைக் காணத் துள்ளி வந்த சிற்றுந்து வேறு கடைசியில் கடற்கரையில் நிற்கின்ற சிற்றுந்து வேறு! வந்தவர் கதைத் தலைவன் இராமதாசுதானா என்ற அய்யம் எழுகிறதல்லவா? அங்கேதான் இருக்கிறது சூக்குமம். கடற்கரைக்கு வந்து சேர்ந்து தலைவியோடு கலந்த தலைவன் இராமதாசு அல்லன். செம்படவக் குமுகாயத்தினைச் சேர்ந்த கட்டிளம் காளை. பொருந்தும் காமம். தலைவனும் தலைவியும் ஒரே குமுகாயத்தினர் என்பதை சிற்றுந்தின் இலக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி என விளம்பிவிடுகிறது. எனவேதான் ‘மு என்ற ராமதாசு” கதையை சீர் மிகு கதையென கணித்தேன். செந்நாப்புலவன் நுதலியது தமிழ். காமாலைக் கண்ணர்கள் விரிக்கும் வஞ்சக வலை தாண்டி சூக்குமம் வெளிப்படும் விதத்தினை ஈண்டு காணும் தமிழ்கூறும் நல்லுலகம். இப்போது சொல்லுங்கள் எழுதியது சில்வியாவோ கில்வியாவோ என்ற வெளிநாட்டு அம்மையாராய் இருக்க இயலுமா? கண்டிப்பாய் இது உள்ளூர் சரக்குதான். சஞ்சலம் கொள்ளற்க. முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே எனக் கூறி அமைகிறேன். தெளியட்டும் முத்துக்குமாரசாமியின் சிந்தை. 

Post a Comment