Monday, December 10, 2012

அரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினை குறித்து


அரவிந்தன் நீலகண்டன் ‘தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்’ என்ற என் கட்டுரைக்கு தமிழ் ஹிந்து இணைய தளத்தில் எழுதியிருக்கும் எதிர்வினைக்கு பதில் எழுதுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. 

முதலில் தமிழ் ஹிந்து| தமிழரின் தாய் மதம் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த இணைய தளம் இந்து மதத்தின் மேன்மைகளைப் பரப்புவதற்காக செயல்படுகிறது. அதைப் படிப்பவர்களும் உபயோகிப்பவர்களும் மத நம்பிக்கையை மட்டுமே உடையவர்களாக இருக்கக்கூடும். மதம் சார் நூல்களை இலக்கிய, மொழியியல், மானிடவியல், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்துவது அல்லது அவ்வாறாக எழுதப்பட்ட ஆராய்ச்சிகளை சுதந்திரமாக விவாதிப்பது மத நம்பிக்கை பற்றாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது என்பது மட்டுமல்ல எந்தவித நோக்கங்களுமற்று மத நம்பிக்கை பற்றாளர்களை புண்படுத்திவிடவும் கூடும். 

இரண்டாவதாக தமிழ் ஹிந்து இணைய தளத்தினர் (அவர்கள் யார் யார் என எனக்குத் தெரியாது) சாதியத்திற்கு எதிராக பல்வேறு காலங்களில் இந்து மதத்தினுள் எழுந்துவந்த எண்ணற்ற சிறிதும் பெரிதுமான சீர்திருத்த இயக்கங்களை (உதாரணங்கள்: புஷ்டிமார்க்கம், சைவ, வைணவ பக்தி இயக்கங்கள், ராமானுஜரின் வைணவமார்க்கம், கபீரின் வழி, நவ வேதாந்திய இயக்கம், ஆரிய சமாஜம், வேதங்கள் மற்றும் பகவத் கீதையின் அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளாத தென்னிந்திய பக்தி கவிஞர்கள், புனிதர்கள் ஆகியோரின் சிந்தனைகள், நாராயண குருவின் வழி, காந்தீயம், வைகுண்டசாமி ஐயா வழி, ஷீரடி சாய்பாபா வழிபாடு) எந்தவிதமாக அணுகுகிறார்கள் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அதுபோலவே இந்து மதத்தின் பன்மைத்தன்மையினை பற்றி இந்த இணைய தளத்தினரின்  கருத்துக்கள் என்ன என்பதையும் என்னால் அறியமுடியவில்லை. 

மூன்றாவதாக அரவிந்தன் நீலகண்டன் இதே தமிழ் ஹிந்து தளத்தில் தான் இந்துத்துவ பதிப்பகம் என்ற  பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இந்து என்பது மதம் இந்துத்துவம் என்பது ஒரு வகை அரசியல் சிந்தனை இரண்டும் ஒன்றல்ல என்று ஹிந்துத்வா என்ற கருத்தினை உருவாக்கிய  சாவர்க்கர் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த வேறுபாட்டினை பொதுத்தளத்தில் எல்லோரும் அறிந்திருப்பதில்லை. மேலும்  எல்லா இந்து மத பற்றாளர்களும்  இந்துத்துவம் என்ற அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை. இந்துத்துவ அரசியல் சிந்தனை சார்ந்த மத நூல் விளக்கங்களை மறுத்தோ எதிர்த்தோ எழுதுபவர்கள் பேசுபவர்களை இதனால் சுலபமாக இந்து மதத்திற்கே எதிரானாவர்கள் என்று சித்தரித்துவிட முடியும்.  

நான்காவதாக தமிழ் ஹிந்து தளத்தில் விஜயதசமி அன்று அரவிந்தன் நீலகண்டன், ஜெயமோகன், ஜடாயு ஆகியோர் கலந்துகொண்ட வித்யாரம்பம் நிகழ்ச்சி பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில்  குல தர்மம், ஸ்வதர்மம் ஆகியன பற்றியும் ஜடாயு உரையாற்றினார் என்று குறிப்பு இருந்தது. குல தர்மத்தைப் பேசுகிறவர்கள் சாதி அமைப்பிற்கு சாதியத்திற்கு எதிரான சிந்தனையுடையவர்களா என்று என்னால் அறியமுடியவில்லை.

ஐந்தாவதாக மாபெரும் பிரச்சினை என்னவென்றால் அரவிந்தன் நீலகண்டனுக்கு நகைச்சுவை உணர்ச்சி உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய குறிப்பு அவர் வர்ம அடி முறை பயின்ற ஆசான் என்று வேறு குறிப்பிடுகிறது.

இந்த ஐந்து பிரச்சினைகளையும் மனதில் கொண்டு அரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினைக்கு பின் வரும் விளக்கங்களை அளிக்கிறேன். இந்த விளக்கங்களால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை என நான் அறிவேன்.

மகாபாரதத்தில் வரும் அரக்குமாளிகை சம்பவம்: அரக்கு மாளிகையை தீ வைத்துக் கொளுத்துகிறவன்  பீமன். அதில் அரக்கு மாளிகை சதியை நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்ட புரோசனன், பாண்டவர்களைப் போலவே ஐந்து மகன்களுடன் குடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் பழங்குடித் தாய் ஆகியோர் இருக்கின்றனர் என்பது தீ வைக்கிற பீமனுக்கு நன்றாகத் தெரியும். தீயில் கருகிச் செத்த பழங்குடித் தாயையும் அவளுடைய மகன்களையும் பார்த்து துரியானாதிகள் பாண்டவர்கள் மரித்தார்கள் என்று ஈமக்கிரிகைகள் செய்கின்றனர். அரவிந்தன் நீலகண்டன் மேற்கோள் காட்டும் மோகன் கங்குலியின் மகாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்தக் கதைச்சம்பவங்கள் தெளிவாகத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன?  தான் வைத்த தீக்கு புரோசனன் மடிந்தானோ இல்லையோ அவன் உயிரோடிருந்து துரியோதினாதிகளிடம் செத்தவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று விசனப்படுகிறான் பீமன். அரவிந்தன் நீலகண்டனோ பாண்டவர்கள் போல ஐந்து மகன்களையுடைய தாய் அங்கே தற்செயலாய் வந்ததாகவும், குடித்துவிட்டு அவர்களே தானாகவே பற்றிக்கொண்ட மாளிகையில் இறந்துவிட்டது போலவும் புரோச்சனன் இறந்தது கூட தெரியாமல் பாண்டவர்கள் அவனுக்காக வருந்தினர் என்று எழுதுகிறார். அவர் மேற்கோள் காட்டுகிற மோகன் கங்குலி ஆங்கில மொழிபெயர்ப்பு பத்திகளில் இருப்பதையே அதே பதிவில் தமிழில் இப்படி புரட்டி எழுதுகிற அரவிந்தன் நீலகண்டனிடம் குந்தி-தர்மன் உரையாடல் எந்த மகாபாரதத்தில் வருகிறது என்பதைச் சொல்வதால் என்ன பிரயோஜனம் ஏற்படக்கூடும்? 

தவிர, மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு அரக்குமாளிகையில் மடியும் பெண்ணை நிஷாத பெண் என்று குறிக்கிறது; ம.வீ.ராமானுஜாசாரியாரின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘வேடுவச்சி’ என்று குறிக்கிறது. இரண்டுமே வியாச பாரதமாக அறியப்பட்ட சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளே. மொழிபெயர்ப்பின் பிரச்சனைகளைத் தாண்டி இடைச்செருகல்களில்லாத மூல மகாபாரதம் எது அதைத்தானா மோகன் கங்குலியும் ம.வீ.ராமனுஜாசாரியார் குழுவும் மொழிபெயர்த்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.  ஏனெனில் நான் குறிப்பிட்ட காண்டவன தகனம் வேறு சில இன்னும் பழமையான பாரதங்களில் இரு வேத வேள்விகளைச் செய்யக்கூடிய குழுவினருக்கிடையேயான யுத்தமாக சித்தரிக்கப்படவில்லை. 

மூல சமஸ்கிருத மகாபாரதம் எது என்ற தேடலில் பேராசிரியர் வி.எஸ்.ஷுக்தாங்கர் தலைமையில் பல ஆராய்ச்சியாளர்கள் சுமார் நாற்பது ஆண்டுகள் ஈடுபட்டு 1259 கைப்பிரதிகளை ஆராய்ந்து Critical Edition of the Mahābhārata வை 1966 இல் வெளியிட்டார்கள். 2003இல்  critical edition cd ஐ The Bhandarkar Oriental Research Institute வெளியிட்டது பார்க்க http://www.bori.ac.in/mahabharata_project.html இந்த ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தபோது பல்வேறு மகாபாரதங்களை ஒப்பிட்டு Annals of the Bhandarkar Oriental Research Institute என்ற ஆராய்ச்சி இதழ் ஆராய்ச்சியின் பல்வேறு நிலைகளை தொடர்ந்து வெளியுலகுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தது. இந்த இதழ்கள் இணையத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பார்க்க: http://www.archive.org/stream/annalsofthebhand014356mbp/annalsofthebhand014356mbp_djvu.txt 

ஷூக்தாங்கரின் மூல பாரதத்தையும் மோகன் கங்குலி ம.வீ.ராமானுஜாசாரியார் குழு ஆகியோர் மொழிபெயர்த்த பாரதத்தையும் ஒப்பு நோக்கிய ஆய்வாளர்கள் மொழிபெயர்ப்பாகியுள்ள பாரதப் பிரதி  கதை சொல்லி பாகவதர்களால் -குறிப்பாக மராத்திய பிரிகு பிராமணர்களால் எராளமான இடைசெருகல்கள் சேர்க்கப்பட்ட பிரதி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். காண்டவ வன தகனம் அவ்வாறான இடைசெருகல்களாலேயே வேத பண்பாட்டிலேயே வாழும் இரு சமுதாயக்குழுக்களுக்கிடையேயான போராக மாற்றம் பெற்றது. ஷூக்தாங்கரின் மூல பாரதத்தை வாசித்தே ஐராவதி கார்வே காண்டவ வன தகனம் யாருக்கும் யாருக்கும் நடந்த யுத்தம் என்று தன்னுடைய ‘யுகாந்தா’ நூலில் விளக்குகிறார், காண்டவ வன தகனம் பற்றிய என்னுடைய குறிப்பு ஐராவதி கார்வேயின் ஆராய்ச்சிமுடிவினை அடியொற்றியதே.

கடோத்கஜனின் மரணம் என்று மட்டுமில்லாமல் மகாபாரதம் யாரை அசுரர்கள், ராட்சதர்கள் என்று demonize செய்கிறது அதற்கும் குணங்களைப் பற்றிய கோட்பாடுகளுக்கும் உள்ள உறவு என்ன என்பது விரிவாக எழுதப்படவேண்டியது. அதை அரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினையோடு தொடர்பு படுத்தாமல் தனிப்பதிவாக எழுதுகிறேன். 

கடைசியாக அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமோ, கைச்சரக்கை அவிழ்த்துவிட வேண்டிய அவசியமோ கிடையாது. இன்னும் விரிவாகவும் நுட்பமான ஆதாரங்களோடும்  விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அது ஒரு பொதுத்தளத்தில் நடைபெறுவதுதான் நன்மைக்கு வழிவகுக்கும். மேலும், அரவிந்தன் நீலகண்டனும் அவருடைய ஆதரவாளர்களும் ஆராய வேண்டியது என் கருத்துக்களை அல்ல என் கருத்துக்களுக்கு ஆதாரமாக இருக்கும், மலை போல் குவிந்து கிடக்கும் ஆராய்ச்சி நூல்களை.
Post a Comment