Thursday, December 6, 2012

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான்

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான்








முன்பெல்லாம் காசிக்கு போய்விட்டு பாரத ரத்னா, இந்துஸ்தானி இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானை சந்திக்காமல் நான் ஊர் திரும்பியதே இல்லை. 1995 ஆம் வருடம் என்றுதான் நினைக்கிறேன் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் ஷெனாய் கச்சேரியைத் தொடர்ந்தே பூஜைகளும் பிரார்த்தனைகளும் ஆரம்பிக்கும் என்று என் நண்பர் பத்ரி சொன்னதைத் தொடர்ந்து உஸ்தாதின் வருகைக்காகக் காத்திருந்தோம். பத்ரி அலகாபாத்தில் வசிப்பவர்; இசை ஆராய்ச்சியாளர்; த்ரூபத் காரனா (வம்சாவழி) இசையில் ஆய்வு விற்பன்னர். எனக்கு இந்துஸ்தானி இசையில் இருந்த பரிச்சயமும் ரசனையும் பத்ரிக்கு ஆரம்பத்தில் வியப்பை அளிக்கக்கூடியதாக இருந்தது. டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் சந்தித்த நாங்கள் இந்துஸ்தானி இசையைப் பகிர்தல், அதைப் பற்றிய உரையாடல் என எங்கள் நட்பு சீக்கிரத்திலேயே ஆழமாகிவிட்டது. பத்ரி உத்திர பிரதேசத்தின் பிரபலமான  வைதீக பார்ப்பன குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர். என்னை ஒரு மாதிரியாக வைத்து தென்னிந்தியாவைப் பற்றியே பல பொது அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டிருப்பவர். இசை தவிர நாங்கள் எதைப் பற்றி பேசினாலும் அது எங்களுக்குள் சண்டையில்தான் முடியும். உஸ்தாதின் முதிய உருவம் அந்த மண்டபத்தின் வாசலில் மெதுவாக நடந்து வந்தபோது பத்ரி ‘விழு காலில்’ என்று  சொல்லிவிட்டு அவர் சாஷ்டாங்கமாய்  உஸ்தாதின் காலில் விழுந்தார். நான் தயக்கத்துடன் நின்று கொண்டே கை கூப்பினேன். பத்ரியைப் போலவே  என் பக்கத்தில் நின்றிருந்த எல்லோரும் மளேர் மளேரென உஸ்தாதின் காலில் விழ நான் மட்டும் தர்ம சங்கடத்துடன் நின்றிருந்தேன். என்னைக் கடந்து செல்கையில் உஸ்தாத் என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். இசை மேதைகளுக்கே உரிய ஆனந்தத்தில் தோய்ந்த கண்கள்; கனத்த இமைகள். சாயரட்சைக்கு முந்திய நேரம். விளக்கொளி பட்டு அவரின் முகச் சதைகள் பொன்னிறத்தில் மின்னின. அன்று அவர் ஜய்ஜய்வந்தி ராகத்தில் அபூர்வமான இசைக்கோவை ஒன்றை வாசித்தார். அடுத்த நான்கு  ஐந்தாவது நிமிடத்தில் மனம் லேசாகி மென்மையாகி கிறங்கிவிட்டது.

மறு நாள் உஸ்தாதை சந்திக்கலாமா என்று பத்ரியிடம் கேட்டேன். காலில் விழுந்தவனுக்குக் கிடைக்காத ஆசீர்வாதம் நின்றவனுக்கு கிடைக்கிறது என்று காலையிலிருந்து பத்ரி புலம்பிக்கொண்டிருந்தார். காசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இசை சேகரித்ததில் எனக்கு சில கேள்விகள் இருந்தன அவற்றை உஸ்தாதிடம் கேட்கலாம் என்று எனக்கு எண்ணம். பத்ரிக்கு உஸ்தாதின் குடும்பத்தினரில் சிலருடன் நெருங்கிய பழக்கம் ஆனால் உஸ்தாதிடம் போய் பேட்டியெல்லாம் எடுத்ததில்லை. நாங்கள் கங்கைக் கரையில் ஹனுமான் ‘காட்’டில் உட்கார்ந்திருந்தோம். பத்ரி என்னை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு தன் நண்பரிடம் பேசி உஸ்தாதை சந்திக்க அனுமதி வாங்கச் சென்றார். கங்கையின் ஓட்டத்தை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன். தூரத்தில் சிலர் படகுகளை வலித்துக்கொண்டிருந்தார்கள். கங்கை அமைதியாக மெல்லிய சுழிப்புகளுடன் ஓடிக்கொண்டிருந்தாள். கங்கையின் ஓட்டத்தைப் பார்க்க பார்க்க முந்தைய தினம் கேட்ட உஸ்தாதின் ஷெனாய் இசை மனதில் இனிமை கொண்டது. கங்கை உஸ்தாதின் இசைக்கேற்ப ஓடுகிறாளா இல்லை அவள் ஓடுவதற்கு ஏற்ப உஸ்தாத் ஷெனாய் வாசிக்கிறாரா? கௌதம் கோஷ் இயக்கிய உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் வாழ்க்கை பற்றிய ‘மைல்கல்லை சந்தித்தல்’ (Sang-e-Meel Se Mulaqat ) என்ற ஆவணப்படத்தில் உஸ்தாத் கங்கைக் கரையில் அமர்ந்து சாதகம் பண்ணிக்கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தை பத்ரியோடு சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்தான் பார்த்திருந்தேன். சத்யஜித் ரேயின் ‘ஜல்சகர்’ படத்தில் உஸ்தாத் நடித்திருக்கிறார். ரேயின் அதிகம் பேசப்படாத படங்களில் அதுவும் ஒன்று. மாறும் காலத்திற்கேற்ப மாற இயலாத ஜமீந்தார் குடும்பத்தைப் பற்றிய கதை. தாதாசங்கர் பந்தோபத்யாயாவின் சிறுகதையை ரே என்ன மாதிரியாக படமாக்கியிருக்கிறார் அன்று அடிக்கடி வியந்த படம். பத்ரியிடம் ரே படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது பத்ரி ‘ஷெனாயின் அழைப்பு’ (Goonj Uthi Shehnai)
என்ற இந்தி படத்தை பார் என்று போட்டுக்காட்டினார்.  அந்தப் படம் முழுக்க உஸ்தாதின் ஷெனாய் இசை வருகிறது. படத்தில் உஸ்தாதின் ஷெனாய்க்கும் அப்துல் ஹலீம் ஜாஃபர் கானின் சிதாருக்கும் நடக்கும் ஜுகல்பந்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டிருந்தபோதே முந்தைய தினம் எனக்கு பதிலாக மௌனி விஸ்வநாதர் ஆலயத்தில் உஸ்தாதின் இசையைக் கேட்டிருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்றும் எண்ணம் ஓடியது.

இசை வரலாறுதான் ஒரு தேசத்தின் பண்பாட்டு வரலாறு அது தெரியாதவனெல்லாம் எதற்கு நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி செய்கிறான் என்று கத்தினார் பத்ரி. அவருக்கும் எனக்கும் மறு நாளே சந்திக்க அனுமதி கொடுத்துவிட்டார் உஸ்தாத் என்ற மகிழ்ச்சியோடு திரும்பிய பத்ரி நாட்டுப்புறவியல் இந்துஸ்தானி இசையை எப்படி அணுகுகிறது என்று அறிந்து கொள்ள விரும்பினார். ஹனுமான் ‘காட்’டிலிருந்து கிளம்பி வாரணாசியின் வீதிகளில் பேசிக்கொண்டே நடந்தோம். இந்துஸ்தானி இசை பெரும்பான்மையான நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு பிடிப்பதில்லை. அதில் முதன்மையானவர் பேராசிரியர் ஜவகர்லால் ஹண்டு. என்ன இசை இந்துஸ்தானி இசை, அரண்மனையின் வளாகங்களில், அரச சபைகளில் எங்கே ராஜாவுக்கு வலித்துவிடுமோ என்று பார்த்து பார்த்து மென்மையாக வாசிக்கப்படுகிற இசை என்று திட்டுவதற்கு சளைக்கமாட்டார் ஹண்டு. அவர் ‘அரண்மனை சிந்தனைச் சட்டகம்’ (palace paradigm) என்ற கருத்தாக்க கட்டுரை ஒன்று எழுதி அதைத் தொடர்ந்து அரண்மனை என்பதினை மையமாகக்கொண்டே இந்திய கலைகளும் அழகியலும் அமைந்துள்ளன என பல கருத்தரங்குகளில் வாதிட்டு வந்தார். கம்பீரமானவன் என்றால் சக்கரவர்த்தி, அழகி என்றால் மகாலட்சுமி, அழகு என்றால் பொன், பட்டு என்று நம் அனைத்து உவமைகளும் தினசரி பேச்சும் எழுத்தும் கலையும் ஒரு அரண்மனையை மண்டைக்குள் சதா சுமந்து திரிகிறவர்களாய் நம்மை ஆக்கியிருக்கிறது அதன் உச்சமே ஹிந்துஸ்தானி இசை என்று வாதிடுவார் ஹண்டு. பத்ரியிடம் ஹண்டுவின் கருத்தினைச் சொல்லப் போய்தான் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து அரசர்களும் கோவில்களும்தான் இந்துஸ்தானி இசையை போற்றி வளர்த்தார்கள் ஆனால் இசைக்கலைஞர்களின் சுதந்திரங்களில் அவர்கள் தலையிடவில்லை. சாதி, மத பேதமும் பார்க்கவில்லை. இசைக்கலைஞர்கள் தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்திக்கொண்டார்கள், அவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் மினுமினுக்கும் மாயைகளுக்குச் சற்றும் ஆட்படவில்லை. இந்துஸ்தானி இசை வரலாற்றினை கூர்ந்து படிப்பவர்கள் எவருமே ஒரு இருநூறு வருட பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் தாக்கமே இல்லையே என்று வியப்பார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு கை கட்டி கப்பம் செலுத்திய குட்டி ராஜாக்கள் தங்கள் விருப்பப்படி இந்துஸ்தானி இசையை வழி நடத்தியிருந்தார்கள் என்றால் இன்றைக்கும் தனித்துவமான இந்தியத்தன்மையோடு கூடிய இசை நிலைத்திருக்காது என்பதே என் கருத்து என்று நான் எடுத்துச் சொல்ல பத்ரி ஆசுவாசமடைந்தார். பணத்துக்கு ஊழியம் செய்கிறவர்கள் கலைஞர்கள் சிந்தனையாளர்கள் என்பது கலை சிந்தனை ஆகியவற்றின் உள் இயக்கம் அறியாதவர்களின் பேச்சு; ஹண்டுவின் கருத்து பொதுப்புத்தியை விளக்க பயன்படுமே தவிர இசை மரபுகளின் வரலாறுகளையோ அல்லது அவற்றின் அழகியல்களையோ அறிய உதவுவதில்லை என்று மேலும் விளக்கினேன்.

மறுநாள் பழத்தட்டுகளும் இனிப்புகளும் வாங்கிக்கொண்டு உஸ்தாதின் வீட்டிற்குப் போனோம். அவர் கொடுத்திருந்த நேரத்திற்கு கொஞ்சம் முன்னாலேயே போய் விட்டோம். உஸ்தாத் தொழுகையிலிருந்தார். உஸ்தாத் தினசரி ஐந்து வேளை தொழக்கூடியவர் முஹ்ஹரம் அன்று எந்த கச்சேரிக்கும் போகமாட்டார் என்று தெரிந்துகொண்டேன். உஸ்தாதின் குடும்பம் பெரியது, பதினைந்து பேரக்குழந்தைகளாவது இருப்பார்கள் என்றார் பத்ரி. உஸ்தாதின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். உஸ்தாத் ஆறு வயதில் பீகாரிலிருந்து காசிக்கு வந்தாராம். அவருடைய மாமா காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஷெனாய் வாசிக்கும் கலைஞராய் பணிபுரிந்தாராம் அவரிடமே உஸ்தாத் ஷெனாய் கற்றுக்கொண்டு மேதையானர் என்று அவர்களின் உரையாடலை மொழிபெயர்த்தார் பத்ரி.

என்னை இசை சேகரிப்பவர், ஆராய்ச்சியாளர் என்று உஸ்தாதிடம் பத்ரி அறிமுகப்படுத்தி வைத்தார். உஸ்தாதின் கண்களில் சினேகம் தெரிந்தது. நான் காசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சேகரித்த இசை குறித்து அவரிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன் என்றேன். எனக்கு இந்தி தெரியாது என்பதால் பத்ரி எனக்கு மொழிபெயர்ப்பார் என்றேன். டேப்ரிகார்டர், கேமரா எல்லாம் இல்லாமல் பேசுவது என்றால் தனக்கு சம்மதம் என்றார் உஸ்தாத். நீங்கள் இப்படி பவித்திரமான இஸ்லாமியராக இருக்கிறீர்களே விஸ்வநாதர் ஆலயத்தில் ஷெனாய் வாசிப்பது என்று இழுத்தேன். உஸ்தாதின் கண்களில் குறும்பு. என்ன செய்ய விஸ்வநாதர் இவன் முஸ்லீம் இவன் இந்து என்று பார்த்தா அருள் பாலிக்கிறார் இறைவன் எவ்வழி கலைஞர்கள் அவ்வழி; இதில் என்ன பெரிய ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கிறது என்ற உஸ்தாத் நான் சரஸ்வதி உபாசகன் தெரியுமா என்று வினவினார். இந்துஸ்தானி இசையில் ராகத்தினை ஆலாபனை (ஆலப்- இந்தி) செய்கிறோமே ஆலப் என்ற சொல் அல்லா என்ற சொல்லிலிருந்து வந்தது என்று ஒரு வழக்காறு உண்டு. ஆலாபனையின்போதுதான் ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக்கலைஞன் அடையாளம் காண்கிறான், அந்த உணர்வின் எல்லைகளை பரிசோதிக்கிறான், அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்து கவனித்து மேலே போகிறான். இது பாலைவனத்தில் தனியாக மாட்டிக்கொண்டவன் வழி தேடுவது போல. கொஞ்சம் கவனம் பிசகினாலும் வழி தப்பிவிடும் உணர்வு வேறொன்றாகிவிடும். அல்லாவின் பெருங்கருணையே அந்த உணர்வுகள் ஆனால் தேர்ந்தெடுத்த இந்தக் கண உணர்விலிருந்து வழி தப்பாமல் இருக்க, உணர்வு துல்லியமாக சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று உஸ்தாத் பேசப் பேச பத்ரி எனக்கு மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். 

அந்த சந்திப்புக்கு பிறகு உஸ்தாதை காசி செல்லும்போதெல்லாம் போய்ப் பார்த்தேன். சில சமயங்களில் அவர் சரியாகப் பேசினதில்லை. சில சமயம் அவர் சாதகம் செய்வதை அவருடைய மாணவர்களோடு மாணவர்களாய் உட்கார்ந்து பார்த்துவிட்டு கேட்டுவிட்டு திரும்பியிருக்கிறேன். கேரளத்திலிருந்து அவருக்கு ஒரு மாணவர் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நேரில் சந்தித்ததில்லை. 2004 இல் மீண்டும் பத்ரியும் நானும் உஸ்தாதை சந்திக்கச் சென்றோம். இந்தப் பத்தாண்டுகளில் நான் இந்துஸ்தானி இசை பற்றி ஏராளமாக வாசித்தேன். இந்துஸ்தானி இசையினை ஏகத்திற்கும் கேட்டேன். சேகரித்த இசைகளைப் பற்றி குறிப்புகள் எழுதி வைத்தேன். இந்த தேசத்திற்கு என்று ஒரு பண்பாடு இருக்குமென்றால், அந்த பண்பாட்டிற்கென்று வரலாறுகள் இருக்குமென்றால் அவை உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் போன்ற மேதைகளாலேயே உருவாக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்திருந்தேன். உஸ்தாதோடு அந்த சந்திப்பின் போது மிக விரிவாக இரண்டு நாட்கள் பேச முடிந்தது.   

2006 இல் உஸ்தாத்  மறைந்தபோது அவர் மறைந்த தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. 

நேற்று தற்செயலாய் பத்ரி அலகாபாத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தார். உஸ்தாதின் காலில் நான்  விழவில்லை என்பதை அவர் இந்த உரையாடலிலும் குத்திக்காட்டத் தவறவில்லை. அவருக்கு என்ன தெரியாதென்றால் ஒவ்வொரு முறை உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் இசையைக் கேட்கும்போதும் நான் மானசீகமாய் அவர் காலில் விழுகிறேன் என்பது.

யூடூபில் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இசை கச்சேரிகளும் ஆல்பங்களும் ஏராளமாய் கிடைக்கின்றன, கேட்டுப்பாருங்கள். இந்துஸ்தானி இசை வரலாறு காட்டும் நம் தேச வரலாறு என்ன என்று மேலும் எழுதுகிறேன்.

3 comments:

ramachandranusha(உஷா) said...

காலத்தால் அழியாத இந்த பாடலைப் பாருங்கள். பிஸ்மிலாகானின் ஷெனாயும், ஜானகியின்
குரலும்http://www.youtube.com/watch?v=4r-dDJM1Rw8

ramachandranusha(உஷா) said...

pls, remove word verification

Venkatesan Chakaravarthy said...

// pls, remove word verification

வழிமொழிகிறேன்.