Friday, October 14, 2011

தமிழ் இலக்கிய வாசகர்களுக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள்

வருகின்ற ஐப்பசி பதினைந்தாம்  தேதி சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயரப்போவதால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப்போவது தமிழ் இலக்கிய வாசகர்கள்தான். கவிஞர் விக்கிரமாதித்யனோடு சேர்ந்து கொட்டமடித்த காலங்களில் அவரைப்போலவே ஜோதிட நூல்கள் பலவற்றையும் நானும் கரைத்து குடித்துவிட்டிருப்பதால் நான் சொல்லும் பலன்களை வாசகர்கள் தேர்ந்த ஜோதிடரின் பலன்கள் என்றே கொள்ளலாம். நமது மரபில் ஜாதி போல ஜோதிடமும் முக்கியமான பகுதி என்பதனால் நான்
ஜோதிடத்தைத் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறேன்.

சனி பகவான் பெயர்வது புத்தகக்கண்காட்சியை ஒட்டி நிகழ்வதாலும் பெயரும்போதே அவர் வக்கிரகதியில் சஞ்சரிப்பதாலும் வாசகர்கள் மொந்தை மொந்தையான புத்தகங்களால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அகத்திறப்புகள் பல நிகழும். நிறையபேர் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ள நேரிடும். இந்த அகத்திறப்புகள் எப்படி எங்கே  நிகழும் என்று யாராலும் சொல்லமுடியாது என்பது மட்டுமல்ல அவற்றை குரு முகமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும் என்பதினாலும், குரு எல்லோருக்கும் அவற்றைக் கற்றுத் தரமாட்டார் என்பதினாலும் எல்லோரும் தமிழ்தெய்வமான முருகக்கடவுளின் ஆகச் சிறந்த துதியான கந்த சஷ்டிக் கவசத்தின் பல பிரதிகளை பல கையடக்கப் பிரதிகளாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுடைய உண்மையான பெறுமதியைப் பொறுத்துதான் உங்களுக்கு அகத்திறப்பு நடக்கும் என்றாலும் ‘ வட்டக் குதத்தை வல் வேல் காக்க, காக்க காக்க பாவம் பொடிபட, பில்லி சூனியம் பெரும் பகை அகல’ போன்ற வரிகளை உங்கள் கைபேசியின் caller tune -ஆக வைத்துக்கொள்வதும் நல்லதே. எந்தத் திறப்பு எந்த வாசலில் எந்த மொந்தைப் புத்தகத்தால் நிகழும் என்று யார்தான் சொல்ல முடியும்? சனியின் வக்கிர கதி அப்படி இருக்கிறது. புத்தகங்களைப் படித்துவிட்டு அய்யோ அம்மா என்று என்னிடம் ஓடி வந்து பயனில்லை. வரு முன் காப்பது நலம்.

சப்த மாதர்களும் உடலில் உள்ள சப்த சக்கரங்களில் ஆட்சி செய்கிறார்கள். அவர்களை ஒலிகளாலும் படிமங்களாலுமெழுப்பும்போது குண்டலினி பாம்பாய் மூலாதாரத்திலிருந்து எழுந்து ஒவ்வொரு சக்கரமாய் பிளந்து அத்வைத வேதாந்த தரிசனத்தைக் காட்டும். சக்கரங்களிலுள்ள ஈரிதழ் தொடங்கி பல இதழ்கள் வரையுள்ள தாமரைகள் திறப்பதையே அகத்திறப்புகள் என்றும் தமிழ் இலக்கிய வாசகர்கள் அறிந்ததே. இந்த சனிப்பெயர்ச்சியில் குருவும் வக்கிரமாகிறபடியால்  மூலாதாரத்திற்கே ஆபத்து அதிகம். ஒரு புத்தகம் பில்லி சூனியத்தினால் மூலாதாரத்தைப்பீடிக்க நினைக்கிறது என்றால் இன்னொரு புத்தகம் மணிப்பூரகத்தையும் சேர்ந்து கவ்வும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பரிகாரம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் விநாயகர் நான்மணிக்கடிகையை மனனம் செய்வதுதான். அதிலுள்ள ‘பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன்’ என்ற வரியையும் வேறொரு கவிதையிலுள்ள ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்ற வரியையும் ஶ்ரீராம ஜெயம்போல் தினசரி 108 தடவை எழுதலாம்.

இருந்தாலும் மூலாதாரம் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பவர்கள் உடல் நடுக்கம் உடையவர்கள் சென்னை தரமணியிலுள்ள மத்திய கைலாஸ் ஆனந்த விநாயகர் கோவிலுள்ள பாரதியார் சன்னிதியில் அர்ச்சனை செய்து பரிகாரம் தேடலாம். தரமணி மத்தியகைலாஸ் கோவில் மூதாதையர் வழிபாட்டிற்கான, பித்ரு கடன் தீர்க்கும் கோவிலாகும். மூலாதாரத்திற்கு அதிபதி தெய்வம் கணபதி என்ற சூட்சுமமும் அறிவீர்களாக.

இல்லை இந்தப் பரிகாரமெல்லாம் ஆகாது என்பவர்கள் ராமானுஜர் பிறந்த ஊரான ஶ்ரீபெரும்புதூர் சென்று அங்குள்ள பெருமாள் கோவிலில் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றினை அறியலாம். ராமானுஜர் எப்படி அத்வைத வேதாந்தமே ஜாதிய அமைப்பின் அடிப்படை என்று எப்படி கண்டுணர்ந்தார், அதனால் உணர்ச்சியை முதன்மைப்படுத்தக்கூடிய பக்தியை எப்படி வலியுறுத்தினார், எப்படி கோவில் மதில் மேல் ஏறி அதுவரை படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஓம் நமோ நாராயாணா என்ற அஷ்டாக்‌ஷர மந்திரத்தை உலகம் முழுவதும் அறியும்படி கூவினார் என்பதையெல்லாம் அறியலாம்.

சனி பெயர்வதால் ஏற்படும் அதீத துர்பலன்களுக்கு பகுத்தறியும் திறனை வளர்த்துக்கொள்வது கூட ஒருவகையில் நன்மைபயக்கக்கூடியதாகவே இருக்கும். கார்ல் மார்க்ஸ், ‘Rome was like an unguarded maiden’ என்று ஒரு வரி எழுதியதற்காக அவரை ஆணாதிக்கவாதி என்று விமர்சித்த பெண்ணிய சிந்தனையாளர்கள் எங்கெல்சின் ‘அரசு குடும்பம் தனிச் சொத்து’ புத்தகத்தையே கொண்டாடினாலும் மார்க்சின் பெறுமதி பெண்ணிய சிந்தனையாளர்களிடம் குறைந்துவிடவில்லை என்றும் அறிந்திருப்பதும் நல்லதே.

இவையெல்லாம் பொதுப்பலன்கள்தான். ராசிப்படியான பலன்கள் புத்தகக்கண்காட்சியின்போதுதான் எழுதப்படும்.

8 comments:

Anonymous said...

ஜெயமோகன் பாரதி விவாதத்தை அயோத்திதாசர் vs பாரதி என்று அரசியலாக்கியதற்கு சரியான பதில். அவருடைய ரசனை விமர்சனம் அத்வைத வேதந்தத்தை அடிப்படையாகக் கொண்டது, அந்த அத்வைத வேதாந்தமே இந்திய சாதி அமைப்பிற்கான கருத்தியலை வழங்குகிறது என்பதையும் எனவே ஜெமோவின் வாதமே அபத்தமானது என்று சுட்டியதற்கு மீண்டும் நன்றி எம்.டி.எம். hats off to you. பாலக்குமார்

Anonymous said...

'உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில் உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?’ என்பதற்கு அர்த்ததை அத்வைத வேதாந்தம்தான் சாதீயம் என்று சொல்லலாமா? நல்லா ஒளித்து வைத்தாரய்யா இந்த எம்.டி.எம். நானும் ஏதொ புக் எக்சிபிசன் பத்திய பதிவோன்னு நினைச்சேன். குருநாதன்.

ஜமாலன் said...

”ஆஹொ வாரும் பிள்ளாய் விமர்சகா?” என்பதைப்போல இந்த சனிக்கிரஹப்பலன் படித்து பலருக்கும் கிரஹம் பிடித்துவிடும். அருமையாக உள்ளது... இதுதான் சரியான எதிர்வினை.. )))

Anonymous said...

ஜெமோ தன் சாதீய பார்வையை எப்படி ரசனைத் திறனாய்வுக்கு பின்னே ஒளித்து வைத்திருக்கிறார் பாத்தீங்களா ரோசாவசந்த்? இந்த திறனாய்வு வன்முறையானது இல்லையா? நந்தன்

Anonymous said...

இப்படி படு நுணுக்கமாய் கிண்டலடித்தால் யாருக்கு புரியும்? பாரதி நம் பித்ரு என்பது தவிர எனக்கு எதுவும் புரியவில்லை

Anonymous said...

பாரதி நமது மூல ஆதாரம் என்று கண்டுகொண்டேன். இப்போதுதான் எழுத வந்த ஒருவனின் கவிதைகளில் இத்தனை தேறும் இத்தனை தேறாது என்ற அளவுகோல்களை பாரதியிடம் பயன்படுத்தினால் சனி வக்கரித்து நம்மைப்பிடித்ததாகத்தான் கொள்ளவேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். Thanks sir

Anonymous said...

பாரதி என்ற மூல ஆதாரத்தையே அடைத்துவிட்டால் மற்ற திறப்புகள் எப்படி நிகழும் என்றும் கொள்ளலாமா? இந்த கட்டுரை செம விளையாட்டாய் இருக்கிறதே!

Anonymous said...

மேம்போக்காகப் படித்தால் வேடிக்கையான கட்டுரை போல இருக்கும் இந்தக் கட்டுரை தாந்த்ரீகத்தின் ரகசியங்களை ஆழமாக அறிந்தவரால் எழுதப்பட்டுள்ளது. பல பூட்டுக்கள் திறந்துகொள்ளும்.