Sunday, October 16, 2011

சமையல் குறிப்புகள் எழுதுவீர்களா?அன்புள்ள எம்.டி.எம்,

உங்கள் சனிப்பெயர்ச்சி பலன்களையும் அந்தப் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் கண்டு அகமகிழ்ந்தேன். நீங்கள் கைரேகை, நாடி சோதிடம் இவையும் பார்ப்பது உண்டா? சமையல் குறிப்புகளும் எழுதுவீர்களா?

அன்புடன்,

சித்திரக்குள்ளன்


அன்புள்ள சித்திரக்குள்ளன்,

எனது ஞாயிறு காலையை உங்கள் கடிதம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கியது. கைரேகையும் பார்ப்பேன். ஆனால் அது இளம் பெண்களுக்கு மட்டும்தான். அதுவும் பௌர்ணமி இரவில் நிலவொளியில் திறந்தவெளியில் மட்டுமே இளம் பெண்களுக்கு கைரேகை பார்ப்பேன். அப்படிப் பார்க்கையில்தான் முழுப்பலன்கள் கைகூடுகின்றன என்பது என் அனுபவம். நாடி ஜோதிடத்திற்கு வேண்டிய ஓலைச்சுவடிகள் என்னிடத்தில் இல்லை. அகத்தியர் நாடி, அனுமார் நாடி, போகர் நாடி என்று ஏதாவது கிடைத்தால் கொண்டு வாருங்கள் நான் படித்துச் சொல்கிறேன். ஒலைச்சுவடிகள் படிப்பதில் நான் டிப்ளமா வாங்கியிருக்கிறேனாக்கும்.

சமையல் குறிப்புகள் எழுதவேண்டும் என்று எனக்கு ஒரு கள்ள ஆசையிருந்துகொண்டேயிருக்கிறது. அதை எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லை. என்னுடைய நாட்டுக்கோழி பிரியாணி நாடகத்தைப் படித்திருக்கிறீர்களா என்ன? இப்போது இதை எழுதுவதால் றியாஸ் குரானா கவிதைகளுக்கு விமர்சனம் எழுதலாம் என்ற என் திட்டம் என்னுடைய நாவலை மெய்ப்பு பார்த்து இந்தத் தளத்தில் வெளியிடலாமென்ற தொடர் திட்டம் எல்லாம் தள்ளிப்போகிறது. என்றாலும் கள்ள ஆசைகளுக்குதானே நாம் முதலிடம் தரவேண்டும்? கற்பினும் களவு நன்று என்றுதானே இறையனார் அகப்பொருளுரை சொல்கிறது?

சமையல் குறிப்புகள் எழுதும் கள்ள ஆசை லாரா எஸ்கிவெலின் ‘Like Water for chocolate’ என்ற மெக்சிக நாவலை வாசித்தபோது ஏற்பட்டது என்றுதான் நினைக்கிறேன். நாவல் முழுவதும் சமையல் குறிப்புகளாலேயே எழுதப்பட்டது. அவரவர்களின் படைப்பூக்கமும் திறனும் எங்கே இருக்கிறதோ அதை மதிப்பதுதானே பண்பாடும் இலக்கியமும்? நாவலின் கதாநாயகி டிடா காதல் உணர்ச்சி அவளைக் காட்டாற்று வெள்ளம் போல அலைக்கழிக்கும்போது ரோஜா இதழ்களில் தோய்ந்த குயில் கறி செய்கிறாள். அந்த குயில் கறியை சாப்பிடும் டிடாவின் சகோதரி ஜெர்ட்ருசிக்கு காம வெறி ஏறுகிறது. அடக்கவியலா வெறி என்பதினால் செய்வதறியாது புர ட்சிகரராணுவ வீரனொருவனை அழைக்க அவன் அவளைத் தான் பயணிக்கும் குதிரையின் மேல் ஏற்றிக்கொள்கிறான். ஓடும் குதிரையின் மேலேயே அவர்கள் உன்மத்த உடலுறவு கொள்கிறார்கள். பிறகு அந்த ராணுவ வீரன் அவளை பரத்தையர் விடுதியில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறான். குடும்பமும் அவளை விலக்கிவைத்துவிடுகிறது. ‘Like Water for chocolate’  படமாகவும் வந்துள்ளது. அந்தப்படத்தில் ஓடும் குதிரை மேல் உடலுறவுக் காட்சி உலக சினிமாவில் உயர்கவித்துவ பாலியல் காட்சிகளில் ஒன்றாகும். இத்தனைக்கும் நாவலின் மையம் ஒன்றும் இந்த நிகழ்வு இல்லை.

Like Water for chocolate

வாஸ்கோ போப்பாவின் காதல் செய்வதற்கேற்ற நூறு இடங்கள்  என்ற பட்டியல் கவிதையில் ஓடும் குதிரையின் முதுகு இல்லாதது பற்றி எனக்கு உள்ள புகார் ஏன் என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. செர்பிய நாட்டுக்கவிக்கு குதிரையின் முதுகின் உபயோகம் பற்றிக்கூட கற்பனை செய்யத்தெரியாவிட்டால் அவன் என்ன மண்ணுக்கு கவியாய் இருக்கிறான்? போப்பாவை நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய hit list க்கு நகர்த்தியதும் இப்படித்தான். ஒரு வேளை போப்பா அந்தக் கவிதையை எழுதவில்லையோ. அப்படியே போப்பா அந்தக் கவிதையை எழுதியிருக்காவிட்டாலும் அவரை hit list -இலிருந்து தூக்கிவிட முடியுமா? ஒரு தடவை ஒரு பட்டியலில் சேர்த்தாயிற்றென்றால் சேர்த்தது சேர்த்ததுதான். நான் என்ன க.நா.சு.வா சும்மா சும்மா பட்டியலில் பெயர்களை காரணமெதுவும் சொல்லாமல் மாற்றிக்கொண்டிருக்க?

நான் தான் குதிரைக்கவிதை எழுத திட்டம் வைத்திருந்தேனோ? எம்.எஃப். ஹுசைனின் குதிரையைப் பார்த்து குதிரை ஓவியம் கூட ஒன்று தீட்டியிருக்கிறேன். சென்னை மெரீனா கடற்கரையிலும், கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகேயும் குதிரைகளை ஏக்கத்துடன் பார்த்திருக்கிறேன். இப்படியாகவே அந்த வெண் புரவி என் கவிதைக்குள் நுழைந்ததாகவும் நினைக்கிறேன்.

சிறு கண்ணாடி பொம்மைக் குதிரைகள், சுடு மண் குதிரைகள், கணிணித் திரைக் குதிரைகள் என ஏகப்பட்ட குதிரைகளால் நிரம்பியிருக்கிறது என் சுற்றுப்புறம். அகவெளியிலோ பல குதிரைகள் எப்போதுமே நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் குழம்பொலிகளை நீங்கள் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?

ஆசையை மறுத்து ஆன்மீகச் சப்ளாக்கட்டையுடன் பின் எப்படி இலக்கியமோ சமையலோ படைக்கமுடியும் சொல்லுங்கள்? இலக்கியம் படைக்கிறேனோ இல்லையோ சமையல் குறிப்புகள் கண்டிப்பாய் எழுதுவேன்.

பின் குறிப்பு:
வேறு வண்ண வார்த்தைகள் சுட்டிகள் என்று சொல்லவும் வேண்டுமோ?

Post a Comment