பீகார் மதுபனி ஓவியம்/ஓவியர்: பூல்மயா தேவி |
எனது கவிதைக்குள் உலவ
எனக்கொரு யானை வேண்டும் உடனடியாக
ஒன்றில்லை கூட்டமாய்தான் கிடைக்குமெனில்
பாதகமில்லை அத்தனை யானைகளும் வேண்டுமெனக்கு
இப்போது இல்லாத யானையின்
அம்பாரியில்
குழந்தையில்
கட்டிய கோட்டையில்
வசிக்கிறது
என் குழந்தைகளுக்கான யானை
ஆறு குருடர்கள் திருடிச் செல்ல
இயலா யானை
சாமரம் வீசும் காதுகளுடன்
நிற்கா கால்களுடன்
குறும்புக் கண்களுடன்
ஒய்யாரத் துதிக்கையுடன்
கோவில் மறுத்த யானை
அங்குசம் எதிர்த்த யானை
அது
விண்ணேகி மேகமாகும்
வரவேற்பறை பொம்மையாகும்
வரைகலை சித்திரமாகும்
கணிணித் திரை சிரிப்பானாகும்
குள்ள குள்ளனே
குண்டு வயிறனே
எனத் தொழவும் ஏதுவாகும்
விசால இதயத்தின் நாணத்தில்
அந்தரங்கத்திலும் அந்தரங்கமாய் புணரும் யானைகளை
மெது மெதுவே அறிவதாகவே வளரும் என் கவிதையில்
கேட்கும் என் குழந்தை
எனக்கொரு யானை வேண்டும் உடனடியாக
No comments:
Post a Comment