Monday, May 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-36

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-36

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ

குறுந்தொகையில் பாடல் எண்; 37

திணை: பாலை

————-

நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,

பிடி பசி களைஇய பெருங்கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.

————

 உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் நின்பால் மிகுந்த விருப்பம் உடையவர்; அவன் சென்ற வழிகள் பெண் யானையினது பசியை நீக்கும் பொருட்டு பெரிய துதிக்கையையுடைய ஆண் யானை,  மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரைப் பெண் யானையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்துதற்கான இடங்களாக உள்ளன.

————

அருவமான காதலிலிருந்து பருண்மையான படிமத்திற்கு

———-

அருவமான காதலிலிருந்து பருண்மையான படிமத்திற்கு இக்கவிதை நகர்கிறது. ஆண்யானை பெண் யானைக்காகத் தன் நீண்ட துதிக்கையால் (பெருங்கை வேழம்) யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரைப் பெண் யானையைப் பருகச் செய்யும் காட்சி பாரமானது. சங்கக்கவிதைகளில் தொடர்ந்து ஒரு இடத்தின் இயற்கைக் காட்சிகளை தலைவனது அல்லது தலைவியுடைய குணாதிசயமாக நம்மைக் காணும்படி சொல்கின்ற உத்திகளை நாம் வாசிக்கிறோம். இக்கவிதையில் ஆண் யானை பெண் யானையின் மேல் வெளிப்படுத்தும் அன்பு தலைவன் தலைவி மேல் கொண்ட அன்பாய் ஏற்றி வாசிப்பதற்கு இடம் தருவதாலும், ஆண் யானை பிடியின் பசியை நீக்கும் காட்சி தலைவனது விருப்பத்தைத் தூண்டி, அவனை விரைவில் திரும்ப வைக்கும் என்பதாலும்  இதை இறைச்சி என தமிழண்ணல் தன் உரையில் அழைக்கிறார். 

——-

யாமரம்

——

‘யாஅம் பொளிக்கும்’ என்பதில் ‘அம்’ என்பது இசைநிறை அளபெடை.  ‘பொளிக்கும்’ என்பது உடைக்கும், உரிக்கும் என பொருள்படும். யாமரம் என்பதை சில உரையாசிரியர்கள் ஆச்சா மரம் என அடையாளப்படுத்துகிறார்கள். உ.வே.சா. இது பாலை நிலத்திள்ள மரம்; யாவெனவும் வழங்கும்; அவ்வழக்கு விளா விளாம், மரா மாரமென சில மரப்பெயர்கள் வழங்கிவரும் முறையைப் போன்றதென்று தோன்றுகிறது என்று விளக்கமளிக்கிறார்.

————

நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்

——-

பரிமேலழகர் 1156 ஆம்  திருக்குறளுக்கு எழுதிய உரையிலிருந்து நல்கல் என்பதற்கு தலையளிசெய்தல் என பொருள் அறிகிறோம். நல்கலும் நல்குவர்  போன்ற  சொற்றொடர்கள் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் வரும் ‘இயங்கலுமியங்கு மயங்கலு மயங்கும்’ என்ற வரிக்கு அடியார்க்கு நல்லார் ‘இயங்குதலையும் செய்யும் மயங்குதலையும் செய்யும்’ என உரை எழுதியிருப்பதைச் சொல்லலாம்.  

உன் மேல் பெரும் ஆசை கொண்ட தலைவன் நல்குவார், அவன் சென்ற வழி (ஆறு) அன்பின் காட்சிகளால் நிரம்பியிருக்கக்கூடியது; அவன் விரைவில் மீண்டு வருவான் எனத் தோழித் தலைவிக்கு சொல்கிறாள். 

——-