என்னுடைய மொழிபெயர்ப்பில் கடந்த ஆறு ஏழு மாதங்களில் ஆறு நாவல்கள் வெளியாகியுள்ளன. வர்ஜினியா வுல்ஃபின் “திருமதி டாலோவே”, லாரா எஸ்கிவெலின் “ கொதிநிலை: சாக்கெட்டுக்கான வெந்நீர் போல”, உம்பர்ட்டோ எக்கோவின் “ரோஜாவின் பெயர்”, அல்டஸ் ஹக்ஸ்லியின் “ இலையுதிர்கால மஞ்சள்” , விளாடிமிர் நபக்கோவின் “ விரக்தி”. இவற்றில் “ரோஜாவின் பெயர்” எதிர் பதிப்பக வெளியீடு. மீதி ஐந்தும் தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடுகள். நான் இந்த நாவல்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் மொழிபெயர்க்கவில்லை. அவை வெவ்வேறு ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டு கிடப்பில் கிடந்தன. அவை இப்போதுதான் பிரசுரம் காண்கின்றன. எந்த நாவல் எந்த வருடம் மொழிபெயர்க்கப்பட்டது என்ற விபரத்தை முன்னுரைகளில் குறித்திருக்கிறேன்.
இந்த ஆறு நாவல்களையும் ஒரு சேர வாசிக்கும் ஒரு இலக்கிய வாசகனுக்கு அவை என்ன மாதிரியான வாசிப்பு அனுபவத்தை வழங்கக்கூடும் என்று இந்தக் கட்டுரையில் சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.
இலக்கிய வாசிப்பு என்பதை நாம் பிரதி உண்டாக்கக்கூடிய ஒழுங்கமைவுகளோடு ( readely protocols) வாசகர்கள் நிகழ்த்துகிற உரையாடல்கள் என எளிமையாக வரையறுத்துக்கொள்ளலாம்.
மொழி என்பது ஒரு ஒழுங்கமைவு என்றால், இலக்கியப் பிரதி அதற்குள்ளாக அதற்கே உரிய அறிதல் முறைகளால் ஒரு துணை அமைப்பை (supplementary system) உண்டாக்குகிறது. ஒவ்வோரு இலக்கியப் பிரதியும் தனக்கேயுண்டான வாசக ஒழுங்கமைவுகளை உண்டாக்குகிறது. காஜா சில்வர்மேன் தன்னுடைய “The Subject of semiotics” எனும் நூலில் readerly protocols என்பவற்றை readerly subjectivities என்று ஆராய்வார்.
பிரதி- வாசக உறவினை ஜனநாயக மாண்பு மிகுந்ததாக, வாசக பங்கேற்பினை அதிகப்படுத்தும் பிரதிகளை நாம் நல்ல இலக்கியம் என்றும், உணர்ச்சி சுரண்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மேலாண்மைகளிலும் வாசகனை ஈடுபடுத்துகிற பிரதிகள் மோசமானவை எனவும் வகைப்படுத்துகிறோம்.
இந்த ஆறு நாவல்களும் வித விதமான வாசக ஒழுங்கமைவுகளைக் கொண்டிருப்பதால் இவற்றை வாசிப்போருக்கு இலக்கிய வகைமைகளை வாசிப்பதற்கான கூரறிவு உண்டாகிறது. அப்படி கூரறிவு கொண்ட வாசகர்களால் நிறைந்த சமூகம் அரசியல், பொருளாதாரம், என அனைத்தையும் “வாசிக்கத்” தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்களைக் கொண்ட சமூகமே காத்திரமான சிவில் சமூகமாகவும் உருத்திரள்கிறது. எனவே இன்றைய இலக்கிய விமர்சகனின் பணி வாசிப்புக்கான கருவிகளை சுட்டிக்காட்டி வாசிப்பு முறைமைகளை பலப்படுத்துவதே ஆகும். இந்த ஆறு நாவல்களின் readerly protocols என்ன என்று அறிந்துகொள்வது வாசிப்பினைப் பொதுவாக கூர்மைப்படுத்துவதாக அமைபும்.
உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய “Role of the Reader” என்ற நூலில் இலக்கியப் பிரதி என்பது சோம்பேறித்தனமான எந்திரமல்ல என்று வாதிடுகிறார். இலக்கியப் பிரதிகளோடு வாசகன் போராடவேண்டும். எக்கோ தன் நாவல்களில் வேண்டுமென்றே வைத்திருப்பது போல பிழைகள், புரியாத லத்தீன் பகுதிகள், அரைகுறை வாசகங்கள், துப்புகள் எனப் பலவற்றையும், இலக்கிய பிரதிகளில் பக்கத்திற்குப் பக்கம் போராடி வாசகர் முன்னேற வேண்டும். அப்படிப் பட்ட சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத வாசகருக்கு “ரோஜாவின் பெயர்” உரிய நாவலல்ல. அவர்கள் அலுவலகக் கிசுகிசுக்கள், மொண்ணை ஆபாசங்கள், மலக்கிடங்கு கனவுகள், வன்மங்கள், போன்ற கேவலங்களை படைப்புகளாக முன்வைக்கும் பிரதிகளில் லயித்துக் கிடக்கலாம். “ரோஜாவின் பெயர்” நாவல் வாசகனிடத்தே கலைக்களஞ்சியம் அளவுக்கு அறிவையும், வரலாறுகள் நாவல்களில் பதிவு செய்யப்படும் முறைமைகள் பற்றிய அறிவையும், இறையியல் குறித்த விவாதங்களையும், பல்வேறு உரைநடை வகைமைகளையும் பேச்சு வழக்குகளையும், தத்துவ நோக்குகளையும் புனைவில் கண்டுகொள்ளும் திறனையும் கோருகிறது. இந்த வாசிப்பு ஒழுங்கமைவை semiotic and educational என அழைக்கலாம்.
வர்ஜினியா வுல்ஃபின் நாவலோ நனவோடையை (stream of consciousness) இலக்கிய நடையாக அறிமுகப்படுத்திய முன்னோடி நாவல். அதில் மொழி வழுக்கியும் ஒழுகியும் செல்கிறது. சொல்லின் ஓசை மட்டுமல்லாமல் நினைவும் நனவும் ஒடுக்கப்பட்ட ஆசைகளின் வழி ஜவ்வுப் பரவல் போல அடர்கின்றன. நாவலின் கதாநாயகி ஒரே சமயத்தில் 1923, ஜூன் மாதம் லண்டன் தெருவொன்றில் பூக்கள் வாங்குபவளாகவும் 1890 இல் பதின்பருவ பெண்ணாக போர்டான் நகரில் இருப்பவளாகவும் இருக்கிறாள். இப்போது என்பதற்கும் எப்போதோ என்பதற்கும் வுல்ஃபின் எழுத்தில் வித்தியாசங்கள் இல்லை. கிளாரிஸ்ஸாவும் செப்டிமஸும் நாவலில் சந்தித்துக்கொள்வதே இல்லை. வாசகருக்கு ஆனால் அவர்களுக்கிடையான தொடர்பு வாசிக்கக் கிடைக்கிறது. காலமும் மனிதமனமும் ஒன்றோடு ஒன்று எதிரெதிராக மோதிக்கொள்வதைப் பார்க்கும் சாட்சியாக வுல்ஃபின் நாவலில் வாசக நிலை கட்டமைக்கப்படுகிறது. எக்கோவின் நாவல் புத்திசாலியான வாசகரைக் கோருகிறது என்றால் வுல்ஃபின் நாவல் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கூரிய உணர்கொம்புகள் கொண்ட வாசகரைக் கோருகிறது. இந்த நாவலின் வாசக ஒழுங்கமைவை tunnelling subjectivity என அழைக்கலாம்.
அல்டஸ் ஹக்ஸ்லியின் நாவல் “இலையுதிர்கால மஞ்சள்” static dialectic of satire என்பதை வாசக ஒழுங்கமைவாக முன்வைக்கிறது. நாவலில் டெனிஸ் ஒரு ரொமாண்டிக் கவி. ஸ்கோகனோ அறிவியல்வாதத்தையும் முன்வைக்கும் டெக்னோகிராட். பிரிஸில்லா ஜோதிடம், மாய மந்திரம் போன்றவற்றில் ஈடுபாடுடையவள். கோம்பால்ட் ஒரு நவீனத்துவ ஓவியர். இந்தக் கதாபாத்திரங்களின் கருத்தியல் நிலைகளை அடையாளம் காணவேண்டியவர்களாக வாசகர்களை நாவல் கட்டமைக்கிறது. டெனிஸினால் தன் காதலைக்கூட வெளிச்சொல்ல முடிவதில்லை. அவனுடைய செயலற்ற தன்மையைப் பற்றிய அங்கதங்களின் வழி ஹக்ஸ்லி தொலைந்து போன ஒரு தலைமுறையைப் பற்றிய சித்திரத்தை வாசகருக்கு ஹக்ஸ்லி தருகிறார்.
லாரா எஸ்கிவெலின் நாவல் “ கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” ஹக்ஸ்லியின் அறிவுஜீவிப் பார்வைக்கு நேர் எதிரானது. உணர்ச்சிமயமானது. அதன் வாசக ஒழுங்கமைவை somatic and magical எனப் பெயரிடலாம். வாசகருக்கு எஸ்கிவெல் உனவு என்பது குறியீடல்ல காரண காரிய விளைவுகளைக் கொண்ட பண்பாட்டு உரம் என்பதைக் கற்பிக்கிறார். இங்கே வாசகர் நாவலை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் உணவின் ரசவாதத்தை (alchemical process) அறிவதில் அடங்கியிருக்கிறது. எக்கோவின் Model Reader எஸ்கிவெலின் வாசகராக இருக்கும்போது, அவர் நாவின் ருசி, மூக்கு உணரும் வாசனைகள், தோல் உணரும் வெப்பமும் குளிரும் ஆகிய உணர்வுகள் வழி முழு உடலின் வழியும் நாவலை வாசிக்க வழிநடத்தப்படுகிறார்.
இன்னொரு பெண்ணிய நாவலான ஓரியானா ஃபல்லாச்சியின் நாவல் “பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” வாசகரை கருவிலிருக்கும் குழந்தையாக உருவகிக்கிறது. இதன் வாசிப்பின் ஒழுங்கமைவினை claustrophobic ethical interrogation எனப் பெயரிடலாம். தாய்மையின் உடல் அவதிகளும், தனிமையும் அவளது அகப் பேச்சினை Epistolary Address ஆக மாற்றுகிறது. கருவறை நீதிமன்றமாகிறது. அகப்பேச்சின் அந்தரங்கத்தினுள் பங்கேற்க வாசகன் அனுமதிக்கப்படுகிறான். மனித வாழ்வுக்கான பெருமதிப்பு, சுதந்திரம் எனும் விழுமியம் ஆகிய தத்துவார்த்த விசாரணைகளுக்கான களமாக அகபேச்சு மாறுகிறது.
விளாடிமிர் நபக்கோவின் ‘விரக்தி” வாசிக்க வாசிக்க வாசகரை கூர்மைப்படுத்துவது. நாவலில் கதைசொல்லி தமிழில் சயசரிதையை எழுதுகிறேன் பேர்வழி என்று வீட்டில் கத்திரிக்காய் நறுக்கிக்கொடுத்து இருந்துவிட்டுத் தான் எழுதுவது மீறல் இலக்கியம் எனப் பீலா விடும் எழுத்தாளனைப் போல ஒரு அயோக்கிய சிகாமணி. எக்கோவின் model reader நபக்கோவின் நாவலைப் பொறுத்தவரை மறுவாசிப்பாளர்களாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வாசிக்கையில்தான் நபக்கோவ் நாவல் முழுக்க விதைத்திருக்கும் குறிப்புகள் துலக்கம் பெறும் . நாவலை வாசித்து முடித்தவுடன் தாஸ்தோஸ்கியில் நாவல்கள் பெரிய நகைச்சுவை போலத் தோன்றும். நபக்கோவின் நாவலின் வாசக ஒழுங்கமைவை observation of disintegration எனப் பெயரிடலாம்.
நபக்கோவும் ஹக்ஸ்லியும் வாசகரை சற்றே அறிவுபூர்வமாக விலகியிருந்து வாசிக்கக் கற்பிக்கிறார்கள் என்றால் எஸ்கிவெல்லும் ஃப்ல்லாச்சியும் வுல்ஃபும் வாசிப்பில் மூழ்குவதைக் கற்பிக்கிறார்கள். எக்கோவின் நாவலோ வாசகருக்கான சாகசமாக விரிகிறது.
என்னைப் பொறுத்தவரை இந்த ஆறு நாவல்களுமே இலக்கிய வகைமைகளைப் பரிச்சயப்படுத்துவதிலும், வாசிப்பைக் கூர்மைப்படுத்துவதிலும் முன்னணியில் இருப்பவை.

No comments:
Post a Comment