விளாடிமிர் நபக்கோவ் புஷ்கினின் “யூஜின் யுனோஜின்” என்ற நெடுங்கவிதையை தனிப் புத்தகமாக மொழிபெயர்த்து 1960 களில் வெளியிட்டபோது அந்த மொழிபெயர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நபக்கோவ் சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. அவருடைய “லோலிதா” நாவல் ஆரம்பத்தில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட நாவலாக இருந்தது. அவருடைய “விரக்தி” நாவல் தாஸ்தோவ்ஸ்கி ரசிகர்களை கொந்தளிக்கவைத்தது. அவருடைய “யூஜின் யுனேஜின்” கவிதை மொழிபெயர்ப்போ அமெரிக்க இலக்கிய உலகில் பெரும் பூகம்பத்தையே உண்டு பண்ணியது. நபக்கோவின் மொழிபெயர்ப்பின் வெளியீட்டாளர் கௌரவம் மிக்க பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ். அமெரிக்க இலக்கிய விமர்சகரான எட்மண்ட் வில்சன், நபக்கோவின் மொழிபெயர்ப்பு சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு என்ற அரதப் பழசான மொழிபெயர்ப்புப்பாணியைக் கையாண்டிருப்பதாகவும் அதனால் அவர் ஒரு அகராதி மொழிபெயர்ப்பாளர் என்றும் விமர்சித்தார். ரஷ்ய மொழி என்பது ஒரு பண்பாடு, ஆங்கிலம் என்பது இன்னொரு பண்பாடு. மொழிபெயர்ப்பு என்பது கலாச்சார பரிவர்த்தனை நபக்கோவின் மொழிபெயர்ப்பில் இந்தக் கலாச்சார பரிவர்த்தனை நடைபெறவில்லை என எட்மண்ட் வில்சன் விமர்சனம் செய்தார். அமெரிக்க இலக்கிய உலகம் இரண்டாகப் பிளவுபட்டு நபக்கோவின் பின்னால் ஒரு அணியும் வில்சனின் பின்னால் இன்னொரு அணியும் நின்றன. நபக்கோவ் தன் மொழிபெயர்ப்பு புஷ்கினின் அழகியலுக்கு உண்மையாக இருப்பதாகத் தெரிவித்தார். நபக்கோவின் ஆங்கிலம் போலவே ரஷ்ய வாடை வீசும் நபக்கோவின் புஷ்கினை இலக்கிய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சுவீகரித்துக்கொண்டது. இன்றைக்கு நபக்கோவின் மொழிபெயர்ப்பு உலக இலக்கிய மொழிபெயர்ப்புகளிலேயே சிறந்த மொழிபெயர்ப்பாக கொண்டாடப்பட்டு மொழிபெயர்ப்புகளில் கிளாசிக்காக நிலைபெற்றுவிட்டது. மொழிபெயர்ப்பு சர்ச்சை வெடித்தபோது பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ் நபக்கோவின் பின்னால் உறுதியாக நின்றது. மேலும் விவாதங்களை வரவேற்றது, அவற்றில் பல விமர்சனங்கள் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்ஸின் கல்விப்புல நாணயத்தை கேள்விக்குள்ளாக்கி அவதூறு பரப்பியபோதும் அது தொடர்ந்து நபக்கோவின் மொழிபெயர்ப்பை விளம்பரப்படுத்தி பலரிடமும் நூலைக் கொண்டு சேர்த்தது. இன்றைக்கு பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியின் நிலைப்பாடே சரியானது என நபக்கோவின் மொழிபெயர்ப்பின் நீடித்த புகழ் உறுதி செய்துவிட்டது. இன்றைக்கு நபக்கோவின் மொழிபெயர்ப்பு பல பதிப்புகள் தாண்டி உலகம் முழுவதும் உதாரண மொழிபெயர்ப்பு இலக்கியமாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது.
எனக்கு நபக்கோவின் கொள்கையான மூல மொழி ஆசிரியரின் அழகியலுக்கு உண்மையாக இருப்பது என்பது உவப்பானது. உதாரணமாக உம்பர்ட்டோ எக்கோ “ரோஜாவின் பெயர்” நாவலில், சிதறல்களையும் நகைச்சுவையையும், உடைந்த லத்தீன் வாக்கியங்களையும், குறியியல் தடைச்சுவர்களாக (semiotic filters) வேண்டுமென்றே உண்டாக்குகிறார். இதற்குக் காரணம் எக்கோ அரைத்தூக்கத்தில்ருக்கும் நுகர்வாளனாக ( half sleepy consumer) அவருடைய நாவலின் வாசகர் இருப்பதை விரும்பவில்லை. அவர் ஒவ்வோரு சொல்லையும் விழிப்புடன் லத்தீன் சிதறல்களையும், நகைச்சுவைப் பகுதிகளையும் எதிர்கொள்ளவேண்டும் என்ற அழகியலை வைத்திருக்கிறார். இவற்றை, ஆனால், நபக்கோவின் பாணியான சொல்லுக்குச் சொல் என்ற hyper literal translation வழி கொண்டுவரமுடியாது. அதற்கு நபக்கோவை விமர்சித்த எட்மண்ட் வில்சனே வழிகாட்டக்கூடியவராக இருக்கிறார். What an irony!
நபக்கோவின் நாவல் ‘விரக்தி” யின் அழகியல் அப்பிரதியைக் கதையிலிருந்து கதை சொல்லலுக்கு மாற்றிய முன்னோடி இலக்கியப் பிரதியினுடையது. இன்னும் சொல்லப்போனால், நபக்கோவின் “விரக்தி” நாவல்தான் காஃப்கா, ஜாய்ஸ் என்றிருந்த மேற்கத்திய நவீனத்துவத்தை கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் அளித்த பின்-நவீனத்துவ இலக்கியங்களுக்கு மாற்றிய முன்னோடி படைப்பு. இப்போதும் எட்மண்ட் வில்சனின் மொழிபெயர்ப்புக்கொள்கையான சொல்லுக்குச் சொல் என்பதை விடுத்து, ஒரு பண்பாட்டிலிருந்து இன்னொரு பண்பாட்டிற்கு என்ற கொள்கையே நபக்கோவின் நாவலைத் தமிழில் மொழிபெயர்க்கவும் உதவியாக இருந்தது.
என்னுடைய இந்த இரண்டு நாவல் மொழிபெயர்ப்புகளுமே இலக்கிய மொழிபெயர்ப்புகளில் செயல்படக்கூடிய அழகியல்கள் ( கவனிக்க “அழகியல்கள்” - பன்மை, ஒருமையல்ல) வாசிப்பு முறைமைகள் ஆகியன பற்றிய கவனத்தை வாசகர்களுக்குத் தரக்கூடும்.


No comments:
Post a Comment