Wednesday, January 14, 2026

ஒன்பது கவிதை நூல்களும் எட்டு கவிதா உலகங்களும்




பாஷோ, போர்ஹெஸ், லாவோட் சூ,  செலான்,  போப்பா,  பெசோவா, தர்வீஷ், கோ யுன் (இரு தொகுதிகள்) என நான் மொழிபெயர்த்திருக்கும் ஒன்பது கவிதை நூல்களுக்குள்ளாக, எட்டு வேறுபட்ட, தனித்துவமான கவிதா உலகங்களுக்கு உள்ளாக ஓடுகின்ற  தத்துவச் சரடு என்ன என்பதை பல வகைகளில் விளக்கலாம். அவற்றில் ஒரு பார்வை ரோலாண்ட் பார்த் சொல்லுகின்ற எழுத்தாள பிரதி (scriptible (writerly) text) வாசக பிரதி ( the lisible (readerly) text) என்ற பிரிவினையை அடியொற்றியது. பார்த் வாசக பிரதி என்பது வாசகருக்குப் பிரதியில் தனக்கான அர்த்தத்தை உருவாக்க சந்தர்ப்பங்களே அளிக்காமல் வாசகரை வியாபாரப் பண்டத்தினை நுகர்வோரைப் போல மட்டுமே நடத்தும் பிரதிகளாக இருப்பது. எழுத்தாள பிரதி என்பது வாசகரைப் பிரதியிலிருந்து  தனக்கான அர்த்ததை உருவாக்கிக்கொள்ள, அல்லது அர்த்த உருவாக்கத்தில் பங்குபெற வேண்டிய வகையில் பிரதிகளாக எழுதப்பட்டிருப்பது. நான் மொழிபெயர்த்திருக்கும் இந்த ஒன்பது கவிதை நூல்களுமே எழுத்தாள பிரதிகள். வாசகர்கள் அவற்றை வாசிப்பதன் மூலம் தங்களுக்கான அர்த்தங்களை அந்தக் கவிஞர்களின் கவிதா உலகங்களுக்குள் சஞ்சரிப்பதன் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம். 


லாவோ ட்சூ, பாஷோ,  கோ யுன் ஆகியோரின் கவிதைகளில் மையமான இடத்தைப் பிடித்திருப்பது ‘இன்மை’ (emptiness). மேற்கத்திய இலக்கிய மரபுகளில் ‘இன்மை’ என்பது ‘பற்றாக்குறை’ (lack) எனப் புரிந்துகொள்ளப்படக்கூடியது . ‘பற்றாக்குறை’ என்பது ஆசையின் எண்ணற்ற தடுமாற்றங்களுக்கும், நுகர்வின் திருப்தியின்மைக்கும் அடிப்படையாகத் திகழ்வது; ஆசைகளும் திருப்தியின்மைகளும் பல்கிப் பெருகக் காரணமாக இருப்பது. கிழக்கத்திய இலக்கிய மரபுகளில் ‘இன்மை’ என்பது தன்னளவில் முழுமையானது, நேர்மறையானது, அனைத்திற்குமான மூலமுதலாக இருப்பது. எனவே இன்மை என்பது தரிசிக்கப்பட வேண்டியது.


லாவோ ட்சூவின்  “தாவோ தெ ஜிங்கில் “ இன்மையின் மெய்ப்பொருளியலுக்கான தத்துவார்த்த அடித்தளம் இருக்கிறது. ஓஷோ இந்த நூலை தாவோ உபநிடதம் என்றழைத்தார்.  இரண்டாயிரத்திச் சொச்சம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட  “தாவோ தெ ஜிங்” நூலுக்கு ஆயிரக்கணக்கான உரைகள் சீன மொழியிலும் ஜப்பானிய மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. மிகப் பழைய உரை கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. டாகுவான் சோஹோ என்ற ஜப்பானிய ஜென் துறவி (1573-1645) இந்த நூலுக்கு எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. லாவோ ட்சூ  இந்த நூலில் போதிக்கும் ‘வழி’ ( The Way) ஜென், தாவோ, ஆகிய பௌத்த மார்க்கங்களுக்கு அடிப்படையானது.  தாவோ தெ ஜிங் 5000 சீன சித்திர எழுத்துக்களால், 81 கவிதைகளால் ஆனது. 


தாவோவின் வழியைச் சொல்லும் ஒரு பகுதி “பார், அது பார்க்கமுடியாதபடி போகும்” (தாவோ தெ ஜிங்- பக்கம் 33)  எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது .

தாவோவின் வழி என்ன என்று சொல்லப்படுகிறதே தவிர இன்னதுதான் எனக் காட்டப்படுவதில்லை. இன்னதுதான் என்பது வாசக கற்பனைக்கு விடப்படுகிறது. பின்வரும் வரிகளை வாசியுங்கள்:

“பார், அது பார்க்க முடியாதபடி போகும்

அது மாற்றமில்லாதது என அழைக்கப்படுகிறது

கேள், அது கேட்கமுடியாதபடிக்கு இருக்கும்

அது அரிதானது என அழைக்கப்படுகிறது

புரிந்து கொள், அது புரிதலுக்கு அப்பால் இருக்கும்

அது நுட்பம் என அழைக்கப்படுகிறது

இந்த மூன்றையும் இவைதான் என வரையறுக்க இயலாது

எனவே அவை ஒன்றாய் இணைத்திருக்கின்றன

மேலே அது பிரகாசமாக இல்லை

கீழே அது இருட்டாக இல்லை

தடையற்றது, பெயரிடமுடியாதது

அது இன்மையின் ஆள்வெல்லைக்குத் திரும்புகிறது

எல்லா வடிவங்களையும் உள்ளடக்கிய வடிவம்

விவரிக்க இயலாததன்  விவரிப்பு

படிமமற்றதன் படிமம்

நுட்பமானது, எல்லா கருத்துருவங்களுக்கும் அப்பாலானது

அணுகினால் அதற்கு ஆரம்பம் இல்லை

பின்பற்றினால் அதற்கு முடிவு இல்லை ( பக்கம் 33)


தவிர, “வெற்றி, தோல்வியைப் போலவே அபாயகரமானது” போன்ற வரிகள் வாசகரைத் திகைக்க வைக்கும் சிந்தனைகளுக்குத் தூண்டக்கூடியவை. லாவோ ட்சூ சக்கரம், சக்கரத்தின் அச்சுகள், களிமண்  ஆகிய மூன்று உருவகங்களை இன்மையைப் பற்றித் தியானிக்கப் பயன்படுத்துகிறார். இவை உருவாக்குகிற துளையினுள் விழுந்து எழுந்து செல்பவனாக “தாவோ தெ ஜிங்கின்” வழியே பயணப்பட வேண்டும். 


லாவோ ட்சூ வழங்கிய மெய்ப்பொருளியலுக்குண்டான அழகியலை வழங்குபவராக பாஷோ இருக்கிறார். பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் நூலுக்கு நான் விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறேன். பாஷோவின் கவிதையின் வழிக்கு மையத்தில் இருப்பது எதிர்மறை வெளியும் (negative space) இடவெளியும் என்று சொல்லலாம்.  ஹைக்கூவின் கவிதை அமைப்பு (structure) என்பது முழுமையற்றது. அதையே வாசிப்பின் வழி வாசகரே முழுமையடையச் செய்ய வேண்டும். இரண்டு எதிரெதிர் படிமங்களை வாசகனின் கவனத்திற்குக் கொண்டுவரும் பாஷோவின் ஹைக்கூக்கள் அவற்றின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதில்லை. 

 

தூய்மைக்கான ஜென் தருணத்தை பாஷோ வாசகனுக்கு உண்டாக்கு விதத்தை வைத்து விளக்கலாம். சிவந்தி, சாமந்தி, செவ்வந்தி என்று பலவாறாகத் தமிழில் அழைக்கப்படும் சிவந்திப் (Chrysanthemum) பூக்களில் வெண்மை நிறமானவற்றைத் தூய்மையின் குறியீடாக ஜப்பானிய கலாச்சாரத்தில் கருதுகிறார்கள். ஜப்பானிய அரண்மணைகளில் வெள்ளைச் சிவந்தி அதிகமும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஜென் பௌத்தத்தில் தூய்மை எனப்படுவது ஒன்றுமின்மையை, சூன்யத்தைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஜென் குருக்கள் “ காலி ஆகாயத்தில் ஒரு துளி மேகம் கூட இல்லை; அதுவே என் கண்களை சந்திக்கிறது” என்று பேசும்போது அவர்கள் தங்கள் மாணவர்களின் கவனத்தை இன்மையை நோக்கி ஈர்க்கிறார்கள். 

பாஷோவின் பின்வரும் கவிதை சிவந்தி மலரை வைத்து இன்மையின் தூய்மையைச் சொல்கிறது:


“நான் எவ்வளவு உற்று நோக்கினாலும்

வெள்ளைச் சிவந்தியில்

மிகச் சிறிய புள்ளி கூட இல்லை”


தூய்மை எனப்படுவது ஒரு வெளியுலக நிலையைச் சொல்வதில்லை, அது ஒரு மனப்பாங்கினை, கள்ளம்கபடற்ற தன்மையை, புற உலகு நிகழ்வினை உணர்வுகளின் வழி நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதிலிருந்து உருவாவது. பாஷோவின் ஒரு கவிதை இதை நுட்பமாகச் சுட்டுகிறது;


“தோட்டத்தில்

ஒரு வியர்வையில் நனைந்த காலணி

சிவந்தியின் மணம்”


தூய்மை அமைதிக்கு இட்டுச் செல்லும்; தூய்மையில் செயல்கள் மனத்தைப் போலவே அமைதியானவை; செயல்களின் காரண காரியத் தொடர்ச்சியின் சங்கிலி உடைக்கப்படும்போது கர்மவினையிலிருந்து ஒருவன் விடுபடுகிறான். பாஷோ சிவந்தியைக் குறியீடாகக் கொண்ட இன்னொரு கவிதையில் இதைச் சொல்கிறார்: 


“சிவந்தி

மௌனம்- துறவி

தன் காலைத் தேநீரை அருந்துகிறார்”


கோ யுன் பாஷோவின் அழகியலுக்கு கொரிய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட ஆழமான வரலாற்றுப் பிரக்ஞையை வழங்குகிறார். “ஒரு கணத்தின் மலர்கள்” கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில் கோ யுன் 


“ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை , வறுமைக்கு முன்னால் கவிதை என்றால் என்ன போன்ற கேள்விகளுடன் வேதனையான சுய மறுப்புகள் இருந்தன;பேராசை, அறியாமை நோயின் யதார்த்தம் ஆகியவற்றின் முன்னால் கவிதை என்றால் என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது.


ஆஷ்விட்ஸுக்குப் பிறகு பாடல் கவிதைகள் எப்படிச் சாத்தியமாகும் என்ற மனசாட்சியின் வேதனையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தொடங்கியது. மூன்று ஆண்டுகளில் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்த கொரியப் போரின் இடிபாடுகளில் வளர்ந்த ஒரு புல் போல நான் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன்.


ஆ, நான் ஒரு வார்த்தையின், ஒரு சொற்றொடரின் கவிதைகளால் என்றென்றும் பிணைக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது விடுதலையின் பாதையைக் கனவு காண்கிறேன்.


கவிதைக்கு முன்னால், சொற்கள் கருவிகளாக இருக்கின்றன, கருவிகள் கவிதை மூலமாக மட்டுமே அர்த்தத்தை ஏற்கின்றன. கவிதைக்குப் பிறகு சொற்கள் கருவியாக அல்லது அடுத்த அர்த்தத்தின் கனவாக மாறிவிடுகின்றன. ஒருவேளை சொற்களிலிருந்து பிரிந்திருக்கும் கனவின் ஆழ்நிலை சொற்களுக்குப் புது அர்த்தத்தைப் பற்ற வைக்கிறது. அவை சொற்களின் மலர்கள். இங்கே சொற்களின் வழி எடுத்துக்கூறுவதைக் கவிதை தாண்டுவதன் சாத்தியப்பாட்டினை உணர்த்துவதை நாம் அறியலாம். ஆகவே கவிதை எதிர்பாராத விதமாகச் சட்டென்று பிறக்கிறது, நான் சுவாசிக்கும் மூச்சிலிருந்து, அந்த மூச்சின் முழு நிறைவான தன்மையிலிருந்து. இறுதியில் எல்லாச் சிறிய கவிதைகளுமே கதையாடலின் எடுத்துரைப்பை விஞ்சிவிடுகின்றன.

நான் ஒரு சில நீண்ட கவிதைகளும் காவியங்களும் மட்டும் எழுதியிருக்கவில்லை. இந்தப் பக்கத்தில் ஒரு கணத்தின் மலர்கள் நிற்கின்றன. ஒரு கணத்தில் நான் நூறு கோடி தேசங்களைக் கடந்து செல்கிறேன்.


“இங்கிருந்து போய்விடு

நீதான் முதல், முதன்மைக்கு அடுத்ததும் நீதான்

போய்க்கொண்டிரு, போய்க்கொண்டே இரு

நீ இன்னொரு பக்கத்திலிருந்து

முன்னேறிக்கொண்டே இருப்பாய்

சீக்கிரமாய் வா

பனிப்புயல்களுக்கு நடுவே

வசந்த கால மஞ்சள் பூவின்

குழந்தை நாக்கு என.”


கோ யுன் இன்மையில் பிறந்த  கொரிய அடையாளத்தை  உலகளாவிய மனித அடையாளமாக மாற்றுகிறார் என்றால் அதை போர்ஹெஸும் பெசோவாவும் புதிர்வழிகளின் சுழற்பாதைகளாக மாற்றி வாசக பங்கேற்புகளை பல அடையாளங்களின் விரிவுகளாக முன் வைக்கிறார்கள். “The Garden of Forking Path”  சிறுகதையில் தோட்டத்தினுள் குறுக்கும் மறுக்குமாக ஓடும் பாதைகளாக நேர்கோடற்ற காலத்தை (non linear time) சித்தரித்த போர்ஹெஸ் அவை கண்ணாடிகளின் பிரதிபலிப்புகளாலும், கனவுகளின் உண்மைத்தன்மையினாலும் மேலும் சிதறடிக்கப்படுவதாக தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அவருடைய கவிதைகளின் புதிர் சுழற்பாதைகள் வாசகருக்கு வாழ்தலில் பெறும் நுட்ப அனுபவங்களாகின்றன. உதாரணத்திற்கு ஒரு கவிதை:

“ஒவ்வொரு சூரியோதயமும் (அவர்கள் சொல்கிறார்கள்) 

அற்புதங்களை

உருவாக்குகிறது

மிகப்பிடிவாதமான அதிர்ஷ்டங்களையும் திருகி மாற்ற வல்லது;

சந்திரனையும் அளந்த மனிதக் காலடிகள் உண்டு

வருடங்களையும் பல மைல் தூரங்களையும் நாசமாக்கியதும் உண்டு

நீலத்தில் காத்திருக்கின்றன பொதுவெளியின் துர்க்கனவுகள்

அவை நாளினை இருளடையவைக்கின்றன. அந்த வெளியில் அங்கே ஏதுமில்லை,வேறொன்றானதும், மாறுபட்டதும் ஏதுமில்லை

மிக எளியவை மட்டுமே என்னை அங்கே தொந்திரவு செய்கின்றன

என் கை நிச்சயமான ஒரு பொருளாக இருக்கலாம் என்பது என்னைஆச்சரியப்படுத்துகிறது

கிரேக்கத்தின் உடனடியான எலேயா நகர்சார் அம்பு அது அடையமுடியாதஇலக்கினை அடைவதில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது

குரூரமான வாள் அழகாய் இருக்ககூடுமென்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது 

அவ்வாறே ரோஜாவுக்கு ஒரு ரோஜாவின் மணம் இருக்கலாம் என்பதும்”


தன்னுடைய சுயத்தைக் காலத்தை உணரும் பல்வேறுபட்ட தன்னிலைகளாக முன்வைக்கும் பெசோவாவின் கவிதைகளோ வாசகனுக்கு polyphony ஐ அறிமுகப்படுத்தி வாசக மனதில் பலகுரல்களின் நாடகீயத்தை நிகழ்த்திக்காட்டுகின்றன. “இந்த முழுப் பிரபஞ்சத்தையும் விடச் சற்றே பெரியது” தொகுப்பில் பெசோவா ஆல்பர்டோ கெய்ரோ, ரிக்கார்டோ ரீஸ், ஆல்வேரோ டி காம்போஸ், ஆகிய புனைபெயர்களிலும் தன் சொந்தப் பெயரிலும் எழுதிய கவிதைகள் இருக்கின்றன.  ஆல்பர்டோ கெய்ரோ ஒரு பொருளியல்வாதி, ரிக்கார்டீ ரீஸோ செவ்வியல்வாதி, ஆல்வேரோ டி காம்போஸோ நவீனத்துவவாதி. பெசோவோ எல்லா ஆளுமைகளாலும் அல்லது 81 ஆளுமைகளாலுமானவர். பேசோவா தன்னுடைய புனைபெயர் ஆளுமைகளிடையே ஏற்றதாழ்வினைக் கற்பிப்பதில்லை; எல்லோருக்கும் எல்லா பார்வைகளுக்கும் சம் அந்தஸ்துதான். பெசோவா தன் சொந்தப் பெயரில் எழுதிய பின்வரும் கவிதை அவருடைய அத்தனை ஆளுமைகளின் அடிநாதமாய் இருப்பது:


“ எது முக்கியமானது என்றால் காதல்

பாலுறவு என்பது தற்செயல்

அது ஒரேபடித்தானதாக இருக்கலாம் 

இல்லை வித்தியாசமானதாக இருக்கலாம்

மனிதன் மிருகமல்ல

மனிதன் புத்திசாலியான சதைப்பிண்டம்

நோய்வாய்ப்படக்கூடியது என்றாலும்”


வாஸ்கோ போப்பாவின் கவிதைகளை வாசிப்பது என்பது கனவிடைத் தோய்தல் போன்ற அனுபவமாகும். செர்பியக் கவிஞரான வாஸ்கோ போப்பாவின் “சிறிய பெட்டி” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது டெட் ஹூயூஸ் இக்கவிதை தன்னை இப்பூமியிலிருந்து வேறு ஒரு கிரகத்திற்கு எடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். வாஸ்கோ போப்பாவின் கற்பனையை “காஸர்களின் அகராதி” நாவலை எழுதிய மிலோரட் பாவிச்சின் கற்பனையோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.  வாஸ்கோ போப்பாவின் கவிதைகள் வாச்கருக்குக் கற்பனையின் விரிவால் என்ன சாதிக்கலாம் என்பதை மட்டும் காண்பித்துத் தரவில்லை, அவை அரசியலைத் தன்னுள் பொதிந்து வைப்பது எப்படி என்றும் காண்பித்துத் தருகின்றன. “சிறிய பெட்டி” கவிதையின் 9 ஆவது பகுதி  பின்வருமாறு முடிகிறது:


“சிறிய பெட்டி பற்றிய கடைசிச் செய்தி

——

உலகைத் தன்னுள் வைத்திருக்கும் சிறிய பெட்டி

தன் மேலேயே காதல் கொண்டாள்

இன்னொரு சிறிய பெட்டியை

கருத்தரித்தாள்

சிறிய பெட்டியின் சிறிய பெட்டியும்

தன் மேலேயே காதல் வயப்பட்டாள்

இன்னொரு சிறிய பெட்டியை

கருத்தரித்தாள்

இப்படியாக அது என்றென்றைக்குமாகத் தொடர்ந்தது

சிறிய பெட்டியின் உலகம் 

அதனுள்ளே இருக்க வேண்டும்

சிறிய பெட்டியின் கடைசிக் குழந்தையும்

ஆனால் தன்னுடனேயே காதல் வயப்படாத 

ஒரு சிறிய பெட்டியினுள் இருக்கும்

சிறிய பெட்டியே கடைசியானது

இப்போது நீ உலகத்தைக் கண்டுபிடிக்கிறாயா என்று பார்ப்போம். “


செர்பிய நாட்டுப்புற வழக்காறுகளையும் சர்ரியலிசத்தையும் இணைக்கும் போப்பாவின் கவிதைகள் புத்தம் புதிய உலகை வாசகருக்கு அறிமுகப்படுத்துவதோடு வரலாற்றுப் பிரக்ஞை அடக்குமுறை அரசுகளின் கீழ் எப்படி குறீயீட்டுத்தளங்களில்  இயங்குகிறது என்பதையும் வாசகருக்கு உணர்த்துகிறது.


கவிகளின் மனசாட்சி வரலாற்று சாட்சியங்களாக இயங்குகின்றன என்பதை பால் செலான் கவிதைகளிலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளும் நாம் வாசிக்கிறோம். 


 பால் செலான் பிறந்த ஊர் இப்போது உக்ரெய்ன் தேசத்தில் இருக்கிறது.

பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன. நாஜிக்களின் அரச பயங்கரவாதத்தினால் அறுபது லட்சம் யூதர்கள் திட்டமிடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். Holocaust என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் யூத அழித்தொழிப்பு நாஜிக்கள் 1933 இல் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தபோது தொடங்கியது. நாஜிக்கள் யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றினர், யூதர்களைச் சிறைப்பிடித்து வதை முகாம்களில் அடைத்து வைத்தனர். வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்; அவர்களின் மேல் பல மருத்துவப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். இப்போது போலந்து நாட்டில் இருக்கும் ஆஷ்ட்விட்ஸ் எனும் நகரில் வெகுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிக்கப் பட்டபோது ஜெர்மானிய தத்துவ அறிஞராகிய தியோடர் அடோர்னோ ஆஷ்ட்விசுக்கு அப்புறம் கவிதை எப்படிச் சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.


பால் செலானின் கவிதைகள் யூத இன அழித்தொழிப்புக்குப் பின்னாலான சாத்தியமற்ற கவிதைகளாக இருக்கின்றன. அவை சாத்தியமற்ற கவிதைகள் என்பதினால் அவை மனித மனதின் இருண்ட பகுதிகளைத் தயவுதாட்சண்யமின்றிச் சொல்கின்றன. பால் செலானின் படிமக்கோவைகள் முற்றிலும் புதிய மொழிச் சேர்க்கையினால் உருவாகின்றன. பால் செலானின் கவிதைகள் மொழியின் அதிகாரத்தையும் நுட்பமாக ஆராய்கின்றன. பல இலக்கிய விமர்சகர்கள் பால் செலானின் கவிதைகளைச் சர்ரியலிச கவிதைகள் என வகைப்படுத்துகிறார்கள். பல முக்கியமான இலக்கிய விமர்சகர்கள் பால் செலானை மானுட குல பிரக்கஞையின் அற விழிப்பில் தோன்றிய தன்னிகரற்ற கவி என அடையாளப் படுத்துகிறார்கள். பால் செலானின் கவிதைகளில் ஜெர்மானிய ரொமாண்டிசிசமும் யூத மெய்யியலும் கலந்திருப்பதாகவும் பலரும் வாசித்துச் சொல்கின்றனர்.


மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளை வாசிக்கும்போது நாடு, ஊர், உடைமை என அனைத்தையும் இழந்த பின்பும் தன்னிடமிருந்து எழும் பெரும் காருண்யத்தின் வழி ஒரு கவிக்குரலானது அனைவருக்குமான விடுதலையைப் பாடமுடியும் என்பதும், கிஞ்சித்தும் துவேஷமே இல்லாத வரலாற்று விமர்சனப்பார்வையை முன் வைக்க முடியும் என்பதும் எனக்குப் பெரும் ஈர்ப்பினை நல்கக்கூடியதாக இருந்தது.


 “தூரத்திலிருந்து பார்க்கையில் நான் என்னாலேயே கிலியடைகிறேன்

ஒரு வீட்டின் பலகணி போல, நான் எந்தவொன்றையும் பார்க்கிறேன் விருப்பிற்கேற்ப” என்று எழுதும் தர்வீஷின் கவிமொழி பாலைவனம், மேகம், பேரீச்சம்பனைகள், சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, யாழ், கிணறு, கைவிடப்பட்ட வீடுகள், புனிதப்பாடல்கள், மல்லிகையின் வாசனை, ஃபீனிக்ஸ் பறவையின் சாம்பல், தாய்மார்களின் கைக்குட்டைகள், குதிரைகள், சோளக்கொல்லைகள், பார்லி வயல்கள், நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் பெண்கள் என நீளும் பட்டியலால் ஆனது; இவை அனைத்துமே ராணுவ லாரிகளாலும், பெரும் பாரம்பரியம் மிக்க மதங்களின், தீர்க்கதரிசனங்களின் வரலாறுகளாலும் ஒன்றுபோலவே சூழப்பட்டிருக்கின்றன. ஆகையால் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும், பாடல் தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. தர்வீஷின் கவிதைகள் அரேபிய/பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை அவை  பிரபஞ்சப் பொதுத்தன்மை கொண்ட நவீன கவிதையின் வெளிப்பாடுகள் என்பதும்.  

  

இன்மையில் லாவோ ட்சூவிடமும், பாஷோவிடமும் ஆரம்பிக்கும் இந்த வாசிப்புப்  பயணம் கோ யுன்னிடம் வரலாற்று உணர்வையும் உலகளாவிய விகாசத்தையும் பெறுகிறது. போர்ஹெஸிடமும், பெசோவோவிடமும் புதிர்வழிப்பாதைகளாக பலகுரல்தன்மை பெற்று, போப்பா, செலான், தர்வீஷ் ஆகியோரிடம் வரலாற்று சாட்சிகளாக விடுதலையை நோக்கிய நுண்ணுணர்வினைப் பெறுகிறது. 


ஒன்பது கவிதைத் தொகுதிகளும் தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடுகள். இவற்றை உலகக் கவிதைகளுக்கான ஒரு சிறு நூலகமாக ஒருவர் என்றென்றைக்குமாக வைத்துக்கொள்ளலாம். 

 

No comments: