Sunday, January 18, 2026

வாசனை


யோகசார மஹாயான பௌத்தத்தில் வாசனைகள் நனவிலியில் விதைக்கப்படுபவை என்ற அழகான கருத்து இருக்கிறது. நனவிலியில் இருக்கும் விதைகள் அவற்றுக்கான சரியான சூழல்கள் உருவாகும்போது முளைவிட்டு, கிளைப் பரப்பி நமது பார்வைகளாக பரிணமிக்கின்றன. எனவே வாசனைகள் எனப்படுபவற்றை நனவிலியின் சேகரத்தில் அடுக்கு அடுக்குகளாகச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பௌத்த தத்துவத்தின்படி ஒருவருக்கு  பல பிறவிகளாக வாசனைகள் சேரும்.  தேரவாத பௌத்தத்தில்  முழுமையாக விழிப்புணர்வை அடைந்த சீடன், அர்ஹத் கூட, புத்தனாவதில்லை (Samyaksambuddha) என்ற பார்வை இருக்கிறது. ஏனெனில் அர்ஹத் இன்னும் தன்னுடைய சிந்தனைப் பழக்கத்திலிருந்து, அவற்றின் வாசனைகளிலிருந்து விடுபடாதவனாக இருக்கிறான். வாசனைகளற்ற தூய பிரக்ஞை நிலையிருந்து நமது பார்வைகள் பரிணமிக்கும்போதே  நமக்கு அறம் (ethics) கூடி வருகிறது. அறம் (ethics) என்பது நீதித்தீர்ப்புகளால் (moral judgements) முகவாய்க்கட்டை இறுகிப்போவதிலில்லை. அறம் வேறு நீதித்தீர்ப்புகள் வேறு. அறம் இலக்கியத்தின் பாடுபொருள். நீதித்தீர்ப்புகள் வணிக சினிமாவின் அசட்டுத்தனங்கள். திரவியங்களைப் பூசி தங்கள் நாற்றங்களை மறைத்துக்கொள்வது போன்றது. வேறு இருப்புகளை கற்பனை செய்து பார்ப்பது நம்மிடம் வாசனைகள் சேர்வதைத் தவிர்க்கும் என்றொரு கவிதா நம்பிக்கை எனக்கு உண்டு.  முன்பொரு கவிதை இப்படியாக எழுதியிருக்கிறேன்:

வேறு ஒரு இருப்பின் பாடல்

எம்.டி.முத்துக்குமாரசாமி

எனக்கு வேறு வடிவிலான

ஒரு இருப்பு அருளப்பட்டிருந்தால்—

இந்த இரண்டு கால்களும்,

நாட்கள் மெதுவாக நகரும்

இந்த நிலையும் அல்லாமல்—

காற்றையே உடலாகக் கொண்ட,

இறகுகள் முளைத்த

ஒரு பறக்கும் ஜீவிதமாக

நான் பிறந்திருந்தால்,

உன் களிப்பிற்காக

எந்த ஒரு கிளையிலும் அமர்ந்து

பாடியிருக்க மாட்டேன்.


இறுதி ஊர்வலத்தை

பின்னால் தொடரும்

துக்கம் நிரம்பிய ஒருவனின்

முகம் தரிசிப்பது போல,

வடக்கின் கரு மண்ணிலும்,

தெற்கின் செம்மண்ணிலும்,

கடலைத் தடுத்து நிறுத்தும்

பனிமூடிய மலைகளிலும்—

விலகிச் செல்லுதலுக்கும்,

சரணாகதிக்கும்

வேறு வேறு சாயல்கள் 

இருப்பதைக் கண்டிருப்பேன்.


மேப்பிளிலும்,

மருதத்திலும்,

பெயரறியாத தொலைதூர மரங்களிலும்

அதே பச்சை வாசனை

காற்றை நிறைப்பதை நுகர்ந்திருப்பேன்.

நமது மொழி பேசாத

பள்ளத்தாக்குகளில் இருந்து வரும்

விறகுப் புகையில்,

கார்காலக் குளிர்ச்சியை  நினைவில் 

வைத்திருக்கும் பாறைகள் கொண்ட

 மலைப்பாதையின் வளைவில்

உன் அதரங்களைப் போற்றியிருப்பேன்

நீ நடக்காத பாலங்களில்

காதலர்கள் பிரிவதைப் பார்த்திருப்பேன்;

உனக்குப் புரியாத அர்த்தத்தை சுமந்து,

நீ கற்பனை செய்ய முடியாத

ஒரு உலகின் விளிம்பில்

பனியில் நழுவும்

கப்பலையும் கண்டிருப்பேன்.


ஏனெனில், ஒரே இடத்தில் நிற்கும்

மனிதர்களால் கற்க முடியாத

ரகசியம் இதுதான்:

புயலில் சிக்கிய கிளை போல

இதயம் ஒரே முறையில் உடையாது;

ஒவ்வொரு பருவமும் முடியும் போது

அது உடைந்து,

தன்னையே மீண்டும் 

உருவாக்கிக் கொள்ளும்.


நூறு இலையுதிர் காலங்களில்

மெதுவாக பொழியும் மழையில்

அது வெறுமையாக்கப்பட வேண்டும்.

இலைகள் இலைகளாக இல்லாமல்

இலையுதிர் காலங்கள் தொடர்வது

பாரத்தை இறக்கி வைக்கும்

அமுதமான சடங்கு.


பன்னிரண்டு நிலப்பரப்புகளின்

மேல் பறந்துபார்க்கும்போது

முக்கியமானது

நிலப்பரப்பும்,

அதைக் கடந்துச் செல்லும்

பறத்தலும் தான்.

இதயம் என்பது

மங்கிப்போன  புகைப்படங்களுக்கான

ஆல்பம் அல்ல;

ஆயிரம் வெவ்வேறு

அந்திவேளைகளின் உயிர்விசையைத்

தாங்கும் கர்ப்பப் பாத்திரம்;

பாதையின் ஓரத்தில் நீ கண்டெடுத்த

குளிர்ந்த பெயர் தெரியாத பழத்தின்

திகைக்க வைக்கும் சுவை.


நான் உன்னிடம் திரும்பிவரும் போது—

நான் எப்போதும் திரும்புவது போல—

பிரிந்து சென்ற அதே 

கண்களோடு இருக்க மாட்டேன்.

வடக்கின் பழத்தோட்டத்தில்

ஒரு வெற்று கிளையில் உறுதியாகக் 

குடியிருக்கும் கடைசி ஆப்பிளின் 

நிதானம் என்னுள் இருக்கும்;

கடலை நோக்கி தன் இலைகள் 

மிதந்து செல்வதை அமைதியாகக் 

கவனித்த ஒரு நதியின்

பொறுமை என்னுள் இருக்கும்.


உன்னை உரிமைகொள்ள

எந்த இலையுதிர்காலத்தாலும் முடியாது.

இலை உதிர்க்கும் மரம் நீ அல்ல—

அந்த உதிர்தலை உற்று நோக்கும்,

இடம்பெயரும் ஜீவனாகிய 

என்னுடைய  இழப்புகளின்  கைகளை 

எப்படித் திறப்பது 

என இறுதியில் கற்றுக்கொள்ளும்

என் வேறொரு இருப்பின்

சாட்சி நீ. 

No comments: