Sunday, January 4, 2026

நிலவின் மறுபக்கம்


எது இல்லாமலிருக்கிறதோ அதிலிருந்தே இருக்கக்கூடியது உணரப்படுகிறது. எது பேசப்படாமலிருக்கிறதோ அதுவே பேசப்படுவதை தீர்மானிக்கிறது. எது புறக்கணிப்படுகிறதோ அதுவே புகழ்பெற்றதன் அடிப்படையாக இருக்கிறது. எவரை விடுத்து நீங்கள் ஒரு பட்டியல் தயாரிக்கிறீர்களோ அவர்களே உங்கள் பட்டியல் வழி துலக்கமாகிறார்கள். யாரைப் பற்றி நீங்கள் பேச மறுக்கிறீர்களோ அவரே உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறார். பேச்சு, பேசப்படாததை உடனடியாக அறிவிக்கிறது. 

நிலவின் மறுபக்கம் -நாம் கண்ணில் பார்க்கக்கூடிய, புலனுணர்வுகளால் உணரக்கூடிய எல்லாவற்றுக்கும் நாம் கண்களால் பார்க்க இயலாத, புலனுணர்வுகளால் நேரடியாக உணர இயலாத மறுபக்கம் ஒன்றிருக்கிறது என்பதைக்குறிக்கும். நிலவைப் பொறுத்தவரை அப்படி ஒரு மறுபக்கம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அது போலவே புலனுணர்வுகள் நேரடியாக அறியும் ஒவ்வொன்றுக்கும் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. மூன்று வகையான புலனுணர்வுகளால நேரடியாக அறிய இயலாத மறுபக்கங்களை நமக்குத் தெரியும்; ஒன்று மனதின் அடியாழம், இரண்டு எதிர்காலம், மூன்று வரலாற்றின் இயங்கு விசைகள்.  

இவற்றையோ இவற்றிற்கு மேற்பட்ட மறுபக்கங்களையோ உணர்த்துவதாகத்தான் கவிதையின் மொழி இயங்குகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நான் ஷிவ்குமார் ஷர்மாவின் சந்தூர் இசையை என் அந்தரங்க அகராதியில் நிலவின் மறுபக்கம் என்று குறிக்கிறேன் என்று எழுதினால் நான் மேற்சொன்ன மூன்று வகையான மறுபக்கங்களையோ அல்லது அவற்றில்  ஏதாவது ஒன்றையோ அவருடைய இசை எனக்கு அர்த்தப்படுத்துகிறது  என்பதாக புரிந்துகொள்ளலாம்.

ஷிவ்குமார் ஷர்மாவிடம், மாணவர் உரையாடலின் போது, அவரிடம் ஒருவர் உங்கள் இசை எங்கிருந்து வருகிறது என்று கேட்டார். அதற்கு  ஷிவ்குமார் ஷர்மா தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருவதாகவும் அங்கே நீர்நிலைகளில் பனிக்கட்டிகள் உருகி வரும் காட்சி தினசரி அனுபவமென்றும் அந்த பனிக்கட்டிகளின் நகர்வுகளிலிருந்தே தன் இசை உருவாகி வருவதாகவும் சொன்னார்.

ஷிவ்குமார் ஷர்மாவின் இசை என்னிடத்தில் வரும்போது அது என் மனதின் அடியாழத்திலுள்ள நிலக்காட்சிகளை எனக்குத் தரக்கூடியதாக இருக்கலாம். இதே போலத்தானே கவிதை வாசிப்பும் நிகழ்கிறது? 

No comments: