அரவிந்தன் நீலகண்டன் ‘தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்’ என்ற என் கட்டுரைக்கு தமிழ் ஹிந்து இணைய தளத்தில் எழுதியிருக்கும் எதிர்வினைக்கு பதில் எழுதுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.
முதலில் தமிழ் ஹிந்து| தமிழரின் தாய் மதம் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த இணைய தளம் இந்து மதத்தின் மேன்மைகளைப் பரப்புவதற்காக செயல்படுகிறது. அதைப் படிப்பவர்களும் உபயோகிப்பவர்களும் மத நம்பிக்கையை மட்டுமே உடையவர்களாக இருக்கக்கூடும். மதம் சார் நூல்களை இலக்கிய, மொழியியல், மானிடவியல், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்துவது அல்லது அவ்வாறாக எழுதப்பட்ட ஆராய்ச்சிகளை சுதந்திரமாக விவாதிப்பது மத நம்பிக்கை பற்றாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது என்பது மட்டுமல்ல எந்தவித நோக்கங்களுமற்று மத நம்பிக்கை பற்றாளர்களை புண்படுத்திவிடவும் கூடும்.
இரண்டாவதாக தமிழ் ஹிந்து இணைய தளத்தினர் (அவர்கள் யார் யார் என எனக்குத் தெரியாது) சாதியத்திற்கு எதிராக பல்வேறு காலங்களில் இந்து மதத்தினுள் எழுந்துவந்த எண்ணற்ற சிறிதும் பெரிதுமான சீர்திருத்த இயக்கங்களை (உதாரணங்கள்: புஷ்டிமார்க்கம், சைவ, வைணவ பக்தி இயக்கங்கள், ராமானுஜரின் வைணவமார்க்கம், கபீரின் வழி, நவ வேதாந்திய இயக்கம், ஆரிய சமாஜம், வேதங்கள் மற்றும் பகவத் கீதையின் அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளாத தென்னிந்திய பக்தி கவிஞர்கள், புனிதர்கள் ஆகியோரின் சிந்தனைகள், நாராயண குருவின் வழி, காந்தீயம், வைகுண்டசாமி ஐயா வழி, ஷீரடி சாய்பாபா வழிபாடு) எந்தவிதமாக அணுகுகிறார்கள் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அதுபோலவே இந்து மதத்தின் பன்மைத்தன்மையினை பற்றி இந்த இணைய தளத்தினரின் கருத்துக்கள் என்ன என்பதையும் என்னால் அறியமுடியவில்லை.
மூன்றாவதாக அரவிந்தன் நீலகண்டன் இதே தமிழ் ஹிந்து தளத்தில் தான் இந்துத்துவ பதிப்பகம் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இந்து என்பது மதம் இந்துத்துவம் என்பது ஒரு வகை அரசியல் சிந்தனை இரண்டும் ஒன்றல்ல என்று ஹிந்துத்வா என்ற கருத்தினை உருவாக்கிய சாவர்க்கர் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த வேறுபாட்டினை பொதுத்தளத்தில் எல்லோரும் அறிந்திருப்பதில்லை. மேலும் எல்லா இந்து மத பற்றாளர்களும் இந்துத்துவம் என்ற அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை. இந்துத்துவ அரசியல் சிந்தனை சார்ந்த மத நூல் விளக்கங்களை மறுத்தோ எதிர்த்தோ எழுதுபவர்கள் பேசுபவர்களை இதனால் சுலபமாக இந்து மதத்திற்கே எதிரானாவர்கள் என்று சித்தரித்துவிட முடியும்.
நான்காவதாக தமிழ் ஹிந்து தளத்தில் விஜயதசமி அன்று அரவிந்தன் நீலகண்டன், ஜெயமோகன், ஜடாயு ஆகியோர் கலந்துகொண்ட வித்யாரம்பம் நிகழ்ச்சி பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் குல தர்மம், ஸ்வதர்மம் ஆகியன பற்றியும் ஜடாயு உரையாற்றினார் என்று குறிப்பு இருந்தது. குல தர்மத்தைப் பேசுகிறவர்கள் சாதி அமைப்பிற்கு சாதியத்திற்கு எதிரான சிந்தனையுடையவர்களா என்று என்னால் அறியமுடியவில்லை.
ஐந்தாவதாக மாபெரும் பிரச்சினை என்னவென்றால் அரவிந்தன் நீலகண்டனுக்கு நகைச்சுவை உணர்ச்சி உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய குறிப்பு அவர் வர்ம அடி முறை பயின்ற ஆசான் என்று வேறு குறிப்பிடுகிறது.
இந்த ஐந்து பிரச்சினைகளையும் மனதில் கொண்டு அரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினைக்கு பின் வரும் விளக்கங்களை அளிக்கிறேன். இந்த விளக்கங்களால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை என நான் அறிவேன்.
மகாபாரதத்தில் வரும் அரக்குமாளிகை சம்பவம்: அரக்கு மாளிகையை தீ வைத்துக் கொளுத்துகிறவன் பீமன். அதில் அரக்கு மாளிகை சதியை நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்ட புரோசனன், பாண்டவர்களைப் போலவே ஐந்து மகன்களுடன் குடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் பழங்குடித் தாய் ஆகியோர் இருக்கின்றனர் என்பது தீ வைக்கிற பீமனுக்கு நன்றாகத் தெரியும். தீயில் கருகிச் செத்த பழங்குடித் தாயையும் அவளுடைய மகன்களையும் பார்த்து துரியானாதிகள் பாண்டவர்கள் மரித்தார்கள் என்று ஈமக்கிரிகைகள் செய்கின்றனர். அரவிந்தன் நீலகண்டன் மேற்கோள் காட்டும் மோகன் கங்குலியின் மகாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்தக் கதைச்சம்பவங்கள் தெளிவாகத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன? தான் வைத்த தீக்கு புரோசனன் மடிந்தானோ இல்லையோ அவன் உயிரோடிருந்து துரியோதினாதிகளிடம் செத்தவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று விசனப்படுகிறான் பீமன். அரவிந்தன் நீலகண்டனோ பாண்டவர்கள் போல ஐந்து மகன்களையுடைய தாய் அங்கே தற்செயலாய் வந்ததாகவும், குடித்துவிட்டு அவர்களே தானாகவே பற்றிக்கொண்ட மாளிகையில் இறந்துவிட்டது போலவும் புரோச்சனன் இறந்தது கூட தெரியாமல் பாண்டவர்கள் அவனுக்காக வருந்தினர் என்று எழுதுகிறார். அவர் மேற்கோள் காட்டுகிற மோகன் கங்குலி ஆங்கில மொழிபெயர்ப்பு பத்திகளில் இருப்பதையே அதே பதிவில் தமிழில் இப்படி புரட்டி எழுதுகிற அரவிந்தன் நீலகண்டனிடம் குந்தி-தர்மன் உரையாடல் எந்த மகாபாரதத்தில் வருகிறது என்பதைச் சொல்வதால் என்ன பிரயோஜனம் ஏற்படக்கூடும்?
தவிர, மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு அரக்குமாளிகையில் மடியும் பெண்ணை நிஷாத பெண் என்று குறிக்கிறது; ம.வீ.ராமானுஜாசாரியாரின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘வேடுவச்சி’ என்று குறிக்கிறது. இரண்டுமே வியாச பாரதமாக அறியப்பட்ட சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளே. மொழிபெயர்ப்பின் பிரச்சனைகளைத் தாண்டி இடைச்செருகல்களில்லாத மூல மகாபாரதம் எது அதைத்தானா மோகன் கங்குலியும் ம.வீ.ராமனுஜாசாரியார் குழுவும் மொழிபெயர்த்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் நான் குறிப்பிட்ட காண்டவன தகனம் வேறு சில இன்னும் பழமையான பாரதங்களில் இரு வேத வேள்விகளைச் செய்யக்கூடிய குழுவினருக்கிடையேயான யுத்தமாக சித்தரிக்கப்படவில்லை.
மூல சமஸ்கிருத மகாபாரதம் எது என்ற தேடலில் பேராசிரியர் வி.எஸ்.ஷுக்தாங்கர் தலைமையில் பல ஆராய்ச்சியாளர்கள் சுமார் நாற்பது ஆண்டுகள் ஈடுபட்டு 1259 கைப்பிரதிகளை ஆராய்ந்து Critical Edition of the Mahābhārata வை 1966 இல் வெளியிட்டார்கள். 2003இல் critical edition cd ஐ The Bhandarkar Oriental Research Institute வெளியிட்டது பார்க்க http://www.bori.ac.in/mahabharata_project.html இந்த ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தபோது பல்வேறு மகாபாரதங்களை ஒப்பிட்டு Annals of the Bhandarkar Oriental Research Institute என்ற ஆராய்ச்சி இதழ் ஆராய்ச்சியின் பல்வேறு நிலைகளை தொடர்ந்து வெளியுலகுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தது. இந்த இதழ்கள் இணையத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பார்க்க: http://www.archive.org/stream/annalsofthebhand014356mbp/annalsofthebhand014356mbp_djvu.txt
ஷூக்தாங்கரின் மூல பாரதத்தையும் மோகன் கங்குலி ம.வீ.ராமானுஜாசாரியார் குழு ஆகியோர் மொழிபெயர்த்த பாரதத்தையும் ஒப்பு நோக்கிய ஆய்வாளர்கள் மொழிபெயர்ப்பாகியுள்ள பாரதப் பிரதி கதை சொல்லி பாகவதர்களால் -குறிப்பாக மராத்திய பிரிகு பிராமணர்களால் எராளமான இடைசெருகல்கள் சேர்க்கப்பட்ட பிரதி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். காண்டவ வன தகனம் அவ்வாறான இடைசெருகல்களாலேயே வேத பண்பாட்டிலேயே வாழும் இரு சமுதாயக்குழுக்களுக்கிடையேயான போராக மாற்றம் பெற்றது. ஷூக்தாங்கரின் மூல பாரதத்தை வாசித்தே ஐராவதி கார்வே காண்டவ வன தகனம் யாருக்கும் யாருக்கும் நடந்த யுத்தம் என்று தன்னுடைய ‘யுகாந்தா’ நூலில் விளக்குகிறார், காண்டவ வன தகனம் பற்றிய என்னுடைய குறிப்பு ஐராவதி கார்வேயின் ஆராய்ச்சிமுடிவினை அடியொற்றியதே.
கடோத்கஜனின் மரணம் என்று மட்டுமில்லாமல் மகாபாரதம் யாரை அசுரர்கள், ராட்சதர்கள் என்று demonize செய்கிறது அதற்கும் குணங்களைப் பற்றிய கோட்பாடுகளுக்கும் உள்ள உறவு என்ன என்பது விரிவாக எழுதப்படவேண்டியது. அதை அரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினையோடு தொடர்பு படுத்தாமல் தனிப்பதிவாக எழுதுகிறேன்.
கடைசியாக அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமோ, கைச்சரக்கை அவிழ்த்துவிட வேண்டிய அவசியமோ கிடையாது. இன்னும் விரிவாகவும் நுட்பமான ஆதாரங்களோடும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அது ஒரு பொதுத்தளத்தில் நடைபெறுவதுதான் நன்மைக்கு வழிவகுக்கும். மேலும், அரவிந்தன் நீலகண்டனும் அவருடைய ஆதரவாளர்களும் ஆராய வேண்டியது என் கருத்துக்களை அல்ல என் கருத்துக்களுக்கு ஆதாரமாக இருக்கும், மலை போல் குவிந்து கிடக்கும் ஆராய்ச்சி நூல்களை.
9 comments:
// அவர் வர்ம அடி முறை பயின்ற ஆசான் என்று வேறு குறிப்பிடுகிறது.
நீங்கள் இது குறித்து பயப்படத் தேவையில்லை. வர்ம அடி தெரிந்தவர் அரவிந்தனின் தாத்தா. அரவிந்தன் அல்ல :-)
மகாபாரதம், இராமாயணம் என்பவை மிகமிகப் பழைய இலக்கியங்கள் என்பதையும், அவை நம்மால் முற்றிலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு வரலாற்று மற்றும் கலாச்சாரத்தை சேர்ந்தவை என்பதையும் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
இந்து மதம் குறித்த இந்த நவீன காலத்தின் பார்வைகளும், இன்றைக்கு அதற்குள் கொண்டுவரப்பட்டுள்ள இத்துணைக்கண்டத்தின் பெரும்பான்மையான மக்களைப் போல வேறெந்த காலகட்டத்திலும் இணைக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.
20 முப்பது 30 வருடங்களுக்கு முன்பு இந்து புரோகித முறைப்படி திருமணச் சடங்குகளோ, பண்டிகைகளோ, புதுமனைப் புகுவிழாக்களோ, நன்மை வேண்டி செய்யப்படும் யாகங்களோ, ஹோமங்களோ செய்யாத பல சாதிகளும் கூட இன்றைக்கு இந்த பார்ப்பன பழக்கவழக்கங்களுக்குள் வருகிறார்கள் என்கிற உண்மைகளின் அடிப்படையிலிருந்து கூட இதன் வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனைகூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிடுவதைப் போல இந்துத்துவ நோக்கங்களோடு இந்து மதமும் அதன் வரலாறும் அணுகப்படும் நிலையில் உண்மைக்கு எங்கே இடம்? இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், மத சாதிய பெருமைகளைவிட்டு வெளிவர முடியாத பல சாதி இந்துக்களும், பார்ப்பனர்களும் இவர்களின் உள்நோக்கம் தெரியாமல் இதன் அரசியல் ஆபத்துக்களை உணராது இரையாகிறார்கள்.
இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் நாளை வரலாற்றை - நால்வருண முறையோ, சாதியோ, தீண்டாமையோ இந்தியாவின் வரலாற்றில் வெள்ளையர்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. அது உருவாக்கி புகுத்தியதே வெள்ளையர்கள்தான். அதை வளர்த்து பூதாரமாக்கியவர்கள் இடதுசாரிகளும், மேற்கத்திய சிந்தனைகளுக்கு அடிமையான அறிவுஜீவிகளும்தான் என்று கூட - மாற்றி எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஒரு சந்தேகம். ராமானுஜர் சாதீயத்திற்கு எதிராக சீர்திருத்தம் செய்ய முயன்றார் என்பதற்கு "குரு பரம்பரை பிரபாவம்" போன்ற வைணவ நூல்களுக்கு வெளியே வரலாற்று ஆதாரம் ஏதும் உள்ளதா?
//இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் நாளை வரலாற்றை - நால்வருண முறையோ, சாதியோ, தீண்டாமையோ இந்தியாவின் வரலாற்றில் வெள்ளையர்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. அது உருவாக்கி புகுத்தியதே வெள்ளையர்கள்தான். அதை வளர்த்து பூதாரமாக்கியவர்கள் இடதுசாரிகளும், மேற்கத்திய சிந்தனைகளுக்கு அடிமையான அறிவுஜீவிகளும்தான் என்று கூட - மாற்றி எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.//
எழுதியே விட்டார் அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவை உடைத்தல் என்ற நூலில். கிழக்குப்பதிப்பகம். அதன் விமர்சனம் இவ்வார கல்கியில். நீங்கள் சொல்லியபடியே அந்நூல் சொல்கிறது என்று அவ்விமர்சகர் கூறி, இந்தியாவை வேறு எவரும் உடைக்கவேண்டியதில்லை. இந்நூலே உடைக்கும் என்று முடிக்கிறார்.
சாத்தாத வைணவர்களைப் பற்றி மானிடவியல் ஆய்வு மேற்கொண்ட ராபர்ட் லெஸ்டர் திருமலை திருப்பதி கோவில் கல்வெட்டுகள், ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலுள்ள ஜீயர் மடங்களின் வரலாறுகள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் காடுகிறார். ஶ்ரீபாஷ்யம், கோவில் ஒழுகு, குரு பரம்பரை பிரபாவம், சமயாச்சார்யா சுருக்கம், திவ்ய சூரி சரித்திரம், பிள்ளை லோகாச்சார்யா எழுதிய ஶ்ரீவசன பூஷ்னா ஆகியவை சிறப்பான வரலாற்று ஆதாரங்களே. அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.வி.ராமானுஜன் எழுதிய History of Vaisnavism in South India upto Ramanuja இன்னும் பல ஆதாரங்களை தருகிறது என்று நினைவு. புத்தகம் இப்போது கைவசம் இல்லை.
ஜீயர் மடங்களின் வரலாறுகள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் காடுகிறார். ஶ்ரீபாஷ்யம், கோவில் ஒழுகு, குரு பரம்பரை பிரபாவம், சமயாச்சார்யா சுருக்கம், திவ்ய சூரி சரித்திரம், பிள்ளை லோகாச்சார்யா எழுதிய ஶ்ரீவசன பூஷ்னா ஆகியவை சிறப்பான வரலாற்று ஆதாரங்களே//
கிடையாது.
வைணவர்களால் எழுதப்பட்ட எந்த நூல்களையும் வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ள முடியாது. அவை வைணவர்களை தங்கள் மதத்தில் ஆழ்பற்றுவைப்பதற்காக உண்மையையும் கற்ப்னையையும் விரவி எழுதப்பட்டவை: அதாவது கத்தோலிக்க மதகுருமார்கள் தங்கள் மதப்புனிதர்கள் வரலாற்றை எழுதியது போல ஹேகியோ கிராஃபிகள்.
கல்வெட்டு ஆதாரங்களை மட்டும் ஒருவேளை ஏற்கலாம். ஆயினும் அவற்றை ஒரு கல்வெட்டு அறிஞர்களை வைத்துத்தான் ஏற்கமுடியும் அப்படி எவரேனும் இருந்தால் காட்டுங்கள்.
ஹேகியோகிராஃபிகளிலிருந்தும் கூட வரலாற்றுத் தரவுகளை தனிமைப்படுத்தி எடுக்கலாம்.
லெஸ்டர் கொடுக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் கீழ்வருவன பாருங்கள்.
1.Annual Report of Epigraphy Government of Madras 1939
2.Tirumalai-Tirupati Deavathanam Epigraphical series volume 2
3.South Indian Temple Inscriptions Edited by H.K.Narasimhaswamy New Delhi Archeological Survey of India 1982 volume 24
இவை தவிர, சாத்தாத வைணவர்கள் என்று மக்கள் இன்றும் இருப்பதை எப்படி விளக்கம் சொல்வீர்கள்? சாத்தாத வைணவர்களுக்கு என்று தனியே matrimonial site கூட இருக்கிறது. csatnp.com
லெஸ்டரின் கட்டுரை The Sāttāda Śrīvaiṣṇavas, Journal of the American Oriental Society volume 114, no.1. 1994 pp39-53
இது தொடர்பாக இணையத்தை தேடிய போது அ. மார்க்ஸ் எழுதிய இந்த கட்டுரை கிடைத்தது.
http://www.keetru.com/puthiyakaatru/jun06/a_marx.php
"http://mahabharatham.arasan.info
4000 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் (வில்லிபுத்தூரார்.....தொடங்கி.....சோ....வரை) செய்யாத ஒரு புது முயற்சிதான் இந்த முழு மகாபாரதம்.
இவரின் மனோதிடம் வெல்லும்.சரித்திரம் இவர் பேர் சொல்லும்.
சமரசமற்ற மிக அற்புதமான மொழிபெயர்ப்பு.அருமையான எளிய நடையில். படித்து பயன் பெறுவீர்."
Post a Comment