Sunday, September 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-109

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-109

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  நம்பி குட்டுவனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 109

திணை;  நெய்தல்

——

முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை

புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்

புணரிய விருந்த ஞான்றும்

இன்னது மன்னோ நன்னுதற் கவினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

 முள்ளைப் போன்ற கால்களையுடைய இறாமீனின் வளைந்த முதுகினையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலை கொண்டு வந்து தருதற்குரிய இடமாகிய துறையை உடைய தலைவன்  உடன் இருந்த நாளிலும்  நின் நல்ல நெற்றியின் அழகு இவ்வாறு பிறர் அலர் கூறும்படி வருந்துவதற்கு உரியதாயிற்று. 

——

தரூஉந் துறைவன்

—-

இப்பாடல், சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள்,  வளமுடைய துறைவன் என்றவாறு, என உரை எழுதுகிறார் .  கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு பொருள் பெறும்.    


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம் என்று உரை எழுதி இதை இறைச்சி எனக் குறிக்கிறார். 


இறாமீனை கடல் அலை வெளியே தள்ளி ப் பலரும் அறியச் செய்தாற்போல தலைவனின் வரைவு நீட்டித்தல் (திருமணத்தைத் தள்ளிப் போடுதல்) தலைவியைப் புறந்தள்ளிப் பலரும் அறியும்படி செய்தது என்ற குறிப்பு பொருள் இதனால் உணர்த்தப்பட்டது.

——

இன்னது மன்னோ நன்னுதற் கவினே

——

தலைவன் வரைந்து  கொள்ளாமல் காலந்தாழ்த்தியபடியால் தலைவி வருந்தினாள். அவ்வருத்தத்தை அவளது பசலை படர்ந்த நெற்றி வெளிப்படுத்த அதை ஊராரறிந்து தூற்றலாயினர். தலைவியின்  இந்த நிலையை தலைவன் கேட்குமாறு தோழி கூறுகிறாள். தலைவனோடு நாள் தோறும் பயின்று வந்தாலும் அந்தக் களவின்பம் தலைவிக்கு அச்சத்தையும் துன்பத்தையும் தந்தது; அலரை உண்டாக்குவது அதனால் தலைவன் அவளை சீக்கிரம் வரைந்து கொள்ள வேண்டும் என தோழி குறிப்பால் உணர்த்துகிறாள். நன்னுதல்- நல்ல நெற்றி- அன்மொழித்தொகை. கவின் - அழகு , ஏ – அசைநிலை.


தலைவன் வரைந்தாலன்றி நின் வேறுபாடு நீங்காது. 



Wednesday, September 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-108

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-108

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  வாயிலான் தேவன்

குறுந்தொகையில் பாடல் எண்; 108

திணை;  முல்லை

——

மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடிக்

கறவை கன்றுவயிற் படரப் புறவிற்

பாசிலை முல்லை யாசில் வான்பூச்

செவ்வான் செவ்வி கொண்டன்

றுய்யேன் போல்வ றோழி யானே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மழைவிளையாடுதற்கிடமாகிய, மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள், தம் கன்றுகளிடத்தே நினைந்து செல்ல முல்லை நிலத்தில், பசிய இலைகளையுடைய முல்லையினது குற்றமில்லாத சிறந்த மலர்ப்பரப்பு செக்கர் வானத்தின் அழகைக்கொண்டது இக்கார் பருவத்து மாலையில் தலைவர் வாராமையில் நான் உயிர் வாழேன்

——

கறவை கன்றுவயிற் படரப் புறவிற்

பாசிலை முல்லை யாசில் வான்பூச்

——

கார்பருவத்தின் வருகையைக் கண்ட தலைவி தலைவன் வாரமையினால் துயருற்றாள். நிலப்பகுதியால் தலைவன் குறிப்பிடப்படுதல் மரபு. இப்பாடலில் அவன் ‘மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடியைச் ‘ சேர்ந்தவனாகக் குறிக்கப்படுகிறான்.  குறுந்தொகை 263 ஆவது பாடலில் “மால் வரை மழை விளையாடும் நாடன்” என்று சொல்லப்படுவது இதோடு இணைத்து வாசிக்கத்தக்கது. மேகங்கள் வானில் தவழ்தல் கார்பருவத்தில் நிகழ்வது, கறவைப் பசுக்கள் தங்கள் கன்றுகளை நாடி அடைவதும் முல்லை பூத்தலும் மாலையில் நிகழ்வன. தானும் பிள்ளைகளைப் பெற்று இவ்வாறு அன்பு செய்வதற்கு காதலன் வாராமையால் வழியில்லாமல் இருப்பதை தலைவி நினைத்தாள். குறிஞ்சிப்பாட்டு இதை, “ஆண்கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகு தர” எனக் குறிப்பிடுகிறது


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை?  என்பதாம் என்றும்  மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம் என்பதாம் என்று பொருளுரைத்து இவ்விரண்டையும் இறைச்சிகள் என வரையறுக்கிறார். 


முல்லை, பெண்கள் தங்கள் கற்பின் அடையாளமாகச் சூடும் மலராகும். குறுந்தொகை 162 ஆவது பாடல் “முல்லை வாழியோ முல்லை நீ, நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை” என முல்லைப் பூவை வாழ்த்துகிறது. இப்பாடலில் தலைவி முல்லை சூடப்படாமல் கழிகிறது என நினைக்கிறாள். முல்லையின் வெண்ணிற மலர்கள் விண்மீன்களாகவும் செம்புலம், செக்கார் வானாகவும் தோன்ற அங்கும் கார் பருவக் காட்சியே தலைவிக்குத் தெரிகிறது.  தோழி, முல்லை வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று, நான் உய்யேன் என்று தலைவி கூறுகிறாள்; இது இப்பாடலில் மிக அழகான வரி. 


வான் பூ என்றால் வென்ணிற மலர்; பாசிலை முல்லை ஆசு இல் - என்பது அப்பழுக்கற்ற முல்லை எனப் பொருள்தரும். போல்வல் என்பது உரையசை -ஒப்பில் போலி, யானே என்பதில் ஏகாரம் அசைநிலை. 

—-


Thursday, August 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி சேவலிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  மதுரைக் கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 107

திணை;  மருதம்

——

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்

யாண ரூரன் றன்னோடு வதிந்த

ஏம வின்றுயி லெடுப்பி யோயே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒள்ளிய பூவைப் போன்ற செக்கச் சிவந்த கொண்டையையுடைய கோழிக்கூட்டங்களை வலிந்து கொண்ட சேவலே, ஆழமான நீரினால் உண்டாகும், புது வருவாயை உடைய ஊரை உடையவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துலினின்றும் எம்மை எழுப்பிய நீ செறிந்த இருளையுடைய இடையிரவின்கண் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப்பூனையின் குட்டிக்குப் பல நாள் இட்டுவைத்து உணவாகி நீ மிக்க துன்பத்தை அடைவாயாக. 

—-

காமமிக்க கழிபடர் கிளவி

——

தலைவன் பொருள் ஈட்டி மீண்டவனாக அவனை நெடுநாட்களாகப் பிரிந்த துயர் தீரக் கூடியிருக்க எண்ணிய தலைவிவிக்கு ஓரிரவு மனநிறைவை உண்டாக்கவில்லை. காலை விரைவில் புலர்ந்தது கண்டு அவள் துயருற்றாள். காம மயக்கத்தினால் புலர்ந்தது என்று உணர்த்திய சேவலை கடுவன் பூனை கொல்லட்டும் என சபித்தாள். காம மிகுதியில் தலைவி சேவலிடம் கூறியதாக இப்பாடல் இருக்கிறபடியால் இப்பாடல் காமமிக்க களிபடர் கிளவி என அழைக்கப்படுகிறது. 

—-

படீஇயரோ நீயே

—-

காட்டுப்ப்பூனைக் குட்டிக்கு வீட்டில் கிடைக்கும் எலியே போதுமானது. அதற்கு சேவலே கிடைத்தல் பலநால் கவலையின்றி உண்ண இயலும். சேவல் கோழிக் கூட்டத்தையே வைத்திருக்கும் இயல்புடையது, தலைவனின் இயல்பும் இவ்வாறு இருத்த்ற்கூடும் என்பதும் தலைவி குறிப்பினால் உணர்த்துகிறாள். அதிக நேரம் தலைவனோடு கூடப்பெறும் இன்பத்தை கெடுத்தமையால் சேவலை பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்கிறாள். சேவலைக் கொன்று இரையாக்குவேன் என்று தலைவி கூறுவதாகவும் கொள்ளலாம். ‘யாமத்துப் படீஇயர்’ என்றது அது தன் உறவை யாமத்தில் பிரித்ததாகவும் பொருள்தரும். ‘படீஇயரோ நீயே’ என்றது சேவலை நேரடியாகக் குற்றஞ்சுமத்துதலாகும். ‘கடு நவைப் படீஇயர்’ என்றது கூடிய தண்டனை பெறுக எனவும் பொருள்படும்.  படீஇயர் – படுவாயாக , சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி,  இகழ்ச்சிப்பொருளில் வந்தது. 

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

—-

தலைவி கடுவன் பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்று சொல்லும் சேவலின் விவரிப்பு இந்தப் பாடலில் அழகானது. குவி இணர் – குவிந்த  பூங்கொத்து, வினைத்தொகை,  தோன்றி – செங்காந்தள் , ஒண் பூ –  ஒளிர்கின்ற பூ , அன்ன – போன்ற , செந்நெற்றி –  கொண்டை, -நெற்றி – சேவலின் கொண்டைக்கு ஆகுபெயர் - கணங்கொள் சேவல் – கூட்டத்தில் இருக்கிற சேவல். குவிந்த செங்காந்தள் போன்ற கொண்டையையுடைய கோழிக்கூட்டத்தின் நடுவில் இருக்கிற சேவல். 


துயிலெழுப்பிய சேவலே நீ கடுவனுக்கு இரையாவாயாக, பொழுது புலர்ந்தமையால் நாம் துன்புறுவேனானேன் எனத் தலைவி கூறுகிறாள். 

—-



Monday, August 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-106

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-106

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 106

திணை; குறிஞ்சியுள் மருதம்

——

புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்

வரையிழி யருவிற் றோன்று நாடன்

தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்

வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு 

தான்மணந் தனையமென விடுகந் தூதே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, புல்லிய விழுதையுடைய இற்றிமரத்தினது மலையிலுள்ள கற்களிற்படர்கின்ற வெள்ளிய வேர், மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப் போலத் தோன்றும், நாட்டையுடைய தலைவன், குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது நம்மிடத்து வந்தது; நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல அத்தூதை ஏற்றுக்கொண்டு அவன் எம்மை மணந்தகாலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி தூதுவிடுவேம்.

——

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்

——

இற்றியின் விழுதுகள் மலையில் படர்ந்து அருவி போலத் தோன்றும்; ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் தலைவனும் தம்மால் உள்ளவாறு அறியப்படாமல் மாறித் தோன்றுவான் என்ற தலைவியின் குறிப்பினை உணர்த்தும். இரா. இராகவையங்கார்  ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம் என்று விளக்கம் எழுதுகிறார். 

—-

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு

——

பரத்தையினாற் பிரிந்த தலைவன், தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழை செய்தவன் அல்லன் என்று தலைவி  தூதின் மூலம் உணர்ந்ததைப் புலப்படுத்தியது. இந்தச் சூழலை ‘தூது கண்டு தலைவி கூறியது என தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 6 இக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் குறிப்பிடுக்கிறார். தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல் நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றல் போல நாமும் தலைவனின் தூதுமொழிகளை ஏற்று மனம் தளராமல் ஆறுதல் அடைவோம் எனத் தலைவி குறித்தனள். இவ்வாறாக கொடுப்பக் கோடல் கற்பென அழைக்கப்படுகிறது. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற பேராசிரியர் “களவினுள் நெய்பெய் தீயின் எதிர்கொள்ளலாகாமையின் தூது முனிவின்மை, கற்பிற்கு உரியது”  என்று  எழுதுகிறார். 

——

தான்மணந் தனையமென விடுகந் தூதே

——-

தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடிருந்தாவாறே இப்போதும் குறைவின்றி இருப்பேன் என்றமையால் அவனை ஏற்றுக்கொள்வதற்கான குறிப்பு பெறப்பட்டது. தலைவி தன் காதலனை தீ முன்னர் கைப்பற்றிய நிகழச்சியை நினைவு கூர்கிறாள். 


தோழி,  நாடன் தூதில் அவனது நெஞ்சத்து சொல் வந்தது, நாமும் எதிர்கொண்டு தூது விடுவோம், அவனை ஏற்றுக்கொள்வோமாக எனத் தலைவி கூறுகிறாள். 

—-



Friday, August 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: நக்கீரர்

குறுந்தொகையில் பாடல் எண்; 105

திணை; குறிஞ்சி

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை தெரியாமல் உண்ட மயில், தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்கும் இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, நீர் மிக்க கண்களோடு நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது. 

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை

—-

தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 21 இக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் இப்பாடலில் வருவது போன்ற பேசும் சூழலை திருமணத்தைத் தள்ளி வைத்த காலத்து வருத்திய தலைவி தானே கூறியது என வரையறுக்கிறார். புனவன் - புனத்தையுடைய குறவன், தினையை விதைத்து விளைவித்து அதில் வரும் முதற்கதிரை தெய்வத்துக்குப் படைத்தல் மரபு. 

—-

ஆடுமகள்

—-

ஆடுமகள் - வெறியாடுபவள், காணிக்காரிகை, தேவராட்டி, அரங்கின் கண் கூத்தாடுகின்ற விறலி, தெய்வமேறி ஆடுபவள்  எனவும் அறியப்படுவாள் . தெய்வத்திற்கு படைக்கப்பட்டது என்று அறியாமல் கதிரின் செழுமை கண்டு உண்ட மயில் வெறியாடுகிறவளைப் போல உள்ளம் வெந்து உடல் நடுங்கும் எனத் தலைவி கூறுகிறாள்.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  புனவன் சிறுதினைக் குரலை அறியாது உண்ட மஞ்ஞை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர் காவலில் உள்ள என்னை அவர்கள் அறியாதவாறு, தகாத களவினால் திளைத்த தலைமகன் தமரை வரையக் கேட்டிலனாய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம் என்பது உள்ளுரை என விளக்கம் அளிக்கிறார். தலைவியின் உணர்ச்சி ‘ மறைபொருள் ஊரார்க்கு அரிதென்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து’ என்ற திருக்குறளாலும்  (1180)  விளங்கும். 

——

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

—— 

தலைவனின் களவு நீடித்த செயல் தலைவியின் நீர் மலிந்த கண்ணீருக்கும் ஊரார் அறிந்து அலர் பேசுவதற்கும் ஏதுவயிற்று. இதில்’ நீர்மலி கண்ணோடு நினைப்பாகுதல்’ துயரின் வெகு அழகான விவரிப்பு.  ‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்’ என்ற அடியில் வரும் கடி எனும் சொல் குறித்து தொல்காப்பியம் உயிரியல் 87 ஆவது சூத்திரம், ‘கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே’ என்று கூறுகிறது.

——

மஞ்ஞை யாடுமகள் வெய்துற்று நடுங்குதல்

——

தலைவி தன்னுடைய உள்ளார்ந்த நடுங்குதலை, ‘மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’ எனக் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. மயில் நடுங்கிற்று. தலைவியும் நீர்மலி கண்ணோடு அவன் திருமணத்தை நீட்டித்தவிடத்து நடுங்கினாள். கண்ணும் மனமும் கவரும் அவன் வளமை கண்டு நட்பு (கேண்மை) செய்ததால் வந்த துன்பம் இது என தலைவி கலங்குகிறாள். குறுந்தொகை 52 ஆவது பாடலில் ‘ இது போலவெ நடுகுதல் குறித்து “ சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே’ என்றொரு வரி வருகிறது. குறிஞ்சிப்பாட்டு ‘ சூர் உறு மஞ்ஞையின் நடுங்க’ என்று இதைக் குறிப்பிடுகிறது, 


தலைவனுடைய கேண்மை கண்ணீர் மல்கச் செய்யும் துன்பத்தைத் தந்து நினைவளவிலேயே நிற்கிறதே தவிர இன்பத்தைத் தந்து திருமணத்தில் நிறைவடையவில்லை என்பது தலைவியின் உட்கோள். 

——

Wednesday, August 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: காவன்முல்லைப் பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 104

திணை; பாலை

——

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஒன்று கூறுவேன் கேட்பாயாக; நம் காதலர் நூலற்ற முத்து வடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற்காலையில் பசுக்கள் மேயும், பனி வீழ்கின்ற காலத்திலே, என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும் பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!

——

அம்ம வாழி தோழி

—-

தோழியை அம்ம என்று அழைத்து வாழ்த்து சொல்லுதல் குறுந்தொகைப் பாடல் 77 இலும் இருக்கிறது. அம்ம – அம்ம கேட்பிக்கும் என தொல்காப்பியம், இடையியல் வாய்பாடு  28 கூறுகிறது.  வாழி- அசைச் சொல்.  வாழி என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார் இந்த உரையசை, நீ வாழ்வாயாக, நீ வாழ்வாயாக என வாழ்த்து முகத்தானே யான் வாழ்கல்லேன் எனக் குறித்தாள் எனினுமாம் என்று விளக்கமளிக்கிறார்.  

—-

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

———

பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றி விழுமாதலால் நூலறுந்த முத்தை அதற்கு உவமை கூறினாள். தாளி என்பது ஒருவகைக் கொடியுமாகும். நாட்காலையில் பசு மேயும்போது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடு நாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலம் என்ற கருத்தை உடையது. 

 நூல் அறுந்த முத்து வடம் பல சங்கப்படல்களில் காணப்படும் உவமையாகும்.  அகநானூறு 225 – ‘துளை முத்தின் செந்நிலத்து உதிர’, அகநானூறு 289 – ‘நெகிழ் நூல் முத்தின்’, குறுந்தொகை 51 – ‘நூல் அறு முத்தின்’, குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – ‘கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ’ ஆகியன இணைத்து வாசிக்கத் தக்கன. 


நூல் அறு முத்தின் – – இன் உருபு ஒப்புப் பொருளது. 


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தாளியின் கொடியை ஆ மேயும் பனிக்காலம் என்றதனானே, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எளிதிற்பெற, யான் மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் எனவே இது இறைச்சி எனக் குறிக்கிறார். 

—-

பிரியு நாளும் பலவா குவவே

—-

தலைவர் பிரிந்த நாள் உண்மையிலேயே சிலவாயினும் அவை தலைவிக்குப் பலதாகத் தெரிகிறது. நெடுநல்வாடை என்றப் பெயர்க் காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர் ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒரு பொழுது ஓரூழி போல நெடிதாகிய வாடையாய்த்’ தெரிவதாக உரை எழுதுவதை இதோடு சேர்த்து வாசிக்கும்படி உ.வே.சா. அறிவுறுத்துகிறார். 


என்னோடு உடனிருந்தற்குரிய பருவத்திற் பிரிந்தனர்; அது துன்பத்திற்குக் காரணமாயிற்று. . அங்ஙனம் பிரிந்தவர் சில நாட்களில் மீண்டு வந்திருப்பின் அத்துன்பத்தை ஆற்றியிருப்பேன். அவ்வாறின்றிப் பல நாட்களாகவும் இன்னும் வந்திலர். யான் என்ன செய்வேன் என்று தலைவி கூறி இரங்கினாள். 

——