Wednesday, August 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: காவன்முல்லைப் பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 104

திணை; பாலை

——

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஒன்று கூறுவேன் கேட்பாயாக; நம் காதலர் நூலற்ற முத்து வடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற்காலையில் பசுக்கள் மேயும், பனி வீழ்கின்ற காலத்திலே, என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும் பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!

——

அம்ம வாழி தோழி

—-

தோழியை அம்ம என்று அழைத்து வாழ்த்து சொல்லுதல் குறுந்தொகைப் பாடல் 77 இலும் இருக்கிறது. அம்ம – அம்ம கேட்பிக்கும் என தொல்காப்பியம், இடையியல் வாய்பாடு  28 கூறுகிறது.  வாழி- அசைச் சொல்.  வாழி என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார் இந்த உரையசை, நீ வாழ்வாயாக, நீ வாழ்வாயாக என வாழ்த்து முகத்தானே யான் வாழ்கல்லேன் எனக் குறித்தாள் எனினுமாம் என்று விளக்கமளிக்கிறார்.  

—-

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

———

பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றி விழுமாதலால் நூலறுந்த முத்தை அதற்கு உவமை கூறினாள். தாளி என்பது ஒருவகைக் கொடியுமாகும். நாட்காலையில் பசு மேயும்போது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடு நாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலம் என்ற கருத்தை உடையது. 

 நூல் அறுந்த முத்து வடம் பல சங்கப்படல்களில் காணப்படும் உவமையாகும்.  அகநானூறு 225 – ‘துளை முத்தின் செந்நிலத்து உதிர’, அகநானூறு 289 – ‘நெகிழ் நூல் முத்தின்’, குறுந்தொகை 51 – ‘நூல் அறு முத்தின்’, குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – ‘கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ’ ஆகியன இணைத்து வாசிக்கத் தக்கன. 


நூல் அறு முத்தின் – – இன் உருபு ஒப்புப் பொருளது. 


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தாளியின் கொடியை ஆ மேயும் பனிக்காலம் என்றதனானே, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எளிதிற்பெற, யான் மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் எனவே இது இறைச்சி எனக் குறிக்கிறார். 

—-

பிரியு நாளும் பலவா குவவே

—-

தலைவர் பிரிந்த நாள் உண்மையிலேயே சிலவாயினும் அவை தலைவிக்குப் பலதாகத் தெரிகிறது. நெடுநல்வாடை என்றப் பெயர்க் காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர் ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒரு பொழுது ஓரூழி போல நெடிதாகிய வாடையாய்த்’ தெரிவதாக உரை எழுதுவதை இதோடு சேர்த்து வாசிக்கும்படி உ.வே.சா. அறிவுறுத்துகிறார். 


என்னோடு உடனிருந்தற்குரிய பருவத்திற் பிரிந்தனர்; அது துன்பத்திற்குக் காரணமாயிற்று. . அங்ஙனம் பிரிந்தவர் சில நாட்களில் மீண்டு வந்திருப்பின் அத்துன்பத்தை ஆற்றியிருப்பேன். அவ்வாறின்றிப் பல நாட்களாகவும் இன்னும் வந்திலர். யான் என்ன செய்வேன் என்று தலைவி கூறி இரங்கினாள். 

——


No comments: