Friday, August 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: நக்கீரர்

குறுந்தொகையில் பாடல் எண்; 105

திணை; குறிஞ்சி

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை தெரியாமல் உண்ட மயில், தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்கும் இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, நீர் மிக்க கண்களோடு நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது. 

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை

—-

தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 21 இக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் இப்பாடலில் வருவது போன்ற பேசும் சூழலை திருமணத்தைத் தள்ளி வைத்த காலத்து வருத்திய தலைவி தானே கூறியது என வரையறுக்கிறார். புனவன் - புனத்தையுடைய குறவன், தினையை விதைத்து விளைவித்து அதில் வரும் முதற்கதிரை தெய்வத்துக்குப் படைத்தல் மரபு. 

—-

ஆடுமகள்

—-

ஆடுமகள் - வெறியாடுபவள், காணிக்காரிகை, தேவராட்டி, அரங்கின் கண் கூத்தாடுகின்ற விறலி, தெய்வமேறி ஆடுபவள்  எனவும் அறியப்படுவாள் . தெய்வத்திற்கு படைக்கப்பட்டது என்று அறியாமல் கதிரின் செழுமை கண்டு உண்ட மயில் வெறியாடுகிறவளைப் போல உள்ளம் வெந்து உடல் நடுங்கும் எனத் தலைவி கூறுகிறாள்.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  புனவன் சிறுதினைக் குரலை அறியாது உண்ட மஞ்ஞை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர் காவலில் உள்ள என்னை அவர்கள் அறியாதவாறு, தகாத களவினால் திளைத்த தலைமகன் தமரை வரையக் கேட்டிலனாய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம் என்பது உள்ளுரை என விளக்கம் அளிக்கிறார். தலைவியின் உணர்ச்சி ‘ மறைபொருள் ஊரார்க்கு அரிதென்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து’ என்ற திருக்குறளாலும்  (1180)  விளங்கும். 

——

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

—— 

தலைவனின் களவு நீடித்த செயல் தலைவியின் நீர் மலிந்த கண்ணீருக்கும் ஊரார் அறிந்து அலர் பேசுவதற்கும் ஏதுவயிற்று. இதில்’ நீர்மலி கண்ணோடு நினைப்பாகுதல்’ துயரின் வெகு அழகான விவரிப்பு.  ‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்’ என்ற அடியில் வரும் கடி எனும் சொல் குறித்து தொல்காப்பியம் உயிரியல் 87 ஆவது சூத்திரம், ‘கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே’ என்று கூறுகிறது.

——

மஞ்ஞை யாடுமகள் வெய்துற்று நடுங்குதல்

——

தலைவி தன்னுடைய உள்ளார்ந்த நடுங்குதலை, ‘மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’ எனக் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. மயில் நடுங்கிற்று. தலைவியும் நீர்மலி கண்ணோடு அவன் திருமணத்தை நீட்டித்தவிடத்து நடுங்கினாள். கண்ணும் மனமும் கவரும் அவன் வளமை கண்டு நட்பு (கேண்மை) செய்ததால் வந்த துன்பம் இது என தலைவி கலங்குகிறாள். குறுந்தொகை 52 ஆவது பாடலில் ‘ இது போலவெ நடுகுதல் குறித்து “ சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே’ என்றொரு வரி வருகிறது. குறிஞ்சிப்பாட்டு ‘ சூர் உறு மஞ்ஞையின் நடுங்க’ என்று இதைக் குறிப்பிடுகிறது, 


தலைவனுடைய கேண்மை கண்ணீர் மல்கச் செய்யும் துன்பத்தைத் தந்து நினைவளவிலேயே நிற்கிறதே தவிர இன்பத்தைத் தந்து திருமணத்தில் நிறைவடையவில்லை என்பது தலைவியின் உட்கோள். 

——

No comments: