குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-106
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
—-
இயற்றியவர்: கபிலர்
குறுந்தொகையில் பாடல் எண்; 106
திணை; குறிஞ்சியுள் மருதம்
——
புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி யருவிற் றோன்று நாடன்
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, புல்லிய விழுதையுடைய இற்றிமரத்தினது மலையிலுள்ள கற்களிற்படர்கின்ற வெள்ளிய வேர், மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப் போலத் தோன்றும், நாட்டையுடைய தலைவன், குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது நம்மிடத்து வந்தது; நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல அத்தூதை ஏற்றுக்கொண்டு அவன் எம்மை மணந்தகாலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி தூதுவிடுவேம்.
——
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
——
இற்றியின் விழுதுகள் மலையில் படர்ந்து அருவி போலத் தோன்றும்; ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் தலைவனும் தம்மால் உள்ளவாறு அறியப்படாமல் மாறித் தோன்றுவான் என்ற தலைவியின் குறிப்பினை உணர்த்தும். இரா. இராகவையங்கார் ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம் என்று விளக்கம் எழுதுகிறார்.
—-
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
——
பரத்தையினாற் பிரிந்த தலைவன், தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழை செய்தவன் அல்லன் என்று தலைவி தூதின் மூலம் உணர்ந்ததைப் புலப்படுத்தியது. இந்தச் சூழலை ‘தூது கண்டு தலைவி கூறியது என தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 6 இக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் குறிப்பிடுக்கிறார். தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல் நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றல் போல நாமும் தலைவனின் தூதுமொழிகளை ஏற்று மனம் தளராமல் ஆறுதல் அடைவோம் எனத் தலைவி குறித்தனள். இவ்வாறாக கொடுப்பக் கோடல் கற்பென அழைக்கப்படுகிறது. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற பேராசிரியர் “களவினுள் நெய்பெய் தீயின் எதிர்கொள்ளலாகாமையின் தூது முனிவின்மை, கற்பிற்கு உரியது” என்று எழுதுகிறார்.
——
தான்மணந் தனையமென விடுகந் தூதே
——-
தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடிருந்தாவாறே இப்போதும் குறைவின்றி இருப்பேன் என்றமையால் அவனை ஏற்றுக்கொள்வதற்கான குறிப்பு பெறப்பட்டது. தலைவி தன் காதலனை தீ முன்னர் கைப்பற்றிய நிகழச்சியை நினைவு கூர்கிறாள்.
தோழி, நாடன் தூதில் அவனது நெஞ்சத்து சொல் வந்தது, நாமும் எதிர்கொண்டு தூது விடுவோம், அவனை ஏற்றுக்கொள்வோமாக எனத் தலைவி கூறுகிறாள்.
—-
No comments:
Post a Comment