"The first kiss…. is the principle of philosophy- the origin of a new world- the beginning of an absolute era- the act that accomplishes an alliance with self that grows endlessly. Who would not like a philosophy whose kernel is a first kiss? " (Novalis quoted in Derrida 1993: 140)
தார்க்கோவ்ஸ்கியின் இவானின் குழந்தைப்பருவம் படக்காட்சி |
இன்று காதல் FAQ கட்டுரைக்காக சில propositional statements எழுதினேன். அவற்றை ஒட்டியும் வெட்டியும் விரிவாக இந்தத் தொடரில் எழுதுவேன். Propositions என்ற மட்டிலேயே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. பிறரும்தான் உரைகளும், ஏன், என்னை விட நன்றாகவே விரிவாக்கங்களும் எழுதலாம்தானே என்றும் தோன்றியது. தவிர இணையத்தில் இவ்வகைக்கட்டுரைகளை எழுதுவது என்பது ஆதி கிரேக்கத்தின் முச்சந்தி விவாதங்களை நினைவுறுத்துவதாகவும் இருக்கிறது.
இந்த propositions ஐ எழுதியபோது இந்தக் கட்டுரைத் தொடரில் (சாகாமல் பிழைத்துக்கிடப்பதால் நான் நானாகியதும், பராக்கு பார்த்ததும்) காதல், நட்பு, சமூக ஒப்பந்தம் ஆகினவற்றுக்குள்ள உறவை விவாதிப்பது இடைச்செருகலாய் இருக்காது, தொடர் கண்ணியாகவே இருக்கும் என்று கண்டுணர்ந்தேன்.
இதோ முதல் முத்தமாக ஒன்றோடொன்று தொடர்புடைய ஏழு propositions:
கர்த்தாவற்றது காதல் எனவே யாரும் காதலுக்கு மூல ஆசிரியனாக முடியாது; அதனை நீங்கள் மொழிபெயர்க்க மட்டுமே முடியும்.
காதலின் மொழி பெயர்ப்புகள் எண்ணற்றவை, தவறுகள் மலிந்தவை, இலக்கணங்களையும் சூழல்களையும் பொருட்படுத்தாதவை, இலக்கு தவறி பொருள் பெறுபவை.என்றாலும் காதலின் மொழி பெயர்ப்புக்கான தவிப்பிலும் பதற்றத்திலும் சப்தம் மொழியாவதும் தற்செயலாய் நடப்பதுண்டு. இத்தகையத் தற்செயல்களின் தொகுதி மனித புலன் அனுபவத்தை ஒழுங்கு செய்வதால் காதலின் அத்தனை மொழிபெயர்ப்புகளுக்கும் ஒற்றை மூலப் பனுவல் இருப்பதான மாயையும் கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் மானுட வரலாறெங்கும் நிறைந்திருக்கின்றன. இல்லாத கர்த்தாவைத் தேடுவதாலும், இல்லாத மூல லட்சிய பனுவலின் ஒற்றை உற்பத்தி ஸ்தானத்தை கற்பிதம் கொள்வதாலும் காதலர்களின் மரணமே வாழ்வைவிட மானுட பண்பாடுகளில் அமரத்துவம் பெறுகிறது.
காதல் என்பது தன்னுடல் மீறிய கவனம், அக்கறை, உற்று நோக்கல், தன்னிருப்பின் பிளவினால் ஏற்படும் மொழியின் தோற்றுவாய். ஒரு தன்னிலை மற்றொரு தன்னிலையோடு உடலன்றி வேறெப்படியும் இணைய இயலாது என்பதால் ஏற்படும் காத்திருத்தல்.
காதலில் காத்திருத்தல் பேசுமொழியாவதைவிட இசையாவது ஓவியமாவது பழங்குடித்தன்மை கொண்டது.
காதலில் காத்திருக்கும் கணங்களே தனியுடலின் அநாதைத் தன்மையினையும் இயற்கையின் பேசும்தன்மையினையும் பிரக்ஞைக்கு உணர்த்துகின்றன. காதலின் பேச்சு தனக்குத்தானே பேசி பிறன்மையை உள்ளிளுக்கிறது.
காதலின் புராணங்களில் முதன்மையானது உடல் போலவே மனமும் இணையும் வாய்ப்புள்ளதென்பது. இரு மனங்கள் இணையலாமென்றால் பல மனங்கள் இணையலாம், பல மனங்கள் இணையலாமென்றால் அவற்றிற்கு ஒற்றை ஆதார உற்பத்தி ஸ்தானம் இருக்கக்கூடும் என்பது புராண நீட்சி.
No comments:
Post a Comment