Wednesday, February 15, 2012

பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 5


இரண்டு நாட்களாக மென்னியை முறிக்கும் வேலை. உடனடியாக சில குறிப்புகளை பதிவு செய்ய இயலவில்லை.

  முந்தைய பதிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய தத்துவக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற யூத தத்துவ அறிஞரின் பெயர் மறந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவருடைய பெயர் மோசஸ் மெண்டெல்சொஹ்ன் என்று நாகார்ஜுனன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 டிவிட்டரில் கல்யாணராமன், முந்தைய பதிவின் கடைசி பத்தியில் நீங்கள் எழுதியிருப்பது நாஜிகளின் காலத்தில் மெண்டெல்சொஹ்னின் பதவி பறிக்கப்பட்டு அது ஹைடெக்கருக்கு வழங்கப்பட்டது என்று பொருள்படுகிறதே நாஜிகளின் காலத்தில் ஹுஸ்ரலின் பதவி அல்லவா பறிக்கப்பட்டு ஹைடெக்கருக்கு  அளிக்கப்பட்டது என்று விளக்கம் கோரியிருந்தார். நான் அவர் கேட்பதை, முதல் பரிசு பெற்ற அறிஞர் ஹுஸ்ரலா என்று கேட்கிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டு 'ஹுஸ்ரல் இல்லை' என்று டிவீட் எழுதிவிட்டேன். நாகர்ஜுனன் கடிதத்தில் ஹுஸ்ரலின் இடத்திற்கு ஹைடெக்கர் வந்ததை குறிப்பிட்டு எழுதியிருந்ததை படித்தபோதுதான் அடடா நான் கல்யாணராமனின் கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டேனே என்று நினைப்பு வந்தது. அவரும் இதற்கிடையில் ஹைடக்கர் விக்கிப்பீடியா கட்டுரை இணைப்பொன்றை டிவிட்டரில் அனுப்பியிருந்தார். அவரிடம் உடனடியாக மன்னிப்பு கோரினேன். வாசகர்களும் முந்தைய பதிவினில் உள்ள பிழையினை களைந்து, ஹுஸ்ரலின் இடத்திற்கே ஹைடெக்கர் வந்தார் என்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 என்னுடைய இந்தக் கட்டுரைத் தொடருக்குத் தொடர்ந்து உரை எழுதுவதாக ஆரம்பித்த நட்பாஸ் அம்பேல் பதிவொன்று எழுதி விடுபட்டு விட்டார். சரி, அது அவர் விருப்பம். மின்னஞ்சல் பெட்டியில் பதினோரு கடிதங்கள் சீரிய தத்துவ விவாதங்களை முன் வைப்பதாக இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே பதிவில் பதிலளிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

 நேற்றைய சுவாரசியம் என்னவென்றால் இதுவரை என்னைத் தன் கேள்விக் கடிதங்களால் துன்புறுத்தி வந்த 'சித்திரக்குள்ளன்' ஒரு பெண் என்று தெரிய வந்ததுதான். 'சித்திரக்குள்ளி(?)யும் அவர் தோழிகளுமாய் நேற்று என் வீட்டிற்கு படையெடுத்து வந்திருந்தனர். நானும் என் மனைவியும் கொஞ்சம் திகைத்துதான் போய்விட்டோம். சுதாரித்தபின் உரையாடல் காதலர் தினக் கொண்டாட்டங்களைப் பற்றியே சுற்றி சுற்றி வந்தது. காதலைப் பற்றி ஒரு தத்துவக்கட்டுரை எழுத முடியுமா இந்தத் தொடரிலேயே என்று அந்த இளம் பெண்கள் வம்புக்கு இழுக்க என் மனைவியும் அவர்களோடு சேர்ந்துகொண்டாள். நதியின் சுழிப்போடு ஓடுவதுதானே மிதவைக்கு விவேகம்? சரி, 'காதல் FAQ' என்றொரு கட்டுரை இடைச்செருகலாக இந்தத் தொடரிலேயே எழுதிவிடுவதாக வாக்களித்திருக்கிறேன்.


No comments: