Friday, February 24, 2012

வேளச்சேரி சம்பவம் 8

நாங்கள் வசிக்கின்ற வேளச்சேரியில் வங்கிக்கொள்ளையர் என்று கருதப்பட்ட இளைஞர்களை⁠1 நேற்று போலீஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற செய்தியினை தொலைக்காட்சியில் இன்று காலை பார்த்த என் மனைவி பயமும் தாளவொணா சோகமும் அடைந்திருந்தாள். ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த அவளுக்கு அவளறிந்த பகுதிகளில் ராணுவமும் போலீசும் நுழைந்து சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளும் சம்பவங்களின் ஞாபகங்களை இது கிளர்த்தியிருக்க வேண்டும். சென்னையும் இந்தியாவின் அடர்கானகப் பகுதியாகிவிட்டதா என்பது மட்டும் அவள் கேள்வியாய் இருக்கவில்லை; கொல்லப்பட்ட இளைஞர்களின் அப்பா அம்மா எங்கே, அதில் ஒருவர் மாணவராமே, வேளச்சேரி மக்கள் எல்லோரும் ஏன் சம்பவ இடத்தில் குழுமவில்லை, ஏன் எதற்காக இப்படி நடந்தது என்று ஏன் போலீசார் ஜீப்பில் மெகாஃபோனோடு வந்து வேளச்சேரி வாழ் மக்களுக்கு விளக்கம் சொல்லவில்லை, வங்கி கேமராவில் பதிவாகியிருந்த யாராய் இருந்தாலும் சுட்டுக் கொன்று விடலாமா என்று அவளுக்கு பல கேள்விகள்.

செய்தியைப் பார்த்து ஒரு விதப் பதற்றத்திற்கு ஆளாகியிருந்த எனக்கு அவளின் தொடர் கேள்விகள் என் மனக் கலக்கத்தினை அதிகப்படுத்தின. சில பல வருடங்களுக்கு முன்பும் வெள்ளத்தில் வேளச்சேரி மூழ்கியபோது நிவாரண உதவியைப் பெற பக்கத்து பள்ளிக்கூடத்திற்கு சென்ற பலர் நெரிசலில் சிக்கி இறந்தபோதும் இப்படித்தான் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டுத் துளைத்தெடுத்தாள்.

அக்கம்பக்கம் சம்பவம் பற்றி எதுவுமே கவலைப்படாதது போல நான் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தது வேறு அவளை வெகுவாக உறுத்தியிருக்க வேண்டும். சதா கணிணி முன்னாலோ, தண்டி தண்டி புத்தகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கிறாயே அந்தப் புத்தகங்கள் எல்லாம் இந்த மாதிரியான சமயத்தில் நீ என்ன செய்யவேண்டும் சொல்லவில்லையா என்றாள்.

நான் படித்த தத்துவமும் இலக்கியமும் ஏன் என் மனசாட்சியுமே இந்த மாதிரியான சம்பவம் நடைபெற்றதற்கு அழவேண்டும், துக்கப்படவேண்டும், தெருவில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்றுதான் சொல்கின்றன என்றேன் அவள் கண்களைப் பார்த்து. ஆனால் நான் அலுவலகத்திற்கு போய் வேலையை மட்டுமே பார்ப்பேன்; அவ்வளவுதான் என்னால் முடியும் என்றேன். எதிர்ப்பு என்றால் யாருக்கு என்றாள் அவள் விடாமல். போலீசுக்குத்தான், அரசுக்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்; தெருவில் இறங்கி துண்டறிக்கை விநியோகிக்கலாம், மனித உரிமை அமைப்புகளின் போராட்டத்திற்கு ஆதரவு தரலாம், blogpost ஒன்று எழுதலாம் என்றேன். தெருவில் இறங்கி போராடி எதிர்ப்பு தெரிவிப்பது தவிர மற்றவை அனைத்தும் அவளுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை.

பதற்றமான மனதுடனே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். கல்லூரி நாட்களில் சார்த்தரின் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு அலைந்ததும் சார்த்தர் ஃபிரான்ஸ்-அல்ஜீரியா போருக்கு எதிராக தெருவில் இறங்கி ஃபிரான்சுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்ததை சிலாகித்துப் பேசித் திரிந்ததும் நினைவுக்கு வந்தது. சார்த்தர் அரசுக்கு எதிராகப் பேசுகிறார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுந்தபோது ஃபிரான்சின் ஜனாதிபதி டிகால் "Nobody arrests Voltaire" என்று சொல்லி அவரை கைது செய்ய உத்தரவிட மறுத்துவிட்டதும் நினைவுக்கு வந்தது. சார்த்தர் அளவுக்கு உயர் ஆளுமை ஒருவருக்கு ஃபிரான்ஸ் போன்ற தேசத்தில் இது சாத்தியமாகலாம் என்னைப் போன்ற தம்மாத்துண்டு மனிதன் என்ன செய்யமுடியும் டிராஃபிக் போலீஸ்காரன் லைசன்ஸ் கேட்டு மிரட்டினாலே மனலும் உடலும் பதறிவிடுகிறது. காலையில் தொலைக்காட்சியில் பார்த்திருந்த இளைஞர்களின் உடல்கள் மனத்திரையில் தோன்றி மறைந்தன.

மதியம் அலுவலகத்திலிருந்து என் மனைவிக்கு ஃபோன் போட்டு என்ன செய்கிறாள் என்று கேட்டேன். பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து 'உள்ளூர்' துயர சம்பவத்தைப் பற்றி மருகி மருகி பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் வேளச்சேரியில் குடியேறி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன இருந்தாலும் உள்ளூர், என்னூர் என்றால் அது என் கற்பனையிலிருக்கும் நாகர்கோவிலோ, திருநெல்வேலியோதான். ஆனால் என் மனைவி எவ்வளவு சீக்கிரம் வேளச்சேரியை தன்னூராக சுவீகரித்துக்கொண்டாள்!

ஒரு வேளை ஒரு இடத்தோடு என்னை இன்னும் முழுமையாகப் பொருத்திக்கொள்ளத் தெரியாததினால்தான் வேளச்சேரி சம்பவம் என்னை என் மனைவியை பாதித்த அளவு பாதிக்கவில்லையோ? எனக்கு வேளச்சேரி, கருணாம்பிகை தண்டீஸ்வரர் கோவில், யோக நரசிம்மர் கோவில் , அங்காள பரமேஸ்வரி கோவில், அப்பா கொடுத்த வீடு என்று மட்டுமே முதலில் மனசிலாகியிருந்தது. முன்பெல்லாம் காலை நடந்து போகும்போது எழுத்தாளர் ஜெயந்தனைப் பார்த்திருக்கிறேன். அவர் அசோகமித்திரனும், வெங்கட் சாமிநாதனும் கூட இங்கே அருகில்தான் வசிக்கிறார்கள் என்று சொன்னதாக நினைவு. குழந்தைகள் வந்தபின் அவர்களை விளையாடக் கூட்டிக் கொண்டு போகும் குரு நானக் கல்லூரி மைதானம், ..டி வளாகக்காடு என்று வேளச்சேரி என் அனுபவத்தில் விஸ்தீரணம் கண்டது. சென்னையின் புராதன கிராமங்களில் வேளச்சேரியும் ஒன்று என்பது ஆறுதலான உணர்வைத் தந்திருக்கிறது. வெளியூரிலோ, வெளி நாட்டிலோ பயணம் செய்துகொண்டிருக்கையில் வீடு திரும்பலுக்கான ஏக்கம் வேளச்சேரியும் நாகர்கோவிலும் கலந்த கலவைக் காட்சியாக கனவில் வருவதை கவனித்திருக்கிறேன். தாய்மையின் அரவணைப்புள்ள மறைமுகமான காடொன்றும் வேளச்சேரியில் இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லும்.

வேறெப்படி ஒருவன் இடத்தோடு உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியும்?

நாள் பூராவும் வேலையில் மூழ்கியிருந்தேன். காலையில் ஏற்பட்ட மனக்கலக்கம் தெளிந்துவிட்டிருந்தது. கி..சச்சிதானந்தன் அலுவலகத்திற்கு வந்தார். ஹைடெக்கர் இடமும் காலமும் இல்லாமல் ஒரு தன்னிருப்பு எப்படி உருத்திரள்வதில்லை என்று சொல்கிறார் என்றும் வேளச்சேரி என்பது எனக்கும் என் மனைவிக்கும் என்னவாக இருக்கிறது என்றும் சச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

காலையில் வேளச்சேரியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி சச்சியிடம் பேசிக்கொண்டிருந்தபோது .மார்க்சின் வலைத்தளத்தில் படித்த வேளச்சேரி என்கவுண்டர் தொடர்பான அவருடைய இரு பதிவுகளை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டது நினைவு வந்தது.⁠2 "என்கவுண்டர் கொலைகள் சட்டம் என்ன சொல்கிறது?என்ற அவர் பதிவை நான் ஏன் பகிர்ந்துகொண்டேன்? என் எதிர்ப்பும் கூட சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளவா? சட்டத்திற்கு, அரசியலமைப்பிற்கு எனவே அரசியலுக்கு உட்பட்டதா அறம்? காண்ட்டின் அறக்கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய தெரிதா கேட்ட கேள்வியல்லவா இது?

வீடு திரும்புகையில் கார் வண்டிக்காரன் தெரு செக்போஸ்டைத் தாண்டி வந்துகொண்டிருக்கும்போது மனம் ஒரு முறை அதிர்ந்து மீண்டது.. வேளச்சேரி வேறொன்றாக மாறிவிட்டிருக்கிறது.




அடிக்குறிப்புகள்


1 பார்க்க செய்தி http://www.thehindu.com/todays-paper/article2926184.ece
2 என்கவுண்டர் கொலைகள் சட்டம் என்ன சொல்கிறது?http://amarx.org/?p=390

No comments: