"It is necessary to deduce a politics and a law from ethics."
-Jaques Derrida in Adieu to Emmanuel Levinas
முதல் முத்தமாய் காதல் பற்றி நான் எழுதிய ஏழு ஒன்றோடொன்று தொடர்புடைய உத்தேச கருத்துரைகளுக்கு எனக்கு வழக்கமாகக் கடிதம் எழுதுபவர்களிடமிருந்து மீண்டும் பல எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அவற்றையும் ஏற்கனவே பதிலளிப்பதற்காக வைத்திருந்த பதினோரு கடிதங்களையும் மொத்தமாய்ப் படித்துப் பார்க்கையில் கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தெரிதாவின் பிற்கால சிந்தனைகளில் அறிமுகம் இல்லை என்று அறிய வருகிறேன். எனவே இந்தப் பதிவினைத் தொடர்ந்து தெரிதா காண்ட்டிய சிந்தனையை விமர்சித்ததையும் நுட்பப்படுத்தியதையும் மையப்படுத்தி எழுத விரும்புகிறேன்.
நான் நானாகுதலை பயணம் என்ற உருவகத்தை வைத்தோ அல்லது (அனுபவ சேகர) கிடங்கு என்ற உருவகத்தை வைத்தோ தத்துவம் எழுதுவதே வழமை. பெருவாரியான மத நூல்களும் நானாகுதலின் இலக்கினை நிர்ணயித்து, இந்த உருவகங்களை விவரிப்பதன் மூலமே தங்களின் மெய்யியல் கோட்பாடுகளை முன் வைக்கின்றன; நானாகுதலை தொடர் செயல்பாடாக, திடீர் மாற்றமாக, புத்துயிர்ப்பாக என பலவகைகளில் விளக்கவும் அவை தலைப்படுகின்றன.2 அவற்றைப் பின்பற்றி சாகாமல் தற்செயலாய் பிழைத்துக் கிடப்பதால் மட்டுமே நானாகியிருக்கும் இருத்தலியல் நிலையிலிருந்து நானாகுதலை பிரயாணம் என்றோ அனுபவ சேகரம் என்றோ விளக்குவதிலுள்ள சிரமங்களையும், பொருத்தமின்மைகளையும், இடைவெளிகளையும் மாற்று சாத்தியப்பாடுகளுக்கான வழிமுறைகளையும் நான் இதுவரை எழுதிய பதிவுகளில் சுட்டி வந்திருக்கிறேன்.
இந்த உருவகங்களை விடுத்து காதலை தன்னளவிலேயே முழுமையான, நானாகுதலுக்கு சத்தேற்றுகிற அறக் கருத்தாக்கமாக எடுத்தாள்வது பல வகைகளிலும் சிறப்பானதாகும். காதலை நானகுதலின் சுதந்திரத்தினை கூர்மைப்படுத்துகிற கருத்தாக்கமாக நான் அடையாளம் கண்டது தற்செயலானதுதான்; ஆனால் இதன் அடிப்படை, விருந்தோம்பல் (hospitality), மன்னித்தல், நட்பு பேணுதல் ஆகிய கருத்தாக்கங்களை தன்னளவிலேயே அறத்தின் தர்க்கத்தினைக் கொண்டதாகவும் மனித விடுதலையின் மாண்பினை வலுவாக்குவதாகவும் தெரிதா நிகழ்த்திக்காட்டியதிலிருந்தே பெறப்பட்டது. தன்னுடைய பிற்கால சிந்தனையில் காண்ட்டிய லட்சியவாதத்தின் தார்மீகம் தாண்டிய இன்னும் நுட்பமான முன்மாதிரியான அறப்பார்வையினை இந்தக் கருத்தாக்கங்களைக் கொண்டு தெரிதா உருவாக்கியுள்ளார்.
தெரிதாவின் இந்தக் கடைசி கால சிந்தனையை முதலில் என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சி செய்கிறேன்.
அடிக்குறிப்புகள்
1 http://www.mediafire.com/?kgke4wbz3hm இந்தத் தளத்தில் தெரிதாவின் முழுப்புத்தகமும் pdf ஆக தரவிறக்கக் கிடைக்கிறது.
2 பார்க்க Shulman, David, and Guy G. Stroumsa, eds. Self and Self-Transformation in the History of Religions. New York: Oxford University Press, 2002.
No comments:
Post a Comment