
ஹா மறந்துவிட்டேனே கள்ளிப்பெட்டி வலைத்தளத்தில் என் பதிவிற்கு ஒரு பாஷ்யம் வெளிவந்திருக்கிறது. அதற்கு ஏன் ஒரு சிறு டெரர் பதிவு என்று தலைப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் அதில் கடைசி பத்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது:
"காலத்துள் நுழைந்த காலப்பயணி நிற்குமிடத்தையும் அவனது காலடித் தடம் நிறைக்கிறது. ஆடாது அசையாது அமர்ந்திருந்தாலும் கணத்துக்கு கணம் அவனிருக்கும் கால வெளி நினைவுகளாக உருவம் பெற்று, நானெனும் வரலாற்றை எழுதிக் கொண்டே இருக்கிறது : நின்ற நிலையிலும் இவன் செயலாடுகிறான், நகர்ந்து கொண்டிக்கிறான், பயணித்துக் கொண்டே இருக்கிறான். காலம் ஒரு நதியாக சுழித்தொடுகிறது. இதில் காலப்பயணி காலம் உருவாக்கிய சுழியல், காலத்தால் கடத்திச் செல்லப்படும் மிதவை. இவனுக்கு செயலின்மை சாத்தியமா? இவனால் நகராதிருக்க முடியுமா? இவன் தானாய், தன்னில் உறைதல் சாத்தியமா? வேறோரிடத்தில் வேறோர் பொருளில் போர்ஹே கூறியது போல் நானாதலில் வாழ்வாய் விரியும் காலம் இடையறாது, “புனைந்து கலைக்கிறது தன் களைத்த சரித்திரத்தை.” ததாகத!இந்த வரிகளை கோபத்தில் பிரமிளும், விளக்கமாய் நாகார்ஜுனனும், போகிற போக்கில் பிரேமும், வேடிக்கையாய் பேயோனும், போர்ஹே வரியை தவிர்த்திருந்தால் உண்மையாகவே ஜெயமோகனும் எழுதியிருக்கக்கூடும். ஆனால் இவர்களாருமில்லாது கள்ளிப்பெட்டியின் ஆசிரியர் நட்பாஸ் எழுதியிருப்பது மகிழ்ச்சிகரமானதுதானே? இந்த பத்தி என்னை கேலி பண்ணுவதான(?) சட்டகத்திற்குள் எழுதப்பட்டதான தோற்றம் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதைப் படித்த உடனேயே நான் பயன்படுத்திய உருவகங்களிலுள்ள பிழைகள் எனக்கு புலப்பட்டு விட்டன. ஒன்று நான் நானாகியது என்பதைப் பயணம் என்று உருவகித்தது. இரண்டு நான் என்பதை அனுபவ சேகரமாக எனவே ஒரு கிடங்கினை மறைமுகமாக உருவகித்தது.
நான் நானாகியதை பயணமாக உருவகிப்பதிலுள்ள பிழை என்னவென்றால் அது ஒரு நேர்கோட்டினை உடனடியாக கண்முன் விரிக்கிறது. இலக்கும் குறிக்கோளும் கண் முன் தெரிகின்றன. அர்ஜுனனின் காண்டீபத்திலிருந்து புறப்பட்ட அம்புபோல கிளம்பி இலக்கினைக் கிழித்து நான் நானாகிவிடலாம் என்று மாயத்தோற்றம் கிடைக்கிறது. காண்ட் What is enlightenment? என்ற கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சோம்பேறித்தனமும் கோழைத்தனமும் இல்லாதிருந்தால் விழிப்புணர்வின் ஞானத்தினை அடைந்துவிடலாம் என்பதாக ஒரு தோற்றம் கிடைக்கிறது. எக்கி எக்கி குதித்துக்கொண்டிருந்தால் கனி கைக்கு எட்டாமலா போகும்? குருவுக்கு பாதபூஜை செய்து கொண்டேயிருந்தால் பயணமும் ஆகுதலும் சித்திக்காமலா போகும்? ஆகுதலின் இலக்கு, அடைதலின் இலக்கு மரணம் எனினும் மரணம் தாண்டுவது முடியாத காரியமா என்ன? பயணம் மேற்கொண்டாலும் சரி, பயணம் மறுத்து உறைந்தாலும் சரி காலத்தின் சுழிப்பு நானாகுதலை நிறைவேற்றியே தீரும்.
உலகளாவிய நவீன பொதுமைகள் (universals) உருவாவதற்கான தத்துவார்த்த அடிப்படைகளை நாம் காண்ட்டிடம் அடையாளம் காணும் அதே நேரத்தில் மதங்களின் மெய்யியல் அடிப்படைகளும் நான் நானாகுதலை பயணமாக உருவகிப்பதிலும் ஆகுதலை தன்னிருப்பு தாண்டிய நிலையினைக் குறிப்பதிலுமேதான் அடங்கியிருக்கிறது என்றும் அடையாளம் காணவேண்டும். ததாகதரின் மரணம் தாண்டிய பல ஜென்மங்களும் மறுபிறவியெடுத்தல்களும் பயணம் என்ற உருவகத்தினை தாண்டுவதில்லை. தற்செயல்கள், விபத்துகள், தலைகீழ் மாற்றங்கள், செயல்கள், செயல் விளைவுகள், விருப்பு வெறுப்புகள், உள்ளார்ந்த குணங்கள், துன்பக் கதாபாத்திர குறைபாடுகள், அகஸ்மாத்தான சந்திப்புகள், என பலவற்றையும் உறிஞ்சி உள்வாங்கும் வல்லமைகொண்டது பயண உருவகம். தத்துவத்தில் நிகழ்வியலின் முன்னோடியான ஹைடெக்கருக்கு தன்னிருப்பு காலம் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஆராய பயண உருவகம் தானே பின்னணியில் இருக்கிறது? மத நூல்கள் விவரிக்கும் கர்மமும், கர்ம வினைகளும், கர்ம பலன்களும் நான் நானாகுதலை பயணமாக உருவகிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. மதங்களின் அறக்கோட்பாடுகளும் நான் நானாகுதல் பயணத்தின் கற்பிதத் தளத்தினைச் சுட்டுவதிலேயே உள்ளது. தத்துவமும், ஒப்பீட்டு மத ஆய்வும் சந்திக்கும் புள்ளி இது. உதாரணமாக ஞானநாத் ஒபயசேகரேவின் 'கர்மாவை கற்பனை செய்தல்' (Imagining Karma) என்ற பிரமாதமான ஆய்வினைக் குறிப்பிடலாம். நான் நானாகுதல் என்பதன் பயண உருவகம் என்னை பொறுத்தவரை ஒரு மாயப்பிசாசு. இந்த உருவகத்தைத் தற்காலிக ஆரம்பப்புள்ளியாகக் கொள்ள வேண்டும்.
பயண உருவகத்தின் உள்ளும் புறமுமான நகர்வுகளை நிகழ்த்துதல் மூலம் மெய்யியல் (metaphysics) வலைகளிலிருந்து விடுபடலாம். உள்ளார்ந்த நகர்வுகளில் ஒன்று நான் நானாகுதலின் பயணத்தை நாடோடிப் பயணமாக மாற்றுவது. A gypsy travel. நரிக்குறவர் ஆராய்ச்சி. மாமல்லனுக்கு டமுக்கடிப்பான் பாண்டியாலோ என்று ஆட்டம் ஆட சந்தர்ப்பம் கொடுப்பது. ஜே.எம்.ஜி. லெ கிலெசியொவின் 'பாலைவனம்' என்ற நாவல் விமர்சனத்தை இந்தக் கட்டுரையின் பகுதியாக்குவது. நாடோடி கார்மென் மேற்கத்திய இசை நாடகங்களின் மூலம் தத்துவத்திலும் சிந்தனையிலும் ஏற்படுத்திய தாக்கத்தினை ஆராய்வது. இல்லை அய்யனார் விஸ்வநாத் டிவிட்டர் உரையாடல் ஒன்றில் குறிப்பிட்டது போல டோனி காட்லிஃபின் படங்களை விவாதிப்பது.
பயண உருவகத்தை முழுமையாக விலக்கி நான் நானாகுதலை பல்திசைப் படர்தல் எனவோ காமக் களியாட்டங்களின் கலவியின் பூர்த்தியற்ற முன்னோடி நடவடிக்கைகளாகவோ விவரிக்கலாம். பராக்கு பார்க்கும் எனக்கு இப்போதைக்கு சாத்தியங்களே தென்படுகின்றன. எதை எழுதுவேன் என்பது நிச்சயமில்லை.
பயண உருவகத்திலிருந்து தப்பிப்பதை விட கடினமானது நான் நானாகுதலை அனுபவ சேகரமாக விவரிக்கும்போது மறைமுகமாக உருவாகிற கிடங்கு உருவகத்திலிருந்து தப்பிப்பது. சேகரமற்ற நிலையை ஆணவம், கன்மம், மாயை, வாசனை, நினைவு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட நிலையாய் மதங்கள் உன்னதப்படுத்தத் தவறவில்லை. சேகரக்கிடங்காகிய உடல் சிக்கியிருக்கும் வர்க்கம், குழுமம், வரலாற்று காலகட்டம் ஆகியனவற்றை அரசியலாக்கவும் அரசியல் கோட்பாடுகளும் நடை முறைகளும் தவறவில்லை. சேகரமற்ற தன்னெழுச்சியை தழுவலாமென்றொரு எண்ணம். இதை எழுதிக்கொண்டிருக்கும்போது என் கழுத்தைக் கட்டி கொஞ்சும் குழந்தைகள் அவர்கள் வரைந்த ஓவியத்தையும் இக்கட்டுரையோடு சேர்க்கச் சொல்கின்றனர். சரி சேர்த்து விட்டால் போயிற்று என்று சேர்த்து விட்டேன்.
முன்னுரைக்கான அழகுக்குறிப்புகளில் இதுவரை விட்டுப்போனது சாகாமல் பிழைத்துக் கிடப்பதால் என்ற பதச் சேர்க்கையில் அடங்கியிருக்கும் தத்துவச் சொல்லாடலுக்கான இருத்தலியல் ஆதார உரைகளே. மார்டின் பூபரிலிருந்து ழாக் தெரிதா வரை யூத தத்துவ அறிஞர்கள் அனவருமே யூத இனப்படுகொலைக்குத் தப்பி வாழ்ந்ததை தங்கள் சிந்தனையின் பகுதியாக மாற்றிக்கொள்ளத் தவறவில்லை. ஈழத்தில் நடந்து முடிந்துவிட்ட பேரழிவுக்குப் பின் வாழும் நம்முடைய சிந்தனையும் தப்பிபிழைத்து கிடப்பதை ஆதார உரையாகவும் (premise) அறிவுத்தோற்றவியல் உடைசலாகவும் (epistemological break) கொள்ள வேண்டும். இதை பாரதி விவாதத்தின்போதே சொன்னேன். நாகார்ஜுனன் அதை உன்னிப்பாக வாசித்து சேரன் கவிதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். அவருடைய தளத்தில் வாசிக்க பாருங்கள் http://www.nagarjunan.net/node/2367
-தொடரும்
No comments:
Post a Comment