பீடிகை
இமானுவல் காண்ட், மார்ட்டின் ஹைடெக்கர், ழாக் தெரிதா என்று இக்கட்டுரைக்குத் தலைப்பு வைத்திருக்கவேண்டியது; அப்படி ஒரு தலைப்பு வைத்திருந்திருந்தேனென்றால்
ஜூலியா கிறிஸ்தவா கட்டுரையை வாசித்த சிலர் எனக்கு எழுதியதுபோல நமக்கும் இந்த மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் கேட்டு எழுதக்கூடும். இலக்கியமும் தத்துவமும் இணையும் இடங்களிலிருந்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு தமிழில் எளிய முன்மாதிரிகள் இல்லை. கலைச்சொற்களை சரியாக பயன்படுத்தவேண்டும் என்ற அக்கறை வேறு பாடாய்படுத்திவிடுகிறது. அதற்காக வகுப்பறை பாலபாடம் போன்ற பாவனையை மேற்கொண்டால் மூக்கை மேல் நோக்கி நிமிர்த்திக்கொண்டது போலிருக்கிறது. பாவனைகளையும், சைகைகளையும், நிகழ்த்துதல்களையும் எழுதுவதுதானே நான் உத்தேசித்தது? அவ்வாறாக எழுதுவதுதானே கட்டவிழ்ப்பு (deconstruction)? கட்டவிழ்ப்பு எனும்போது அது ஏதோ மென்மையான சைகையென தோற்றம் கொள்கிறது; கட்டுடைப்பு என்றாலோ முழுமையாக ஹைடெக்கரின் பொருளில் வன்சைகையாகிவிடுகிறது. 'கட்டவிழ்ப்பின்' உதடுகள் கோணிய சிறு புன்னகையும் காமமும் விஷமமும் பற்றும் கண்களும் எனக்கு உவப்பானவை.
பிரச்சினை
என்னதான் ஐயா பிரச்சினை என்று நீங்கள் முஷ்டி உயர்த்தலாம்தான்; பொதுவெளியில் வேட்டியை மடித்துக் கட்டி நிற்கலாம்தான். அல்லது கொசுவத்தை ஆவேசமாய் சொருகலாம்தான். பிரச்சினை 'நான் நானாகியது எப்போது, எப்படி' என்பதுதான். இங்கே 'நான்' மொழியிலுள்ள சுட்டு மட்டுமே, எம்.டி.முத்துக்குமாரசாமி என்ற அனுபவ சேகரத்தைக் குறிப்பது பாவனை. நான் நானாகியது எனும்போது இடமிருந்து வலம் எழுதுவதுபோல நானாவதற்கு ஒரு திசை இருப்பது போலவும், நானாகும் பயணம் டிக்கெட் எடுத்து ரயிலேறி அடுத்த ஸ்டேஷனில் இறங்குவது போலவும் எளிய சித்திரம் உருவாவது மொழியின் மாயம். காண்ட், The critique of pure reasonஇல், நான் நானாகுவது, தன்னிலை, தன்னிருப்பு கடந்த கற்பனையின் வழித்தடம் என்று வரைந்து காட்டினார். மெய்யியலின் தோற்றுவாய் இது என அழிக்கப் புறப்பட்டனர் ஹைடெக்கரும் தெரிதாவும். தெரிதா மார்க்சின் வழி காண்ட்டிற்குத் திரும்பி வருவதை திக்கித் திக்கி நான்'பேச' விழைகிறேன். துண்டு துண்டாய் எழுத முயற்சிக்கிறேன்.
ஏன் துண்டு துண்டாய்?
ஏன் துண்டு துண்டாய் எழுதவேண்டும் தத்துவத்தை என்றால் கோர்வையும் ஒருமையும் கற்பிதம் என்று பதிலளிக்கலாம். மொழியின் இலக்கணமும் அமைப்பும் அதனால் ஏற்படும் ஒருமையும் கோர்வையும் கடவுள் சௌக்கியமாய் உலகை கவனித்திருப்பதான மயக்கத்தை உண்டு பண்ணக்கூடியது. மொழியை முழுமையாக சிதைத்தால் பிதற்றலாகிவிடலாம். இடைவழி, திக்கித் திக்கிப் பேசுவதை துண்டு துண்டாய் எழுதுவது. ஊழிக்கு, பேரழிவுக்கு, இனப்படுகொலைக்கு தற்செயலாய் தப்பியவனின் பேச்சு பின்னெப்படி இருக்குமாம்? தவிரவும் கடவுள் மரணப்படுக்கையில் இருப்பதான சோகத்தில் கைபிசைந்து கண்ணீர் உகுக்கும் நவீனத்துவ மலையாள கவிதை வரிகளை தமிழில் மேனாமினுக்கிக் காட்ட இந்த தத்துவம் சந்தர்ப்பங்களை அளிப்பதில்லை. காரண காரியத் தொடர்புகளற்ற நிகழ்வியலை கடவுளா யாரது தெரியாதே என்று எழுதுவது எப்படி இருக்கும்? நான் நானாகுவது பாலைவனத்தில் தொலைந்து போவது போன்ற பயணம். நிச்சயமாகப் பயணம்தானா நின்ற இடத்திலேயே சுழன்று சுழன்று ஆலாபனையொன்று பண்ணியிருந்தால் அதை என்னவென்பது? இல்லை செயலின்மையில் உறைந்து போய் பல வருடங்கள் கழிந்திருந்தால் நான் நானாகவில்லை என்று அறுதியிட்டுவிடலாமா இறப்பறிக்கை தயாரித்து மனமகிழ் மன்றங்களுக்கு சுற்றுக்கு அனுப்பி விடலாமா?
சாகாமல் பிழைத்துக்கிடந்து பராக்கு பார்த்ததை எழுதுவதே என் தத்துவ விசாரம். அவ்வபோது தொடர்வேன். இக்குறிப்புகளை முன்னுரையாகக் கொள்ளவும்.
1 comment:
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Post a Comment