Thursday, December 13, 2012

நித்ய அனுசந்தான கோவில் திருமொழி

ஶ்ரீராமானுஜரின் சாதி எதிர்ப்புக்கான வரலாற்று ஆதாரங்களை வேறொரு பதிவுக்கு பின்னூட்டங்கள் இட்டிருந்த வெங்கடேசன், குலசேகரன் ஆகியோர் கேட்டிருந்தனர். வேறு சில ஆதாரங்களைக் கொடுத்திருந்த நான் 'உடையவர் உயர்நலம்' என்று தொடங்கும் நித்ய அனுசந்தான கோவில் திருவாய்மொழியைத் தேடிக்கொண்டிருந்தேன். அந்த வீடியோவை எனக்கு அனுப்பித் தந்த நண்பர் பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கு நன்றி. அந்த வீடியோவை கீழே தருகிறேன். ஶ்ரீராமானுஜரைப் பற்றிய அ.மார்க்ஸின் கட்டுரையை வெங்கடேசன் அனுப்பித்தந்திருந்தார் அதற்கான சுட்டியையும் கீழே தந்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்' நாடகமும் மிகவும் முக்கியமானது. நித்ய அனுசந்தானம் 'திராவிட' வேதத்தை புகழ்ந்தும் இனவேறுபாடு இல்லாமல் உடையவராய்  உயரவேண்டும் என்று பிரார்த்திப்பதும் கவனிக்கத்தக்கது.


https://www.youtube.com/watch?v=2sHmISqMM8o

அ.மார்க்ஸின் கட்டுரை http://www.keetru.com/puthiyakaatru/jun06/a_marx.php 


திராவிட வேதா எனும் தளத்தில் நாலாயிர திவ்வியபிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை , விளக்க உரை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. விளக்க உரையாக ஶ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின் உரை வழங்கப் பட்டிருக்கிறது. பார்க்க http://dravidaveda.org 

3 comments:

Venkatesan Chakaravarthy said...

நல்ல பதிவு. சில சிறிய தகவல் பிழைகள். "கோவில் திருவாய்மொழி" என்பதே சரி. இது நம்மாழ்வார் அருளிச் செய்ய திருவாய்மொழியின் சில குறிப்பிட்ட பதிகங்களின் தொகுப்பு. அதிக பிரபலம் இல்லாத "கோவில் திருமொழி" திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழியின் சில குறிப்பிட்ட பதிகங்களின் தொகுப்பு. முன்னது "உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்" என்று தொடங்கும். பின்னது "வாடினேன் வாடி வருந்தினேன்" என்று தொடங்கும் (இந்த பதிகத்தில் தான் "குலம் தரும், செல்வம் தந்திடும்" என்ற பிரபல பாசுரம் உள்ளது). "உயர்வற உயர்நலம் உடையவன்" என்பதில் உள்ள "உடையவன்" இறைவன்!

நீங்கள் சொன்னது போல திருவாய்மொழி தனியன்கள் (இவை திருவாய்மொழியையும், நம்மாழ்வாரையும் போற்றி பின்னால் வந்தவர்களால் எழுதப் பெற்றவை) திருவாய்மொழியை தமிழ் வேதம் என்றே குறிப்பிடுகின்றன. இவற்றை வளர்த்தவர் ராமானுஜர் என்றும் பேசுகின்றன:

"ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்"

"மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்" (திருக்குருகூர் - நம்மாழ்வார் அவதரித்த தலம்).

"தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்" (இதத்தாய் - செவிலித் தாய்).

Venkatesan Chakaravarthy said...

மேலே சொன்ன தனியன்கள் தவிர, திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியும் ராமானுஜர் தமிழ் மறைகளையும், ஆழ்வார்களையும் அடிபணிந்தவர் என்றே கூறுகிறது. உதாரணமாக, இதன் முதல் பாசுரம் "பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன்" என்றும் இரண்டாவது பாசுரம் "குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன்" என்றும் கூறுகின்றன (மாறன் - நம்மாழ்வார், குறையல் பிரான் - திருக்குறையலூரில் அவதரித்த திருமங்கை ஆழ்வார்). இராமானுசர் வழி வந்த ஆசாரியர்கள் நாலாயிரத்துக்கு உரைகள் இயற்றிப் போற்றினர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

இப்படி இருப்பினும் ஒரு நெருடல் பற்றி கேள்விப் படுகிறேன். ராமானுஜர் விசிட்டாத்வைதத்தை நிறுவ இயற்றிய நூல்கள் "ஸ்ரீபாஷ்யம்" உட்பட ஒன்பது. அனைத்தும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. மேலும், இவற்றில் வடமொழி சுருதிகளையும், ஸ்ம்ரிதிகளையும், பிரம்ம சூத்திரத்தையும் விரிவாக மேற்கோள் காட்டும் ராமனுஜர்,
தமிழ்வேதங்களை ஓரிடத்திலும் மேற்கோள் காட்டவில்லை. இந்த கூற்று உண்மையா என எனக்கு தெரியாது. நான் இந்த ஒன்பது நூல்களில் ஒன்றையும் படித்ததில்லை. அதே சமயம், இந்திய அளவில் அத்வைதம் போன்ற மற்ற தரிசனங்களோடு விவாதத்தில் இருந்த ராமானுஜர், அனைவரும் அறிந்த வடமொழி நூல்களை மட்டுமே கையாண்டிருக்கலாம் என்றும் கருத வாய்ப்புள்ளது

Venkatesan Chakaravarthy said...

இது விஷயமாக வேறொரு தகவலும் குறிப்பிட விருப்பம். இராமானுஜருக்குப் பின் வந்த வேதாந்த தேசிகர் வடமொழியில் "திராவிட உபநிஷத் சாரம்" என்றொரு நூல் எழுதியுள்ளார். நூறு பதிகங்கள் கொண்ட திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் சாராம்சத்தை ஒரு சுலோகத்தில் உரைப்பது என்ற வகையில் சுமார் நூறு வடமொழி சுலோகங்கள் கொண்ட நூல் இது.