Monday, September 26, 2011

நான் நீங்கள் நினைப்பது போல் கிடையாது சார்

சுகுணா திவாகர் தன் வலைத்தளத்தில் என்னுடைய தீராநதி பேட்டியை முன்னிறுத்தி என் சாதி என்ன என்று பேட்டி கண்ட நண்பர் கடற்கரை என்னை வினவியிருந்தால் நான் என்ன சொல்லியிருப்பேன் என்று விவாதித்திருக்கிறார் என நண்பர்கள் மூலம் அறிந்தேன். அந்தப் பதிவை அவர் வலைத்தளத்திற்கு சென்று தேடிப்பார்த்தேன். மீண்டும் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. டிவிட்டரில் அறிமுகமில்லாத ஒருவர் இந்த எம்டிஎம் என்ன சாதி என்று கேட்டு கர்ம சிரத்தையாய் என்னை tag-ம் செய்திருந்தார். இந்த மானிடவியல் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுவோமே என்று இதை எழுதுகிறேன்.

நான் திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த சைவ வேளாள சாதியில் பிறந்தவன். நான் இந்த சாதியில்தான் பிறப்பேன் என்று அடம்பிடித்து பிறந்ததாகச் சொல்லமுடியாது. சைவ வேளாளன் ஒன்றரைப் பார்ப்பான் என்று எங்களூர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. நானுமே ஒன்றரைப் பார்ப்பான் ரகம்தான். கல்லூரி நாட்களிலும் வயது இருபதுகளிலும் இருந்தபோது அப்படி இப்படி இருந்தாலும் தட்டுத்தடுமாறி ஒன்றரைப் பார்ப்பான் இடத்திற்கு  நாற்பதுகளில் வந்து சேர்ந்துவிட்டேன்.

1996இலிருந்து 2003 வரை பௌத்தம், சமணம், இஸ்லாம், யூத மதம், கிறித்தவம் ஆகிய மதங்களை சொல்லிய வரிசைக்கிரமப்படியே தழுவலாம் என்று முயற்சி செய்து தொடர்ந்து தோற்றுப்போயிருக்கிறேன். இதற்காக உலகம் முழுவதும் அலைந்ததுதான் மிச்சம். ஒருவேளை நான் தேர்ந்தெடுத்த பாதை தவறோ என்னவோ. ஒவ்வொரு மதத்திலும் உள்ள தியான முறையைக் கற்று அதன் மூலம் அந்த மதத்தைத் தழுவுவது என்பதும் அதன் மூலம் சாதியைத் துறப்பது என்பதுமே நான் பயணித்த பாதை. ஆனால் தழுவல் நிகழவில்லை. ஏதேதோ காரணங்களால் தட்டிப் போயிற்று. மதமற்ற ஸ்காண்டினேவிய தியானம்கூட தோதுப்பட்டு வரவில்லை. நல்ல வேளையாக எந்த சாமியாரிடத்தும் சிக்கிக்கொள்ளவில்லை.

சரி தமிழ்ப்பண் இசை கற்றுக்கொள்வோம் என்று தேவாரம் திருவாசகம் ஆகிய திருமுறைகளை ஓதும் முறைகளை முறையாகப் பயின்றேன். தியானம் கைகூடவில்லை. வைணவப் பிரபந்தங்களை பாராயணம் செய்து பார்த்ததிலும் பெரிய மன அமைதி கிட்டவில்லை.

2003-இல் தற்செயலாக வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் அதிகாலையில் ஶ்ரீருத்ரம் ஜெபிக்கப்படுவதைக்கேட்டேன். அப்பா இந்து சமய அறநிலையத்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றியதால் சிறுவயது முதலே கோவில்களோடு சேர்ந்த வாழ்க்கையே அமைந்திருந்தது. ஆகையால் ஶ்ரீருத்ர ஜெபத்தினை அது என்னவென்று தெரியாமலேயே சிறு வயதில் நான் பலமுறை கேட்டிருக்கக்கூடும். ஶ்ரீருத்ரஜெபம் அபாரமான லயம் பொருந்தியது. அதை தினசரி கேட்டே ஆகவேண்டும் என்று உள்கட்டாயம் ஏற்பட்டது. தினசரி அதிகாலையில் தண்டீஸ்வரர் கோவில் போய் நின்றேன். சில நாட்கள் அதிகாலை ஶ்ரீருத்ரஜெபம் கேட்காவிட்டால் தலைவெடித்து சுக்குநூறாகிவிடும்போல் இருந்தது. ஏற்கனவே அரை குறை சமஸ்கிருதம் தெரியுமாதலால் நானே பாராயணம் செய்தால் என்ன என்று தோன்றியது. ஶ்ரீருத்ரம் பாடத்தை வாங்கி தினசரி உருப்போட்டேன். தண்டீஸ்வரர் கோவிலுக்குப்போய் ஶ்ரீருத்ரம் ஜெபிக்கப்படும்போது நானும் மனத்தினுள்  கூடவே ஜெபிப்பேன். இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த தியானமுறை என்று உறுதியாகப்பட்டது. சமஸ்கிருதமும் கூடவே மேலும் மேலும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆறு மாத காலத்திற்குள் ஶ்ரீருத்ரம் மனனமாகிவிட்டது. இதற்கிடையில் கூத்துப்பட்டறையில் யோகம் பயிற்றுவிக்கிற ஈ.ஆர்.கோபாலகிருஷ்ணன் எனக்கு காயத்ரி ஜெபமும் சந்தியாவந்தனமும் சொல்லித்தந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக என் அதிகாலை என்பது சந்தியா வந்தனம், சூரிய நமஸ்காரம், ஶ்ரீருத்ரஜெபத்தினோடு கூடிய சிவ பூஜை என்பதாக இருக்கிறது. சிவாலயங்களில் நடப்பது போலவே ஶ்ரீருத்ரத்திற்கு பிறகு பஞ்சசூக்தம் சொல்லி மந்திர புஷ்பத்தோடு என் தின சிவ பூஜை நிறைவு பெறும். போதுமான நேரமில்லையென்றால் பஞ்சசூக்தத்தை விட்டுவிடுவேன். எழுத்தாளர் கி.ஆ.சச்சிதானந்தன் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரியையும் தினசரி ஜெபத்தினோடு சேர்த்துக்கொள்ளச்சொன்னார்; சேர்த்துக்கொண்டேன். எப்பொழுதுமே சைவ உணவுதான். குடிப்பதில்லை புகைப்பதில்லை.

ஶ்ரீருத்ரம் கிருஷ்ண யஜுர் வேதத்தின் பகுதி. சமஸ்கிருத அறிவு விருத்தியாக விருத்தியாக நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டேன். கூடவே பல சமஸ்கிருத இலக்கிய இலக்கண நூல்களையும்.

கடந்த சில வருடங்களாக மனம் ஆழமான அமைதியை அடைந்துவிட்டது.

இப்படியாக அமைந்துவிட்ட வாழ்க்கைமுறையினால் என் எழுத்து வேளாள-பார்ப்பனீய கருத்தியலை வெளிப்படுத்துவதாக அமையுமா என்று எழுதி எழுதிப்பார்த்துதான் அறியவேண்டும். மற்றவர்கள் பார்த்துச் சொன்னாலும் நல்லதுதான்.

எப்படியாக இருந்தாலும் நீங்கள் நினைப்பது போல் நான் கிடையாது சார்.
Post a Comment