Wednesday, September 14, 2011

இரவல் மயில்பீலி

இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனதே சரியில்லை. என்னுடைய வலைத்தளத்தைப் படித்துவிட்டு வரும் கடிதங்களில் ‘குரு வணக்கம்’ ‘குரு நமஸ்காரம்’ என்று ஆரம்பித்து எழுதப்படும் கடிதங்களைப் படித்து இனம் புரியாத திகைப்பில் ஆழ்ந்திருக்கிறேன். எனது தொழில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக உயர் கல்வி ஆசிரியனாக பணிபுரிவதுதான் என்றாலும் நான் இவ்வளவு பணிவான கடிதங்களை என் மாணவர்களிடமிருந்துகூட வரப்பெற்றதில்லை. எப்பொழுதிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்?

உதாரணத்திற்கு ஒரு கடிதம் டிஜிட்டலில் கிறுக்கிய பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறது. அவர் தினசரி இணையத்தில் வாசிக்கும் எழுத்தாளர் ஒருவர் ஜெர்ஸி கோசின்ஸ்கியின் ‘Steps’ நாவலை குறிப்பிட்டிருந்தாராம். இவர் இணையத்தில் தேடி  கோசின்ஸ்கியின் ‘Hermit of the 69th street’ என்றொரு நாவலையும் எழுதியிருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டாராம். இரண்டு நாவல்களும் என்னிடம் இருக்குமா, அவற்றை படிக்கலாமா, கூடாதா என் ஆலோசனையையும் அபிப்பிராயத்தையும் சொல்லி முடிந்தால் புத்தகங்களையும் தந்து உதவ முடியுமா என்று கேட்டு கடிதம் முடிகிறது. கோசின்ஸ்கியின் ‘Steps’ வன்முறைச் சித்தரிப்புகள் கொண்டதாயிற்றே, 69 எதைக் குறிக்கிறது தெரியுமா என்று இரண்டு வரி பதிலெழுதிப்போட்டேன். நீங்கள் வேண்டாமென்றால் படிக்கமாட்டேன் சார் என்று பதில் வந்தது. மீண்டும் அதே டிஜிட்டல் பிள்ளையார் சுழி. நான் வேண்டாமென்றா சொன்னேன்?

இன்னொரு கடிதம் இரவில் இயற்கை உணவு சாப்பிடலாமா என்று குருவிடம் வினவுகிறது. குரு இயற்கை உணவு என்றால் என்ன என்று கேட்டு எழுதுகிறார். ஒரு முறி தேங்காய்த் துருவல் என ஆரம்பித்து காய்கறிக்கடையின் விலைப்பட்டியலே பதிலாய் வருகிறது. இவ்வளவு சாப்பிடலாமா என்று குரு ஐயம் எழுப்புகிறார். ஏன் தோட்டத்திலேயே போய் மேய்ந்துவிடக்கூடாது என்றும் ஆலோசனை சொல்கிறார். அவருக்குமே மேயும் ஆசை எழுகிறது.

எளிய உதாரணங்களை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது குருவுக்கு ‘கை மைதுனம் செய்வதால் கண் குருடாகிவிடுமா?‘ என்று கேட்டு வந்த கடிதங்களின் தொடர் உரையாடல்தான். குரு, மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’யையும், ‘ஹரிஜன்’ இதழில் மகாத்மா எழுதிய  கடிதங்களையும் படிக்க அறிவுறுத்துகிறார். ‘சத்தியம்’ என்றால் என்ன? ‘சோதனை’ என்றால் என்ன என்று கேட்டு பதில் வந்தது. பைப்பை திறந்தால் தண்ணீர் வருகிறது; பைப்பைத் திறக்காவிட்டால் தண்ணீர் வருவதில்லை இது சத்தியம். சில சமயம் பைப்பைத் திறந்தாலும் தண்ணீர் வருவதில்லை இதுதான் சோதனை என்று குரு எளிய உதாரணம் மூலம் விளக்கினார். சிஷ்யன் இப்போது பாத்ரூமிலேயேதான் இருக்கிறாராம். என்ன காரணம் தெரியவில்லை.

கோசின்ஸ்கியோடு தன்னிலையில் ஆரம்பித்த இடுகை, இயற்கை உணவு, மகாத்மா காந்தி என்று நகர்ந்தவுடன் படர்க்கையில் சொல்லப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன திகைப்பிற்கான காரணம். நானெப்படி அவனானேன்?

கடிதங்களினாலேயே கட்டப்பட்ட மடம் உருவாகிவிட்டிருந்தது. குரு தும்மினால் கூட போதும் டிவிட்டர், ஃபேஸ்புக், குறுஞ்செய்தி, கூகுள் பஸ் என்று செய்தி பறக்கிறது. குரு தமிழ் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார். கடிதம் எண்: 1234567893: நீங்கள் எழுதிய கதைக்கும் எடுக்கப்பட்ட சினிமாவுக்கும் சம்பந்தமேயில்லையே? ஆனாலும் படம் சூப்பர் சார்.

கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறீர்கள். தலையை மொட்டை அடித்தாகிவிட்டது. கர்கலாவில், செரெவனபெலகொலாவில்  நிர்வாணமாக நிற்கும் கோமடேஷ்வரரைப் போல தோற்றம் வந்துவிட்டது. சமண மதமே தமிழ் வரலாற்றில் மறைக்கப்பட்ட மதம் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.

புதிதாய் கடிதம் எழுதியிருக்கும் வாண்டுக்கத்திரிக்காயை மயில் பீலியால் வருடிக்கொடுக்க நினைக்கிறீர்கள். மயில் பீலியை காணவில்லை.

அது சரி, எப்போது படர்க்கை சொல்லல் முன்னிலையானது?

நான் உங்களுக்கு நானே பிடித்த மயிலின் பீலியை இரவலாகத் தருகிறேன். இந்த இடுகை மூலமாக. மயிலெங்கே என்று மட்டும் கேட்காதீர்கள்.