Sunday, September 11, 2011

எளிமையின் அழகியல்


ஐந்து வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஐநூறு வார்த்தைகளில் சொல்வது ஆபாசம். தூரிகைத் தீற்றல் முழு உருவத்தையும் கற்பனைக்கு விட்டுவிட வேண்டும். சாயத்தை அள்ளிப்பூசினால் கல்யாண வீடுகளில் நகைக்கடை போல பட்டுப்புடவை சரசரக்க வளையவரும் பெண்களைப்போல பார்க்கவே கண்கள் கூசும். இவ்வாறெல்லாம் எளிமையின் அழகியலைப் பற்றி பேச ஆரம்பிக்கலாம்; என்றாலும் பாஷோவின் ஹைக்கூக்களில், காவபட்டாவின் நாவல்களில் எளிமை சாதிக்கும் நுட்பமும் தீவிரமும் சிக்கனம் அழகை எப்போதுமே கூட்டிக்கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்று ஆரம்பிப்பதே பொருத்தமாக இருக்கும். 
காவபட்டா தன்னுடைய நோபெல் பரிசு ஏற்புரையை ஜப்பானிய இலக்கியத்தில் பனியும் நிலவும் என்றே தலைப்பிட்டிருந்தார். பாஷோவின் ஓராயிரம் நிலவுகளைச் சுட்டிக்காட்டும் காவபட்டா பாஷோவின் பல ஹைக்கூக்களில் நிலவு வெளியே காய்வதில்லை என்கிறார். சங்க அகப்பாடல்களைப் பற்றி காவபட்டா பேசுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.
அக வெளியில் காயும் நிலவின் மெல்லிய கிரணங்களை ஒரு வரியில் சொல்ல அதன் அதீதம் பீடிக்கும் வாசகனுக்கு உன்மத்தம் ஏறும். முழு நாவல்களையுமே பல நூறு ஹைக்கூக்களின் தொகுதிபோல எழுதும் காவபட்டா, பாஷோவின் அகவெளி கிரணம் ஏற்படுத்தும் உன்மத்தத்தை, மெல்லிய சித்திரமாய் தீட்டப்படும் கிமோனாவின் ஒற்றை முடிச்சு, புறாக்குஞ்சு போல விம்மும் ஒற்றை முலை,  கண்ணாடியில் தெரியும் பாதி முகம், கூந்தலில் செருகியிருக்கும் சிறு க்ளிப், ஸ்கார்ஃபில் இருக்கும் நாரை, சிறு பாதங்களின் மென் நடை, வண்ணக்குடை என்பன மூலம் ஏற்படுத்திவிடுகிறார். உயர் கவித்துவ பாலியல் வெளியாக ஒவ்வொரு நாவலும் படித்து முடித்தபின் விரிகிறது.
சங்க அகப்பாடல்களின் மறு வாசிப்பு தமிழில் காவபட்டாவின் உயர் கவித்துவ பாலியல் வெளியைப் போன்ற நவீன கதைசொல்லலை உருவாக்கியிருக்க வேண்டும். அதை விடுத்து வாசக கற்பனைக்கு எதையுமே விட்டுவைக்காத பௌராணிக கதை சொல்லலும், உயர் கவித்துவ பாலியலுக்கும் மஞ்சள் எழுத்துக்கும் வேறுபாடே இல்லாத கொச்சையும் கோலோச்சுகிறது. 
மூச்சு முட்டாமல் என்ன செய்யும்? ஜன்னலுக்கு வெளியே ஆகாயத்திலும் நிலவில்லை.

No comments: