Sunday, September 25, 2011

இலக்கியத்தில் வெற்றியும் தோல்வியும்


எனக்கு வந்திருக்கும் சில கடிதங்கள் கோணங்கியின் நாவல்களை பரிதாபகரமான தோல்விகள் என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவுகின்றன. ஜெயமோகன் எந்த இடத்தில் எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் தத்துவத்திலும் இலக்கியத்திலும் படைப்புகளில் வெற்றி தோல்வி என்று உள்ளதா என்ன என்பதே என் கேள்வி. அதிகம் எழுதுதல், அதிக வாசகரைப் பெற்றிருத்தல், எழுத்தின் மூலம் பணம் சம்பாதித்தல், புகழ் பெற்றவராக இருத்தல், புகழ் பெற்ற படைப்புகளை எழுதியிருத்தல் இவைகளையெல்லாம் வைத்து வியாபார சினிமா, வணிகச் செயல்பாடுகள், கொடுக்கல் வாங்கல், சந்தை நிலவரம் ஆகியவற்றை அளக்கலாமே தவிர இலக்கிய மற்றும் தத்துவப்படைப்புகளை மதிப்பிட இயலாது.

நான் வேண்டுமென்றேதான் தத்துவப்படைப்புகளையும் இந்த விவாதத்திற்குள் கொண்டு வருகிறேன். ஏனெனில் தத்துவப்படைப்புகளை வைத்து இந்த பிரச்சினையினை விளக்குவது எளிது. தத்துவப் படைப்பு ஒன்று கடினமான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது அதிக வாசகர்களினால் வாசிக்கமுடியவில்லை என்பதனால் அதை நிராகரிக்க முடியுமா அல்லது அதன் முக்கியத்தைக் குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? இல்லை தோல்வி என்று விவரிக்கத்தான் முடியுமா? அப்படி தத்துவப் படைப்புகளை விவரித்தோமேயென்றால் அவ்வளவு தத்துவ நூல்களையும் குப்பையில் தூக்கிப்போட்டுவிடவேண்டியதுதான்.

தத்துவத்தை விட அதிக மொழிச்சுதந்திரத்தைத் தரக்கூடியது இலக்கியம்; அதில் என்ன வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமானாலும் அதி சுதந்திரனாக எழுதிப்பார்க்க வேண்டியதுதான் முக்கியம். வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நடைகளில் பல எழுத்தாளர்கள் ஒரு காலகட்டத்தில் எழுதுகிறார்கள் என்பதுதான் ஒரு மொழிக்கு செழுமை சேர்க்கும் விஷயமே தவிர ஒரே மாதிரியான பிரசித்தி பெற்ற எழுத்தே இருப்பது மொழியையோ கலையையோ செழுமைப்படுத்தாது.

அடிமுறை, வியாபார சினிமா, TRP television ratings ஆகியவற்றில்தான் வெற்றி தோல்வி என்ற சொல்லாடல் சாத்தியமே தவிர இலக்கியத்தில் அல்ல.

என் தலையெழுத்து இப்படி  பாலபாடமாய் ஒரு குறிப்பு எழுத நேரிட்டது.

6 comments:

ROSAVASANTH said...

/அதிகம் எழுதுதல், அதிக வாசகரைப் பெற்றிருத்தல், எழுத்தின் மூலம் பணம் சம்பாதித்தல், புகழ் பெற்றவராக இருத்தல், புகழ் பெற்ற படைப்புகளை எழுதியிருத்தல் இவைகளையெல்லாம் வைத்து வியாபார சினிமா, வணிகச் செயல்பாடுகள், கொடுக்கல் வாங்கல், சந்தை நிலவரம் ஆகியவற்றை அளக்கலாமே தவிர இலக்கிய மற்றும் தத்துவப்படைப்புகளை மதிப்பிட இயலாது./

ஜெயமோகனின் தீர்ப்பு விவாதத்திற்குரியது; ஆனால் அவர் மேற்சொன்ன பொருளில் வெற்றி/தோல்வி பற்றி பேசவில்லை. கோணங்கி தன் இலக்கிய வடிவத்தை சாதிக்க கையில் எடுத்த உத்தி, அதை சாதிக்கவில்லை என்கிற பொருளில் சொல்லியிருப்பார். அது சரியாக இருக்கலாமோ என்று சந்தேகம் எனக்கு உள்ளது. உறுதியாக சொல்ல கோணங்கிக்கான 'தெளிவான' அணுகுமுறை தேவையென்பதால் சாத்தியமில்லை.

mdmuthukumaraswamy said...

நான் சொன்ன பொருளில் ஜெயமோகன் இலக்கிய வெற்றி தோல்விகளைப் பற்றி பேசவில்லையென்றால் நல்லதுதான். ஆனால் அவருடைய ரசனையை வைத்து மட்டுமே மற்றவர்கள் எல்லோரும் அவருடைய தீர்ப்புகளை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவேண்டுமென்று நினைக்க இயலாது. இது தவிர பொதுவாகவே வெற்றி தோல்வி என்ற சொல்லாடல் இலக்கியத்திற்கு ஒத்துவராது என்பதே என் வாதமாகும். கோணங்கியின் நாவல்கள் கடினமான மொழியில் எழுதப்பட்டிருப்பதால் பிரசித்த எழுத்து போல சுலப வாசிப்பிற்கு கிடைக்காது என்பதைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலக்கியப் பிரதிகளை அவை சார்ந்தே வாசிக்கவேண்டியதுதானே அவைகளுக்கு வெளியிலிருந்து எதற்காக ஒரு அணுகுமுறை? அதுவும் தெளிவான அணுகுமுறை? தனித்துவமான மொழிநடையையும் வடிவங்களையும் innovate செய்கிற எழுத்தாளர்களை நாம் வரவேற்க வேண்டுமே தவிர நம் முன் முடிவுகளை அவர்களின் மேல் ஏற்றமுடியாது. அப்படிப்பட்ட தீர்ப்புகூறல் ஒரு மொழியில் கலாபரிசோதனைகளுக்கான வழிகளை அடைத்துவிடுகிறது.

சாத்தான் said...

கோணங்கியின் எழுத்து முறை பற்றி பிரம்மராஜன் எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா? http://brammarajan.wordpress.com/2008/12/02/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/

நான் கோணங்கியைப் படித்ததில்லை. ஆனால் பிரம்மராஜனின் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் படிக்காதது பெரிய நஷ்டம் இல்லை என்று தோன்றுகிறது.

arulselvan said...

ரோசா: மொழியை எப்படியும் (மொழியாகவே கூட) ரசிக்கலாம்தானே. புனைவுபோலத்தான் ரசிக்கவேண்டுமென்பதில்லை. அதை நாவல் என்றழைத்தாலும். கலை என்பது கூழாங்கல்லைப்போல பெரும் பாறையைப்போல சும்மா கிடக்கலாம் அல்லவா. நீங்கள் வேண்டியபடி வாசித்துக்கொள்ளுங்கள். என்ன, கற்களைத் தரம்பிரித்து சந்தைப்படுத்தமுடியாது. நான் தரம்பிரிக்கத்தெரிந்த வைர நிபுணன் என்று சமுதாயத்துக்கு பயன்படுபொருளாக இருக்கவியலாது.

சாத்தான்: பிரம்மராஜன் கவிதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றுக்கும் கோணங்கியின் உரைநடைக்கும் formal ஆக ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? உரைநடை கவிதையைப்போல, கவிதைமொழி (என்னதான் அது)யிலேயே இருந்தால் ஏன் சிலர் டெர்ர்ரர் ஆக வேண்டும்?

mdmuthukumaraswamy said...

பிரம்மராஜன் கட்டுரையை படித்தேன். அவருடைய ஆவலாதிகள் நியாயமாகவே படுகின்றன. அவர் வாசித்து கோணங்கியின் பிரதிகளிலிருந்து உதாரணம் கொடுத்து தன் தரப்பினை முன் வைக்கிறார். ஆனால் ஃப்ன்னிகன்ஸ் வேக் என்று ஒரு நாவல்தான் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறதா என்ன? கோணங்கி impressionist writer.எல்லாவற்றையும் மேற்புறத்தில் இருந்து மட்டுமே பார்த்து எழுதிகிறவர். இந்த வகை உத்தி மொழியின் ஆழமான அர்த்தங்களை மறுத்து மொழியின் materiality ஐ வெளிக்கொணருகிறது. புத்தகங்களையும் கோணங்கி அவ்வாறே படிப்பது அவற்றுக்கான references ஐ கொடுப்பது பிரம்மராஜனுக்கு மட்டுமல்ல எனக்குமே எரிச்சலையே தருகிறது. ஆனால் நான் அதற்காக கோணங்கியின் அவ்வளவு எழுத்தையுமே நிராகரிக்க மாட்டேன்.

சாத்தான் said...

@அருள்செல்வன்: நியாயமான கேள்வி. :-) ஆனால் கோணங்கி மீதான பிரம்மராஜனின் *அதே* குற்றச்சாட்டுகளை பிரம்மராஜன் மீதும் வைக்க முடியுமா என்று தெரியவில்லை. கோணங்கியின் நடையில் விரும்பத்தகாத ஒரு மெனக்கெடுதலும் bombastic தன்மையும் தெரிகின்றன. பிரம்மராஜனிடம் அந்த அளவிற்கு இல்லை. :-)

@mdm: எனக்குத் தெரிந்த சில பின்நவீனர்கள் கோணங்கியை சதா கிண்டல் செய்துகொண்டும் திட்டிக்கொண்டும் இருப்பதால் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இணையத்தில் ஏதாவது கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன். :-)