Saturday, September 3, 2011

பைத்திய நிலையும் கலை இலக்கியமும்


நண்பர் விமலாதித்த மாமல்லன் தன்னுடைய தளத்தில் ‘ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழி கதை’க்கும் ‘நீலத்திமிங்கலங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்ற பதிவுக்கும் சுட்டிகளைக்     கொடுத்ததிலிருந்து தூங்கிவழிந்துகொண்டிருந்த என்னுடைய தளத்திற்கு எராளமானோர் வருகை தந்துள்ளனர். 38 மின்னஞ்சல்கள் வந்துள்ளன. சுமார் மூன்றரை நபர்களுக்கு மட்டுமே ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் எழுதியிருந்த எனக்கு இத்தனை பேர் படிப்பதும் கடிதம் எழுதுவதும் ஒரு வகையான பதற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தோற்றுவித்துள்ளன. கடிதங்களுக்கு பதில் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜாலிலோஜிம்கா பதிவுகள் எழுதி பின்னர் அதை புத்தமாகத் தொகுத்து அதே வாசகர்களுக்கு அப்புத்தகங்களை விற்றுவிட்டு நாற்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் பார் ஐம்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் பார் என்று மார் தட்டலாமா என்று யோசனை ஓடியது. ஆனால் இந்த மாதிரியான பேத்தல் பிஸினசுக்கான ஆள் நானில்லை. அதில் ஏதாவது ஒரு புத்தகத்தை யாராவது பாப்புலர் கழிவு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சீரீஸில் சேர்த்து வைக்க, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவுடன் அது South Asian Classic என்று அமெரிக்க பல்கலைக்கழகங்களில்   பாடமாக வைத்துவிட்டார்களென்றால் என்ன செய்வது என்ற பீதி வேறு கவ்விக்கொண்டது. எத்தனை அவமானங்களோடுதான் ஒருவன் உயிர் வாழமுடியும்? எவ்வளவு சீக்கிரம் எனக்கு எதிராக நானே வேலை செய்கிறேன் பாருங்கள். எனவே அ அ வாசக ஆ ஆ வாசகி எனக்கு உங்கள் கடிதங்களுக்கு பதிலெழுத முடியாது. என் தளத்தில் பின்னூட்ட வசதி நிறுத்தப்படவில்லை என்பதை கவனியுங்கள். உங்களுக்குத் தோன்றியதை அங்கே எழுதிக்கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளுங்கள். சர்வ காலமும் கணிணி முன் உட்கார்ந்து தட்டச்சு செய்துகொண்டேயிருக்க முடியாது. நிற்க.
இருந்தாலும், வந்த கடிதங்களில் ஒன்று என்னைப் பதிலளிக்கத் தூண்டுகிறது. அவருடைய வேண்டுகோளின்படி அவருடைய பெயரை இங்கு தரவில்லை. மற்றபடி கடிதம் இதோ:
‘அன்புள்ள எம்.டி.எம்,
விமலாத்தித்த மாமல்லன் அவருடைய தளத்தில் நீங்கள் ஜெயமோகனின் அறம் சீரீஸ் கதைகளைப் பாராட்டி கடிதம் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். அவர் கதைகளைப் பாராட்டி எழுதிய நீங்கள் அவரை கிண்டலடித்து எப்படி ‘நீலத்திமிங்கலங்கள்’ எழுதுகிறீர்கள்? 1980 களின் மத்தியில் நீங்கள் அதிகம் எழுதியும் கூட்டங்களில் பேசியும் இருந்த காலகட்டத்தில் அறம், இலக்கியம், செயல்பாடு குறித்தும் நீங்கள் அதிகம் பேசியிருப்பதையும் நான் அறிவேன். 1987-88இல் கோவை ஞானி உங்களை அழைத்து கோவையில் நடத்திய கூட்டத்தில் அமைப்பியல் அல்தூசர் என்றெல்லாம் நாள் முழுக்க நீங்கள் பேசியதை நான் கேட்டது மட்டுமல்ல அந்தப் பேச்சின் பத்து மணி நேர ஒலி நாடாக்களையும் நான் பல முறை கேட்டிருக்கிறேன். இப்பொழுது என் கேள்வியெல்லாம் அறம், லட்சியவாதம், இலக்கியம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?’
அறம் இலக்கியத்தின் உட்கிடைக்கை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இலக்கியத்தின் அறம் இடம், காலம் சார்ந்த நன்னடத்தை முறைமை சார்ந்தது அல்ல; அது நிரந்தரமான மனித குலத்திற்கே பொதுவான அறச்சிக்கல்களைப் பேசுவது. அறச் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள் காண்பது கலை இலக்கியத்தின் வேலையில்லை. அறச்சிக்கல்களின் செறிவை அதிகமாக்குவதும் தனித்துவமான மனித சூழல்களை நுட்பமாகவும், கூர்மையாகவும் அவதானிக்க வைப்பதுவும்தான் கலை இலக்கியத்தின் வேலை. கடுமையான அறச்சிக்கல்களை இலக்கியம் தீர்வற்ற புதிராகவே வைத்திருக்கிறது. லட்சியவாதமோ அறச்சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளை வழங்கிவிடுகிறது. 
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், லட்சியவாதம் தோற்கும் இடங்களில் உருவாகும் பைத்திய தருணங்களில்தான் கலை இலக்கியத்தின் தோற்றுவாய் இருக்கிறது. முழுப்பைத்தியம் அல்லது தற்கொலை என்ற கொடூரத் தெரிவுகளிடையே ஊடாடுவதே படைப்பு மனோநிலையாக இருக்கிறது. இந்த ஊடாட்டத்தின் வெளிப்பாடுகளை பாரதி, மௌனி, புதுமைப்பித்தன், நகுலன், பிரமிள், ஜி.நாகராஜன், ஆத்மாநாம், விக்கிரமாதித்யன், பிரம்மராஜன், சுகுமாரன், வன்ணநிலவன், ந.முத்துசாமி, சம்பத், பாதசாரி, பிரேம்-ரமேஷ், மாமல்லன், சுகுமாரன், கோபிகிருஷ்ணன், கௌதம சித்தார்த்தன், ஃபிரான்சிஸ் கிருபா, லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன் என்று பலருடைய பிரதிகளில் காணலாம். இங்கே என்னுடைய நோக்கம் கநாசு பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது அல்ல. என்னுடைய நினவிலுள்ள பிரதிகளை வைத்து அடையாளம் காட்டுகிறேன்.  பைத்தியத்திற்கும் தற்கொலைக்குமிடையே ஊடாடும் மனத்தினை நாம் சமூகத்தின் மைய இருதயமாகக் கொண்டாட வேண்டும், பாதுகாக்க வேண்டும். அம் மனம் வெறி கொண்டு கூச்சலிடும், போதை நாடும், மேடை, மேஜை நாகரீகங்களைப் பேணாது, சிதைந்த மொழியில் பேசும், அ-தர்க்கத்தையோ, குதர்க்கத்தையோ முன் வைக்கும். உங்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கும், சௌகரியமாக இருக்க விடாது. தூங்கவிடாது. லட்சியவாதம் தோற்ற இடங்களைச் சந்தித்த அத்தகைய கலை இலக்கிய மனமே சமூக வெளியில் முத்துக்குமாராகவும், செங்கொடியாகவும் மரணமுறுகிறது. அக வாழ்வில், உறவுகளில், நண்பர்களிடத்தே, தொழிலுறவில் லட்சியவாதம் தோற்கும்போது கயமை, ஊழல், கடவுள் துறப்பு, அவ நம்பிக்கை, முழு சூன்யம் உருவாதல் என் பல தன்மை பொருந்திய, பன் முகம் கொண்ட இருண்மை உருவாகிறது. கலை இலக்கியம் லட்சியவாதத்தை முன்வைத்து இந்தச் சூழல்களை மறைக்கும் மாய்மாலத்தைச் செய்யாது. யாரையும் எளிதாக குற்றவாளியாக்கி தப்பிக்காது. சாளரங்களை இரக்கமில்லாமல் திறந்து காட்டிவிட்டு, பார் பார், என்று சொல்லிவிட்டு தனக்கு சம்பந்தமில்லாதது போல கைகட்டி நிற்கலாம்; அல்லது சாளரத்தின் வழி தெரியும் காட்சிகளில் ஐக்கியமாகி உருக்குலைந்தும் போகலாம்.
லட்சியவாதத்தைக் கூவி கூவி அறுதியிடும்போது  இலக்கியமற்றதும் கலையற்றதும் கலை இலக்கியமாகப் பிரசித்தி பெறுகிறது. அகிலன், நா, பார்த்தசாரதி, கல்கி (தியாக பூமி), பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள், கோமல் சுவாமிநாதன் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதிகளை சொல்லலாம். இந்த வகையிலேயே ஜெயமோகனின் அ-புனைவு கட்டுரைகளும் கருத்துரைகளும் பெரும்பாலும் சேருகின்றன. புனைவிற்கும், நினவுகூறலுக்கும் இடைப்பட்ட ‘அவதாரம்’ என்ற அவருடைய இடுகையை  வாசித்துப்பாருங்கள். ஜெயமோகனுக்கு தொழில் நுட்பத்தின் சிறப்பே அறமோ, கடவுளோ என்ற கேள்விகளிருக்கின்றன. இக்கேள்விகளை அவர் தன்னுடைய 'அவதாரம்' என்ற இடுகையில் வெளிப்படையாகவே சொல்கிறார்.  சொல்லப்பட்ட 'அவதாரம்' இடுகையில் இலக்கியம் கைகொள்ளும் அறம் குறித்தான கேள்விகளை ஆசிரான் அப்புவிடம் அடிவாங்கி தோற்றபின் இரண்டு வருட காலம் என்ன மனோ நிலையில் இருந்தான், வன்புணர்ச்சிக்குள்ளான சினேகப்பிரபா தன் வாழ்க்கையைப் பிறகு எவ்வாறு கழித்தாள் என்பவை புனைவாக்கப்படும்போதுதான் பேச இயலும். ஜெயமோகனின் இடுகைப்பிரதியோ தமிழ் கச்சடா சினிமாவின் உச்சகட்டம்போல அப்பு ஆசிரானை அடித்து வீழ்த்தியவுடன் முடிந்துவிடுகிறது! ஆசிரான், அப்பு ஆகியோருடைய வாழ்க்கையிலாவது என்ன நடந்தது என்று சில வரிகள் கேள்விப்படுகிறோம் ஆனால் சினேகப்பிரபாவைப் பற்றியோ பிரதி மௌனம் சாதிக்கிறது. பரிதாபமான வன்முறைக்கு ஆளாகப்போகும் அவளைப்பற்றி 'உள்ளூர் நிலவரத்திற்கு அழகி', 'ரத்த சோகையை கூட எங்களூரில் சிவப்பு என்று சொல்வார்கள்' என்ற விவரணை வரிகள் இந்தப் பிரதியை இலக்கியத்திற்கும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாததாய் மாற்றிவிடுகின்றன.
ஜெயமோகனின் புனைவுகளை நாம் எடுத்துக்கொண்ட கருவைக் கொண்டே ஆராய்வது என்பது வேறு கதை. அவருடைய ஆசிரிய நோக்கங்களை மீறி புனைவுகளை வாசகன் தனக்கேற்ப வாசிக்கலாம். புனைவுகள் தரும் சௌகரியம் அது. அறம் சீரீஸில் லட்சியவாதத்தை உண்மையிலேயே நம்பும் வெள்ளம்பியான ஜெயமோகன் என்ற ஆசிரியர் நன்றாகவே அடையாளம் தெரிகிறார். அந்த சீரீஸில் சில கதை மாந்தர்களை நான் நன்கு அறிவேன். உதாரணமாக எங்களூர் (நாகர்கோவில்) பூமேடை. அந்தக் கதைகளைப் படிக்கும்போதுதான் லட்சியங்கள் வாழ்வில் ஜெயித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற Mills and Boons பகற்கனவு விரிந்தது. ‘வாத்தியார் நல்லதே செய்வார்’ என்று நம்பும் எம்ஜிஆர் ரசிகனின் மனோநிலை அது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு அபூர்வமான தருணம். அதை எனக்கு வழங்கியமைக்காக ஜெயமோகனை உச்சி முகர்ந்துகொள்ளலாம்.

No comments: