Wednesday, September 28, 2011

சரி, அதையும் வாசித்துத் தொலைக்கிறேன்

அன்புள்ள எம்டிஎம்,
வ.வே.சு.ஐயர் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் சைவ வேளாளர் குழந்தைகளுக்கு உபநிடதம் கற்றுத்தருவதை பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் தமிழ் சைவத் திருமுறைகளையே அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும் என்பர் என்று எழுதியிருக்கிறாரே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சித்திரக்குள்ளன்

அன்புள்ள சித்திரக்குள்ளன்,

உங்கள் பெயர் தருகிற புன்முறுவலுக்காக இந்த பதிலை எழுதுகிறேன். ஜெயமோகன் என்ன மானிடவியலாளரா, சாதீய பழக்க வழக்கங்கள் பற்றி களப்பணி செய்திருக்கிறாரா, புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுகிறாரா அல்லது செவி வழியாக அறிந்தவற்றை வைத்து எழுதுகிறாரா இல்லை வெறும் யூகங்களின் அடிப்படையிலா என்பதையும் நீங்கள் எனக்குச் சொல்லவேண்டும். அது தவிர எந்த இடத்தில் அவர் சொல்கிறார் என்ற சுட்டியினையும் எனக்குத் தந்தால் நல்லது. பொதுவாகவே எல்லாச் சாதியினரின் எல்லா வழமைகளைப் பற்றியும் விரிவான மானிடவியல் ஆய்வுகள் நம்மிடம் இல்லை. இப்போதைக்கு சரி அதையும் வாசித்துத் தொலைக்கிறேன் என்றுதான் சொல்லமுடியும்.

பொதுவாக மொழிக் கலப்பை தென்னிந்தியாவில் பார்க்குமிடத்து பல சாதியினரும் பல மொழிகளையும் காலங்காலமாகப் பயின்று வந்திருக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளின் லிபிகளில் சமஸ்கிருதத்தை எழுதி படிப்பதும், ஒரு மொழியின் எழுத்துருவில் இன்னொரு மொழியின் பாடத்தை எழுதிப்படிப்பது என்பதும் தென்னிந்தியாவில் வழக்கம்தான். உதாரணமாக கேரளாவில் இன்றும் தொடர்கின்ற கூடியாட்டம் என்ற சமஸ்கிருத நாடக நிகழ்த்து மரபிற்கு சாக்கையார் குடும்பங்களில் எழுதப்பட்ட ஆட்டப்பிரகாரம் கையேடுகள் மலையாளம் எழுத்துருவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களாகும். தமிழ் கம்ப ராமாயணத்தை வாய்மொழி மரபாக தோல்பாவைநிழல் கூத்தாக கேரளத்து பகவதி அம்மன் கோவில்களில் கிருஷ்ணன்குட்டிப் புலவரின் மகனான ராமச்சந்திர புலவர் இன்றைக்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். காஞ்சிபுராணமோ தெலுங்கு எழுத்துருவில் எழுதப்பட்ட சமஸ்கிருத சுவடியாகக்கிடைக்கிறது. இந்த பல மொழிச் சூழலின் வரலாற்றினை வைத்துப் பார்க்கும்போது சைவவேளாள பெற்றோரோ மற்றவர்களோ உபநிடதங்களை தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதை ஆட்சேபத்திருக்க முடியாது. இது தவிர சைவ வேளாளர்களின் ஒரு பிரிவினரிடத்து வேத பாராயாணங்களை வீட்டின் பூஜையின் பகுதியாகக்கொள்ளும் வழமை இருக்கிறது. இது சம்பந்தமாக நான் களப்பணி செய்து எழுதிய ஆய்வுக்கட்டுரையின் சுட்டியை இங்கே இணைத்திருக்கிறேன். https://www.indianfolklore.org/nfscblog/research-papers/vedic-chanting-as-householders-meditation-practice-in-tamil-saiva-siddhanta-2/

No comments: