மா.காளிதாஸின் “உப்புப் பந்து”, “கொண்டி”, “பறவை தூக்கிச் செல்லும் இருள்” ஆகிய மூன்று கவிதை நூல்களும் உப்புப்பந்து எனும் உருவகம் குறிப்பது போலவே திட நிலையிலிருந்து கரைந்து போய்விட்ட நிலையை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறிய நிலைகளைப் பற்றிய கவிதைத் தொகுப்புகள் என வரிசைப்படுத்தலாம்.
“உப்புப்பந்து” தொகுப்பில் நினைவும் அடையாளமும் உப்பாலான பந்து போல பலவீனமாக உதிர, அல்லது கரையத் தயாராக இருக்கின்றன அல்லது ஏற்கனவே காற்றில் ஆவியாய்க் காணாமல் போயிருக்கின்றன. “கொண்டி” தொகுப்பில் அதே பலவீனமான தன்னிலைகள் கொண்டி (தாழ்ப்பாள்), கதவு, சவப்பெட்டி, உடல் போன்றவற்றுக்குள் அடைபட்டு, கதவுகள் போல திறப்பதற்கும் மூடுவதற்குமிடையில் உராய்வை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாக மேற்சொன்ன இரு தொகுப்புகளிலும் கதைகளற்று கரைந்துவிட்ட உப்பின் சாரம்சம் மூன்று வரி ஹைக்கூக்கள் போன்ற வடிவத்தில், எடையற்று “பறவை தூக்கிச் செல்லும் இருள்” ஆக பரிணமிக்கின்றன.
“உப்புப்பந்து” தொகுதியிலுள்ள முதல் கவிதை “படிவம்” சிவில் சமூகத்தின் சாதாரணக் குடிமகன் அடையாளங்கள் அனைத்தையும் இழந்து காணாமல் போயிருப்பதைப் பட்டியலிடுகிறது:
படிவம்
—-
இது என் ஊரில்லை
இது என் தெரு இல்லை
இது என் வீடில்லை
இது என் கதவு இல்லை
இது எனக்கான இலக்கம் இல்லை
இது என்னுடைய முகவரி இல்லை
இந்த முகவரியில் இருப்பது நானில்லை
இது என் பெயரில்லை
எனக்கான எந்த அடையாளமும்
என்னிடமில்லை
நான் உயிருடன் தான்
இருக்கிறேனென்று நிரூபிக்க
என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை
என் இப்போதைய பசிக்கு
ஒரு காய்ந்த ரொட்டி கூட இல்லை
தண்ணீரும் இல்லை
கண்ணீரும் இல்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்
என் முப்பசி
எப்படிப் பறந்துபோனதென்று
சுத்தமாக நினைவில் இல்லை
என் பத்து விரல்களின் ரேகைகள்
அழியவில்லை
என் கருவிழிக்கு எந்த சேதமுமில்லை
என் கையெழுத்தில்
மிகப்பெரிய மாற்றமில்லை
நான் காணாமல் போனதற்கான
எந்தப் புகாரும் இல்லை
என்னை யாரும் தேடவும் இல்லை
கண்டுபிடிக்கவும் இல்லை
எனில், எந்தப் பதுங்கு குழியில்
நான் ஒளிந்திருக்கிறேன்
எந்தப் போருக்காகக் காத்திருக்கிறேன்
இந்தப் புகைமூட்டத்திலிருந்து
எப்போது வெளிவருவேன்?
அப்போது நான் யாரிடம்
நான் தான் நானென்று
என்னைச் சமர்ப்பிப்பது?
——
“படிவம்” கவிதை சொல்வது போல அடையாளங்கள் எனப்படுபவற்றில் எதுவெல்லாம் இல்லை என்பதை மட்டுமே பட்டியலிட்டு புகைமூட்டத்திற்குள்ளான இருப்பை ஒரு சாதாரணனால் அறுதியிடமுடிகிறது. இவ்வகையான இருப்பில் தாயும் தந்தையும் கூட இயந்திரங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். “தையல்” கவிதையில் அம்மா அப்பாவை நச்சரித்து வாங்கிய தையல் இயந்திரத்தின் போக்கில் செய்யும் வேலைகளின் வழி பெண்ணாகவும் (தையல்) அம்மாவாகவும் உருவாகிறாள். கனவுகள் “எந்தக் கதவை எப்படிப் பூட்டினாலும், எந்தத் துவாரத்தை எப்படி அடைத்தாலும், சக்தி வாய்ந்த மந்திரத்தைப் போல, எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு” உள் நுழைகின்றன, வெளியேறுகின்றன. “அது ஒரு பழைய வண்டி” கவிதையில் பழைய வண்டியே வாழ்க்கையாகிறது.
“கொண்டி” தொகுப்பில் கவிதைகள் புற உலகுக்கும் அகவுலகுக்கும் இடையே வீட்டுப் புழங்கு பொருட்களின் வழி ஊடாடுகின்றன. கொண்டி முழுமையாகப் பூட்டப்படுவதும் இல்லை, திறக்கப்படுவதும் இல்லை. “நினைவின் கொண்டி லேசாக அசைந்து கொடுக்கிறது”. இத்தொகுப்பில் கடவுள் வேண்டுதல்களை வரிசையில் வைத்து கவனிக்கும் அதிகாரியாகவும், வாசகனோடு உரையாடும் கதாபாத்திரமாகவும், "இரங்குதலும் இறங்குதலும் வேறு வேறல்ல” என்று அறிவுறுத்துபவராகவும் வருகிறார். “கொண்டி” தொகுப்பு “பறவை தூக்கிச் செல்லும் இருள்” தொகுப்புக்குக் கூட்டிச் செல்கிறது.
பனித்துளி விழுவது, எறும்பு வானத்தைப் பார்ப்பது, பூனை புத்தரின் மடியில் உறங்குவது போன்ற வழக்கமான காட்சிகளுக்கு ஊடே "சூரியன் வரும் வரை பனி பெய்கிறது / கடைசி மனிதனுக்கும்” போன்ற இயற்கையின் சமத்துவத்தை பற்றிய அவதானமும் புத்தரின் மேல் எச்சமிடும் பறவை என்ற யதார்த்தமும் இருக்கின்றன.
மா. காளிதாஸின் பயணம், "நான் இருக்கிறேனா?" என்ற இருத்தலியல் பதற்றத்தில் தொடங்கி (“உப்புப் பந்து”), உறவுகளின் சிக்கல்களையும் நினைவுகளையும் கடந்து (“கொண்டி”), இறுதியில் இயற்கையின் பெருவெளியில் தன்னை இழக்கும் (“பறவை தூக்கிச் செல்லும் இருள்”) ஒரு முழுமையான வட்டத்தை நிறைவு செய்கிறது.

No comments:
Post a Comment