ஃப்ரெஞ்சு பெண்ணியவாதியும் தத்துவ அறிஞருமான ஹெலென் சிசு (Hélène Cixous) 1987-1988 இல் புகழ்பெற்ற நாடகக் கலைஞரான அரியான் முஷ்கினுக்காக (Ariane Mnouchkine) மகாத்மா காந்தியை மையமாக வைத்து “L’Indiade, ou l’Inde de leurs rêves” (The Indiad, or The India of Their Dreams) என்ற நாடகத்தை எழுதினார். சிசுவின் நாடகம் 1937 ஆம் ஆண்டிலிருந்து 1948 வரை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. சிசுவின் பார்வையில், இந்த நாடகத்தில் பால் அடையாளங்களைக் கடந்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். துறவியாகவும் முதியவராகவும் இருக்கும் சிசுவின் காந்தி தாயாகவும், காதலராகவும் இருக்கிறார்; அவருடைய தாய்மையே அஹிம்சைக்கும் நீதிக்கும் சலனமில்லா கடப்பாடு உடையவராக அவரை மாற்றுகிறது. சிசுவின் கூர்மையான பார்வை, காந்தியை மைய அரசியல் தலைவராக சித்தரிக்கும் அதே நேரத்தில் அவர் புரிந்துகொள்ளப்படாதவராகவும், வெறுக்கப்பட்டவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் இருந்ததற்கு அவருடைய தாய்மையே காரணம் என முன்வைக்கிறது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுப்பட்ட காந்தி, முகமது அலி ஜின்னாவிடம் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை வேண்டாம் என்று வேண்டும் காந்தி, என காந்தியின் போராட்டங்களையும் சிசுவின் நாடகம் கவனப்படுத்துகிறது. காந்தியின் இறுதி சத்தியாகிரக உண்ணாவிரதத்தையும் ஜனவரி 30, 1948 அன்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையும் அதன் அளவிலா துயரத்தையும் வரலாற்று அங்கதத்தையும் காட்சிப்படுத்துவதோடு சிசுவின் நாடகம் முடிவடைகிறது.
சிசுவின் நாடகத்தை ஒரு வரலாற்று நாடகம் என்று எளிமைப்படுத்த முடியாது. கவித்துவமும் அரசியல் விமர்சனங்களும் நிறைந்த சிசுவின் நாடகம் வன்முறை நிறைந்த இவ்வுலகில் பெண்மை, தாய்மை, அறச்செயல், ஆகியவற்றுக்கு என்ன இடம் என்பதை நுட்பமாக ஆராயும் படைப்பு எனப் புரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment