குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-5
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழிக்குக் கூறியது
—-
இயற்றியவர்: நரிவெரூஉத் தலையார்
குறுந்தொகையில் பாடல் எண்; 5
திணை: நெய்தல்
——
அதுகொ றோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிதழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புன் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.
—————-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:
தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமாகிய புன்னை மரமானது, கரையைச் சாரசார உடைக்கின்ற அலைகளால் வீசப்படும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிதாகிய நீர்ப்பரப்பையுடைய, மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் பிரிந்தானாகையால், பல இதழ்களை உடைய மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யாவாயின; காம நோயென்பது அத்தன்மையதோ?
——
வாசிப்பு
—-
கண்களின் துரோகம்
—-
இந்தக் கவிதை இயற்கையின் படிமங்களாலானது. பகிர்ந்துகொண்ட மதியங்களில், எதிரொலிக்கும் அறையினுள், தோழிக்குச் சொல்லும் தலைவி ‘இது காம நோயோ’ என வினவுகிறாள்; அவளுடைய மனதின் ‘மெல்லிய கடற்கரையில் புலம்பும் அலைகளை’ அங்கீகரிக்கிறாள், அடையாளம் காண்கிறாள். அந்த உள் மனதின் நிலப்பகுதி அவள் கண் முன்னே காண்பதாகிய, குருகுகளுக்குத் தூங்க நிழலும் கிளைகளும் தரும் புன்னை மரத்திலிருந்து வேறுபட்டதாய் இருக்கிறது; குருகுகள் தூங்குகின்றன, அலைகள் எழும்பி விழுகின்றன, கடற்கரை நீர்த்திவலைகளால் நிறைந்திருக்கிறது. கடற்கரையும், நீரும், நீர்த்திவலைகளுமான படிமமே தலைவனாகவும் காமமாகவும் தன் பௌதீக இன்மையின் மூலம் தலைவியின் கண்களைத் துரோகமிழைக்க வைக்கின்றன; மலரைப் போல பல இதழ்கள் கொண்ட அவள் கண் மையிட்ட கண்கள் ‘பாடு ஒல்லா’ நிற்கின்றன; அதாவது கண்கள் மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றன. பல்லிதழ் என்பது பூவிற்கு ஆகுபெயர், உ.வே.சா இதை தாமரை என்றே குறிப்பிடுகிறார். உண்கண் என்பது மையிட்ட கண்கள். குருகுகள் புன்னை மரமென லயம் கூடியிருக்கும் சுற்றுச் சூழலுக்குப் பொருந்தாமல் தானியங்கியாய் கண்கள் துரோகமிழைக்கின்றன. A dissonanace, a symphony out of tune.
——-
கதைசொல்லலுக்கு பதிலாய் மனப்பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்தல்
—-
இந்தக் கவிதை படிமங்களாலான மனப்பதிவுகளுக்கு கதைசொல்லலுக்கு பதிலாய் முன்னுரிமை அளிக்கிறது. ஒரு அகண்ட கடற்கரை, நீர்த்திவிலைகள், புன்னை மரம், குருகுகள், பல்லிதழ் கொண்ட மலர் என பல துண்டுகளாகி தன் உணர்ச்சி நிலை என்ன என தனக்குத்தானே அர்த்தப்படுத்திக்கொள்ள விழையும் பெண்ணை நாம் வாசகர்களாக அறிகிறோம். ‘இது காம நோயா’ என்ற rhetorical question பதிலளிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் அதற்கான பதில் மேற்சொன்ன விரைந்து தோன்றுகின்ற குறிப்பான்களால், -fleeting signifiers- ஆனவையாக இருக்கின்றன. காதலனின் இன்மை (absence) கடற்கரையின் ‘மெல்லம் புலம்பனாக’ தன் இருப்பினை (presence) அறிவித்து உடனடியாக அது நீர்த்திவலைகள், மணல், எனக் கசிகிறது. வலியும், நினைவும், ஏக்கமும், இணைவிற்கான விருப்பமும் காமத்தின் உள்ளடுக்குகளாகின்றன.
—-
பெண்ணுடலில் எழுதப்படும் கவிதையும், காமமும்
—-
இந்தக் கவிதை காமத்தின் ஏக்கத்தை உடலில் எழுதுகிறது; மனம் உடலின், கண்களின் தன் போக்கிற்கு சாட்சியாய் நிற்கிறது. பல்லிதழ் மலராகிய மையிட்ட கண்கள் பெண்குறிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட உருவகமாக (displaced metaphor) அது அகண்ட கடற்கரையொன்றின் நீர்த்திவிலைகளைக் கனவெனவேக் கண்டு ஏங்குகிறது. துஞ்சாக் கண்களின் தானியங்கித்தன்மையைத் தன் தோழியுடன் கிழத்தி பகிர்ந்துகொள்வதால், அவ்விரு பெண்களிடையே ஒருவருக்கொருவர் அந்தரங்கமாகச் சொல்லிக்கொள்வதை புரிந்துகொள்ளும் தோழமை ( camaraderie ) நிலவுவதாக வாசகர் அனுமானிக்கலாம்.
No comments:
Post a Comment