குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-3
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழிக்கு தலைவி கூறியது
—-
இயற்றியவர்: காமஞ்சோகினத்தார்
குறுந்தொகையில் பாடல் எண்; 4
திணை: நெய்தல்
——
நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைத்தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங் காதலர்
அமைவில ராகுத நோமென் நெஞ்சே
—-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:
நோகாதே என் நெஞ்சே, நோகாதே என் நெஞ்சே, இமைகளைத் தீயச் செய்யும் வெம்மையையுடைய கண்ணீர் தாங்கி அளவளாவுதற்கு அமைந்த நம் தலைவர் இப்போது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால் நோகாதே என் நெஞ்சே.
——-
வாசிப்பு
——-
மொழியின் முதன்மையும் நடுங்கும் குறிப்பானும்
—-
இந்தக் கவிதை நெஞ்சுடைக்கும் காதல் பிரிவின் மையத்தில் இருப்பது மொழியின் முதன்மை என்பதை உடனடியாக உணர்த்திவிடுகிறது. தமிழண்ணல் தன்னுடைய உரையில் இதையே நோம் என் நெஞ்சே என மூன்று முறை அடுக்கும் பாடல் அமைப்பே துன்பத்தின் மிகுதியை புலப்படுத்தி விடுகிறது என்று எழுதுகிறார். கவிதைப்பிரதி பிரிவின் காரணத்தையோ அதன் கதையையோ சொல்வதில்லை; மாறாக வலியின் உருவாக மொழியை, ‘நோம் என் நெஞ்சே’ எனும் பதச்சேர்க்கையை முன்மொழிகிறது. உடல் வலியாக மொழி அதன் உருவாகிறது. இதை நடுங்கும் குறிப்பான் (trembling signifier) எனலாம். நெஞ்சை வலியின் மையமாகக் கவிதை குறிப்பிடுகையில் அது பௌதீக இதயத்தைக் குறிப்பதில்லை; அது இதயம் என்பது துன்பப்படுதலின் மையப்புள்ளி என்ற பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறிக்கிறது. வலி இங்கே உடலின் வலியா இல்லைப் பிரிவின் வலியின் அருவமா? நடுங்கும் குறிப்பான் இவ்விரண்டுக்குமிடையில் நழுவுகிறது. இந்த வலி மொழியாலானது; உடலின் வலியை அப்படியே மொழியில் வைத்திருப்பதான தோற்றத்தை வைத்திருக்கிறது.
தீப்பிடித்த இமைகளும், இல்லாத காதலனின் பிம்ப உருவாக்கமும்
—-
கவிதையில் காதலனாக, தலைவனாக விவரிக்கப்படுபவன், ‘அமைதற்கு அமைந்தவன்’ என்பதை உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு அமைந்த என்றும் பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய என்றும், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய என்றும் விளக்கமளிக்கின்றன. இமைகள் தீப்பிடிக்க வைக்குமளவு என்றும் அழுவாளா தலைவி அல்லது இந்தப் பிரிவின் காரணமாகத்தான் அழுகிறாளா? என்றும் நெஞ்சில் காயமிருக்க, அதனால் இமைகள் தீப்பிடிக்க, அத்தீயை அணைக்க வரும் கண்ணீரைத் தாங்க தலைவன் ஏற்கனவே இருந்தானா, இல்லை அப்படிக் கண்ணீரைத்தாங்க வந்துவிடுவான் என்பது தலைவியின் நம்பிக்கையா? திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரையின்படி காதலனைத் தலைவிக்கு மனம் பொருந்தியவன் என்று நாம் எடுத்துக்கொண்டால், இப்போது தலைவியில் அருகே இல்லாத காதலன் கண்ணீரைத் தாங்குபவன் என்பது தலைவியின் பிம்ப உருவாக்கம் என்றே தோன்றுகிறது. துக்கத்தில் கண்ணீரின் வெம்மையில் தீயும் இமைகள் என்பது அசாத்திய அழகும் வலுவும் கொண்ட சித்திரம், மீண்டும் வலி மொழியாக, மொழி உடலாக, தீப்பிடிக்கும் திகைப்பை நமக்குக் கவிதை கடத்திவிடுகிறது.
மற்றமை அறிய இயலாததாய் இருப்பதும் அதன் துயரமும்
——————
இந்தக் கவிதையில் வரும் தலைவன்/ காதலன் அவனுடைய முழுமையான இன்மையினால் நமது கவனத்தை ஈர்ப்பவனாகிறான். தலைவியின் கண்ணீரைத் தாங்கிப் பிடிப்பவன் என்பது தவிர அவனுக்கு வேறு அடையாளம் ஏதுமில்லை. அவன் ஏன் தலைவியைப் பிரிந்து சென்றான் என்பதற்கான விளக்கங்களில்லை. அவனைக் கவிதை அறிய இயலாத மற்றைமையாக (the other) கட்டமைக்கிறது; பிரிவின் புனித துயரத்தின் புராணம் ஒன்று கட்டிஎழுப்பபட அதன் மையமான காதலன் மற்றமையாக ஒரளவுக்கு மேல் அறியப்பட முடியாதவன். நம்முடனே இருக்கும் சக மனிதைரைப் போலவே. பிரிவின் துயரத்தோடு மற்றமையை அறிய இயலாத துயரம் சேர்ந்து அடர்த்தியுற, ‘நோமென் நெஞ்சே, நோமென் நெஞ்சே ‘ என்ற வரிகள் சடங்கொன்றின் மந்திர ஓதுதல்களாக நம்மைப் பீடிக்கின்றன.
No comments:
Post a Comment